– சே. சுபாஷினி
இன்று நாம் ஏதாவது தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் உடனடியாக இணையததில் தேடுகின்றோம். சுமார் 25 வருடங்களுக்கு முன்னால் நூலகங்கள்தோறும் சென்றால்தான் நம்மால் தகவல்களை அறிந்து கொள்ள முடியும். ஆனால் கணினியுகம் இணையத்தை அறிமுகப்படுத்தியப்பிறகு. விக்கிபீடியா எனும் மந்திரக்காரன் அறிவார்ந்த தேடலுக்கான நேரத்தை நம் உள்ளங்கைகளில் கொடுத்துவிட்டான். அந்தவகையில் மாணவர் முதல் பெரியவர்வரை அன்றாட வாழ்வில் தினமும் விக்கிபீடியாவை பயன்படுத்தாமல் யாரும் இல்லை என்றே சொல்லலாம். அந்த அளவு விக்கிபீடியா மக்கள் வாழ்வில் பங்காற்றுகின்றது. இவ்வாறு தொடர்ந்து 25 ஆண்டுகள் அறிவு சேவையாற்றி வருகின்ற விக்கிபீடியா இந்த ஆண்டு 2026ல் தனது 25வது பிறந்தநாளை ஜனவரி 15 ஆம் நாளில் கொண்டாடியது.
குறிப்பாக விக்கிபீடியாவின் சேவைகளின் வழியாக தமிழ் வளர்ச்சியும் ஓங்கியது என்பதை நம்மால் உறுதியாகக் கூறமுடியும். எனவே தமிழகத்தில் விக்கியின் சேவையை பாராட்டும் விதமாக 25 ஆம் ஆண்டுவிழாவை இருநாள் கருத்தரங்கம் மற்றும் பாராட்டு கூடுகையாக கோவையில் ஜனவரி, 31 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய நாட்களி¢ல் நடைபெற்றது.
பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, அனலி கலை இலக்கியப் பள்ளி மற்றும் தமிழ் விக்கிபீடியா தன்னார்வலர்கள் இணைந்து இந்த நிகழ்வை ஒருங்கிணைத்து பொருள்பொதிந்த நிகழ்வாக நடாத்தியிருந்தனர்.
முதல் நாள் பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியிலும் இரண்டாம் நாள் அனலி கலை இலக்கியப்பள்ளியிலும் சீரும் சிறப்பாக நடைபெற்றது. விக்கித்திட்டத்தின் கீழ் மகளிர் கல்லூரியைத் தேர்ந்தெடுத்து நிகழ்த்தப்படுவது இதுவே முதல்முறை என்பது இதன் கூடுதல் சிறப்பாகும்.
முதல் நாள் நிகழ்வில் கல்லூரியின் கணினி ஆய்வக அரங்கில் முறையே தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி ஸ்ரீகிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர், விக்கிமீடியர் முனைவர் ம. மைதிலி அவர்களும், அதனைத்தொடர்ந்து பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் கல்லூரியின் தமிழ்த்துறை இணைப்பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர் முனைவர் இர.மணிமேகலை அவர்கள் வாழ்த்துரை வழங்கினர். பூசாகோ கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழத்துறை இணைப்பேராசிரியர் மற்றும் விக்கிமீடியர் முனைவர் இரா. குணசீலன் அவர்கள் செய்யறிவுக் கருவிகளின் மேம்பாட்டிற்கு விக்கிமூலத்தின் பங்கு எனும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினர்.
முதலாம் அமர்வின் பூசாகோ கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் மற்றும் விக்கிமீடியர் முனைவர் ந.இராஜேந்திரன் அவர்கள் விக்கித்திட்டங்கள் பற்றி அறிமுகம் செய்தார். இரண்டாம் அமர்வில் விக்கிபீடியாவின் விக்கிமூலத்தில் பல்துறைகளில் தன்னார்வலர்கள் இயங்கி வருகின்ற நிலையில் நம்முடைய தமிழ் இலக்கியங்களுக்காக தொடர்ந்து பதினேழு வருடங்களுக்கு மேலாக தன்னுடைய பெரும்பங்களிப்பை செய்துவரும் முக்கிய நபர்களில் குறிப்பிடத்தகுந்தவர் திரு.தகவலுழவன் ஐயா அவர்கள் இந்தியப் பதிப்பு உரிமமும், விக்கிமீடியாவின் கட்டற்ற உரிமமும் பற்றி மிகத் தெளிவாக விளக்கினார். வருகைபுரிந்துள்ள கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் ஆய்வு மாணாக்கர் விக்கிபீடியாவில் தங்களுடைய புது கணக்கை உருவாக்கி அவர்களுடைய தன்னார்வலர் பணியை தொடங்கினர். மூன்றாம் அமர்வில் அனைத்து பேராசிரியர்களும், ஆய்வாளர்களும் தமிழ் ஆர்வலர்களும் ளிசிஸி செய்வது பற்றி அறிந்து மிகுந்த ஆர்வமுடன் மகிழ்ச்சியாக இதன் செயல்முறையை விரைவாக செய்தனர். இலக்கியமும் தொழில்நுட்பமும் இணைந்த தருணம். மகிழ்வுதானே.
இரண்டாம் நாள் நிகழ்வுஅனலி கலை இலக்கியப்பள்ளியில் நடைபெற்றது. அனலியின் தலைவர், எழுத்தாளர் இர.அரிகரசுதன் ஐயா அவர்கள் வரவேற்புரை நல்கினார். தமிழர்களின் கலைகளை பறைசாற்றும் விதமாக அனலியின் சிலம்ப மாணவர்கள் சிலம்பம் நிகழ்த்துதலை அருமையாக செய்தனர். அதனைத்தொடர்ந்து அனலியின் தன்னார்வலர்கள் ஒயிலாட்டம் ஆடினர்.
இரண்டாம் அமர்வில் விக்கிமூலர்கள் பலர் தங்களுடைய அனுபவ உரையை பகிர்ந்துக்கொண்டனர். பின் இத்திட்டத்தின் மூலம் எதிர்கால தமிழ் வளர்ச்சிக்கு செய்யவேண்டிய பணிகள், மாற்றப்படவேண்டியவை, திருத்தங்கள், ஆவணப்படுத்தப்படும் களங்கள் போன்ற செயல்கள்குறித்தும் எதிர்கால திட்டங்கள் குறித்தும் நுட்ப வல்லுநர்களும் மொழிவல்லுநர்களும் கலந்துரையாடினர்.
இக்கலந்துரையாடலில் முக்கியமாக பார்வையற்றோருக்காக விக்கிமூலம் மேம்படுத்தப்பட வேண்டிய பணிகள் பற்றிய உரையாடல் நடைபெற்றது பயன்பொதிந்ததாகும். மூன்றாம் அமர்வில் நூல் வெளியீட்டுத் தயாரிப்பு நுட்பங்களை உருவாக்குதல் குறித்து தொழில்நுட்ப வல்லுனர்களின் பகிர்வு நடந்ததோடு திருக்குறள் சொற்பொருள் சுரபி எனும் நூல் சான்றாகத் சரிபார்ப்பு செய்து வெளியிடப்பட்டது. பிஎஸ்ஜிஆர் மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் பா. கவிதா அவர்களின் நன்றியுரைடன் நிகழ்வு சிறப்பாக நிறைவுபெற்றது.
விழாவின் சிறப்பு கொண்டாட்ட நிகழ்வாக அனலியின் நுழைவாயில் தமிழி எழுத்தில் விக்கியை பாராட்டி கோலம் வரைந்தும் வரளி ஓவிய வகைமையில் ஓவியங்கள்மூலம் வாழ்த்தியும் ஓவியத் திரைகளை ஆங்காங்கே கட்டித் தொங்கவிட்டும் விழாக்கோலம் பூண்டிருந்தது.
முனைவர் சத்தியராஜ் தங்கச்சாமி, பேரா. இரா. அரிகரசுதன் நிகழ்வின் திட்ட ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டனர்.
முனைவர் பா.கவிதா, முனைவர் ம.மைதிலி, முனைவர் ந.இராஜேந்திரன், முனைவர் இரா. குணசீலன், முனைவர் வா. காருண்யா, முனைவர் க. பாலாஜி, முனைவர் இரா. நித்யா மிகச்சிறப்பாக நிகழ்வின் ஒருங்கிணைப்பு பணிகளை செவ்வனே செய்திருந்தனர். அனலியின் சிலம்ப பயிற்றுனர் ஸ்ரீதர் மற்றும் தன்னார்வலர்கள் தங்களுடைய ஓயாத உழைப்பின் மூலம் நிகழ்¢வை சிறப்பாக்கியிருந்தனர். தொழில்நுட்பத் தமிழை வளர்ப்பதற்கும் விக்கிபீடியா தளம் பெரிதும் துணைநிற்கிறது.
தமிழ் மொழியை நவீன யுகத்திற்கு ஏற்ப டிஜிட்டல் மயமாக்குவது எவ்வாறு என்றும் சரியான அறிவுத் தேடலுக்கு மூலப்பிரதியை உள்ளீடு செய்து பயன்பெறுவது போன்ற பல தொழில்நுட்ப செயல்களை இப்பயிலரங்கின் வாயிலாக கற்றுக்கொண்டோம். மேலும் விக்கிபீடியா பயனர் கணக்கை உருவாக்குவது பற்றியும் ளிசிஸி செயல்முறையும் அழிந்து வரும் நாட்டுப்புறக் கலைகளை பாதுகாப்பது பற்றியும் எதிர்கால தமிழை தொழில்நுட்பத்துடன் மேம்படுத்துவது பற்றியும் அறிந்துக் கொண்டோம் என்று நிகழ்வில் கலந்துகொண்டோர் தங்கள் பின்னூட்டங்களில் பகிர்ந்துகொணடதும் சிறப்பு. இவ்வாறு விக்கிப்பீடியாவின் ஒப்பற்ற பங்களிப்பிற்கும் அதற்காக இயங்ககும் தன்னார்வலர்களுக்கும் பாராட்டுகளை நாமும் சொல்வது அவர்களை மேலும் ஊக்கப்படுத்தும். பாராட்டுகள்.
Leave a Reply