சாவு என்பது உனக்குக் கிடையாது என்பதை அறியாத வரை நீ பேராசையாகத்தான் இருப்பாய். சாவினால் தான் பேராசை வருகிறது. இதைப்பற்றி நீ ஒரு போதும் எண்ணியிராமல் இருக்கலாம். ஆனால் நாம் சாவைக் குறித்து அஞ்சுவதால் தான் பேராசை வருகிறது. சாவு இருப்பதால் வாழ்வை எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு அனுபவித்து விட நாம் விரும்புகிறோம். நாம் பேராசைக்காரர்களாய் இருக்கிறோம். நாம் அதிகமாக உண்ண விரும்புகிறோம். எவ்வளவு பணம் சேர்க்க முடியுமோ அவ்வளவும் சேர்க்க விரும்புகிறோம். ஏனென்றால் சாவு இருக்கிறது, சீக்கிரமே எல்லாம் முடிந்துவிடும். எனவே அது நேர்வதற்குள் சாத்தியமான எல்லாவற்றையும் நுகர்ந்து விடு. எதையும் அனுபவிக்காமல் விட்டு விடக் கூடாது. இப்படித்தான் பேராசை எழுகிறது. பேராசை என்பது சாவு பயமே தவிர வேறில்லை. பயத்தில் இருந்தே பேராசை எழுகிறது. பயந்தாங்கொள்ளி மனிதரே பேராசை மனிதர் ஆகிறார்.
பேராசைப்படாதே என உலகில் உள்ள மதங்கள் அனைத்தும் போதித்து வருகின்றன. ஆனால் அதனால் எந்த வேறுபாடும் நேரவில்லை. அது மக்கள் மறு உலகின் மீது பேராசை கொள்ள மட்டுமே செய்து இருக்கிறது. வானகத்தின் மீது சொர்க்க இன்பங்களின் மீதும் மக்கள் பேராசை கொள்ள மட்டுமே அது செய்திருக்கிறது. ஆனால் அவர்களின் பேராசை மாறி விடவில்லை. சொல்லப்போனால் அதிகரித்து இருக்கிறது.
பேராசைப்படாதே என உனக்கு நான் சொல்லுவதில்லை; உணர்வாயிரு, அதிக உணர்வாயிரு என்றே சொல்கிறேன்.
விழிப்புணர்வு கொண்ட மனிதன் போகுமிடமெல்லாம் சொர்க்கமாகிறது. பரவசமும், விழிப்புணர்வும், தியானமும், சட்டேரியும் ஆன மனிதரை உங்களால் நரகத்துக்கு அனுப்ப முடியாது. ஏனெனில் அவர் நரகத்தை அடைந்ததும், நரகம் அவருக்கு சொர்க்கம் ஆகிவிடும். உணர்வற்ற மனிதனை உங்களால் சொர்க்கத்துக்கு அனுப்ப முடியாது. ஏனெனில் அவன் எங்கு சென்றாலும் தான் நரகத்தில் இருப்பதாக உணர்வான். நரகம் இல்லை என்றால் அவன் அதை உருவாக்கி விடுவான். அவனது உணர்வின்மையே அவனுக்கான நரகத்தை வெளிப்படுத்தும். விழிப்புணர்வு பெற்ற எல்லா மகான்களின் மொத்த தத்துவத்தையும் ஒரே வாசகமாக சுருக்கினால் அது இதுதான். உணர்வின்மையே நரகம். உணர்வுநிலையே மோட்சம்.
Leave a Reply