கருங்காலி என்றதும், கருமை நிறம் ஞாபகத்தில் வரும். நிலக்கரி போன்ற கருமை நிறத்தில் இம்மரத்தின் காதல் (நடுப்பகுதி) இருப்பதால் இதற்கு கருங்காலி என்ற பெயர் ஏற்பட்டிருக்கலாம்.
கருங்காலி மரத்தினால் செய்யப்பட்ட அணிகலன்களை அணிந்து கொள்வதால், பய உணர்வு மாறுதல், கெட்ட சக்திகளை அண்டவிடாது, நோய்களை அண்டவிடாது, நல்ல ஆக்கபூர்வமான சக்தியையும் சிந்தனையையும் கொடுக்கும் . பணவரவு உண்டாகும் என பலவாறு பலர் சொல்லி கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அது உண்மையா என்பது நம்பிக்கை சார்ந்ததாக இருக்கலாம்.
இருப்பினும் இதன் மருத்துவகுணங்கள் அனுபவபூர்வமாக பார்க்கபட கூடியது. மிகுந்த மருத்துவக்குணங்களை கொண்டுள்ளது.
கருங்காலி இந்தியா, இலங்கை மற்றும் இந்தோனிஷியாவை பூர்வீகமாக கொண்டது. இது சுமார் 65 முதல் 80 அடி உயரம் வளரக்கூடியது. வறட்சியை தாங்கி மெதுவாகவே வளரக்கூடியது.
இது பசுமையான இலைகளையும் பசுமை மஞ்சள் கலந்த பூக்களையும் கொண்ட மரவகை. இம்மரத்தின் நடுவில் இருக்கும் கருப்புநிற காதல்பகுதி, அதிக மருத்துவ குணம் கொண்டது. மேலும், வீட்டு மரச்சாமான்கள், அணிகலன்கள், கைவினைப்பொருள்கள், இசைக்கருவிகள் போன்றவை தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
பழைய காலங்களில் மர உலக்கை இல்லாத வீடுகளே இல்லை எனலாம். இந்த மர உலக்கை கருங்காலி மரத்தால் ஆனது. இது இரும்பை ஒத்து பலமாக இருக்கும். இதிலிருந்து இம்மரத்தின் வலிமையும், கட்டித்தன்மையும் அறியலாம்.
முதிர்ச்சி அடைந்த கருங்காலி மரத்தில் மட்டுமே அதிக அளவில் கருப்புநிற காதல்பகுதி இருக்கும். முதிராத மரங்களில் சுற்றி இருக்கும் வெள்ளைபகுதி அதிகமாக இருக்கும். வெள்ளைபகுதி மருத்துவத்திற்கும், உபயோகத்திற்கும் ஆகாது.
ஒரு கருங்காலி மரம் முதிர்ச்சி அடைய சுமார் 70 முதல் 200 ஆண்டுகள் ஆகின்றன.
கருங்காலி மரத்தின் தாவரவியல் பெயர் :
Diospyros ebenum
ஆங்கில பெயர் :
Ebony, Cellon ebony, Eastindian ebony
வேறுபெயர்கள் :
கதிரா, கருமரம், சுவை-துவர்ப்பு, தன்மை- குளிர்ச்சி
இதில் அடங்கியுள்ள தாவர வேதிப்பொருள்கள்
Lupeol, Betulin, Betulinic acid, Ursolic acid, Baverenol, â Sitosterol, Stigmasterol
கருங்காலின் மருத்துவகுணங்கள்
1. நரம்பு தளர்ச்சிக்கு
கருங்காலி மரத்தின் பிசினை உலர்த்தி பொடி செய்து தினம் இரண்டுவேளை பால் அல்லது தண்ணீரில் கலந்து அருந்த நரம்புதளர்ச்சி மாறும். மேலும் விந்துகுறைவு, பெரும்பாடு, வெள்ளைபடுதல் போன்றவை குணமாகி உடல்பலம் பெறும்.
2. உடல்வலிக்கு
கருங்காலி கட்டையை குளிக்கும் தண்ணீரில் ஊறவைத்து லேசாக சூடாக்கி குளித்துவர, உடல்சோர்வு, உடல்வலி மாறி புத்துணர்வு உண்டாகும்.
3. புண்களுக்கு
கருங்காலி மரப்பட்டை, நாவல்பட்டை, வேப்பம்பட்டை இவை மூன்றையும் பொடித்து, புண்களில் தூவி வர புண்கள் ஆறும்.
4. கழிச்சல், இரத்தபோக்கிற்கு
கருங்காலி துண்டுகளை சதைத்து தண்ணீரில் இட்டு காய்த்து வடிகட்டி திப்பியை அகற்றிய பின்னர் நன்றாக வற்ற வைத்து, அதன் பின்னர் வெயிலில் காயவைத்து பொடித்துக் கொள்ள வேண்டும். இதற்கு கருங்காலி சத்து என்று பெயர். இது அதிக துவர்ப்பு சுவையுடையதாக இருக்கும். இதல் 150 முதல் அரைகிராம் வரை தேனில் அல்லது தண்ணீரில் கலந்து சாப்பிட கழிச்சல், இரத்தபோக்கு, ஈறில் இரத்தம் வடிதல் போன்றவை குணமாகும்.
5. நீரிழிவு நோய்க்கு:
சுமார் 5 கிராம் கருங்காலி பட்டையை சதைத்து 2 டம்ளர் தண்ணீர் வைத்து ஒரு டம்ளராக வற்ற வைத்து தினம் அதிகாலையில் குடித்து வர நீரிழிவு நோய் கட்டுப்படும்.
6. பெரும்பாட்டிற்கு
கருங்காலி கட்டையை சதைத்து ஒரு கரண்டி அளவு எடுத்து ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு காய்த்து தினம் இருவேளை குடித்து வர பெரும்பாடு குணமாகும். மேலும் இரும்புசத்து குறைவு, வயிற்றுகிருமி போன்றவற்றிற்கும் தினம் ஒருவேளை வீதம் குடிக்கலாம். இரத்தம் சுத்தமாகும்.
7. பலவித நோய்களுக்கு
கருங்காலி கட்டையை கரகரப்பாக பொடித்து ஒரு கரண்டி அளவு எடுத்து துணியில் முடிந்து, 2 லிட்டர் கொதித்த தண்ணீரில் போட்டு வைத்து, ஆறிய பின் தாகத்திற்கு குடிக்கலாம்.
இது குடல்புண், வாய்புண், வாய்நாற்றம், பித்தம், நீரிழிவு நோய், தோல்நோய், இரத்தக்குறைவு போனற் பல நோய்களுக்கு சிறந்தது.
கவனிக்க வேண்டியவைகள் அதிக அளவில் பயன்படுத்தினால் மலச்சிக்கல் உண்டாகலாம்.
Leave a Reply