மாற்றம்

மாற்றம்

  • By Magazine
  • |

நாசரேத் விஜய்

நள்ளிரவு தாண்டிய நேரம்…

ஸ்விகி இன்ஸ்டாமார்ட்டின் பெட்டி வடிவிலான பை இருசக்கர வாகனத்தின் பின் பகுதியில் கட்டியிருக்க பிரபாகர் கைபேசியில் கூகுள் வரைபடத்தை பார்த்தப்படி வாகனத்தை ஓட்டிக் கொண்டிருந்தார்.

ஒருமணி நேரத்திற்கு முன்பாக நடந்த சம்பவத்தை மனதில் அசை போட்டார். நினைக்கையிலே திக்கென்று தான் இருந்தது.

கொஞ்சம் அசந்திருந்தால் லாரிக்காரன் அடித்து தூக்கியிருப்பான்.

அந்த வளைவில் அந்த நேரத்தில் எதற்கு மின்னல் வேகம்…

இந்த நேரத்தில் இந்த சாலையில் யார் வர போகிறார்கள் என்ற எண்ணம் தான். சாதாரண இடத்தில் கூட விபத்து நடக்க காரணம் அலட்சியம்… வேறென்ன… சிந்தனை ஓடிக் கொண்டிருக்கும் போதே கண நேரத்தில் கண் அசந்தவர் வேகத்தடையை கவனிக்காமல் வேகமாக ஏறினார்.

சட்டென்று சுதாரித்து பிரேக்கை பிடித்து நிறுத்த முயலும் போது வண்டியோடு கீழே சாய்ந்தார்.

என்ன நடக்கிறதென்று உணருவதற்குள் அவர் கீழேயும் வண்டி மேலேயும் கிடந்தது.

எதிரே வந்து கொண்டிருந்த ஷொமாட்டோ உணவு வினியோக ஊழியர் தன்னுடைய வாகனத்தை ஓரமாக நிறுத்தி விட்டு வந்து விழுந்து கிடந்த வண்டியை தூக்கினார். நானும் எழுந்திரிக்க உதவி பண்ணினார்.

அடிபட்டாண்ணே… பாத்து மெதுவாக வரலாமில்லா… அவன் கேட்டு கொண்டிருக்கும் போதே பிரபாகர் பைக்கில் ஏதும் அடிபட்டிக்கிறதா என்று பார்த்தார்.

நல்ல வேளை… பெருசா எதுவும் அடிபடல… அத விடுங்கண்ணே… முதல்ல காலப் பாருங்க…

“ அதெல்லாம் ஒண்ணுமில்ல தம்பி… பொருளுக்கு ஏதாவது ஆச்சுன்னா கஸ்டமர் கம்ப்ளைண்ட் ஆயிருமில்ல… வண்டிக்கும் ஏதாவது ஒன்னு ஆச்சுண்ணா பொழப்பு கெட்டுப் போயிருமே… சரி தம்பி… நேரமாயிருச்சு… பாக்கலாம்… ரொம்ப நன்றி” இருவரும் பரஸ்பரம் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினார்கள்.

நல்லவேளை… பெருசா ஒண்ணும் ஆகல… நினைத்தவர் கூகுள் மேப் காட்டிய முகவரியில் பொருட்களை கொடுத்து விட்டு திரும்பினார்.

கால் இப்போது தான் இலேசாக வலித்த மாதிரி தெரிந்தது. இப்படியே அறைக்கு போய் விடலாமா என்று நினைத்தவர் வேண்டாம்… இன்னும் இரண்டு டெலிவரி முடித்தால் இன்சென்டியூ கிடைக்கும் என்ற எண்ணத்தில் இன்ஸ்டாமார்ட் ஸ்டோருக்கு வண்டியை ஓட்டினார். இரண்டு மணியோடு டெலிவரி முடிந்தது.

வழக்கமாக ஸ்டோரில் இருக்கிற ஓய்வறையில் கொஞ்சம் நேரம் தூங்கிவிட்டு நான்கு மணிக்கு ரேபிடோ பைக் டாக்ஸி ஓட்ட ஆரம்பித்து ஆறு மணிக்குத்தான் அறைக்கு திரும்புவார்.

காலையில் நெகிழி தொழிற்சாலைக்கு வேறு போக வேண்டும். இரண்டு நாளாக சரியாக தூங்கவும் இல்லை என்ற காரணத்தால் அறைக்கு திரும்பினார். அது அவர் பணிபுரியும் தொழிற்சாலையின் தங்குமிடம் தான்.

மொத்தமே ஒரு பத்து பேர் வேலை செய்யக்கூடிய ஒரு குறுந்தொழில் நிறுவனம். காலை ஒன்பது மணிக்கு வேலைக்கு சென்றால் மாலை ஐந்து மணிக்கெல்லாம் முடிந்து விடும்.

ஆறு மணிக்கு மேல்தான் இந்த டெலிவரி வேலை. அறைக்கு வந்ததுமே படுத்து விட்டார். காலை மணி ஏழரையைத் தாண்டிய போதுதான் சுதாகர் எழுப்பினான்.

நேரமாயிருச்சோ… மணி என்னாச்சு… கேட்டுக் கொண்டே எழ முயற்சித்த போதுதான் கால் விண்ணென்று வலித்தது. அம்மா என்று முனகியபடியே உட்கார்ந்து விட்டார்.

என்னாச்சுண்ணே… கீழ விழுந்துட்டீங்களா… இரவு நடந்ததை சொன்னார். வேலை வேலைன்னு உடம்ப கெடுத்துக்கிட்டு சம்பாதிச்சு என்னண்ணே பண்ணப் போறீங்க… பகல்லயும் வேலை பாத்துக்கிட்டு ராத்திரியும் தூக்கம் இல்லாம எப்படி முடியும்.

என்னடா பண்றது…பருவத்தே பயிர் செய்ணு சொல்லுவாங்கல்ல… காலத்தை வீணாக்கியாச்சு இப்போ கெடந்து பணம் பணம்னு ஓட வேண்டியிருக்கு…

இப்பாவது லீவப் போட்டுட்டு ரெஸ்ட் எடுக்குறீங்களா எப்படி…?

சம்பளம் போயிருமே… நைட் வந்து ரெஸ்ட் எடுத்துக்கிறேன். பிரபாகர் மெதுவாக எழுந்து சென்று குளித்து தயாரானார்.

அதே நேரம் சுதாகர் தன் நண்பன் சங்கரிடம் கத்திப் பேசிக் கொண்டிருந்தான். என்னடா ஆச்சு… காலையிலேயே சண்டை போட்டுட்டுருக்கிறீங்க…

தலைவர நக்கலடிச்சுக்கிட்டே இருக்காம்ணே… இவனோட தலைவன் என்ன யோக்கியனா… ஒண்ணாம் நம்பர் பொம்பள பொறுக்கி… என்னப் பத்தி பேசினாலும் தப்பில்ல… தலைவர தப்பா பேசினா கொலை விழும்… ஊர்க்காரனாச்சேன்னு பாக்குறேன்…

நீ வெட்டுனா வாங்கிட்டு சும்மா போக நான் என்ன சொங்கியா… நானும் இத்தனை நாள் பழகிட்டோமேன்ணுதான் பொறுமையா இருக்கேன்…

கை வச்சுருவியா… சுதாகர் எகிறிக் கொண்டு போக பிராபகர் இடையில் புகுந்து தடுத்தார்.

வேலைக்கு கிளம்புங்கப்பா… எதாயிருந்தாலும் வந்து பேசிக்கலாம். இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி விட்டு பிரபாகரும் கிளம்பினார்.

இது வழக்கமாக நடக்கும் நிகழ்வுதான். தொலைக்காட்சி பார்க்கும் போதே வாக்குவாதம் தொடங்கி விடும்.

இது ஆளுங்கட்சி சேனல்தான். நாட்ல எவ்வளவு அட்டூழியம் நடந்தாலும் சொல்லமாட்டான்.

இந்த சேனல் மட்டும் என்ன… உண்மையை தவிர எல்லாம் பேசுவான். சேனல மாத்துப்பா… பேச்சில் ஆரம்பித்து கை கலப்பில் கூட முடியும்.

ஆனால் இவர்களுடைய தலைவர்கள் சந்தித்துக் கொள்வார்கள், பேசுவார்கள், சிரிப்பார்கள், போட்டோவுக்கு கை கோர்ப்பார்கள். கேட்டால் மாண்பு என்பார்கள். அவர்கள் சரியாகத்தான் இருப்பார்கள்.

தொண்டர்கள் தான் நண்பர்களிடமும் குடும்ப உறவுகளிடமும் மனக்கசப்பை உருவாக்கிக் கொள்வார்கள்.

அன்று மாலை சீக்கிரமே வந்துவிட்டார் பிரபாகர். சுதாகர் சிக்கன் சமைத்து கொண்டிருந்தான். என்னடா விசேசம்…?

பொறந்த நாள்ணே… சங்கர் சரக்கு வாங்க போயிருக்கான்.  உங்களுக்கும் சேர்த்துதான் வாங்கிட்டு வரச் சொல்லியிருக்கேன்.

எனக்கு வேணாம்டா… அதெல்லாம் விட்டு ரொம்ப நாளாச்சு… கல்லீரல் பிரச்சினை உண்டாகி இப்போதான் நல்லாயிருக்கு. இன்னைக்கு நல்லா தூங்கணும்னுதான் சீக்கிரம் வந்தேன். நல்லா தூங்கி எத்தனை நாளாச்சு தெரியுமா… நாய் பொழப்புடா… ஆமா காலைல தான் சண்டை போட்டுட்டுருந்தீங்க… மறுபடியும் போதையில போட்டுகாதீங்க… அளவா குடிங்க…

எல்லாம் இருக்கிறதுதான்ண்ணே… என் பொறந்த நாளையே சங்கர்தான் ஞாபகப்படுத்தி சொன்னான். நம்ம பயதாணே…? பிரபாகர் சிரித்தார்.

நீங்க போடுற சண்டையெல்லாம் பாக்கும் போது பத்து பதினஞ்சு வருசத்துக்கு முன்னால ஊர்ல நடந்த விசயங்கள் எல்லாம் நினைவுக்கு வருது. கட்சிக்காக யார் கூடவெல்லாமோ சண்டை போட்டிருக்கோம். ஊரையே பகைச்சுப்போம். சொந்த சித்தப்பா, பெரியப்பா மக்கள் கூடவே இந்த கட்சியால சண்டை வரும்.

ஆனா எந்த ரெண்டு பேருக்காக சண்டை போட்டுட்டிருப்போமோ அந்த ரெண்டு பேரும் கள்ள உறவுல இருப்பானுங்க… ஊரையே ஒன்னா சேர்ந்து ஆட்டையேப் போட்டுட்டு இருப்பானுவ…

பணமும், நேரமும் வீணானதுதான் மிச்சம்… பிரபாகர் சலிப்புடன் பேசினார்.

சரி… முருகேசன் அண்ணன் எங்க… அவரு வந்ததுமே படுக்கப் போயிட்டாரு. நல்லா தூங்கி நாலு நாளாச்சாம். நீங்களாவது பரவாயில்ல… மனுசன் டீ குடிக்கக் கூட கஞ்சத்தனம்… வீட்ல எல்லாம் எப்படித்தான் சமாளிக்கிறாங்களோ இப்படி சம்பாதிச்சு என்னப் பண்ணப் போறாங்களோ பொண்டாட்டி. புள்ளைங்களுக்கே வெறுத்துரும்.

உங்கிட்ட வந்து பேசுறேன்… சுதாகரிடம் சொல்லி விட்டு நகர்ந்தார். உடம்பு கழுவி உடை மாற்றிக் கொண்டு வந்து உட்கார்ந்தார். சங்கரும் வந்திருந்தான்.

சிக்கன், சப்பாத்தி, மது எல்லாம் தயாராக இருந்தது. அண்ணே… லேசா எடுத்துக்குறீங்களா… சங்கர் கேட்டான்.

எனக்கு வேணான்டா… நீங்க முதல்ல சாப்பிடுங்க… அப்புறமா அண்ணன எழுப்பி கொஞ்சம் கொடுக்கலாம். அளவா சாப்பிடுங்கடா… முடிஞ்சா கொஞ்சம் கொஞ்சமா குறைச்சு நிப்பாட்டிருங்க… வாழ்க்கையை அனுப்பவிக்கிறதுக்கு உடம்பும் நல்லாயிருக்கணும்… இரண்டு பேரும் ஆளுக்கொரு டம்ளரில் பிராந்தியை ஊற்றி எடுத்துக் கொண்டு ஆர்வமாய் அவரை பார்த்தார்கள்.

ரெண்டு பேரும் தேர்தலோட ஊருக்கு போனீங்களே… வேட்பாளரா நிக்குறீங்களா… காமெடி பண்ணாதீங்கண்ணே… அப்புறம் எதுக்குடா பொழப்ப கெடுத்துக்கிட்டு ஒரு மாசம் லீவு எடுத்தீங்க…

பிரச்சாரம் பண்றதுக்குத்தாண்ணே… அப்புறம் எப்படி கட்சிய, கொள்கைய, சின்னத்தை எல்லாம் மக்கள் கிட்ட கொண்டு போய் சேர்க்கிறது. பணம் கொடுத்தாங்களா…

நீங்க வேற… இவர் பேர்ல ஒரு பத்தாயிரம், என் பேர்ல பத்தாயிரம் ஃபைனான்ஸ் போட்டாச்சு. வீடு, தொட்டமெல்லாம் நெறைய இருக்கோ… அப்படியெல்லாம் ஒண்ணுமில்லண்ணே…

இவனுக்காவது ஒரு ஓட்டு வீடு இருக்கு… நானும் என் அம்மாவும் வாடகை வீட்லதான் இருக்கோம்…

சுதாகரின் குரலில் உற்சாகம் குறைந்திருந்தது. பிரபாகர் அவர்கள் இருவரையும் வேதனையுடன் பார்ததார். சுதாகர்… நீ வாழ்க்கையில உனக்காகவும் உன் குடும்பத்துக்காகவும் எவ்வளவு உழைக்க வேண்டி இருக்கு தெரியுமா… ஆனா நீ என்ன பண்ணிட்டிருக்க… உன்னுடைய காலத்தையும், உழைப்பையும் வீணாக்கிட்டிருக்க…

அது சரிண்ணே… எல்லாருமே இப்படி இருந்துட்டா எப்படிண்ணே… இந்த சமுதாயத்துக்காக யாருண்ணே போராட வர்றது…

நீ நல்லாயிருந்தா தானே அடுத்தவன நல்லா பார்த்துக்க முடியும். இந்த கட்சித் தலைவர்களோட வேட்பு மனுதாக்கல்ல உள்ள சொத்துக் கணக்குகளை கவனத்துல எடுத்துக்குட்டீங்களா…

போராளின்னு சொல்ற உன் கட்சித் தலைவனோட சொத்து மதிப்பு என்ன… அவரோட பிள்ளைங்க எங்க படிக்குது… சொகுசு காரு… ஸ்டார் ஓட்டல் வசதி… இதெல்லாம் உன்னை சிந்திக்க வைக்கலயா…

இங்க பாரதியாரையும், சிதம்பரனாரையும் பத்தி பேசி உன்னை தெருவுல இறக்கி விட்டு தீக்குளிக்க வைப்பாங்களே தவிர அவங்களோ அவங்க குடும்பத்துல உள்ளவங்களோ தெருவுக்கு வரமாட்டாங்க.

ஆனா பேரு, பணம், பதவி எல்லாமே அவனுங்களுக்குத்தான் போய்ச் சேரும். இதெல்லாம் ஏன் தெரியுமா சொல்றேன். கஞ்சப் பிசுனாறின்னு சொன்னியே முருகேசண்ணன்… ஒரு காலத்துல பணத்துக்கு பஞ்சமில்லாம வாழ்ந்த மனுசன்… வீட்டு வாடகையே நெறைய வரும். கொஞ்சம் விவசாயமும் இருந்துச்சு.

மக்களுக்காக உழைக்கிறேன்… மண்ணுக்காக பாடுபடுறேன்னு இருந்ததெல்லாம் தொலைச்சிக்கிட்டு கடனாளியாகி தற்கொலை வரைக்கும் போயிட்டாரு… நான்தான் இங்க கூட்டிட்டு வந்தேன்.

அந்தக்கடனை அடைக்கத்தான் இப்படி ஓடிட்டிருக்காரு. இவரோட பயணிச்சவங்க பல பேரு இன்னைக்கு அங்கே இங்கேன்னு போய் நல்லாத்தான் இருக்காங்க… கட்சித் தலைவர்கள் கூட நல்லாத்தான் வாழ்ந்துட்டு இருக்காங்க…

அது அவரோட முட்டாள்தனம் தானேண்ணா… சுதாகர் குறுக்கிட்டான். இப்போ நீ பண்றியே… அதே முட்டாள்தனம் தான்… தலைவன்னு சொல்றவனெல்லாம் வாழ்க்கையை பாதுகாப்பாக வச்சுக்கிட்டு அரசியல் பண்றான். நாமதான் அரசியல் பண்ணி வாழ்க்கைய தொலைச்சிடுறோம்.

கொஞ்சம் யோசிச்சுப் பாரு… கட்சிக்காக செத்தவனப் பத்தியோ அவன் குடும்பத்தை பத்தியோ எந்த அரசியல் தலைவனாவது கடைசி வரைக்கும் நெனச்சு பாத்திருப்பானா…

அந்த சாவக்கூட தன்னோட அரசியல் லாபத்துக்காக பயன்படுத்திக்கிட்டு அப்புறமா ஒரு இரங்கல் தெரிவிக்க கூட நேரமில்லாமல் அதிகார போதையில் மிதந்துட்டிருப்பான்…

சமுதாயம் மாறணும்னா ஒவ்வொரு தனிமனிதனும் மாறணும் அதுக்கு முதல்ல நீ மாறு… உன் வாழ்க்கையை மாற்று.

அரசியல்தான் உன் வாழ்க்கைன்னா அது முன்னேறப்பாரு…அத விட்டுட்டு வாழ்க்கைய தொலைக்கிறது, செத்துப் போயிடுறதுன்னு வீணாப் போயிடாதீங்க.

இப்போ அரசியல்ல நடக்குற கூத்தெல்லாம் பாரு…மக்களுக்காகன்னு பேசுனவனோட அயோக்கியதனமெல்லாம் தெரியும்.

பிரபாகர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே முருகேசன் அறை கதவை திறந்து வெளிப்பட்டார். மெலிந்த தேகம், ஒடுக்கு விழுந்த கன்னம், சுருங்கிய கண்கள்…

பாரதியும், சிதம்பரனாரும் சுதாகரின் நினைவில் வந்தார்கள்.        

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *