சென்ற மாத இதழில் நாபியின் கீழ் உள்ள வர்மங்களில் ஒன்றான உண்ணியறைக்காலம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் நாங்குகுற்றி வர்மம் பற்றி அறிவோம்.
வல்லுறுமிக்காலத்தின் கீழ் மூலத்தின் கடைசிப்பகுதியின் அரைவிரல் மேல் நாங்குகுற்றி வர்மம் அமைந்துள்ளது. இவ்வர்மம் நாங்குகுற்றிக்காலம், தண்டினடி வர்மம், நாங்கூழ் வர்மம், மேக வர்மம் என்னும் வேறுபெயர்களாலும் வழங்கப்படுகிறது.
“…………………….வெல்லுறுமிக்காலம்
தனி கடைசி நாங்கு குற்றிக்காலம்”.
– வர்ம கருவிநூல்
“…………………….வல்லுறுமி
விதமான நாங்கு குற்றிக்காலம்
விரல் நாலின் மேலே தானே”.
– வர்ம கடிகார நரம்புச்சூத்திரம்
“என்செய்வோம் தண்டின் உள்ளடியினூடே
ஏகாந்த சுழி ஒன்றுண்டதனினுள்ளே
பொன்மய நாங்கூழ் போலோர் நரம்பு தோன்றி
பிரகாசமாகுதில்”.
– வர்ம குருநூல்
குறிப்பிடுகிறது. மேலும்,
விட்டிடவே நாங்குகுற்றிக்காலம் கொண்டால்
வீங்குமடா சரீரமெங்கும் மூச்சறாது
தட்டிடவே முறைக்குமுறை செய்யாதே நீ
சாத்தியமே கண்டிடாதே அசாத்தியமாமே.
– பீரங்கி சாஸ்திரம்
செய்யவே அண்டவர்மமென்று சொல்லும்
செயலான நரங்குகுற்றி காலம் தன்னை
வெய்யவே வீங்கும் உடல் ஏங்குமய்யா
விதமான உயிர்நாடி தடித்து வீங்கும்
பய்யவே மூச்சடங்கும் பதைப்பாம் மூச்சு
பலனாக அடிக்கடியே தடவொண்ணாது
பொய்யான படுவர்மம் என்பாரய்யா
புகலுவேன் அசாத்தியமென்று கூறே.
– வர்ம சூட்சம்-500
“பார்த்து நீ செய்திடவே நாங்கு குற்றிக்காலம்
கொண்டுதானால் குணத்தைக் கேளு
நேர்த்தியாய் சரீரம் எல்லாம் வீங்குமப்பா
நிச்சயமாய் மூக்கடைத்து விளறி விம்மும்
பார்த்துடனே முறைக்கு முறை செய்ய வேண்டாம்
பாடுகிறேன் அசாத்தியம் என்று சொல்லி
பார்க்கவே கடிகை பதினெட்டும் சென்றால்
பரவறிந்து செய்துவிடு பலனுண்டாமே”.
– வர்ம அகஸ்தியசாரி
“செய்குறி நரங்கல் குத்தி
சடத்தினில் வீக்கம் காட்டும்
எவைகுறி கூட்டிக்கூட்டி
விட்டு விட கிறாணத்தில்
துய்ய குறியடப்பு தோன்றும்
அகப்படுவதற்கு கொஞ்சம்
மாவு குறி போதாதென்று
அறிந்துகொள் தெரிந்து பாரே”.
– இலாடச்சூத்திரம் -300
“பிரகாசமாகுதில் விசையுற்றாலோ
தன்மயமும் கெடும் வீக்கமுடலெண்சாணும்
சரம் நாசிவழி பாயாதுண்மை யுண்மை
பின்னமின்றி விட்டுவிட்டு முட்டும் வாசி
பிரியுமுயிர் உடல் விட்டென்றுணர்வாய் நீயே”.
– வர்ம குருநூல்
“நீவுணருமார்க்கமிதற்கீடுற்றுக் கொண்டிடிலோ
வுயிர்பிரியுமென்றுரைத்தேனம் மாத்திரையை
தானுணர்ந்து மகத்துவமாமடங்கல்முறை மனமுறைந்து
முன்னோர்கள் வாக்குரைத்த வாசியடங்கல் வாரிகோரி
வேணுமென்று பூவடங்கல் மூலமுடிச்சு மேல்பூட்டு
தாரைகீழ் மணையறிந்தனுக்கிவுச்சி யமத்திட
தோணுமென்றும் குறிகுணங்கள் மாற்றமுற்று
காணுமென்றும் கணக்கறியக் கண்டுபாரே”.
– வர்ம குருநூல்
என குறிப்பிடுகிறது.
நாங்குகுற்றிவூக்குறக்கொண்டுறில் கைமேல்
பாங்குறப்பற்றியேப் பதிவடங்கல் செய்யுடன்
தீங்குறாதிருந்திட திடம் பிடரி செவிக்குற்றி
ஆங்குற அணைத்துமே செய்மாற்றடங்கலே.
– வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்
நாங்குக்குற்றி வர்மம் ஊக்கமாய் தாக்கங்கொண்டால் உடனே கைமேல் கை பிணைத்து பண்புடன் உச்சியிலமைந்த பதிவடங்கலைத் தட்டவேண்டும். மேலும், தீங்குறாதிருந்திட பிடரி அடங்கல், செவிக்குற்றி அடங்கல் போன்றவைகளோடு சுழியடங்கல், கீழ்சுழியடங்கல் போன்றவைகளையும் செய்தால் நலமுண்டாகும்.
அடங்கல் செய்துறக் கொடுத்துறில் நிலைத்
தடங்கல் உற்றுறும் பின்னுறுங்காலத்துறவில்
வடங்கள் அற்றன்னவாம் தொடர் புணர்ச்சிக்
குடங்கல் பல்வழி வலியுறும் கணக்கே.
– வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்
இந்த வர்மத்திற்கு அடங்கல்களைத் தூண்டிக் கொடுத்தாலும் கூட பிற்காலத்தில் உடலுறவு கொள்வதில் தடங்கல் உண்டாகும். கட்டி வைத்த வடம் எனும் தொடர் கயிறுகள் அற்றாற்போல் புணர்ச்சியும் அற்றுவிடும். மேலும் பலவிதமான வலிகளும் உண்டாகும் என்பதே கணக்காம்.
உற்றுறும் வன்மம் நாங்குக்குற்றி
அற்றுறும் அடியதாம் குறியின்கீழ்
தொற்றுறும்வீக்கமுடல்முற்றுறவாம்
கற்றுறல் கலைவழி உறவாம்
– வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்
ஆண்பெண் குறியின் கீழ் அடிப்பகுதியைத் தொட்டு அமைந்துள்ள நாங்குக்குற்றி எனும் வர்மம் கொண்டால் உடல் முழுவதும் வீக்கம் தொற்றிக்கொள்ளும். எனினும் கலை வழி சார்ந்த பின்விளைவுகள் உண்டாகும்.
கலைவழி உற்றுறில்தலைவழிதரிப்புறும்
அலைகடல் என்னுற மூச்சுறும் விசையும்
நிலையறும்விதைவலிஇதமறும்தலையதில்
உலை பழுத்தன்னவாம் உள்வழிச்சூடே.
– வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்
இவ்வர்மம் சுழுமுனைக்கலை சார்ந்த வர்மமாகையால் அந்த கலை நேரத்தில் தாக்கம் கொண்டால் தலை வரை தரிப்பேறும். அலைகடல் அசைந்தாற்போல் மூச்சும் விரைவுபெறும். நிலை நிற்கமுடியாத அளவிற்கு விதைவலி உண்டாகும். உலை பழுத்ததுபோல் தலையில் சூடேறும் என்பதாம்.
நாங்குறும்குற்றி நலமுறத்தூண்டுறில் வன்மை
தாங்குறப் புணர்ச்சி தலைவலியற்றுறும் குழலி
ஊங்குறும் ஊக்கம்புறமுறும் தளர்ச்சியும் அறும்
வாங்குறும் மூச்சும் வகையுறுமெனலே.
– வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்
நாங்குக்குற்றி வர்மத்தை நலமுறத் தூண்டிக் கொடுத்துவரில் புணர்ச்சிக்கு வலிமை உண்டாகும். தலைவலியும் தீரும். குழந்தைப் பிறப்பின்போது அதிக வலிமை உண்டாகி எளிதில் பிரசவமாகும். இரைப்புத்தன்மையும் மாறி நலமுண்டாகும் என்பதாம் என வர்மயோகச்சூத்திரமும் குறிப்பிடுகிறது.
இவ்வர்மத்தில் தாக்கம் கொண்டால், உடல் முழுவதும் வீக்கமுண்டாகி, உடல் விட்டுவிட்டு, விம்மிவிம்மி மூச்சுமுட்டல் உண்டாகி, நாசி வழி சுவாசம் செல்ல சிரமம் ஏற்படும். வாய்வழியே மூச்சு வாங்குவதுடன், இன்னும் பல்வேறு இன்னல்களையும் உண்டுபண்ணும். இத்தகைய குறிகளைக் காட்டும் இவ்வர்மம் மாத்திரையாய் கொண்டால் அசாத்தியமாகும். இதற்கு நாழிகை 18 என வர்ம சுவடிகள் குறிப்பிடுகின்றன.
இவ்வர்மத்தை இளக்குவதற்கு முதலில் பிடரிச்சுழியில் விரல் பதித்து ஏந்தி, இரண்டாவது முடிச்சில் விரல் கொடுத்து அழுத்தி, அடங்கல்களைத் தூண்டி, உச்சியில் அமத்திவிட சுகம் உண்டாகும் என வர்ம நூல்கள் குறிப்பிடுகின்றன.
இவ்வர்மத்தால் பாதிப்படைந்தவர் பின்னாட்களில், மூச்சுமண்டல நோய்கள், புற்றுநோய், அடிவயிற்றுவலி, தலைவலி, தண்டுவலி, விதைவலி, தண்டு தளர்ச்சி, முதுகுவலி, கலவி ஆற்றல் குறைவு, வாழ்க்கையில் வெறுப்பு போன்ற நோய்களால் அவதியுறுவர். இவ்வர்மத்தை தகுந்த தூண்டுமுறை நுட்பங்களைப் பயன்படுத்தி தூண்டிவர, ஆண்மைக்குறைவு, கலவி ஆற்றல் குறைவு, உடல் வீக்கம், கீழ்முதுகுவலி, சூதக வலிகள், பிரசவகாலவலி, மூலத்தில் இரத்தக்கசிவு, மூலநோய்கள் போன்ற பல நோய்கள் குணமாகும் என அனுபவமிக்க வர்ம வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.
Leave a Reply