தூதுவளை என்னும் ஞான மூலிகை

தூதுவளை என்னும் ஞான மூலிகை

  • By admin
  • |

தூதுவளை என்னும் ஞான மூலிகை…

இந்தியாவில் பரவலாகக் காணப்படும் ஒரு கற்ப மூலிகை தூதுவளை. இதன் பயன்களைக் கருதி அனைத்துத் தோட்டங்களிலும் இம்மூலிகையை கொடியாக வளர்க்கிறார்கள். சித்த மருத்துவத்தில் காய கற்ப மருந்துகள் சிறப்பானவை. காயம் என்றால் உடல்… கற்ப என்றால் உடலை நோயணுகாதபடி வலுவடையச் செய்யும் மருந்து என்று பொருள்.

தூதுவளையின் தாவரவியலில் சொலானம் ட்ரைலோபேட்டம்  (Solanum trilobatum)  என்றழைக்கப்படுகிறது. சொலனேசியே (Solanaceae) என்னும் குடும்பத்தைச் சேர்ந்தது. நெருக்கமான முட்கள் நிறைந்த மெலிந்த கொடி.

இம்மூலிகைத் தாவரம் வெப்பமண்டல நாடுகளான மலேசியா, தாய்லாந்து, வியட்நாம் ஆகியவற்றை தாயகமாகக் கொண்டது. தற்சமயம் இந்தியா, தாய்லாந்து நாடுகளில் பரவலாக காணப்படுகிறது. நமது நாட்டில் கிராமப்புறங்கள், சாலையோரங்கள், தரிசு நிலங்கள், மாடித்தோட்டங்களிலும் காணப்படுகிறது.

தூதுவளை, தூதுவாளை, தூதுளம், சிங்கவல்லி, அளர்க்கம், ஞானக்கீரை என்றும் இக்கீரையை குறிப்பிடுவர். இலக்கியங்களில் தூதுளம் என்றே பார்க்க முடியும். ஆங்கிலத்தில் இத்தாவரம் Climbing bringal எனப்படும். தூதுவளை கீரை என்றும் குறிப்பிடுவர்.

இதன் இலை, பூ, காய், வேர் அனைத்தும் மருத்துவகுணம் நிரம்பியது.

இத்தாவரத்தில் செயல்படும் வேதிப்பொருள்கள் சொலசோடைன், டோமடிட் B, சொலமரைன் ஆகியவை  உள்ளன.

தூதுவளை நெருக்கமான வளைந்த முட்கள் நிரம்பி படரும் கொடி ஆகும். ஆகையால் கைகளில் முட்கள் படாதவாறு கவனமாக பறித்து கொதிக்கும் நீரில் சீரகம், சின்ன வெங்காயம் அனைத்தும் போட்டுக் குடிநீர் செய்து வடிகட்டி அருந்தலாம். சிறிது உப்பும் சேர்க்கலாம்.

ஆஸ்துமா, சைனஸ் பிரச்சினைகள், இருமல் போன்ற நுரையீரல் சம்பந்தமான நோய்களுக்கும் இக்கீரை சிறந்த மருந்தாகும். குழந்தைகளுக்கு தேவையானால் சிறிது வெல்லம் அல்லது தேன் சேர்த்தும் பயன்படுத்தலாம். நரம்புமண்டலத்தை சீராக்கும்.

மூட்டு தேய்மானம்

தூதுவளையின் காய்களை மோரில் ஊற வைத்து வற்றல் அல்லது அதனை பொரித்தோ, வறுத்தோ சாப்பிடலாம். இதயம் வலுப்பெறும். தூதுவளை இலைகளுடன் பிரண்டை இலை, பூண்டு சேர்த்து பயன்படுத்தி வந்தால் மூட்டு தேய்மானம் குறையும். இதில் வைட்டமின்   A, B,C சத்துக்கள், புரதம், தாது உப்புகள், கால்சியம் நிறைந்துள்ளன. இக்கீரை சாறுடன் தேன் கலந்து கொடுக்கும் போது சளி பிரச்சினைகள் குறையும்.

மூளைக்கு வலிமை

கத்தரி செடியின் பூக்கள் போல் தூதுவளை பூக்களும் வயலட் நிறமாக இருக்கும். இப்பூக்களை நிழலில் உலர்த்தி தேனில் குழைத்து கொடுக்க ஆண்களுக்கு தாது உற்பத்தி ஆகும். மூளைக்கு வலிமையும், சுறுசுறுப்பையும் கொடுக்கும். தினம்  10 மிளகும், தூதுவளை இலைகளையும் பொடித்து தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா விரைவில் குணமாகும்.

  வெங்காயம் சேர்த்து நல்லெண்ணெயில் வதக்கி பிற கீரைகள் செய்வது போன்று கூட்டுப் பொரியல் வைக்கலாம். சிறிது கசப்பாக இருக்கும். அரிசி மாவு சேர்த்து அடை செய்யலாம். இவ்வாறு பண்டையக் காலம் முதல் பயன்படுத்தி வருகின்றனர்.

சளி

இக்கீரையின் பொடியை உணவு சாப்பிட்ட பின் சிறிது எடுத்து தேனில் குழைத்து சாப்பிட்டால் சளி, தோல்நோய்கள், மூளை வளர்ச்சி, ஞாபக சக்தி ஏற்படும். நெய்யுடன் சமைத்து உண்பதால் புத்தி தெளிவும், அறிவும் வளரும். எனவே தான் ஞானக்கீரை என்று பெயர் பெற்றது.

குரல் இனிமையாக

இக்கீரையின் சாற்றுடன் ரசம் செய்யலாம். உப்பு, இஞ்சி, பூண்டு, மிளகாய் சேர்த்து சிறிது புளி சேர்த்து துவையல் செய்தும் பயன்படுத்தலாம். குரல் இனிமையாகும்.

வாயுத்தொல்லை

இக்கீரையின் வேர், சீரகம், ஓமம், பூண்டு, மிளகு சேர்த்து அருந்தி வர வாய்வுத் தொந்தரவு, மலச்சிக்கல் விலகும். மேற்சொன்ன எந்த விதத்தில் தூதுவளை இலைகள் பயன்படுத்தினாலும் காசநோய் கொஞ்சம் கொஞ்சமாக அகலும்.

தூதுவளை நரம்புமண்டலத்தை சீராக்கும் ஒரு அற்புத மூலிகை ஆகும்.  இவற்றின் இலைகளை  கொதிக்க வைத்து சிறிது உப்பு சேர்த்து அல்லது வெல்லம் சேர்த்து அருந்த ஆஸ்துமா, காசநோய் போன்றவை கட்டுப்படும்.

ஆடாதோடை, பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்ணி, தூதுவளை இலைகள் சேர்ந்த கலவை காய்ச்சல், தும்மல், இருமல், சளி போன்ற நோய்களுடன் ஞாபகமறதி, ஒவ்வாமை, காசநோய் கட்டிகள் அத்துடன் கழுத்தைச் சுற்றி ஏற்படும் கண்டமாலை எனப்படும் தைராய்டு வீக்கம் ஆகியவை தீர்க்கும் ஒரு சிறந்த கற்பகமூலிகை எனலாம்.

இதன் பூக்கள் (புதியதும், வாடியதும்) நீரில் ஊற வைத்து அருந்தி வர ஆண்களுக்கு சிறுநீருடன் விந்து வெளியேறுவதும், பூஞ்சான் போன்ற நோய்களும் தீரும். நமது ஆரோக்கியத்திற்கு ஒரு சிறந்த மூலிகை.

கண்பார்வை

சம அளவு பொன்னாங்கண்ணி, தூதுவளை, முசுமுசுக்கை சேர்த்துண்ண கண்பார்வை சீராக இருக்கும். இக்கீரையின் வேர், தண்டுகள், இலைகள், பூக்கள் போன்ற அனைத்து பாகங்களும் இல்வாழ்க்கைக்கு மகிழ்ச்சி தருகின்றன. இது அனுபவபூர்வமான உண்மை…

வயிறு குறித்த நோய்களுக்கும், நுரையீரல் புற்றுநோய் போன்றவற்றிற்கும் தூதுவளை நல் மருந்தாகும். பசியின்மை, உடல் எரிச்சல் போன்ற நோய்களும் தூதுவளையில் குணமாகும். இவ் இலைகள் பச்சையாகவும் ஒன்றிரண்டு தினம் மென்று சாப்பிட்டு வர இளமையும், வலிமையும், வனப்பும் அதிகரிக்கும். மேலும் கீழ்க்கண்ட விதத்தில் சாப்பிட்டு வந்தால் பல நோய்கள் தீரும்.

தூதுவளை சூரணம்

தூதுவளை                   :               500 கி

புதினாக்கீரை             :               100 கி

சுக்கு                            :               10 கி

மிளகு                           :               10 கி

திப்பிலி                        :               10 கி

அதிமதுரம்                  :               10 கி

அனைத்தும் உலர்த்தி இடித்துப் பொடித்து சலித்து முட்கள் நீக்கி 10 கிராம் இந்துப்பு சேர்த்து சிறிது எடுத்து தேன் சேர்த்து குழப்பி அருந்தி வரவும். தயிர் இளநீர், குளிர்பானங்கள் போன்றவை தவிர்க்கவும். இது சித்த மருத்துவர்களின்                  அறிவுரைஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *