– இரா. அரிகரசுதன்
ஜனவரி 7ஆம் நாள் சென்னைப் பயணத்தில் ரெஜின்ரோஸ் நிர்வகிக்கும் சென்னை தியேட்டர் அக்காடமியில் நான் சிறுகதை ஆசிரியர் அனலி செல்வராஜ் நாடகக் கலைஞர், தஞ்சை விஜி ஆகியோர் சந்தித்தோம். அப்போது நாடகப் பயிற்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. நாடக ஒத்திகையின் சிறுபகுதியைப் பார்க்கும் வாய்ப்பை விஜயகுமார் எனக்கும் செல்வராஜ்க்கும் வழங்கினார்.
ஒத்திகையைப்பார்த்தபின் கலைஞர்களிடம் பேசும்போது எங்கள் நாடக நினைவுகளை பகிர்ந்துகொண்டபோது முரசு கலைக்குழுவில் நாங்கள் நிகழ்த்திய நாடகங்கள் பற்றியும் பகிர்ந்து கொண்டோம்.
பின் அலுவலகம் திரும்பும் வழியில் செல்வாவும் நானும் பேசிக்கொண்டே வந்தோம். சுனாமிக்குப்பின்னர் நானும் செல்வாவும் ஒரே நாளில் முரசுக்கலைக்குழுவோடு கலைப்பயணத்தில் இணைந்தோம். அதுமுதல் மதுரை தமுக்கம் மைதான கலை இரவு, தமுஎச கலைஇரவுகள், புத்தகக் கண்காட்சி கலைஇரவுகள், சித்திரவதைக்கு எதிரான மக்கள் கண்காணிப்பகத்தின் கலைப் பயணங்கள், பெண்கள் உரிமைக்கான கலைப்பயணங்கள், நடைப்பயணங்கள், சென்னை சங்கம நிகழ்வுகள், அனலியின் கலை இலக்கிய இயக்கப் பயணங்கள், அணுஉலை விழிப்புணர்வுக் கலைப் பயணங்கள், நாடக நிகழ்த்து அனுபவங்கள் என பல பல பேசிக்கொண்டோம்.
குறிப்பாக முரசு கலைக்குழு செயல்பாடுகளைப் பற்றி பேசிக் கொண்டோம். அப்போதுதான் சில கலைச் செயல்பாடுகளை சென்னையில் ரெஜினோடு இணைந்து முன்னெடுப்பதற்காக ஆனந்த்தோடு பேசியிருப்பது பற்றி என்னோடு பகிர்ந்து கொண்டார். மாலையில் என்னை சென்னையிலிருந்து வழியனுப்புவது வரை பழைய நினைவுகளுள் சற்றே மூழ்கியிருந்தோம் இருவரும்.
கோவைநோக்கிய பேருந்து பயணத்தில் கோவையில் கால்பதிக்கும் முன்னரே காலை மூன்று நான்கு மணியளவில் அன்பு தோழர் ஆனந்த் அண்ணனின் மறைவு செய்தியை நண்பர் காஞ்சாம்புரம் சுபீர் முகநூலில் பதிவிட்டதைக் கண்டேன். அது முதல் நிலைகொள்ளாத் தவிப்பு. உடல் பதட்டம் தொற்றிக் கொண்டது. முரசு ஜாய், ஜார்ஜ், வினட், செல்வா என தொலைபேசியில் பேசினேன். கிராமியப் பாடகர் கலைமாமணி பழனியாப்பிள்ளை அவர்களும் பாண்டிச்சேரி பினுகுமாரும் எனக்கு பேசினார்கள். எழுத்தாளர் பைசல்லோடு கனத்த குரலில் ஆனந்த்துடனான பழைய நாட்களைப் குறித்துப் சொல்லிக்கொண்டிருந்தேன்.
முன்தினம்தானே அவரைப்பற்றி பேசிக்கொண்டிருந்தோம் அதுவும் நீண்ட நாட்களுக்கு பிறகு என்கிற நினைவு வேறு அடிக்கடி மேலெழுந்து தூண்டிலில் மாட்டியிருக்கும் தக்கையைப் போல மனதைச் சுண்டுகிறது.
அறிவொளி இயக்கம் தொட்டு என் அம்மாவின் விரல் பற்றி பள்ளி பருவத்திலேயே தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் தமுஎகச வழியாகவே நான் நாடகம் மற்றும் கிராமியக் கலைஞனாக பயணப் பட்டேன். களரி பண்பாட்டு மையத்தில் அருள்பணி வில்சன் அவர்களின் பயிற்சியும் சென்னைக் கலைக்குழு பிரளயன் அவர்களின் பயிற்சியும் இன்னும் சுரேஸ்தர்மா அவர்களிடம் பயிற்சிகள் என பல பயிற்சிகளைப் பெற்றும் நாகர்கோவில் சிஎஸ்ஆர் எனும் தொண்டு நிறுவனத்தின் தமிழ்நாடு எய்ட்ஸ் விழிப்புணர்வு திட்டத்தின் மதுரை முதல் குமரி வரையான மாவட்டங்களுக்கு வள பயிற்சி நிலைய பயிற்றுனராக பணியாற்றிக் கொண்டிருந்தேன். கிராமியக் கலைஞர் பழனியாப்பிள்ளை அவர்கள் திட்ட ஒருங்கிணைப்பாளராகவும் முனைவர் சேகர் அவர்கள் திட்ட அலுவலராகவும் என்னோடுகூடவே பணியாற்றிக் கொண்டிருந்தார்கள். அச்சமயத்தில் எம்ஸ் இந்தியா அறக்கட்டளையில் கிராமப்புற கல்வி மேம்பாட்டிற்காகவும் பணிபுரிந்து கொண்டிருந்தேன்.
என்னுடன் அசுரன், அபுல்கலாம் ஆசாத், தமிழ்நாடு அறிவியல் இயக்க சசிகுமார், மனோ ரஞ்சன்தாஸ், போன்றோர்கள் உடனிருந்த காலக்கட்டம். அவ்வாறான சமூகமேம்பாட்டு பணிகளிலும் கலை இலக்கியப் பணிகளிலும் இயங்கிக்கொண்டிருந்தக் காலக்கட்டத்தில்தான் சுனாமி எனும் பேரிடர் ஏற்பட்டது. இக்காலக்கட்டத்தில் என் பள்ளித் தோழனான புகைப்படக் கலைஞனான சியாம்குமார் (பிரதீப்) மற்றும் என்னோடு தொலைதூரக் கல்வி பயின்ற தோழரான சைமன் காலனி செல்வராஜ் ஆகிய இருவரும் என் இயக்கப்பணியோடு இணைந்து நெருங்கிப் பணியாற்றலானார்கள்.

இச்சூழலில் சுனாமிக்கு பிறகான தொடர் செயல்பாடுகளின் வழியாக 2005 இல் நானும் செல்வாவும் ஒரேநாளில் முரசோடு இணைந்து கலைப்பயணத்தை ஆரம்பித்தோம். முரசின் ஆதர்சனமாக இயங்கிக் கொண்டிருந்த முரசு ஆனந்த் அருட்பணி ஜாய் ஜார்ஜ் இன்னும் பலரின் பங்களிப்புகள் நம்மை ஆச்சரியப்படுத்தின. அது முதல் மிகவும் ஆழமாகவும் அடர்த்தியாகவும் கலை வழி சமூக விடுதலைக்கான செயல்பாடுகளில் தீவிரமாக இயங்கினோம். எத்தனையோ கலைநிகழ்வுகள் பயணங்கள் பயிற்சிகள் என களச்செயல்பாடுகளும் கலை அனுபவங்களும் மறக்க இயலாது.
முரசு உறுப்பினர்கள் கூட்டாக ஒரு கம்யூன் வாழ்க்கையை வாழ்ந்தோம். தமிழ்நாட்டின் பலபகுதிகளிலிருந்தும் வரும் கலைஞர்களுக்கான இடமாக முரசு அமைந்திருந்தது- அலங்காநல்லூர் வேலு ஆசான், ஆறுமுகம் ஆசான், சென்னை மணிமாறன் என எத்தனையோ கலைஞர்கள் எங்கள் முரசு அலுவலகத்தில் தங்கி ஒத்திகைகள், பயிற்சிகள், புது முயற்சிகள் செய்துப்பார்த்தார்கள்.
மாட்டுக் கொம்பாட்டம் எனும் புதிய கிராமிய நடனக் கலைவடிவம் உருவானதும் இக்கலைஞர்களின் ஒருங்கிணைவில்தான்.
2000 ஆம் ஆண்டு முதல் பல இலக்கியச் செயல்பாடுகளை செய்துகொண்டிருந்த நான் அதன் தொடர்ச்சியாக 2006 ஆம் ஆண்டில் அன்பு தோழன் அசுரன் அவர்களின் தூண்டுதலின் பேரிலும் குலசேகரம் குறிஞ்சி மனோரஞ்சன்தாஸ் ஆதரவின் பேரிலும் கலை இலக்கிய இதழான அனலியை ஆரம்பித்தேன். இவர்களோடு சேர்ந்து அனலியின் ஆசிரியக் குழுவில் சைமன் காலனி செல்வராஜ், தீயணைப்பு படைவீரர் செல்வதரன், சென்னை மணிமாறன், வாத்தியார்விளை இனியன் தம்பி மற்றும் ஆனந்த், செல்வி ஆகியோரும் இணைந்திருந்தனர்.
அப்போது எழுத்திற்காக ஒரு புனைப்பெயர் வைக்க விரும்பனார் ஆனந்த். ஆனந்தீ எனும் புனைப்பெயரை அவரும் நானும் இறுதிப்படுத்தி அதுமுதல் ஆனந்தீ எனும் பெயரில் எழுத ஆரம்பித்தார். செல்வி தன்பெயரை வெண்மணிச் செல்வி என வைத்துக் கொண்டார்.
முரசு பல நாடகப் பயிற்சிகளையும் கிராமிய நடனப்பயிற்சிகளையும் தமிழகம் தழுவி பலக் குழுக்களுக்கு வழங்கியிருக்கின்றது. நானும் ஆனந்தும் நானும் அருட்பணி ஜாய் அண்ணனும் என இணைந்து பலக்குழுக்களுக்கு பயிற்சி அளித்திருக்கின்றோம். அவரோடு நானும் என்னோடு அவரும் என பலப் பயணங்களை மேற்கொண்டிருக்கின்றோம்.
நாங்கள் தனித் தனியே பயிற்சி கொடுப்பதுபோல், சேர்ந்து நின்று ஒரேநேரத்தில் பயிற்சிக் கொடுக்கும் திறன்கொண்டவர்கள். அவ்வாறான பயிற்சிகளின் வீச்சு இன்னும் மேலோங்கி இருக்கும். சிலநேரங்களில் என்னையும் ஆனந்தையும் பெயரை மாற்றிச் சொல்லி நினைவு படுத்திய நிகழ்வுகளும் நடந்துள்ளன. அதுபோல என்னை ஜாய் அண்ணனைக் கூப்பிடுவதைப்போல பாதர் (அருட்பணியாளர்) என்று அழைத்த தருணங்களும் நடந்துள்ளன. முரசு திக்கெட்டும் கொட்டி முழங்கிய காலப் பயணம் அது.
கலை வாழ்வின் ஊடாகவே நானும் ஆனந்தும் நல்லத் தோழமை கொண்டிருந்த காலம் அது. அவரின் மகனுக்கு மகரந்தன் எனும் பெயர் சூட்டி அன்பு பாராட்டி அழகு பார்த்திருக்கின்றேன்.
பின்னாளில், வாழ்க்கைக்கான ஓட்டத்தில் கல்வி ஊடகப்பணி பேராசிரியர் பணி என வாழ்வு நம்மை சொந்த மண்ணிலிருந்து தூரமாக நிறுத்தியபோது எங்கெல்லாம் சென்றேனோ அங்கெல்லாம் கலையும் இலக்கியமுமாக என்னளவில் நான் இயங்கிக் கொண்டிருந்த வேளையிலும் எங்கள் சந்திப்புகள் தொடர்ந்தன. விசாரிக்கும் போதெல்லாம் ஒம்ம மகரந்தனும் மேதினியும் நல்லாயிருக்கின்றார்கள், என்பார்.
சாகிறவரைக்கும் அவர் தோளில் பறையும் காலில் சலங்கையும் கிடக்கும் என்று சொல்லிக் கொண்டிருந்தவர். அவ்வாறே வாழ்ந்து காட்டியவர். அவரது இறுதிச் சடங்கில் கலைஞர்களின் கூடுகையும் அஞ்சலிக் கலை நிகழ்த்துதலில் ஜாய், மகரந்தன் மற்றும் முரசுகலைஞர்கள் ஆட்டத்தையும் கண்டபோது ஐயோ…. எனக் கதறி திரண்டிருக்கும் கண்ணீர் தெறிக்க நானும் ஆடுகிறேன். .
எழுத எவ்வளவோ இருந்தாலும் என்னால் எழுத முடியாத கனம் மண்டைக்குள் உருளுகிறது. நடையும் தோதாகவில்லை.
2006 ஆகஸ்ட் மாத அனலி இதழில் அவர் ஆனந்தீ எனும் பெயரில் எழுதியக் கவிதையை வாசிக்கத் தருகின்றேன்.
“மறைந்துபோகும் நாளில்
என் உயிரின் மிச்சத்தை
விட்டுப்போவேன்…
யாரோ ஒருவன்
மறுபடியும் உயிர் பற்றி
மீதம் உயிர் வைத்து
மடிந்து போக…
உயிர்போச்சுதுணு எல்லோரும்
குழிதோண்டும் தருணங்களில்
சிரித்துக் கொண்டே
சிலிர்த்தெழும் பறையின் அதிர்வில்
செத்துவிழும் வருணங்கள்….
…………………………………………………………… ஆனந்தீ”
வீரியமான கலைவாழ்வு வாழ்ந்த ஆனந்தீ எனும் ஆனந்த் அண்ணன், தோழர் ஆனந்த்திற்கு வீரச்செங்கலை வணக்கம் செலுத்துகிறேன். கனத்த இதயத்துடன்-
Leave a Reply