ஹிந்தி மூலம்: ச ஆதத் ஹஸன் மன்டோ
தமிழில்: நாணற்காடன்
தொலைபேசி ஒலித்தது. அருகில் மன்மோகன் அமர்ந்திருந்தான். ரிசீவரை எடுத்து, “ஹலோ… ஃபோர் ஃபோர் ஃபோர் ஃபோர் ஃபைவ் செவன்” என்றான்.
எதிர் முனையிலிருந்து “மன்னிக்கவும்… ராங் நம்பர்.” என்று பதில் வந்தது.
மன்மோகன் ரிசீவரை வைத்துவிட்டு மீண்டும் புத்தகத்தைப் படிக்கத் தொடங்கினான்.
அவன் இந்தப் புத்தகத்தை இருபது முறைக்கும் மேல் படித்திருப்பான். அத்துனை முறை படிக்குமளவுக்கு அந்தப் புத்தகத்தில் அவ்வளவு சிறப்பு எதுவும் இல்லை. வெறிச்சோடி கிடந்தது அலுவலகம். கடைசிப் பக்கங்கள் இல்லாத ஒரு புத்தகமாக அது இருந்தது.
மன்மோகனின் பொறுப்பில் ஒரு வாரமாக அந்த அலுவலகம் இருந்து வருகிறது. அவனுடைய நண்பன் தான் அந்த அலுவலகத்திற்குச் சொந்தக்காரன். அவனோ கடன் வாங்குவதற்காக எங்கோ சென்றிருந்தான். தங்குவதற்கென இருப்பிடம் எதுவும் இல்லாத நடைபாதை வாசியான மன்மோகன் அங்கிருந்து இந்த அலுவலகத்திற்கு வந்திருந்தான். அந்த ஒரு வாரத்தில் அலுவலகத்தில் இருந்த ஒரே புத்தகத்தை சுமார் இருபது முறைக்கும் மேல் படித்து முடித்துவிட்டான்.
அலுவலகத்தில் தனியாகத்தான் இருந்து வந்தான். வேலைக்குப் போவதில் அவனுக்கு வெறுப்பு இருந்தது. அவன் விரும்பியிருந்தால் ஏதாவதொரு திரைப்பட நிறுவனத்தில் ஒரு திரைப்பட இயக்குநராகப் பணியாற்றியிருக்கலாம் தான். ஆனால், ஓர் அடிமையாக இருக்க அவன் விரும்பவில்லை. மிகவும் வெளிப்படையான மற்றும் நேர்மையான மனிதன் அவன். அவனது அன்றாடச் செலவுகளுக்கு அவனது நண்பர்கள் தாம் ஏற்பாடு செய்து கொடுத்து வந்தனர். அவனுக்கான செலவுகளோ மிக மிகக் குறைவு. காலையில் ஒரு குவளை தேநீர் மற்றும் இரண்டு தோஸ். மதியம் இரண்டு புல்கா மற்றும் கொஞ்சம் சாலட். நாள் முழுமைக்கும் ஒரு சிகரெட் பாக்கெட். அவ்வளவுதான்.
மன்மோகனுக்கு அன்பான உறவினர்களெனச் சொல்லிக்கொள்ள எவருமில்லை. மௌனம் அவனுக்கு மிகவும் பிடித்தமானதாக இருந்தது. கடின உழைப்பாளி. ஆனாலும் பற்பல நாள்கள் அவன் உழைப்பதிலிருந்தும் விட்டு விலகியே இருந்து வந்தான். சிறுவயதிலேயே அவன் வீட்டை விட்டு வெளியேறிவிட்டான் என்பதைத் தவிர அவனது நண்பர்களுக்கு அவனைப் பற்றி வேறெதுவும் தெரியாது. பம்பாயின் ஒரு நடைபாதையில் தான் அவன் நீண்ட காலமாக வாழ்ந்து வந்தான். அவனுக்கு வாழ்க்கையில் ஒரே ஒரு ஆசை மட்டுமே இருந்து வந்தது. ஒரு பெண்ணின் அன்பு. “ஒரு பெண்ணின் அன்பு மட்டும் எனக்குக் கிடைத்தால் என் வாழ்க்கையே மாறிவிடும்” என்று அடிக்கடிச் சொல்லிக்கொண்டிருப்பான்.
“ அதன்பிறகும் நீ எந்த வேலையும் செய்யாமல் தான் இருப்பாயா?” என்று அவனது நண்பர்கள் கேட்பார்கள்.
“வேலைக்கா?… அதன் பிறகு நான் கட்டாயம் வேலைக்குப் போவேன்” என்று மன்மோகன் பதில் கொடுப்பான்.
“அப்படியானால் உடனே யாரையாவது காதலிக்கத் தொடங்கு”.
“இல்லை. ஆணின் தரப்பிலிருந்து தொடங்குகிற காதலை நான் விரும்பவில்லை.”
மதிய உணவு நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. மன்மோகன் சுவரில் இருந்த கடிகாரத்தைப் பார்த்தான். டெலிபோன் ஒலிக்கத் தொடங்கியது. ரிசீவரை எடுத்து, “ஹலோ… ஃபோர், ஃபோர், ஃபோர் ஃபைவ் செவன்” என்றான்.
மறுபக்கத்திலிருந்து “ஃபோர் ஃபோர் ஃபோர் ஃபைவ் செவன்” என்று ஒரு மெல்லிய குரல் வந்தது.
மன்மோகன், “ஆம்” என்றான்.
“நீங்கள் யார்?” என்று எதிர்முனை மெல்லிய குரல் கேள்வி கேட்டது.
“நான் மன்மோகன். சொல்லுங்கள்.”
மறுபக்கத்தில் இருந்து குரல் வராததால் மீண்டும் மன்மோகன், “சொல்லுங்கள் நீங்கள் யாரிடம் பேச வேண்டும்?” என்று கேட்டான்.
“உங்களிடம் தான்” என்று எதிர்முனைக் குரல் பதிலளித்தது.
மன்மோகன் கொஞ்சம் வியந்துபோய், “என்னிடமா?” என்று கேட்டான்.
“ஆமாம்… உங்களிடம் தான். உங்களுக்கு ஏதும் இடையூறு இல்லையே?”
“ஆமாம்… இல்லை” சற்றே குழம்பி விட்டான் மன்மோகன்,.
“உங்கள் பெயர் மதன்மோகன் என்று தானே சொன்னீர்கள்” என்றபடி அந்தக் குரல் சிரித்தது.
“இல்லை… மன்மோகன்.”
“மன்மோகன் .”
சில கணங்கள் மௌனமாக கழிந்த பிறகு மன்மோகன், “என்னுடன் தான் பேச விரும்பினீர்களா?” என்று கேட்டான்.
“ஆம்” என்று பதில் வந்தது.
“அப்படியானால் பேசுங்கள்.”
சிறிது இடைவெளிக்குப் பிறகு, “என்ன பேசுவது என்று தெரியவில்லை… நீங்களே பேச்சைத் தொடங்குங்களேன். அதில் எந்தப் பிரச்சனையும் இல்லை” என்றது குரல்.
“மிகவும் நல்லது” என்று மன்மோகன் சிறிது நேரம் யோசித்து, “ எனது பெயரை முன்பே சொல்லிவிட்டேன். தற்போது இந்த அலுவலகம் தான் என் வசிப்பிடம்… முன்பு நான் நடைபாதையில் தான் படுத்துக் கிடந்தேன். ஒரு வாரமாக இந்த அலுவலகத்தில் பெரிய மேஜையில் தூங்குகிறேன்.”
குரல் சிரித்தபடி, “நடைபாதையில் கொசுவலை வைத்துக்கொண்டு தூங்குவீர்களா?” என்று கேட்டது.
சிரித்தபடி மன்மோகன், “உங்களுக்கு ஒன்றைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் ஒருபோதும் பொய் சொல்லவில்லை. நான் ஒரு காலத்தில் நடைபாதையில் தான் தூங்கி வந்தேன். அந்த வாழ்க்கை முடிவுக்கு வந்து கிட்டத்தட்ட ஒரு வாரமாக இந்த அலுவலகம் என் வசம் உள்ளது. இப்போது நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்றான்.
குரல் சிரித்தபடி, “அப்படி என்ன மகிழ்ச்சி?” என்று கேட்டது.
அதற்கு மன்மோகன், “எனக்கு இங்கே ஒரு புத்தகம் கிடைத்திருக்கிறது. கடைசிப் பக்கம் இல்லாத புத்தகம். ஆனால், இதை இருபது முறைக்கும் மேல் படித்து முடித்து விட்டேன். எப்போதாவது முழு புத்தகமும் கைக்கு வந்தால் தான் கதையின் நாயகனுக்கும், நாயகிக்குமிடையில் மையமிட்டிருந்த காதல் என்னவானது என்று தெரிய வரும்” என்றான்.
“நீங்கள் மிகவும் விசித்திரமான மனிதர் தான்” என்றது குரல்.
மன்மோகன் வெட்கத்துடன், “எல்லாம் உங்கள் தயவுதான்” என்று குழைந்தான்.
ஒரு சிறிய இடைநிறுத்தத்திற்குப் பிறகு குரல் கேட்டது, “உங்கள் பிஸினெஸ் என்ன?”
“பிஸினெஸ்.”
“அதாவது நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்?”
“நான் என்ன செய்கிறேனா?… எதுவுமில்லை. எதற்கும் பயனற்ற ஒருவன் என்ன தான் செய்து விட முடியும்? நாள் முழுக்க கால் போன போக்கில் ஊர் சுற்றுவது. இரவு தூங்கிவிடுவது. அவ்வளவு தான்.
“உங்களுக்கு இந்த வாழ்க்கை பிடித்திருக்கிறதா?” என்று குரல் கேட்டது.
மன்மோகன் யோசிக்க ஆரம்பித்தான். “கொஞ்சம் பொறுங்கள்… நான் இந்தக் கோணத்தில் யோசித்துப் பார்த்ததே இல்லை இதுவரை. இப்போது நீங்கள் கேட்ட கேள்வியை எனக்கு நானே கேட்டுக்கொள்கிறேன். உண்மையில், எனக்கு இந்த வாழ்க்கை பிடித்திருக்கிறதா இல்லையா?”
“ஏதாவது பதில் கிடைத்ததா?”
சிறிது நேரம் கழித்து மன்மோகன், “இல்லை… ஆனால் இந்த மாதிரியான வாழ்க்கை எனக்குப் பிடிக்கும் என்று நினைக்கிறேன். அதேசமயம் நான் இப்படித் தானே நீண்ட காலமாக வாழ்ந்து வருகிறேன்” என்று பதிலளித்தான்.
குரல் சிரித்தது. மன்மோகன், “உங்கள் சிரிப்பு மிகவும் இனிமையாக உள்ளது” என்றான்.
குரல் வெட்கத்துடன் “நன்றி.” என்றது. அத்துடன் உரையாடல் முடிந்தது.
மன்மோகன் சிறிது நேரம் கையிலேயே ரிசீவரை வைத்துக்கொண்டு நின்றான். பிறகு சிரித்துக்கொண்டே அதை வைத்துவிட்டு அலுவலகத்தை மூடிவிட்டு கிளம்பினான்.
மறுநாள் காலை எட்டு மணிக்கு மன்மோகன் அலுவலகத்தின் அந்தப் பெரிய மேஜையில் தூங்கிக் கொண்டிருந்தான்.
டெலிபோன் மணி அடிக்கத் தொடங்கியது. கொட்டாவி விட்டபடி, ரிசீவரை எடுத்து, “ஹலோ ஃபோர், ஃபோர், ஃபோர் ஃபைவ் செவன்” என்றான். மறுபக்கத்திலிருந்து “மரியாதைக்குரிய மன்மோகன் அவர்களுக்கு வணக்கம்!” என்ற குரல் வந்தது.
“மரியாதைக்குரியவனா?” மன்மோகனுக்கு வியப்பாக இருந்தது. “அட ஆமாம்… நீங்கள் மரியாதைக்குரியவர்தான்”.
“பணிவுடன் வணங்குகிறேன்”
“நீங்கள் தூங்கிக் கொண்டிருந்தீர்களா?”
“ஆமாம்… இங்கே வந்த பிறகு என் பழக்கம் கெட்டுப் போச்சு. இதுவே நடைபாதையில் என்றால் இப்படித் தூங்கிக்கொண்டிருக்க முடியாது.”
குரல் சிரித்தபடி, “ஏன்?” என்று கேட்டது.
“அங்கே காலை ஐந்து மணிக்கு முன் எழுந்திருக்க வேண்டும்.”
குரல் சிரித்தது.
“நேற்று டெலிபோனை முழுவதுமாக அணைத்து வைத்து விட்டீர்கள்” என்று சொன்னான் மன்மோகன்.
“ஏன் என் சிரிப்பைப் புகழ்ந்தீர்கள்?” என்று வெட்கத்துடன் குரல் கேட்டது.
மன்மோகன், “இதோ பாருங்கள், நீங்களே தான் சொல்லியிருக்கிறீர்கள்… எதாவது அழகா இருந்தால் அதைப் போற்ற வேண்டும் இல்லையா?
“அப்படியெல்லாம் இல்லை.”
“இந்த நிபந்தனையை நீங்கள் என் மீது விதிக்க முடியாது … நீங்கள் சிரித்தால், நான் அதை நிச்சயமாக பாராட்டத் தான் செய்வேன்”
“நான் டெலிபோனை அணைத்து விடுகிறேன்.”
“உங்கள் விருப்பம்.”
“முதலில் நான் என் மீது அதிருப்தி கொள்ள விரும்பவில்லை. உங்கள் சிரிப்பை நான் பாராட்டவில்லை என்றால், என் ரசனையின் மேல் எனக்கு அதிருப்தி வந்துவிடும். அதை நினைக்கும்போதே எனக்கு மிகவும் அருவருப்பாக இருக்கிறது.”
“நான் அதிருப்தியில் இருக்கிறேன் என்பது பற்றி கூட நீங்கள் கவலைப்படவில்லை போலிருக்கிறது.”
சிறிது நேரம் மௌனம் நிலவியது. பிறகு மறுபக்கத்திலிருந்து குரல் வந்தது, “என்னை மன்னியுங்கள். நான் என் வேலைக்காரனிடம் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தேன். உங்கள் ரசனை உங்களுக்கானது. ஆமாம், உங்களுக்கு என்ன பிடிக்கும் என்று சொல்லுங்கள்?”
“அப்படியென்றால்?”
“அது… கொஞ்சம் வேடிக்கையாக இருக்கிறதே… வேலைகள்… ம்…. ம்…. அதாவது உங்களுக்கு என்ன தெரியும்? உங்கள் பொழுதுபோக்கு என்ன?”
மன்மோகன் சிரித்துக்கொண்டே, “எனக்கு எந்த வேலையும் தெரியாது… ஆனால், எனக்குப் புகைப்படம் எடுப்பதில் கொஞ்சம் ஆர்வம் இருக்கிறது.”
“அது ஒரு சிறந்த ஆர்வமாயிற்றே.”
“ஆனால் அதிலுள்ள நன்மை தீமை பற்றியெல்லாம் நான் ஒருபோதும் நினைத்துப் பார்த்ததில்லை.”
“அப்படியெனில் உங்களிடம் ஒரு நல்ல கேமரா இருக்க வேண்டுமே?” என்று குரல் கேட்டது.
மன்மோகன் சிரித்தபடி, “என்னிடம் சொந்தமாக கேமரா எதுவும் இல்லை. நண்பர்களிடம் கடன் வாங்கி என் ஆர்வத்தை நிறைவேற்றிக் கொள்கிறேன். எப்போதாவது ஏதாவது சம்பாதித்தால், மனத்தில் பிம்பமாகப் பதிந்திருக்கும் ஒரு கேமராவை வாங்குவேன்” என்று சிரித்தான்.
“என்ன கேமரா அது?” என்று குரல் கேட்டது.
அதற்கு மன்மோகன், “அது எஜெக்டா ரிஃப்ளெக்ஸ் கேமரா. எனக்கு அது மிகவும் பிடிக்கும்” என்றான்.
சிறிது நேரம் மௌனம் நிலவியது. பிறகு, “நான் ஏதோ யோசித்துக் கொண்டிருந்தேன்” என்று குரல் பேசியது.
“என்ன?”
“நீங்கள் என் பெயரையும் கேட்கவில்லை. எனது தொலைபேசி எண்ணையும் கேட்கவில்லை.”
“அவை எனக்கு அவசியமானதாகத் தோன்றவில்லையே?”
“ஏன்?”
“உங்கள் பெயர் எதுவாக இருந்தாலும் பரவாயில்லை… என் நம்பர் உங்களுக்குத் தெரியும். அது போதும்… நான் உங்களுக்கு டெலிபோன் செய்ய வேண்டுமென நீங்கள் விரும்பினால், உங்கள் பெயரையும் எண்ணையும் சொல்லுங்கள்.”
“நான் சொல்ல மாட்டேன்.”
“அட.. இது நன்றாக இருக்கிறதே… நான் எப்போது உங்களிடம் பெயரையும், தொலைபேசி எண்ணையும் கேட்டேன்? அந்தக் கேள்வியே என்னிடமிருந்து வராதபோது இந்த உங்களின் பதிலுக்கு என்ன அவசியம் இருக்கிறது?”
“நீங்கள் ஒரு விசித்திரமான மனிதன் தான்” என்றபடி குரல் சிரித்தது.
மன்மோகன் சிரித்துக்கொண்டே, “ஆம், நான் அப்படிப்பட்டவன்தான்”.
சில வினாடிகள் மௌனம் நிலவியது, “மீண்டும் யோசிக்க ஆரம்பித்து விட்டீர்களா?”.
“இல்லை. இப்போது நான் வேறு எதையும் நினைக்கவில்லை.”
“அப்படியெனில் டெலிபோனை வைத்துவிடுங்கள்… சரியா?.”
“நீங்க ரொம்ப முரட்டுத்தனமான ஆளு தான். டெலிபோனை வையுங்கள் நீங்கள். வேண்டாம் நானே ஸ்விட்ச் ஆஃப் செய்து வைத்து விடுகிறேன்” என்று குரல் சற்றே கடுமையாக மாறியது.
மன்மோகன் ரிசீவரை வைத்துவிட்டு மெலிதாக சிரித்துக்கொண்டான்.
அரை மணி நேரம் கழித்து கை-கால் கழுவிக் கொண்டு, சட்டையணிந்து வெளியே செல்லத் தயாரானபோது, டெலிபோன் ஒலித்தது. ரிசீவரை எடுத்து, “ஃபோர் ஃபோர் ஃபோர் ஃபைவ் செவன்” என்றான்.
“மிஸ்டர் மன்மோகன்?” என்று குரல் கேட்டது.
“ஆமாம் மன்மோகன் தான். சொல்லுங்கள்?”
குரல் சிரித்தபடி, “அதாவது, என் கோபம் போய்விட்டது.”
மன்மோகன் மிகுந்த மகிழ்ச்சியுடன், “நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்றான்.
“காலை உணவு சாப்பிடும் போது உங்களிடம் இனி சண்டையிடக் கூடாதெனத் தோன்றியது. ஆமா, நீங்க காலையில் சாப்பிட்டுவிட்டீர்களா?”
“இல்லை, நான் வெளியே செல்ல கிளம்பிக்கொண்டிருந்தபோது தான் நீங்கள் அழைத்துவிட்டீர்களே. “
“ஓ…அப்படியானால் சரி… நீங்கள் போய் வாருங்கள்.”
“இல்லை. எனக்கு அவசரம் இல்லை. இன்று என்னிடம் பணமும் இல்லை. அதனால் இன்று காலை உணவு கிடைக்காது என்று நினைக்கிறேன்.”
“உங்கள் பேச்சைக் கேட்டால்… ஏன் இப்படிப் பேசறீங்க… நீங்கள் மிகுந்த வருத்தத்தோடு இப்படிப் பேசுவது போலிருக்கிறது?”
ஒரு கணம் யோசித்த மன்மோகன், “இல்லை… எனக்கு ஏதாவது துக்கமோ, வலியோ இருந்தாலும் கூட, அது எனக்குப் பழக்கமாகிவிட்டது.”
“ நான் கொஞ்சம் பணம் உங்களுக்கு அனுப்பி வைக்கட்டுமா?.”
“அனுப்பி வையுங்கள். எனக்கிருக்கும் கடன்காரர்கள் வரிசையில் உங்கள் பெயரும் சேரட்டும்” என்றான் மன்மோகன்.
“வேண்டாம். நான் பணம் அனுப்பவில்லை”
“உங்கள் விருப்பம்”
“நான் டெலிபோனை வைத்து விடுகிறேன்.”
“நல்லது.”
மன்மோகன் ரிசீவரை வைத்து விட்டு சிரித்துக்கொண்டே அலுவலகத்தை விட்டு வெளியேறினான். இரவு பத்து மணி வாக்கில் திரும்பி வந்து உடைகளை மாற்றிக்கொண்டு மேசையில் படுத்துக்கொண்டு யோசிக்க ஆரம்பித்தான். என்னை அழைக்கும் பெண் யாராக இருக்கும்? ஓர் இளம்பெண் தான் அவள் என்று அந்தக் குரல் சொல்கிறது. மிகவும் இனிமையான சிரிப்பு. படித்த பண்பட்ட பெண் என்பது அவளது பேச்சிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. நீண்ட நேரம் அவளைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தான். இங்கே கடிகாரம் பதினொன்றைக் காட்டியது. அப்போது தொலைபேசி ஒலித்தது. ரிசீவரை எடுத்த மன்மோகன் “ஹலோ” என்றான்.
“மிஸ்டர் மன்மோகன்” என்று மறுபக்கத்திலிருந்து குரல் வந்தது.
“ஆமாம்… மன்மோகன் தான்… சொல்லுங்கள் “
“இன்று பகலில் நான் பலமுறை உங்களை அழைத்தேன். நீங்கள் எங்கே ஒளிந்து கொண்டு இருந்தீர்கள் சார்?”
“ நான் வெட்டியான ஆள் தான். ஆனால் ஏதேனும் ஒரு வேலை இருக்கத்தானே செய்யும்.”
“என்ன வேலை?”
“ஊர் சுற்றுவது தான்”
“எப்போது திரும்பி வந்தீர்கள்?”
“பத்து மணிக்கு”
“இப்போது என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?”
“மேசையில் படுத்துக்கொண்டு உங்கள் குரலை வைத்து நீங்கள் எப்படி இருப்பீர்கள் என்று வரைந்து கொண்டிருந்தேன்.”
“வரைந்துவிட்டீர்களா?”
“இல்லை”
“அந்த முயற்சியைக் கைவிடுங்க… நான் மிகவும் அசிங்கமாக இருப்பேன்.”
“மன்னிக்கவும், நீங்கள் உண்மையிலேயே அசிங்கமாக இருந்தால், தொலைபேசியை உடனே வைத்துவிடுங்கள். நான் அசிங்கத்தை வெறுக்கிறேன்.”
குரல் சிரித்தபடியே “அப்படியானால் நான் அழகாகத்தான் இருக்கிறேன். நான் உங்கள் இதயத்தில் வெறுப்பை உண்டாக்க விரும்பவில்லை” என்றது.
சிறிது நேரம் மௌனமாக இருந்த மன்மோகன், “ஏதாவது யோசிக்கிறீர்களா?” என்று கேட்டான்.
“இல்லை… நான் உங்களிடம் ஒன்று கேட்கலாமா?” என்று அதிர்ந்தது குரல்.
“கேட்கலாமா என்று யோசித்துக் கேளுங்கள்.”
குரல் சிரித்தபடி “உங்களுக்காக ஒரு பாடல் பாடட்டுமா?” என்று கேட்டது.
“கட்டாயமாக”
“இருங்கள்”
தொண்டை கனைக்கும் சத்தம் கேட்டது. பின்னர் ‘காலிப்’ படத்தின் ‘நுக்தஹ் ச்சீ ஹை காம்-இ-தில்’ கஜல் பாடல் காற்றில்,,,,
இது சேகலின் புதிய ட்யூன். குரலில் வலியும் அன்பும் வழிந்தோடின. பாடல் முடிந்ததும் மன்மோகன், ‘‘மிகவும் அருமை… நன்றாக இருங்கள்’’ என்று பாராட்டினான். பாடிய குரல் வெட்கம் வழிந்தோட “நன்றி” சொல்லிவிட்டு தொலைபேசியை அணைத்தது.
இரவு முழுவதும் அலுவலகத்தின் பெரிய மேசையில் படுத்திருந்த மன்மோகனின் மனத்திலும் இதயத்திலும் காலிபின் அந்தப் பாடல் வரிகள் எதிரொலித்தபடியே இருந்தன. அதிகாலையில் விரைவாகவே கண்விழித்து எழுந்து டெலிபோனுக்காக காத்திருக்க ஆரம்பித்தான். சுமார் இரண்டரை மணி நேரம் நாற்காலியில் அமர்ந்திருந்தான். ஆனால் டெலிபோன் மணி ஒலிக்கவில்லை. மனம் சோர்வடைந்து போன போது, அவனது தொண்டையில் ஒரு விசித்திரமான கசப்பு வந்து கவ்வியது. எழுந்து நடக்க ஆரம்பித்தான். பிறகு மேஜையில் படுத்துக் கொண்டு முணுமுணுக்கத் தொடங்கினான். பலமுறை படித்த அதே புத்தகத்தை எடுத்துப் பக்கங்களைப் புரட்ட ஆரம்பித்தான். மாலை ஆனது. சுமார் ஏழு மணியளவில் தொலைபேசி ஒலித்தது. மன்மோகன் ரிசீவரை எடுத்து, “யாரு?” என்றான்.
“நான் தான்” அதே குரல்.
மன்மோகனின் குரல் கொஞ்சம் கடுமையாக இருந்தது, “இவ்வளவு நேரம் எங்கே இருந்தீர்கள்?”
“ஏன்?” என்று நடுங்கியது குரல்.
“நான் காலையிலிருந்து இங்கு அலைந்து கொண்டிருக்கிறேன்… என்னிடம் பணம் இருந்தபோதிலும் கூட, காலை உணவும் சாப்பிடவில்லை, மதிய உணவும் சாப்பிடவில்லை.”
“எப்போது விரும்புகிறேனோ அப்போது தான் நான் கூப்பிடுவேன்… நீங்கள்…” என்று குரல் சொல்லத் தொடங்கியதும்,
மன்மோகன் குறுக்கிட்டு, “இதோ பாருங்கள், இந்தப் போக்கை நிறுத்துங்கள். டெலிபோன் செய்ய வேண்டுமென்றால் அதற்கென ஒரு நேரத்தை நிர்ணயம் செய்யுங்கள். என்னால் காத்திருக்க முடியாது” என்றான்.
குரல் சிரித்தபடி, “இன்று நான் மன்னிப்புக் கேட்கிறேன். நாளையிலிருந்து உங்களுக்குக் காலையிலும், மாலையிலும் தவறாமல் அழைப்புகள் வரும்.”
“நல்லது!”
குரல் சிரித்தது, “உங்கள் இதயம் இப்படி உடைந்துவிடும் என்று எனக்குத் தெரியவில்லை”
மன்மோகன் சிரித்துக் கொண்டே, “மன்னிக்கவும். காத்திருப்பின் மீது எனக்கு மிகவும் கோபம் வரும். எதன் மீதாவது கோபம் வந்தால், என்னை நானே தண்டிக்க ஆரம்பித்து விடுகிறேன்.” என்றான்.
“அது எப்படி?”
“உங்கள் தொலைபேசி அழைப்பு காலையில் வரவில்லை… எனவே நான் வெளியே சென்றிருக்க வேண்டும். ஆனால், நாள் முழுக்க இங்கேயே அலைந்து கொண்டிருந்தேன்.”
குரல் கொஞ்சம் இரக்கம் கலந்து, “அது என்னால் நிகழ்ந்த தவறு இல்லை. ஆனால் நான் தெரிந்தே தான் உங்களுக்குப் போன் செய்யவில்லை.”
“ஏன்?”
“நீங்கள் காத்திருப்பீர்களா, இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ள.”
“ரொம்பவே விசித்திரமான பெண் தான் நீங்கள்… சரி, இப்போது டெலிபோனை வையுங்கள். நான் சாப்பிடப் போகிறேன்.” என்றான் சிரித்தபடி.
“நல்லது, நீங்கள் எப்போது திரும்பி வருவீர்கள்?”
“அரை மணி நேரம் ஆகும்”
இரவு உணவு முடித்து அரை மணி நேரம் கழித்துத் திரும்பிய மன்மோகனை தொலைபேசி அழைத்தது. இருவரும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தனர். ‘காலிப்’பின் கஜல் ஒன்றைப் பாடியது குரல். மன்மோகன் அதை முழு மனத்துடன் பாராட்டினான். பிறகு தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டது.
அதன்பிறகு தினமும் காலையிலும் மாலையிலும் மன்மோகனுக்கு அழைப்பு வரத் தொடங்கியது. மணியோசை கேட்டவுடனே டெலிபோனை நோக்கி துள்ளிக் குதித்துச் செல்வான். சில நேரங்களில் உரையாடல் மணிக்கணக்கில் தொடர்ந்தது. மன்மோகன் அந்தக் குரலிடம் தொலைபேசி எண்ணையோ பெயரையோ கேட்கவும் எண்ணியது இல்லை. தொடக்கத்தில் அந்தக் குரலுக்குரிய உருவத்தை கற்பனைத் திரையில் வரைய முயன்றவன் போகப்போக அந்தக் குரலின் ஒலியிலேயே திருப்தி அடைந்தது போல் உணர்ந்தான். குரலே வடிவமாக இருந்தது. குரலே தோற்றமாக இருந்தது. குரல் உடலாக இருந்தது. குரலே ஆன்மாவாக இருந்தது. ஒரு நாள் அந்தக் குரல், “மன்மோகன் ஏன் என் பெயரைக் கேட்கவேயில்லை?” என்று கேட்டது.
மன்மோகன் சிரித்துக்கொண்டே, “உன் குரல் தான் உன் பெயர்” என்றான்.
“இந்த பதில் மிகவும் இனிமையாக இருக்கிறது.”
“அதில் ஏதேனும் சந்தேகம் இருக்கிறதா?”
ஒரு நாள் அந்தக் குரல் ஒரு கேள்வி கேட்டது, “மன்மோகன், நீங்கள் எப்போதாவது எந்தப் பெண்ணையாவது காதலித்திருக்கிறீர்களா?”
அதற்கு மன்மோகன், “இல்லை” என்றான்.
“ஏன்?”
“ஏன் என்பதற்கான பதிலைச் சில சொற்களைக் கொண்டு சொல்லிவிட முடியாது. அதற்காக என் வாழ்க்கையின் முழு பாரத்தையும் நான் சுமக்க வேண்டியிருக்கும்.. பதில் கிடைக்காவிட்டால், அது பெரிய கோபமாக உருவெடுத்துவிடும்” என்று மிகவும் வருத்தப்பட்டுச் சொன்னான் மன்மோகன்.
“சரி விடுங்கள்”
தொலைபேசி வழியான இந்த உறவு கிடைத்து கிட்டத்தட்ட ஒரு மாதமாகிவிட்டது. அதிகபட்சம் இல்லாவிட்டாலும் ஒரு நாளைக்கு இரண்டு முறை அழைப்பு வந்துவிடும். கடனுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், ஏழு-எட்டு நாட்களில் பம்பாய்க்குத் திரும்பி வரப் போவதாகவும் ஒரு நாள் நண்பனிடமிருந்து கடிதம் வந்தது. கடிதத்தைப் படித்ததும் மிகவும் வருந்தினான் மன்மோகன். டெலிபோன் வந்ததும் மன்மோகன், “இந்த அலுவலகத்தில் விரிந்த எனது பேரரசு இன்னும் கொஞ்ச நாள்களுக்குத் தான் விருந்தாளியாக இருக்கப்போகிறது” என்றான்.
“ஏன்?” என்று கேட்டது குரல்.
மன்மோகன், ‘‘கடன் செட்டில் ஆகிவிட்டது… அலுவலகம் ஆக்கிரமிக்கப்பட உள்ளது.”
“உன் வேறு எந்த நண்பன் வீட்டிலும் தொலைபேசி இணைப்பு இல்லையா?.”
“டெலிபோன் வைத்திருக்கும் நண்பர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் எண்களை என்னால் உனக்குக் கொடுக்க முடியாது.”
“ஏன்?”
“உன் குரலை வேறு யாரும் கேட்பதை நான் விரும்பவில்லை.”
“காரணம்?”
“நான் மிகவும் பொறாமைப்படுகிறேன்.”
“இது பெரிய பிரச்சனை” என்று சிரித்தது குரல்.
“என்ன செய்வது?”
“உன் ஆட்சி முடியப்போகும் கடைசி நாளன்று நான் என் எண்ணைச் சொல்கிறேன்.”
“சரி.”
மன்மோகனின் சோகம் எல்லாம் நீங்கியது. இந்த அலுவலகப் பேரரசின் அரசப் பதவியில் தனது ஆட்சி எப்போது முடியும் என்று காத்திருக்கத் தொடங்கினான். மீண்டும் அந்தக் குரலின் உதவியால் தன் கற்பனைத் திரையில் அவளின் படத்தை வரைய முயற்சி செய்யத் தொடங்கினான். நிறைய படங்கள் வரைந்து பார்த்தான். ஆனால் அவனுக்கு எதிலும் திருப்தி ஏற்படவில்லை. எல்லாம் கொஞ்சம் நாள்கள். அவ்வளவு தான் என்று நினைத்தான். அந்தக் குரல் டெலிபோன் நம்பரை சொன்னால் அந்தக் குரலுக்குரியவளையும் பார்க்க முடியும். இதை நினைத்தவுடனேயே அவன் உள்ளமும் மனமும் வெறுமையில் ஆழ்ந்துவிடும். “ அவளை நேரில் பார்க்கும் அந்தத் தருணம் என் வாழ்வில் எவ்வளவு பெரிய தருணமாக இருக்கும்.”
அடுத்த நாள் தொலைபேசியில் அழைப்பு வந்தபோது, மன்மோகன் அந்தக் குரலிடம், “உங்களைப் பார்க்க வேண்டுமென்ற ஆசை எனக்குள் எழுந்து விட்டது.” என்றான்.
“ஏன்?”
“இங்கே எனது ஆட்சி முடிவடையும் கடைசி நாளில், உங்கள் எண்ணைச் சொல்லுவதாக நீங்கள் சொன்னீர்கள்.”
“ஆம் சொன்னேன்”
“அதற்கு உங்கள் முகவரியை எனக்குக் கொடுப்பீர்கள் என்றும் தானே அர்த்தம்… நான் உங்களைப் பார்க்க முடியும் தானே.”
“எப்போது வேண்டுமானாலும் நீங்கள் என்னைப் பார்க்கலாம்… இன்றே கூட என்னைப் பார்க்கலாம்.”
“இல்லை-இல்லை”… சிறிது நேரம் யோசித்த பிறகு, “நான் உங்களை ஒரு நல்ல உடையில் சந்திக்க விரும்புகிறேன். இன்று என் நண்பன் ஒருவனிடம் ஒரு நல்ல கோட்-சூட் தைத்துத் தரக் கேட்டிருக்கிறேன்.” என்றான்.
குரல் சிரித்தபடியே, “நீங்கள் ஒரு குழந்தைதான்… என்னை சந்திக்கும் போது நான் உங்களுக்கு ஒரு பரிசு தருவேன்” என்றது.
மன்மோகன் தணிந்த குரலில், “உங்களைச் சந்திப்பதை விடச் சிறந்த பரிசு வேறேன்ன இருந்துவிடப் போகிறது?” என்றான்.
“நான் உங்களுக்கு ஒரு எஜெக்டா ரிஃப்ளெக்ஸ் கேமரா வாங்கி வைத்திருக்கிறேன்.”
“ஓ.”
“அதில் நீங்கள் முதலில் என்னைத் தான் புகைப்படமாக எடுக்க வேண்டும் என்பது தான் என் நிபந்தனை.”
மன்மோகன் சிரித்துக் கொண்டே, “இந்த நிபந்தனையை நேரில் உங்களைச் சந்திக்கும்போது தான் முடிவெடுப்பேன்” என்றான்.
இன்னும் கொஞ்ச நேரம் அரட்டை அடித்தார்கள். அதன் பிறகு அந்தக் குரல் அவனிடம் “நாளையும் நாளை மறுநாளும் என்னால் அழைக்க முடியாது” என்றது.
“ஏன்?” என்ற அவனது கேள்வியில் கவலையின் துளிகள் படர்ந்திருந்தன.
“நான் என் உறவினர்களுடன் வெளியூர் செல்கிறேன். இரண்டு நாட்கள் மட்டும் நான் வீட்டில் இருக்க மாட்டேன். தயவுசெய்து மன்னிக்கவும்”
அதன்பிறகு மன்மோகன் அன்று முழுவதும் அலுவலகத்திலேயே இருந்தான். மறுநாள் காலை எழுந்தபோது அவனுக்குத் தலைசுற்றுவது போலிருந்தது. டெலிபோன் வராததால் இப்படி இருக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் மதியத்திற்கு பிறகும் அதன் தீவிரம் அதிகரித்தபடியே இருந்தது. உடல் சூடாக ஆரம்பித்தது. கண்களில் இருந்து கண்ணீர் வழிய ஆரம்பித்தது. மன்மோகன் மேஜையில் படுத்துக் கொண்டான். தாகம் எடுத்து எடுத்து அவனை மீண்டும் மீண்டும் களைக்க வைத்தது. எழுந்து குழாயில் முகம் வைத்து தண்ணீர் குடித்தான்.. மாலையில் மார்பு கனப்பது போல் உணர ஆரம்பித்தான். அடுத்த நாள் அவன் முற்றிலும் சோர்வடைந்து போனான். மிகுந்த சிரமத்துடன் சுவாசம் நடந்தது. நெஞ்சு வலி மிகவும் அதிகமானது.
பல சமயங்களில் அவன் சுயநினைவை இழந்தது போல் உணர்ந்தான். காய்ச்சலின் உஷ்ணத்தில் மணிக்கணக்கில் தன் டெலிபோன் குரலோடு பேசிக்கொண்டே இருந்தான். மாலையில் அவனது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. கலங்கிய கண்களுடன் கடிகாரத்தை பார்த்தான். அவன் காதுகளில் விசித்திரமான ஒலிகள் மட்டுமே கேட்டன. அதனால் டெலிபோன் அடித்தபோது அந்த ஒலி அவன் காதுகளுக்கு எட்டவில்லை. மணியோசை நீண்ட நேரம் தொடர்ந்து ஒலித்தது. மன்மோகன் அதிர்ச்சியடைந்தான். அவன் காதுகள் இப்போது அந்த ஒலியைக் கேட்கத் தொடங்கின. தள்ளாடியபடி எழுந்து டெலிபோனிடம் சென்றான். சுவரில் ஆதரவாகச் சாய்ந்தபடி நடுங்கும் கைகளுடன் ரிசீவரை எடுத்து, உலர்ந்த உதடுகளில் மரத்த நாக்கால் “ஹலோ” என்றான்.
அந்தக் குரல், “ஹலோ… மோகன்?” என்றது.
“ஆமாம் மோகன்” என்ற மன்மோகனின் குரல் தடுமாறியது.
“சத்தமா பேசுங்கள்…”
மன்மோகன் ஏதோ சொல்ல விரும்பினான். ஆனால் அவன் தொண்டை வறண்டு போனது.
“நான் சீக்கிரமே வந்துட்டேன்… ரொம்ப நேரமா கூப்பிடறேன்… எங்க இருந்தீங்க?” என்று கேட்டது குரல்.
மன்மோகனின் தலை சுற்ற ஆரம்பித்தது.
“என்ன ஆச்சு உங்களுக்கு?” என்றது குரல்.
மன்மோகன் மிகவும் சிரமப்பட்டு, “என் பேரரசின் அரசாங்கம் இன்றோடு முடிந்துவிட்டது” என்று சொன்னான். அவனது வாயிலிருந்து இரத்தம் வழியத் தொடங்கி ஒரு மெல்லிய கோடாக உதடு வழியாக கழுத்து வரை ஓடத் தொடங்கியது.
“என் எண்ணைக் குறித்துக் கொள்ளுங்கள்… ஃபைவ் நாட் த்ரீஒன் ஃபோர், ஃபைவ் நாட் த்ரீ ஒன் ஃபோர்… நாளை காலை ஃபோன் செய்யுங்கள்” என்று சொல்லிக் கொண்டே ரிசீவரை வைத்தது குரல். மன்மோகன் டெலிபோனில் முகம் குப்புற விழுந்தான். வாயிலிருந்து ரத்தக் குமிழிகள் வெடிக்கத் தொடங்கின.
– ஜூன், 1950
Leave a Reply