அன்று வெள்ளிக்கிழமை…
கோழிக்கடை கோபால் கடைக்குள் உட்காந்து நாளிதழ்களை புரட்டிக் கொண்டிருந்தார்.
கோழிக்கடையில் இன்று பெரிதாக வியாபாரம் ஒன்றும் இருக்காது. ஆனாலும் சில வெள்ளிக்கிழமைகளில் எதிர்பாராத வியாபாரம் இருக்கும். கடையை தேடி வரும் வாடிக்கையாளர்களை தவற விட்டு விடக் கூடாது என்பதற்காகவே கடையை திறந்து வைத்து உட்கார்ந்திருப்பார்.
அன்று பெரும்பாலும் கடையை சுத்தம் செய்வது, கணக்கு வழக்குகளை பார்ப்பது என்று நேரத்தை கழிப்பார். கடை அமைந்திருக்கும் இடம் ஒரு பிரதான சாலைதான்…
பேருந்து நிலையம், இரயில் நிலையம், மருத்துவமனை செல்பவர்கள் எல்லாரும் அந்த சாலையில் தான் செல்ல வேண்டும். கடைவீதிக்கு செல்பவர்கள், பள்ளி செல்லும் மாணவ மாணவியருக்கும் அதுதான் வழி. அதனாலேயே எப்போதும் மக்கள் நடமாட்டம் இருக்கும். வாகனங்களின் இரைச்சலும் ஓயாமல் தான் இருக்கும்.
வேலை இல்லாததால் வரி விளம்பரங்களை கூட விடாமல் படித்துக் கொண்டிருந்த கோபால் கடைக்கு எதிரே சாலையின் மறுபுறம் இருந்த டாஸ்மாக் மதுபானக்கடையை பார்த்தார். மணி பதினொன்று தான் ஆகியிருந்ததால் ஆள் அரவம் இல்லாமல் அமைதியாய் தெரிந்தது.
மதுபான கடை, கடையை ஒட்டியே பார்… கொஞ்சம் முன்னால் ஒரு பெட்டிக்கடை… கடை திறக்கவில்லை என்றாலும் பார் உள்ளே காலையிலேயே சரக்கு ஓட ஆரம்பித்து விடும். அவ்வப்போது குடிமகன்கள் வந்து போயிட்டு இருப்பார்கள்.
ஏனோ ஒரு வாரமாக கட்டுப்பாடு போட்டிருப்பார்கள் போல…குடிமகன்கள் வந்து ஏமாந்து இப்போது வராமலேயே விட்டு விட்டார்கள்.
ஆனாலும் இவர்களுக்கு காலையிலேயே கூடுதல் விலையில் எங்காவது கிடைத்து விடும்.
நேரம் பன்னிரெண்டை நெருங்கிக் கொண்டிருந்தது. ஆட்கள் ஒவ்வொருவராய் வந்து அங்கங்கே நிற்க ஆரம்பித்தார்கள். கோழி கடையிலும் ஒருவர் வந்து உட்கார்ந்தார்.
“என்ன கோபாலு… வியாபாரம் ஒன்றும் இல்லையா…உக்காந்துட்டீரு…”
வெள்ளிக்கிழமையில்லா… கொறைவாத்தான் இருக்கும்… வேலைக்கு போவலையா… “என்னத்த வேல செஞ்சு என்னத்தப்போ… ஒண்ணும் முன்னேத்தமில்லையே… உடம்புக்கு ஓய்வு தேவைப்பட்டுச்சு… அதான் லீவப் போட்டுட்டேன்… மாரியப்பன் சலித்தப்படியே சொன்னார்.
அது சரி… உழைக்கிற காசையெல்லாம் இப்படி சாராயக்கடையில் கொடுத்தா எப்படி முன்னேற இயலும்; இப்படியே குடிச்சிக்கிட்டே இரும்; ஒரு நாள் இல்ல ஒரு நாள் உன் மனைவி தூங்கிட்டிருக்கும் போது அம்மிக்கல்லை தலையில் தூக்கிப் போட்டு ஒம்ம கொல்லப் போறா…
நீரு சொல்றது சரிதாம் வே… ஒன்னு விட்டுட்டு போயிடுறாளுவ; இல்லேன்னா கொன்னு போட்டுர்றாளுவ… கவனமாத்தான் இருக்கணும். பயம் இருக்குல்ல… இந்த கருமாந்திரத்தை விட்டு தொலைச்சிட வேண்டியது தானே…
என்ன பண்றது… குடிச்சுப் பழகியாச்சு… விட முடியல… கேடு கெட்ட சரக்குன்னு தெரியுது… குடிச்சா ஒடம்பு கெட்டுப் போகும்னு புரியுது… விட முடியலையே…
அதான் மாரி… டாஸ்மாக் சாரயத்தோட மகிமை… குடிச்ச உடனே நல்லா தெம்பா இருக்கும்; அப்புறம் உடம்புல உள்ள வலுவெல்லாம் போயிரும்; மறுநாள் குடிச்சே ஆகணும்ங்கிற நெலம உடம்புலேயே உண்டாகி விடும்.
பழங்களிலோ, தானியங்களிலோ தயாரிக்கிற சரக்கு இல்ல இது… எல்லா உறுப்புகளையும் காலி பண்ணுகிற நஞ்சு… ஓட்டு போடுற நீ நல்லாயிருந்தா என்ன, நாசமாய் போனா என்ன… அரசாங்கத்துக்கு வசூலாகணும் அவ்வளவு தான்…
மாரியப்பன் கைபேசியில் நேரம் பார்த்தார். 11.55 ஆகியிருந்தது. கடை விற்பனையாளர்கள் வந்திருந்தார்கள். கதவை திறந்து உள்ளே சென்று விட்டு மறுபடியும் சாத்திக் கொண்டார்கள்.
வெளியே அங்கங்கே நின்று கொண்டிருந்த குடி மகன்கள் கடை அருகே வர ஆரம்பித்தார்கள். மாரியப்பனும் எழுந்தார்.
ஆமா திறமைக்கெல்லாம் பத்து பேரை வச்சு வேலை வாங்கிக்கிட்டு மொதலாளியா தோரணையா இருக்க வேண்டிய ஆளு… குடியால கெட்டு சீரழிஞ்சு போய்ட்டீரே… இப்பவும் ஒன்னும் கெட்டு போகல… திருந்தப்பாரும்…
“பாக்கலாம்…” சொல்லிக் கொண்டே எழுந்த மாரியப்பன் டாஸ்மாக் சாராய கடையை நோக்கி சென்றார்.
சரியாக பன்னிரெண்டு மணிக்கு கதவு திறக்கப்பட்டது. கோவில் நடை திறக்கப்பட்டது போன்ற பரவசத்தோடு குடி பக்தர்கள் வேகமாக கடை வாசலுக்கு சென்றார்கள்.
ஆளுக்கொரு பாட்டிலை வாங்கிக் கொண்டு தெய்வ தரிசனம் கிடைத்த மாதிரியான ஒரு மலர்ந்த முகத்தோடு பாருக்குள் நுழைந்தார்கள்.
ஒருவர் கடை முன்னாடியே நின்று பாட்டிலை திறந்து அப்படியே ராவாக தொண்டைக்குள் ஊற்றி விட்டு பாட்டிலை அங்கேயே ஓரமாக வைத்தார்.
அங்கேயும் இங்கேயுமாக பார்த்து விட்டு விறுவிறுவென்று நடையை போட்டார்.
சிலர் எதிரில் இருந்த மளிகை கடையின் டம்ளரும் தண்ணீரும் பாட்டிலும் வாங்கிக் கொண்டு, சாலையோரமாகவே நின்று பங்கு பிரித்து வாயில் ஊற்றிக் கொண்டு கடலை மிட்டாயை கடித்தபடி கிளம்பினார்கள்.
இன்னும் இரண்டு பேர் கோழிகடை வலது பக்கமிருந்த சந்துக்குள் நுழைந்தார்கள்.
அந்த சந்தினுள் வசிப்பிட வீடுகள் இருக்கிறது. சிறு தொழில் நிறுவனங்கள் இருக்கிறது.
எப்போதும் அந்த சந்துக்குள்ளே குடிமகன்களின் கூட்டம் இருக்கும். ஆறேழு பேர் இருந்து கொண்டே தான் இருப்பார்கள்.
குடிப்பார்கள், சத்தமிடுவார்கள், சண்டையிடுவார்கள், படுத்து புரளுவார்கள், அங்கேயே கதவு சாத்தியிருக்கும் கட்டிடத்தின் படிக்கட்டில் படுத்து உறங்குவதும் உண்டு.
நமக்கேன் வம்பு என்று யாரும் எதுவும் கேட்க மாட்டார்கள். சந்தின் வலதுபுறம் ஒரு மதில் சுவர் உண்டு. சுவரை ஒட்டி கழிவு நீர் கால்வாய்…
அந்த பகுதியில் சிறுநீர் கழிப்பதற்கு வேறு மறைவிடம் இல்லாததால் அந்த கால்வாயில் தான் கழித்து விட்டு செல்வார்கள்.
குடித்து விட்டு வீசுகிற சரக்கு பாட்டிலும் தண்ணீர் பாட்டில்களும் அந்த கால்வாய்க்குள் கிடந்து அடைப்பை ஏற்படுத்தி துர்நாற்றம் வீசக் கூடிய அளவில் தான் அந்த பகுதியே இருக்கும். மழைக்காலங்களில் சாலையில் தண்ணீர் ஓடுவதற்கும் மக்களின் இந்த பொறுப்பின்மையும் காரணமாக இருக்கும்.
அந்தக் கால்வாய் மதில்சுவர் மீது தான் பிராந்தி பாட்டிலை வைத்தார்கள். இருவரும் இரண்டு டம்ளர்களில் அளவு பார்த்து ஊற்றினார்கள்.
ஆறு ரூபாய் தண்ணீர் பாட்டிலை திறந்து பிராந்தி நிரப்பியிருந்த டம்ளர்களில் ஊற்றி நிரப்பி ஆளுக்கொன்றாய் எடுத்து மடமடவென்று குடித்து காலி பண்ணினார்கள். பிளாஸ்டிக் டம்ளர்களை கசக்கி கால்வாயிலேயே வீசினார்கள்.
காலை பத்து மணிக்கெல்லாம் இருவரும் ஆளுக்கொரு கட்டிங் போட்டிருந்ததால் இப்போதைய கட்டிங் கொஞ்சம் போதையை ஏற்றியது.
இருவரும் இதோடு விட்டு விட போவதில்லை. ஒரு சுற்று சுற்றி விட்டு மறுபடியும் வருவார்கள். மறுபடியும் ஒரு கட்டிங்…
எங்காவது பணம் புரட்டி விடுவார்கள். யாரிடமாவது வாங்கி விடுவார்கள். வீட்டில் அவசர தேவைக்காக வைத்திருக்கிற பணத்தை கூட எடுத்து வந்து விடுவார்கள்.
பெற்றவர்களின் ஏச்சு பழக்கமாகி விட்டது. மனைவியை சமாதானமாக்கிக் கொள்ளலாம் அல்லது அடக்கி விடலாம்.
பணமே இல்லையென்றால் சரக்கு வாங்கி கொடுக்க கூடிய ஆளை பிடித்து விடுவார்கள். இன்னும் சிலரும் கூட வருவார்கள்.
இரவு கடை மூடுகிற வரைக்கும் சாராய கடைக்கும் இந்த சந்துக்கும் நடந்து கொண்டு தான் இருப்பார்கள்.
இவர்களைப் போல் இன்னும் சிலரும் இந்த சந்தே கதியென்று கிடப்பார்கள்.
இருபத்தைந்திலிருந்து நாற்பது வயதுக்கு உட்பட்டவர்கள், திருமணமானவர்கள், திருமணமாகாதவர்கள், வேலைக்கு போகாதவர்கள், நல்ல வேலையில் இருப்பவர்கள் வீட்டிற்காவது போகிறார்களா… எப்படி வருமானம் வருகிறது, எப்படி ஒரு குடும்பத்திற்குள் இருக்கிறார்கள்…
எதுவும் தெரியாது… ஆனால் பகல் பன்னிரண்டு மணியிலிருந்து இரவு பதினோரு மணி வரை இந்த சந்துக்குள் இவர்களை பார்க்கலாம்.
எப்படியாவது கூட்டணி சேர்ந்து விடும். பணமும் எப்படியாவது தயாராகி விடும். போதையும் இறங்கி விடாமல் இருக்கும்.
டாஸ்மாக் சாராய கடையில் கூட்டம் குறையாமல் இருந்தது. முண்டியடித்து வாங்கிக் கொண்டிருந்தார்கள். வெளியில் நிறுத்தப்பட்டிருக்கும் இருசக்கர வாகனங்கள் பாருக்குள் இருந்த கூட்டத்தை தெரியப்படுத்தியது.
வாஸ்து கிடையாது, பூஜை கிடையாது, எலுமிச்சம் பழம் கிடையாது, திருஷ்டி பொம்மை கிடையாது… சாராய கடையின் வியாபாரம் மட்டும் பெருகிக் கொண்டே தான் இருக்கிறது.
கோயில் கோயிலா சுத்திட்டு வந்தாலும் நமக்கு நடக்குறதுதான் நடக்கும்… கோபால் பெருமூச்சு விட்டபடியே சாராய கடையை கவனிக்க ஆரம்பித்தார்.
போதைக்கு வயது வித்தியாசமெல்லாம் இல்லை. ஒரு மணி ஆகிவிட்டது போலும்… வேலையாட்கள் சிலர் உணவு இடைவேளையின் போது கட்டிங் போட வந்து விட்டுப் போனார்கள். பெயிண்டர், கட்டட தொழிலாளர்கள், தொழிற்சாலையில் வேலை செய்பவர்கள் என சிலர் கண்ணுக்கு தெரிந்தார்கள்.
அவ்வப்போது குப்பை பொறுக்குபவர்களும், பிச்சைக்காரர்களும் கூட வந்தார்கள். இவர்களில் ஆண், பெண் என்று வித்தியாசம் இல்லை.
இதற்கிடையே அழுக்கு உடையோடு ஒரு முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒருவன் சாராய கடை அருகிலேயே நின்று கொண்டிருக்கிறான்.
கடைக்கு வருபவர்களின் அருகில் சென்று வணக்கம் சொல்கிறான். இருபது ரூபாய் கேட்கிறான்… சிலர் கொடுக்கிறார்கள்… சிலர் திட்டுகிறார்கள்… நூறு ரூபாய் சேர்ந்ததும் பாருக்கு சென்று கட்டிங் போட்டு விட்டு வெளியே வருவான்.
சாலையை அடிக்கடி கடந்து போய் வருவான். தெரிந்தவர்கள் கண்ணி பட்டால் நலம் விசாரிப்பான்.
எப்படி மக்கா இருக்க… நல்லா இருக்கியா… வியாபாரமெல்லாம் எப்படி போகுது… நீயெல்லாம் எப்படி இருக்க வேண்டிய ஆளு… வீட்ல தங்கச்சி, புள்ளைங்க எல்லாம் நல்லாருக்குல்ல… நீ நல்லாருக்கல்லா மக்கா… ரொம்ப சந்தோசம் சரி… ஒரு அம்பது ரூபா கொடு…
ஆளுக்கு தகுந்த மாதிரி பேசுவான்… அவ்வளவு இல்லையேப்பா… என்றான். இருபது ரூபாய் கொடு என்பான்…
சிலர் கொடுப்பார்கள், சிலர் நழுவி செல்வார்கள்… தரவில்லையென்றாலும் திட்டமாட்டான். மறுபடியும் ஆள் வந்தாலும் அதே மாதிரியான விசாரணைகளோடு பணம் கேட்பதும் நடக்கும்.
போதை இறங்க இறங்க அடித்துவிட்டு ஒரு கட்டத்தில் அந்த சந்துக்குள் சென்று படுத்துக் கொள்வான்.
இரண்டு மணி ஆகியிருந்தது. சாராய வியாபாரம் மெதுவாக நடந்து கொண்டிருந்தது.
கோபாலும் கடையை சாத்தி விட்டு வீட்டுக்கு சென்றார். சாப்பிட்டு சிறிது நேரம் தூங்கி எழுந்து மறுபடியும் ஐந்து மணிக்கு வந்து கடையை திறந்தார். டாஸ்மாக் சுறுசுறுப்பாக தொடங்கியிருந்தது.
மூன்று மணிக்கு மேல் சாலையும் பரப்பரப்பாகி இருக்கும்.
மாணவ மாணவிகள், பள்ளி வாகனங்களால் நெருக்கடி ஆரம்பித்துவிடும். நேரம் செல்லச் செல்ல அலுவலக தொழிற்சாலை பணியாளர்களும் வர ஆரம்பித்து விடுவார்கள்.
அதற்கேற்றார் போல் குடிமகன்களின் வாகனங்கள் அங்கங்கே நிறுத்தப்படுவதால் அந்த சாலை அதிகப்படியான நெருக்கடியை சந்திக்கும்.
அதுவும் மதுபான வாகனம் வந்து நின்று விட்டால் அந்த சாலையே திணறிப்போகும்.
அங்கங்கே விழுந்து கிடக்கும் குடிமகன்கள், போதையில் பேசும் வார்த்தைகள், நாயாய் ஓடி போய் முண்டியடித்து கொண்டு மதுபாட்டில்கள் வாங்கிச் செல்லும் காட்சிகள் முகம் சுளிக்க வைக்கும்.
அதன் வழியே தான் பெண்களும், குழந்தைகளும் சென்று கொண்டு இருக்கிறார்கள்.
மதுக்கடைகளை அரசு மூடப் போவதில்லை. எங்காவது ஊருக்கு வெளியே கொண்டு போய் வைக்கலாமே… எத்தனையோ மனுக்கள், சமூக ஆர்வலர்களின் போராட்டங்கள்…
எதையும் அரசு கண்டு கொள்வதில்லை. கோபால் கூட மதுக்கடை போராட்டங்களின் கலந்து கொண்டிருக்கிறார்.
எல்லாம் எதிர்க்கட்சி கூட்டணியில் அவர் சார்ந்த கட்சி இருக்கிற வரைதான். இப்போது ஆளும் கட்சி கூட்டணி… வாய் மூடி மௌனமாயிருக்கிறார்.
மாற்று கட்சியினரின் கிண்டலுக்கு ஆளாகி வெட்கப்பட வேண்டி இருக்கிறது.
நேரம் செல்லச் செல்ல கூட்டமும் அதிகரித்தது. தமிழர்களுக்கு போட்டியாக வேலையில் தான் வடநாட்டவர்கள் வருகிறார்கள் என்றால் இங்கேயும் போட்டிக்கு வந்து விட்டார்கள்.
வடநாட்டவர்களை வைத்து கோபாலுக்கு ஒரு பலன்…
அங்கே சரக்கை வாங்கிக் கொண்டு இங்கே கறி வாங்கிச் செல்வார்கள். திடீரென்று டாஸ்மாக் முன்னால் சத்தம் அதிகமாக கேட்க என்னவென்று பார்த்தார்.
கொஞ்சம் நேரத்திற்கு முன்னால் கடை பாருக்குள் ஒன்றாக சென்ற நாலைந்து பேர் சண்டை போட்டுக் கொண்டு வெளியே வந்தார்கள்.
இரண்டு பேர் அடிப்பதற்கு பாய்ந்து கொண்டிருக்க மற்றவர்கள் விலக்க முற்பட்டார்கள். அதில் ஒருவன் கீழே விழுந்தான். எல்லாரம் ஒன்னு சேர்ந்துட்டீங்கல்ல…
நாறப்பயலுவள… ஒங்கள எங்க பாக்கணுமோ அங்க பாத்துக்கிறேன்… விழுந்தவன் எழுந்து கெட்ட வார்த்தைகளை வீசி கத்திக் கொண்டே போனான்.
அப்போதுதான் டியூசனுக்கு சென்று விட்டு அந்த வழியே வந்த பத்தாம் வகுப்பு மாணவிகள் காதைப் பொத்திக் கொண்டு முகச்சுளிப்போடு வேகமாக நடை போட்டார்கள். எதுவும் சொல்ல முடியவில்லை. கோபாலுக்கு சுருக்கென்று நெஞ்சில் தைத்தது. தெளிவாக உடுத்திக் கொண்டு அலுவலர்கள் மாதிரி வருவார்கள். போதையேறியவுடன் தள்ளாடிக் கொண்டு போவார்கள். வீடு போய் சேர்ந்தால் உண்டு
சாலையோரமாகவோ கால்வாய்க்குள்ளோ விழுந்து கிடப்பார்கள். யாரேனும் வீட்டுக்கு தகவல் சொல்லி வந்து அள்ளிப் போட்டு கொண்டு போவதும் உண்டு; அங்கேயே கிடந்து போதை தெளிந்து எழுந்து போவதும் உண்டு.
காவல்துறை வாகனமும் அந்த வழியே தான் தினமும் போய்க் கொண்டு இருக்கிறது. இதெல்லாம் தினமும் நடக்கும் கூத்து தான். நேரம் பத்தை நெருங்கியது.
கூட்டம் முண்டியடித்தது… இந்த தேவாமிர்தம் இல்லாவிட்டால் அடுத்த நொடியே உயிர் போய் விடும் என்கிற ரீதியில் அவர்களின் செயல்பாடு இருந்தது.
மூத்திர சந்து கூட்டம் கடைசி பாட்டிலை பகிர்ந்து அடித்து விட்டு வீரவசனம் பேசிக் கொண்டிருந்தது. நட்பு, பாசம் என்று அன்பை பொழிந்தது.
“நா இருக்கேம்ல… எதுக்கும் கவலைப்படாத… நீ கேட்டா உயிரையே தருவேன்.
எவனையாவது அடிக்கணுமா… சொல்லுல… இப்பவே வீடு புகுந்து தூக்குவோம்.”
ஒருவன் ரொம்ப திமிறினான்… நீயே சாவுற மாதிரி இருக்… நீ என்னல தூக்குறது… இன்னொருவன் நக்கலடித்தான்…
“சாவுறதுன்னு ஆகிப் போச்சுன்னா… கள்ளச்சாராயம் குடிச்சு சாவுங்கல… கவருமெண்டு கொடுக்கிற பத்து லட்சம் ரூபாய் பணமாவது பொண்டாட்டி பிள்ளைங்களுக்கு போய் சேரும்…”
ஆமால… சாவு சரித்திரமாயிரும்… சத்தமாய் சிரித்தார்கள். கோபால் மனதில் நினைத்துக் கொண்டே கடையை சாத்தி விட்டு கிளம்பினார். பக்கத்து கடை வாசலில் மூன்று பேர் போதையில் உட்கார்ந்திருந்தார்கள்.
காலக்கொடுமை… என்று நினைத்துக் கொண்டே கோபால் தன்னுடைய இரு சக்கர வாகனத்தை கிளப்பிக் கொண்டு விரைந்தார்.
மறுநாள், கோபால் கடைக்கு வந்தபோது சந்துக்குள் கூட்டமாகி இருப்பதை பார்த்து விட்டு அருகே சென்றார். பாவம்… நல்லா வாழ்ந்த பையன்… குடிச்சு குடிச்சு நாசமாய் போயி இப்ப அனாதைப் பொணமா கெடக்கான்.
கூட்டத்தில் ஒருவர் சொன்னது காதில் விழுந்தது. எட்டிப் பார்த்தார். அந்த அழுக்கு உடை மனிதன் தான் மல்லாக்க கிடந்தான்.
காவல்துறை வந்து பார்த்தது. குப்பை வண்டியில் அள்ளிப் போட்டுக் கொண்டு போனார்கள்.கூட்டம் கலைந்தது… கோபால் கடையை திறந்து வேலையை பார்க்க ஆரம்பித்தார்.
டாஸ்மாக் அரசு மதுபானக்கடை அடுத்த ஆட்டத்துக்கு ஆயத்தமாகிக் கொண்டு இருந்தது.
Leave a Reply