இரண்டாம் திருமணத்திற்கு வினோதமான தண்டனை

இரண்டாம் திருமணத்திற்கு வினோதமான தண்டனை

  • By admin
  • |

இரண்டாம் திருமணத்திற்கு வினோதமான தண்டனை….

இ.த.ச பிரிவு 494 மற்றும் இப்போது வந்துள்ள பாரத நீதிசட்டம் பிரிவு 82 படி கணவனோ, மனைவியோ முதல் திருமணத்தை மறைத்து இரண்டாம் திருமணம் செய்தால் ஏழு வருடம் வரை தண்டனை வழங்கலாம் என குறிப்பிடுகிறது. இது பிரிட்டிஷ் அரசால் இயற்றப்பட்ட சட்டமாகும்.

பிரிட்டிஷ் அரசாங்கத்திடமும் இச்சட்டம் முதலில் இல்லை. பிரிட்டனில் இச்சட்டம் வரக் காரணம் என்னவென்றால், அந்த காலத்தில் பிரிட்டிஷ் கணவன்மார்கள் வியாபாரம் விஷயமாக பல நாடுகளுக்குப் போய் வந்தனர். அப்போது அவர்கள் பயன்படுத்தியது பாய்மரத் தோணிகள் மட்டுமே. இப்போதுள்ள கப்பல் பிரயாணமெல்லாம் அப்போது கிடையாது. ஆதலால் வியாபாரத்திறகுச் சென்ற பல கணவன்மார்கள் 3,4 ஆண்டுகள் ஆகியும் வீட்டிற்கு திரும்பி வராமலே இருந்தனர். இதற்குக் காரணம் நிறைய பேர் கடல் கொந்தளிப்பால் கடலிலே செத்து மடிந்தனர். சில பேர் வேறு நாட்டுக்குச் சென்ற இடத்தில் அங்கேயே தஞ்சமடைந்து விட்டனர்.

இதனால் விரக்தியடைந்த மனைவிமார்கள் முதல் கணவனை மறந்து புதிய கணவனை மணந்து குழந்தைகளையும் பெற்று வாழ்ந்து வந்தனர்.

ஆனால் வியாபாரத்திற்கு சென்ற சில கணவன்மார்களோ 3,4 ஆண்டுகள் கழித்து வீட்டிற்கு திரும்ப வந்து விட்டனர். ஆனால் இங்கோ அவர்களுக்கு அதிர்ச்சி! மனைவி வேறு கணவன் பிள்ளைகளுடன் வாழுகிறாள். மனைவியோ நீ இப்போது எனது கணவர் இல்லை என்று அடித்து விரட்டுகிறார். இதனால் பாதிப்படைந்த கணவன்மார்கள் பலர் நீதிமன்றத்தை நாடினர். நீதிமன்றத்திலோ இது குறித்து சட்டம் ஒன்றும் இல்லாதிருந்தது. இதை ஆராய்ந்த பிரிட்டிஷ் அரசாங்கம் முதல் கணவர் காணாமல் போன ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு தான் மனைவி மற்றொரு திருமணம் செய்யலாம் எனச் சட்டம் கொண்டு வந்தது. ஏழு வருடம் காத்திருக்காமல் மனைவி இரண்டாவது திருமணம் செய்தால் ஏழு வருடம் வரை தண்டனை கொடுக்கலாம் என்ற சட்டம் கொண்டு வந்தனர்.

நம் நாட்டிலும் கணவன்மார்கள் சிலர் வளைகுடா நாடுகளுக்கும், இதர நாடுகளுக்கும் சென்று காணாமல் போயிருக்கிறார்கள். அவர்கள் 7 வருடம் வரை தாயகம் திரும்பாமலிருந்தால் மனைவி இரண்டாம் திருமணம் செய்து கொள்ளலாம் என இந்தப் பிரிவு 494-ல் சொல்லப்பட்டுள்ளது.

இந்த வினோதமான தண்டனை வழக்கில் என்ன நடந்தது என்றால், திருமணம் முடிந்த இரு வருடங்களில் முதல் கணவனை பிடிக்கவில்லை என்று மனைவி விவாகரத்து வழக்கு பதிவு செய்தாள். விவாகரத்து வழக்கு நிலுவையில் இருக்கும் போதே மனைவி 2- வது ஒருவரை மணந்து ஒரு குழந்தையும் பெற்றுவிட்டாள். இதனால் ஆத்திரமடைந்த முதல் கணவர் கீழ் கோர்ட்டில் மனைவிக்கு எதிராக 494 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தார். கீழமை நீதிமன்றம் இதற்கு மனைவிக்கும் அவர் 2-ம் கணவருக்கும் ஒரு வருடம் தண்டனை வழங்கியது. இதை எதிர்த்து மாவட்ட நீதிமன்றத்தில் இவர்கள் இருவரும் மேல்முறையீடு செய்தனர். மாவட்ட நீதிமன்றமோ இவர்களை விடுவித்து விட்டது. ஆனால் முதல் கணவர்  இதை விட்டபாடில்லை. 

இவ்வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்றார்.  சென்னை உயர் நீதிமன்றமோ மனைவியும் அவள் 2-ம் கணவரும் குற்றவாளி தான் எனக் கூறி மிகவும் சிறிய தண்டனை வழங்கியது. அதாவது நீதிமன்ற குற்றவாளி கூண்டில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை குற்றவாளியாக இருந்து விட்டு செல்லலாம் என்ற தண்டனையை வழங்கி வழக்கை முடித்தனர். இது நீதிமன்றத்தால் ஒரு நாள் தண்டனை எனக் கருதப்படும்.

இத்தண்டனையை ஏற்றுக் கொள்ளாத முதல் கணவர் உச்சநீதிமன்றத்தை நாடினார். உச்ச நீதிமன்றத்தில் 2-ம் திருமண தம்பதியர்களுக்காக வாதாடிய வக்கீல்கள் பிரிவு 494-ல் குறைந்த பட்ச தண்டனையோ அல்லது அதிக பட்ச தண்டனையோ இவ்வாறு தான் இருக்க வேண்டுமென்று எங்கும் சொல்லப்படவில்லை என்றும் ஒரு நாளிலிருந்து 7 வருடம் வரை தண்டனை வழங்கலாம் என்று மட்டுமே சொல்லப்பட்டிருக்கிறது என்றும், ஆதலால் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய ஒரு நாள் தண்டனை சரியானது என்றும் வாதாடினர்.

ஆனால் உச்சநீதிமன்றம் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. மாறாக உச்சநீதிமன்றம் மனைவியும், 2-ம் கணவரும் குற்றவாளி என முடிவு செய்து ஆளுக்கு தலா 6 மாதகாலம் சிறை தண்டனை வழங்கியது இங்கு உச்சநீதிமன்றம் கூறிய கருத்து என்னவென்றால்  எல்லா இரண்டாம் திருமணங்களையும் இப்படி விட்டுவிட்டால் இச்சமுதாயம் திருந்தாது. பிறர் பயப்படமாட்டார்கள். தொடர்ந்து இச்சம்பவங்கள் சமுதாயத்தில் பெருகும். இதை தடுக்கவே நாங்கள் இப்படியொரு தண்டனையை வழங்கியிருக்கிறோம் என்றனர்.

இப்போது பிரச்சனை என்னவென்றால் இருவரையும் ஒரே அடியாக 6 மாதம் ஜெயிலுக்கு அனுப்பினால் இவர்களின் சிறு குழந்தையை கவனிக்க யாரும் இருக்க மாட்டார்கள். இதனால் உச்சநீதிமன்றம் என்ன செய்தது என்றால் முதலில் 2-ம் கணவர் 6 மாத காலத்தையும் பிறகு அடுத்து மனைவி 6 மாத காலமும் ஜெயிலில் இருக்க வேண்டும் என்ற தீர்ப்பை வழங்கினார். இருவரும் ஜெயில் தண்டனையை பூர்த்தி செய்தனர். இது ஒரு வினோதமான தீர்ப்பு என்று இன்றும் நீதிமன்ற வரலாற்றில் பேசப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *