அண்டத்தோற்றத்தின் அறிவியல் கொள்கைகள்

அண்டத்தோற்றத்தின் அறிவியல் கொள்கைகள்

  • By Magazine
  • |

வர்ம அறிவியல் மாமேதை மூலச்சல் Dr.T. இராஜேந்திரன்

சென்ற மாத இதழின் தொடர்ச்சி…

7.4 உயிர்களின் பகுப்பாய்வின் பாதைகள்

மனிதர்கள் வேட்டைகால வாழ்க்கைச் சூளலிலேயே விலங்கினங்களின் உடல்கூறு அமைப்புகளைப் பற்றி நன்கு உணர்ந்திருந்தனர் என்பதற்கு உலகின் பல்வேறு இடங்களில் அவர்கள் தங்கி வாழ்ந்த குகைகளில் காணப்படும் ஓவியங்கள் ஓர் ஒப்பற்ற எடுத்துக்காட்டாக விளங்குகின்றன. பிரான்ஸ், இத்தாலி, யூரல் மலைத்தொடர் ஆகிய இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள குகை ஓவியங்கள் கி.மு. 15,000 முதல் 30,000 ஆண்டுகளுக்கு உட்பட்டதாகக் கருதப்படுகிறது. அவைகளில் எந்த விலங்கை எங்கு குத்தினால் அல்லது அடித்தால் அது உடனே மடியும் எனும் உடலியல் நுட்பங்களை மனிதன் தெளிவாக அறிந்திருந்தான் என்பதற்கான தடயங்கள் காணப்படுகின்றன.              கி.மு. 12-ஆம் நூற்றாண்டில் சீன மன்னன் ஒருவன் உயிர் காட்சி சாலை ஒன்றை அமைத்திருந்தான் எனும் தகவல் உள்ளது. அவர்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்பே பட்டுப்பூச்சிகளை வீட்டில் வளர்க்கத் தொடங்கி உள்ளனர். எனில், அதன் உணவு, வளர்ச்சி, பருவம் போன்றவைகளை அப்போதே நன்கு உணர்ந்திருந்தனர்.

அரிஸ்டாட்டில் எனும் கிரேக்கப் பேரறிஞர், “விலங்குகள் வரலாறு” எனும் தனது நூலில் 454 வகையான விலங்கினங்களைப் பற்றி விவரித்துள்ளார். இக்காலகட்டத்தில் மதக்குருமார்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்ததால் அவர் காலத்திற்குப் பிறகு சுமார் 1400 ஆண்டுகள் விலங்கின ஆராய்ச்சி செய்வதை தடை செய்தனர். ஆண்டவன் படைப்பை ஆராய்ச்சி செய்வதோ, அதை விமர்சிப்பதோ பாவம் என்றும், குற்றம் என்றும் மதக்கொள்கை முடிவு மேற்கொண்டதே இதற்கு காரணம். அதன்பின் ஆல்பிரட்டஸ்மாக்னஸ் (1206-1230) என்பவர் உயிரினங்களைப் பற்றி ஆராய்ந்து எழுதத் தொடங்கினார். 1516 முதல் 1565 வரை வாழ்ந்த சுவிட்சர்லாந்தை சார்ந்த கான்ராட்வான் கெஸ்னர் என்பவர் எழுதிய “விலங்குகளின் வரலாறு” என்ற நூலே அன்றைய விலங்கியல் ஆய்வுகளுக்கு சிறந்த வழிகாட்டியாக விளங்கியது. கார்ல் லின்னேயஸ் (1707-1829) எனும் ஸ்வீடனை சேர்ந்த தாவர விலங்கியலாளரே பாகுபாட்டியலின் தந்தை” எனப் புகழப்படுபவர். இவர் விலங்கின உலகின் 4200 இனங்களைக் கண்டறிந்து ஆறு வகுப்புகளாக விளக்கிக் கூறியுள்ளார். அடுத்து இந்த துறையில் சிறந்து விளங்கியவர் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த உயிரியலாளர் “ஜீன் பாப் டிஸ்ட் பியாரி அன்டாயின்-டி-மானெட்டி லமார்க் (1744-1829) என்பவராவர். விலங்கின உலகை முதுகெலும்புள்ளவை, இல்லாதவை என பகுத்துக் கூறியவர் இவரேயாவார்.

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த மற்றொரு உடற்கூறு ஆய்வாளர், “ஜார்ஜ் கூரியர்” (1769-1832) விலங்கின உடல்களின் அமைப்புகள், ஒற்றுமைகளைப் பற்றி விளக்கிக் கூறினார். இவர்களைத் தொடர்ந்து பல்வேறு உயிரியலாளர்கள் இத்துறை பற்றி விளக்கிக் கூறியுள்ளனர். அவர்களில் “கார்ல் எர்னஸ்ட் வான்பேயர்” எனும் கருவியலாளரும், கிளாட் பெர்னார்ட் எனும் விலங்கின செயல்களின் மய்யக் கட்டுப்பாட்டினை கண்டறிந்த ஆய்வாளரும், தவளையின் நுரையீரலின் இரத்த தந்துகிகளைக் கண்டறிந்து விளக்கிய மார்செல்லோ மால்பிகியும் குறிப்பிடத்தக்கவர் ஆவர். இவர்களைத் தொடர்ந்து உயிரியல் ஆய்வில் ஈடுபட்ட “இவான் பாவ்லோவ்”, வில்லியம் ஹார்வி”, பிரான்ஸிஸ் கிரீக், ஆண்டன்வான் லீவன் ஹீக் போன்றவர்களின் ஆய்வுகளும், கண்டுபிடிப்புகளும் இத்துறைக்கு பெருமளவில் பயன்பட்டன. அடுத்து “சார்லஸ் டார்வினின் இனங்களின் மூலம் பரவல்” எனும் ஆய்வுநூலே விலங்கியல் துறையின் வளர்ச்சிக்கும், புரட்சிக்கும் வழிவகுத்த மிகச்சிறந்த நூலாகும். இத்துறைக்கும் உயிரியல் பரிணாம சமநிலைக்கும் வித்திட்ட இவரது ஆய்வுகளும், கண்டுபிடிப்புகளும் ஓர் ஒப்பற்ற அறிவுத்தளமாகும்.

இங்ஙனம் பல்வேறு ஆய்வாளர்கள் தங்கள் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில், உயிர்களின் உடலமைப்பு, தன்மை, இயல்புகள் போன்றவைகளை அடிப்படையாகக் கொண்டு வகைப்படுத்தியுள்ளனர். உயிரினங்களை தாவரங்கள், பிராணிகள் எனும் இரு மாபெரும் பிரிவுகளாக பிரித்தனர். இவைகளில் பல உட்பிரிவுகளும் உருவாக்கப்பட்டன. பிராணிகள் முதுகெலும்புள்ளவை, முதுகெலும்பு இல்லாதவை என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டன. முதுகெலும்புள்ளவைகள் மீன், தவளை, ஊர்வன, பறப்பன, பாலூட்டிகள் என ஐந்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டன. அமீபா, கடற்பஞ்சு, பவளம், மண்புழு, பூச்சி, சிப்பி, நட்சத்திர மீன் போன்றவைகள் முதுகெலும்பு இல்லாத பிராணிகளாக பிரிக்கப்பட்டன. இவைகளுக்குள்ளும் பல்வேறு உட்பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டு, குடும்பங்கள், உப குடும்பங்கள், வகுப்புகள், இனங்கள் என சிறுசிறு பிரிவுகளும் உருவாக்கப்பட்டன. தாவரங்களை பூ உள்ளவை, பூ இல்லாதவை என இரு பெரும்பிரிவுகளாகப் பிரித்தனர். பூ உள்ள தாவரங்களில் மூடிய விதை உள்ளவை, மூடாத விதை உள்ளவை என பிரித்து அவற்றுள் உப பிரிவுகளும் உருவாக்கப்பட்டன. பூவாத தாவரங்களாக ஆல்கா, காளான், பாசி போன்ற பிரிவுகளும் உருவாக்கப்பட்டன. பாலூட்டிகளில் குட்டிப்போட்டு பால் தருபவை, ஊரும் பாலூட்டிகள், உஷ்ண இரத்தம் உடையவை, நுரையீரல்களால் சுவாசிப்பவை, முட்டையிட்டு குஞ்சு பொரிப்பவை என பல்வேறு பிரிவுகள் உருவாக்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் வெவ்வேறு வகைப்பாடுகளும், பாகுபாடுகளும் உருவாக்கப்பட்டது. இதன்படி, ஆடும் மாடும் ஒரே குடும்பத்தை சார்ந்தவை. பூனையும், புலியும் ஒரே குடும்பத்தை சார்ந்தவை. கழுதையும், குதிரையும் ஒரே குடும்பத்தை சார்ந்தவை. இவைகள் பாலூட்டிகள். இவைகளிலும் அசைவம், சைவம் உண்டு. நாய், நரி, பூனை, புலி இவைகள் தங்களுக்குள் தொடர்புள்ள இனங்களாகும். கழுதையும், குதிரையும் இவற்றின் தாயாதிகளாகவும், ஆடும், மாடும் உறவினர்களாகவும் கண்டறியப்பட்டுள்ளன. எந்த ஒரு உயிரினத்தையும் அதன் அமைப்பை அடிப்படையாகக் கொண்டு எளிதில் கண்டுகொள்ளலாம். எடுத்துக்காட்டாக, மனிதன் தாவரம் அல்ல என்பதையும், அவன் ஒரு முதுகெலும்புள்ள பிராணி என்பதையும் அமைப்பை வைத்தே அறிந்துகொள்ளலாம். காலில் குளம்பு இல்லாததால் அவன் மாடு, குதிரை போன்ற இனத்தை சார்ந்தவன் அல்ல என்பதை எளிதில் புரிந்துகொள்ள முடியும். கூர்மையான நகங்கள் இல்லாததால் பூனை, புலி குடும்பத்தை சார்ந்தவன் அல்லாததையும் எளிதில் உணர்ந்துகொள்ள முடியும். அவன் ஒரு பாலூட்டி. தோற்றத்திலும், செயல்பாட்டிலும் குரங்கினத்தை சார்ந்தவன் என்பது எளிதில் எல்லோராலும் புரிந்துகொள்ளக்கூடிய ஒன்றாகும். உயிரினங்களின் உடலமைப்பிலும், தோற்றத்திலும் ஒற்றுமை இருப்பதால் அவை அனைத்தும் ஒரே வழியான தாய் இனத்திலிருந்து பிரிந்தவைகள் என்பதை உயிரியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். எடுத்துக்காட்டாக, இன்று கண்டறியப்பட்ட பத்து லட்சம் பிராணிகளை 13 பிரிவுகளிலும், செடி கொடிகளை ஆறு பெரும் பிரிவுகளிலும் எளிதில் அடக்கிவிட முடியும் என்பது அறிவியல் ஆய்வாளர்களின் தெளிவாகும். ஏனெனில், இவைகள் பொதுவான மூதாதையரின் வழித்தோன்றல்கள் ஆகும். இதில் மனிதன் மனிதக்குரங்கிலிருந்து தோன்றினான் என்பதை எளிதில் மனிதமனங்கள் ஏற்க விரும்புவதில்லை. தன்னை ஒரு தனி படைப்பாகவே கருதுகின்றான். அறிவியல் தெளிவும் அதன் வழிவந்த ஆய்வுமுறைகளையும் அறியாத மனிதர்கள் இவ்வாறே தொடர்ந்து தங்களை உயர்வாக கூறிக்கொள்கின்றனர். ஆனால், பரிணாமப் பாதைகளையும், அதன் வளர்ச்சிகளையும் ஆய்வுசெய்து கண்டறிந்த உண்மைகள் மூலம் மனிதனும் பாலூட்டி இனத்தை சேர்ந்த ஒருவன் என நிரூபித்துள்ளனர். மனிதன் ப்ரைமோடா என்ற பாலூட்டி இனத்தை சேர்ந்த முதுகெலும்புள்ள பிராணி. மற்ற உயிரினங்களைப் போலவே சூழ்நிலை நிர்பந்தங்களால் புத்துருவம் பெற்ற ஓர் இனத்தை சேர்ந்தவன் தான் என விஞ்ஞானிகள் அறுதியிட்டு கூறுகின்றனர். ப்ரைமோடா இனத்தில் இவ்வுலகம் முழுவதும் ஐந்து முக்கிய குடும்பங்கள் உள்ளன. அதில், முதல் குடும்பத்தில் லெமூர் என்ற விலங்கும், இரண்டாவது குடும்பத்தில் டார்சியஸ் என்ற விலங்கும், மூன்றாவது குடும்பத்தில் பபூன் என்ற விலங்கும், நான்காவது குடும்பத்தில் கிப்பன், உராங் உட்டான், சிம்பன்சி, கொரில்லா ஆகியவையும், ஐந்தாவது குடும்பத்தில் மனிதனும் அடங்குவர் என கண்டறிந்துள்ளனர். இதில் மனிதனை தவிர, மற்றவை அனைத்தும் மரத்தில் வாழும் பெரிய நகங்கள் உடைய பிராணிகளாகும். அவை உள்ளங்காலை தரையில் பதிய வைத்து நடக்கும் தன்மையும், உடலில் ரோமத்தையும், வளர்ச்சியடைந்த மூளையையும் கொண்டவையாகும். பூமியில் காணப்படும் சுமார் 400 வகையான குரங்கினங்களில் மேற்குறிப்பிட்ட ஐந்துவகை குடும்பத்தை சார்ந்த குரங்குவகைகளும் வாலில்லாதவை ஆகும்.

(பொதுவாக, ஓர் அறிவையோ, அறிவியல் கருத்தினையோ ஏற்றுக்கொள்வதற்கும், அதனை பகுப்பாய்வு செய்து புரிந்துகொள்வதற்கும் விருப்பு, வெறுப்பு இல்லாத நல்ல மனநிலை வேண்டும். சமயம் சார்ந்தோ, பண்டைய கதைகள் சார்ந்தோ மனம் நேர்நிலையை விட்டு பிரளாமல் இயங்குபவர்களால் மட்டுமே அறிவியல் சார்ந்த உண்மைகளை அறிவுப்பூர்வமாக எளிதில் புரிந்துகொள்ள முடியும். ஏனெனில், மனிதன் இயற்கையின் படைப்பின் இன்றைய உயர்மட்ட தகுதியில் இருப்பதால் தன்னை விலங்கினத்தோடு ஒப்பிடுவதையோ, தொடர்புபடுத்துவதையோ சாதாரண மனிதர்களால் எளிதில் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. அதற்கு தெளிவான தேடுதல்களும், புரிதல்களுமே உண்மையான வழிகாட்டிகளாகும்).

இன்றைய மரபணு ஆய்வுகள் மனிதனுக்கும், மனிதக்குரங்கிற்கும் இடையே உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை தெளிவாக ஆய்வுசெய்ததில் உருவ ஒற்றுமையிலும், செயல்முறைகளிலும் ஏராளமான ஒற்றுமை இருப்பினும் மனிதனுக்கு 23 ஜோடி குரோமோசோம்களே உள்ளன என்றும், மனிதக்குரங்கினத்திற்கு 24 ஜோடி குரோமோசோம்கள் உள்ளன என்றும் பல்வேறு ஆய்வுகள் மூலம் கண்டறிந்துள்ளனர். மனிதனது இரண்டாவது குரோமோசோம் இணைவுற்றதே குரங்கிலிருந்து மனிதன் என்ற உயர்ந்த மனித மாற்றத்திற்கான காரணமாக கருதப்படுகிறது. வேறு பல வழிகளில் ஆய்வுசெய்த பின்னரும் ஏறத்தாழ 98% மனிதனும், சிம்பன்சியும் ஒத்திருப்பது மறுக்கமுடியாத உண்மையாகும். மனிதன் பரிணாமத்தின் விளைவாகத் தான் ஏறத்தாழ ஒன்றரை மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் உதயமானான் என்பதை மதங்கள் கூட ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால், 1966-ல் போப்பாண்டவராக இருந்த இரண்டாம் ஜாண்பால் அவர்கள் போன்டிவிக்கல் அக்காடமி ஆப் சயின்ஸ் என்ற மாநாட்டில் அக்டோபர் 22-ம் நாள் மனிதன் பரிணாமத்தில் தான் தோன்றினான் என்பதை வெளிப்படையாக ஒத்துக்கொண்டார்1.

மனிதனுக்கும், மனித குரங்கிற்கும் இடையில் ஒரே விதமான நோயெதிர்ப்பு மண்டலம், நரம்புமண்டலம், இரத்த ஓட்ட மண்டலம், நிணநீர் மண்டலம் என அனைத்தும் ஒத்தே காணப்படுகின்றன. மூளையும் ஒரே விதமான அமைப்பில் காணப்படுகிறது. இந்த சூழலில், சர். ரிச்சர்டு ஓவென் (Sir Richard Owen) என்ற விக்டோரியா காலத்தில் (1861) வாழ்ந்த அவரது பரம்பரை மருத்துவர் மனிதன் குரங்கிலிருந்து தோன்றியவன் அல்ல என்றும், மனிதன் மனிதனே என சார்லஸ் டார்வின் பரிணாம கருத்துக்களை எதிர்த்து வந்தார். அவர், மனித மூளையில் மைனர் ஹிப்போகேம்பஸ் என்ற உறுப்பு இருக்கிறது என்றும், அதில் ஆன்மா என்ற ஒன்று குடிகொண்டிருப்பதாகவும் உறுதியாகக் கூறினார். பால்டுகெய்லு என்ற துணிச்சல்மிக்க உயிரியலாளருடன் காங்கோ நாட்டிற்கு சென்று ஒரு கொரில்லாவை வேட்டையாடி அதன் தலையிலிருந்து எடுத்துவந்த மூளையை ஆராய்ந்து பார்த்த பின்னரே ஓவென் அவ்வாறு வாதாடினார். ஆனால், சார்லஸ் டார்வினுடைய அறிவியல் ஆய்வுகளில் ஆர்வம் கொண்ட தாமஸ் ஹென்றி ஹக்ஸ்லி என்பவர் ஓவெனின் கருத்துக்களை கடுமையாக எதிர்த்தார். அவர், ஏப் எனப்படும் கொரில்லாக்களுக்கும் மைனர் ஹிப்போகேம்பஸ் உண்டு என எதிர்க்குரல் எழுப்பி வாதிட்டார். மேலும் அவர், மனிதனுடைய கட்டை விரலின் முக்கியத்துவத்தின் மூலம் அவனது உயர்நிலையை நிர்மாணிக்கவோ அல்லது ஹிப்போகேம்பஸ் அவனுக்கு ஏகபோக உரிமை அல்ல என்பதால் அவனை சிறுமைப்படுத்துவதோ எனது நோக்கமல்ல, நான் மனிதன் என்று பெருமைப்பட்டுக்கொள்ளும் வெட்டியான அகம்பாவத்தை தூக்கி வீசுவதற்காகவே செய்ய வேண்டியவற்றை செய்திருக்கிறேன் என்று தன்னுடைய கருத்தினை முடித்தார்2.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *