இந்தியா எனும் சனநாயக நாடு பல்வேறு கோணங்களிலும் தலைசிறந்த நாடு. கல்வி, இலக்கியம், கலாச்சாரம், அறிவியல், ஆன்மீகம், தொழில்நுட்பம் எனும் அனைத்து வளர்ச்சிகளும் நிறைந்த நாடு. எனினும் மெருகூட்டப்படாத தார்மீக நெறிகளால் அறிவுத்திறனிலும் தன்னம்பிக்கையிலும் முழுமையடைய முடியாததை எல்லாப் பகுதி மக்களிடமும் காணமுடிகிறது. கோடிகள் படைத்தவர்கள் அரசின் ஆயிரம் கரங்களையும் பற்றிப் பிடித்து நிற்க, ஆதரவற்ற மக்கள் கோடிக்கோடியாய் நிலைகுலைந்து வாழுகின்றனர். பார்த்தால் பளபளக்கும் பட்டுவேட்டிக்குள் பதைபதைக்க வைக்கும் நச்சரவைப் போன்று நாளும் பெருகி வரும் கொடிய ரவுடித்தனங்களும், கந்துவட்டிக்கடன்களும் அன்றாட வாழ்க்கையை பாதித்து வருகின்றன. தினசரி காணப்படும் கொலைகள், கொள்ளைகள், தற்கொலைகள் அனைத்துமே ஓர் அவலமிக்க தேசமாக நம் நாடு மாறி வருவதைப் பிரதிபலிக்கிறது. கடன்தொல்லைகளால் தினம் தினம் தாயோ, தந்தையோ, பிள்ளைகளைக் கொன்றுவிட்டு தாமும் தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு தள்ளப்படும் கொடுங்கோன்மை… எண்ண எண்ண உள்ளத்தை உருக்குலைக்கும் நிகழ்வுகளாகும். காரணம் வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, கொடிய கந்துவட்டிப் பெருக்கம் இவைகள்தாம்.
கூவிக்கூவிக் கடன் கொடுக்கும் வங்கியின் வாசமிக்க வார்த்தைகளில் விழுந்து வாங்கிய கடனை வேலையின்மையால் கட்ட முடியாது போக கணநேரத்தில் கை நழுவிப் போகிறது இருப்பிடம்.
5 லட்சம் கடனுக்காக ஐம்பது லட்சம் மதிப்புள்ள வீட்டையும், நிலத்தையும் இழந்து திண்டாடும் ஏழைகளுக்காக கை கொடுக்க அரசும் இல்லை… சட்டமும் இல்லை…
கையில் பட்டம் பெறுவதால் ஒன்றும் நடக்கப் போவதில்லை. இதற்குப் பதிலாக சைக்கிளுக்கு பஞ்சர் பார்க்கும் கடை வைத்தால் உங்கள் வாழ்க்கையை நன்றாக நடத்த முடியும் என மத்தியப்பிரதேச குணா மாவட்டத்தில் பிரதமர் மோடி அவர்களின் பி.எம் காலேஜ் ஆப் ஸயின்ஸ் எனும் சிறப்பு கல்லூரியின் திறப்பு விழாவின்போது அந்தப் பகுதி சட்டமன்ற உறுப்பினர் பன்னாலால் ஷக்யா பேசி உள்ளார். உயர்கல்வி, சிறப்புக்கல்வி போன்றவைகளை படிக்கும் மாணவர்கள் ஒருநாட்டின் தூண்கள் என்பதை அறியாமல் தங்கள் அறிவுக்கும், திறனுக்கும் ஏற்ப கூறியிருப்பது எவ்வளவு வேதனையாக உள்ளது. இவர் பேச்சைக் கேட்ட மாணவர்களுக்கு எவ்வளவு தன்னம்பிக்கையை ஊட்டி உள்ளார். இப்படி “பக்கோடா வித்தும் பிழைக்கலாம்… பஞ்சர்கடை வைத்தும் பிழைக்கலாம்… படிப்பால் என்ன பயன்? என்பதை எல்லாம் படிப்பறிவே இல்லாத பாமரன் பேசலாம்… இவர்கள் பேசலாமா…?
போதாக்குறைக்கு தேசமெங்கும் போதைப்பொருள்களும் அதனால் கண்மண் தெரியாமல் நடத்தப்படும் கொலை, கொள்ளைகளும் புரிய முடியாத புதிராகவே உள்ளன. இப்படியே தேசம் போனால் அப்பாவிமக்கள் அச்சத்தோடேயே வாழ வேண்டும். இதை மத்திய மாநில அரசுகள் முழுமையாக கண்காணித்து மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
வேலையில்லாத் திண்டாட்டம் ஒழிய மத்திய மாநில அரசுகள் முடிவெடுக்காவிட்டால் இந்நாட்டின் கல்வி வளர்ச்சி என்பது வெறும் காகிதப்பூக்களில் தேனைத்தேடும் வண்டுகளாக மக்கள் வாழ்விழந்து விடுவார்கள். வரிவிதிப்பாலும், வட்டிக்கொடுமைகளாலும் வாழ்விழந்து தவிக்கும் மக்களைப் பாதுகாக்க தவறிவிடுமோ அரசுகள் என மனம் படைத்த மனிதர்கள் முனகுவது காதில் விழுகிறது.
ஆசிரியர்.
Leave a Reply