– முனைவர் மோகனா, பழனி
ஒரு கிராமின் பத்து இலட்சத்தில் ஒரு பகுதியாக (ஒரு கிராமின் Gram பத்து லட்சத்தில் ஒரு பகுதி மைக்ரோகிராம் (Microgram, ì g) என்று அழைக்கப்படுகிறது. அதாவது 1 கிராம் என்பது 10,00,000 மைக்ரோகிராமுக்குச் சமமாகும்) அளவிடப்படும் இந்தச் சிறிய வைட்டமின், உடலின் ஆற்றல், முதுமை, ஏன் சிலர் எப்போதும் சோர்வாக உணர்கிறார்கள் என்பதற்கான ஆச்சரியமூட்டும் பல இரகசியங்களைத் தன்னுள் புதைத்து வைத்ததுள்ளது. இந்தக் கண்டுபிடிப்பு ஜூன் 25, 2026, தி கன்வர்சேஷன் (The Conversation) என்னும்ஆய்வு அறிவியல் பத்திரிக்கையில் வெளியானது.
நுண்ணியது குறைபாடு அதீத தாக்கம்
மனித உடலுக்குத் தேவையான வைட்டமின் B12-ன் அளவு என்பது மிக மிக நுண்ணியது. ஆனால், அதன் பற்றாக்குறை உடல்நலம், உயிர்த்துடிப்பில், மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது.100 ஆண்டுகளுக்கு முன்பு, உயிரைக் காக்கும் கல்லீரல் சிகிச்சையில், B12 வைட்டமின் முதன்முதலில் தொடர்புபடுத்தப்பட்டது. அப்போதைய உயிர்க்கொல்லி நோயான பெர்னிஷியஸ் அனீமியா ((Pernicious Anemia) என்ற ரத்தச்சோகை நோய்க்கு, ஙி12 நம்பிக்கையின் ஒளியானது
இன்று, வைட்டமின் B12 புதிய அவதாரம் எடுத்துள்ளது. அதன் இன்னொரு முக்கியமான பணியை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து வருகின்றனர். உயிர் அணுக்களின் “ஆற்றல் நிலையங்களான, மைட்டோகாண்ட்ரியா சீராகச் செயல்படுவதற்கு இது துணைபுரியகிறது. அதனால், வழக்கமான குறைபாட்டு அறிகுறிகள் தோன்றுமுன்பே சிலருக்கு தீராத சோர்வும், சிந்தனை மங்கலாகும் “மூளை மூட்டமும்” (Brain Fog) ஏற்படுகிறது என்பதற்கான விளக்கமும் தருகிறது.
ரத்தச்சோகையைத் தடுக்கும் பங்கைக் கடந்தும், வைட்டமின் B12 ஏன் முக்கியமானது என்பதன்புதிய காரணங்களை தொடர்ந்து கண்டறிந்துள்ளனர்.
இரண்டு மைக்ரோகிராம் 2 mcg என்பது ஒரு கிராமில் மில்லியனில் ஒரு பங்கு (0.000002 கிராம்) அது கற்பனைக்கே எட்டாத அளவுக்கு மிகச் சிறிய அளவு.
ஒரு சாதாரண மேசை உப்புத் துகளின் நுண்ணிய துண்டைவிடக் கூட அதன் எடை குறைவாக இருக்கும். ஆனால், நடைமுறையில் பின்பற்றப்படும் மருத்துவ வழிகாட்டுதல்களைப் பொறுத்து, வயது வந்த ஒருவருக்கு தினமும் சுமார் அந்த அளவு வைட்டமின் B12 கிடைத்தாலே போதும். அந்தச் சிறிய அளவே உடலில் சிவப்பணுக்கள் உருவாகவும், நரம்பு மண்டலம் ஆரோக்கியமாக இயங்கவும், உயிரின் மரபுக் குறியீடான DNA உருவாகவும் அடித்தளமாக அமைகிறது.
· 2026-ஆம் ஆண்டு, மருத்துவ வரலாற்றில் மறக்க முடியாத ஒரு நிகழ்வுக்கு நூறு ஆண்டுகள் நிறைவடைகின்றன.
· 1926-இல் மருத்துவ அறிஞர்களான ஜார்ஜ் மினாட் (George Minot), வில்லியம் மர்பி (William Murphy), கல்லீரல் நிறைந்தஉணவு மூலம். உயிர்க் கொல்லி நோய்பெர்னிஷியஸ் அனீமியாவைக் குணப்படுத்தும் என அறிவித்தனர்.
· அவர்களின் ஆய்வு மருத்துவ உலகில் ஒரு புதிய யுகத்தைத் தொடங்கியது.
· ஆய்வின் தொடர்ச்சியாக கல்லீரலால் நோயைக் குணப்படுத்திய அதிசயப் பொருள்வைட்டமின் B12 என விஞ்ஞானிகள் அடையாளம் கண்டனர்.
· அந்த மகத்தான கண்டுபிடிப்பை நோக்கிய பயணம் எதிர்பாராத ஒரு சிறிய குறிப்பிலிருந்தே தொடங்கியது.
· அது விலங்குகள் மீது மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வு.
இரத்த சோகை நாய்கள்
அமெரிக்க மருத்துவரும் நோயியல் நிபுணருமான ஜார்ஜ் விபிள் George Whipple), அதிக இரத்த இழப்பால் இரத்தச்சோகை ஏற்பட்ட நாய்களுக்கு கல்லீரலை உணவாக அளித்தார். அவை விரைவாகக் குணமடைவதை நிரூபித்தார். இரத்தப்போக்கினால் ஏற்படும் ரத்தச்சோகை என்பது, உடலிலிருந்து சிவப்பணுக்கள் வெளியேறுவதால் உண்டாகும் நிலை. ஆனால் பெர்னிஷியஸ் அனீமியா முற்றிலும் வேறுபட்டது. உடல் வைட்டமின் B12 ஐ உறிஞ்சமுடியாததே.
இரத்தம் உருவாக்கும் காரணி
அதில் பிரச்சினை இரத்தப்போக்கு அல்ல. உடலால் வைட்டமின் B12-ஐ போதுமான அளவில் உறிஞ்சிக்கொள்ள முடியாததே, அடிப்படை காரணம். இருந்தபோதிலும், WHO-ன் அந்த எளிய ஆய்வு, கல்லீரலுக்குள் மறைந்து கிடந்த சக்திவாய்ந்த “இரத்தம் உருவாக்கும் காரணி” நோக்கி ஆராய்ச்சியாளர்கள் கவனத்தை திருப்பியது.
மரணத்தின் விளிம்பில் நின்றிருந்த பெர்னிஷியஸ் அனீமியா நோயாளிகள், கல்லீரல் நிறைந்த உணவுமுறையைப் பின்பற்றிய சில வாரங்களிலேயே வியக்கத்தக்க முன்னேற்றத்தைப் பெற்றனர். கல்லீரல் சிகிச்சையின் அந்த அற்புதமான வெற்றியே, பின்னாளில் விஞ்ஞானிகளை கல்லீரலிலிருந்து ஆழ்ந்த சிவப்பு நிறமுடைய ஒரு வேதிப்பொருளைப் பிரித்தெடுக்க வழிநடத்தியது.
உலகில் அனைவரும் அறிந்த வைட்டமின் B12
இன்று உலகம்வைட்டமின் B12,/கோபாலமின் (Cobalamin) என்று அறியும் அதே சேர்மம் தான் அது. அடிக்கடி தவறாகப் புரிந்து கொள்ளப்படும் குறைபாடு பல பத்தாண்டுகளாக ஆய்வுகள் நடைபெற்றிருந்தாலும், வைட்டமின் B12 குறைபாடு இன்றும் மிகவும் பொதுவாகவே அதிகம் காணப்படுகிறது. குறைபாடு யாரிடம் ?
· முதியவர்கள்
· முழுச் சைவ உணவுமுறையைப் பின்பற்றுவோர் (Vegans), சைவ உணவாளர்கள்
· மேலும் உணவில் உள்ள சத்துகளை உடல் உறிஞ்சும் திறனை பாதிக்கும் நோய்கள் / உடல்நிலைகள் கொண்டவர்கள்
இவர்களிடையே இந்தக் குறைபாடு அதிகமாகக் காணப்படுகிறது. சிலருக்கு போதுமான அளவு வைட்டமின் B12 உணவில் கிடைப்பதே இல்லை.
எங்கிருந்து வைட்டமின் B12
ஏனெனில், இயற்கையாக இந்த வைட்டமின் B12, பெரும்பாலும் விலங்குகளில் இருந்து கிடைக்கும் உணவுகளில்தான் உள்ளது. அதாவது இறைச்சி, மீன், முட்டை, பால், பால் சார்ந்த உணவுகள் இதன் முக்கிய ஆதாரங்களாகும்.
மற்ற சிலருக்கு உணவில் வைட்டமின் B12 இருந்தாலும், அதை உடலால் சரியாக உறிஞ்சிக்கொள்ள முடியாமல் போகிறது.
வயது ஏற ஏற… ஏன் இந்தக் குறைபாடு அதிகரிக்கிறது?
வைட்டமின் ஙி12-ஐ உடல் உறிஞ்சிக் கொள்ளும் திறன், வயது அதிகரிக்க அதிகரிக்க பலரிடம் இயல்பாகவே குறையத் துவங்குகிறது.
காரணிகள் :
· சில முதியவர்களுக்கு வயிற்றில் சுரக்கும் அமிலத்தின் (Stomach Acid) அளவு குறைந்து விடுகிறது. உணவில் இருக்கும் வைட்டமின் B12-ஐ அதிலிருந்து பிரித்தெடுக்க இந்த வயிற்று அமிலம் மிகவும் அவசியமானது. அந்த அமிலமே குறைந்துவிட்டால், உணவில் வைட்டமின் இருந்தாலும் உடலால் அதை முழுமையாகப் பயன்படுத்த முடியாது.
· வேறு சிலருக்குஆட்டோஇம்யூன் காஸ்ட்ரைட்டிஸ் (Autoimmune Gastritis) என்ற நோய் உருவாகிறது. இதில், உடலை நோய்களிலிருந்து காக்க வேண்டிய நோய் எதிர்ப்பு மண்டலமே தவறுதலாக வயிற்றின் செல்களைத் தாக்கி சேதப்படுத்துகிறது.
· இந்தச் செல்கள்தான் வயிற்று அமிலத்தையும், மேலும் வைட்டமின் B12 உடலில் உறிஞ்சப்படுவதற்கு இன்றியமையாத ‘இன்ட்ரின்சிக் ஃபாக்டர்’ (Intrinsic Factor) என்ற புரதத்தையும் உற்பத்தி செய்கின்றன.
· எனவே, அந்தச் செல்கள் பாதிக்கப்படும்போது, வைட்டமின் B12 உடலில் உறிஞ்சப்படும் திறனும் கணிசமாகக் குறைந்து விடுகிறது.
· அதேபோல், உடல் எடையைக் குறைக்கும் அறுவைச் சிகிச்சைகள் (Weight-loss Surgery), நீரிழிவு நோய்க்கு வழங்கப்படும் சில மருந்துகள், வயிற்று அமிலத்தைக் குறைக்கும் (Acid Reflux) சில மருந்துகள் ஆகியவையும் வைட்டமின் B12 உறிஞ்சப்படுவதைத் தடுக்கக்கூடும்.
முதுமை என்று தவறாக எண்ணப்படும் அறிகுறிகள்
வைட்டமின் B12 குறைபாட்டின் அறிகுறிகள் பெரும்பாலும் மெதுவாகவே வெளிப்படுகின்றன. அவை ஒரே நாளில் தோன்றி அச்சுறுத்துவதில்லை.
மாறாக, காலத்தின் ஓட்டத்தில் மெல்ல மெல்ல உடலுக்குள் வேரூன்றுகின்றன. அதனால்தான், பலரும் அவற்றை சாதாரண முதுமையின் இயல்பான மாற்றங்கள் என்று தவறாகக் கருதி விடுகின்றனர்.
குறைபாடு உள்ளவர்களுக்கு உருவாகும் பிரச்சினைகள்
1. அடிக்கடி காரணமே இல்லாமல் சோர்வாக உணரலாம்.
2. உடல் பலவீனமடையலாம்.
3. சிறிய வேலை செய்தால்கூட மூச்சுத் திணறல் ஏற்படலாம்.
4. சிலருக்கு கை, கால்களில் மரத்துப் போன உணர்வு அல்லது ஊசியால் குத்துவது போன்ற சில்லிப்பு தோன்றலாம்.
5. நடக்கும்போது சமநிலை குலையலாம்.
6. நினைவாற்றல் மங்கலாம்.
7. சிந்தனை தெளிவிழந்து, மனம் எதிலும் முழுமையாகக் கவனம் செலுத்த முடியாத நிலை உருவாகலாம்.
இதையே பலர் “மூளை மூட்டம்” (Brain Fog) என்று வர்ணிக்கின்றனர்.
ஆனால், இந்த அறிகுறிகள் அனைத்தும் வைட்டமின் B12 குறைபாட்டுக்கே உரியவை என்று கூற முடியாது.
எனவே, நீண்ட நாட்களாகத் தொடரும் சோர்வு, கை-கால்களில் சில்லிப்பு, அல்லது சமநிலைப் பிரச்சினைகள் போன்றவை ஏற்பட்டால், “இது வெறும் வைட்டமின் குறைபாடுதான்” என்று தாங்களாகவே முடிவு செய்து கொள்ளாமல், மருத்துவரின் ஆலோசனையின்படி உரிய பரிசோதனைகளை மேற்கொள்வது அவசியம்.
யார் அதிக கவனம் செலுத்த வேண்டும்?
கீழ்க்கண்டவர்கள் அதிக ஆபத்து உள்ளவர்களாகக் கருதப்படுகின்றனர்.
· முழுச் சைவ உணவுமுறையைப் பின்பற்றுவோர் (Vegans)
· சைவ உணவாளர்கள் (Vegetarians)
· முதியவர்கள்
· வயிற்று அமிலத்தைப் பாதிக்கும் மருந்துகளை உட்கொள்பவர்கள்
· நீரிழிவு நோய்க்கான சில மருந்துகளைப் பயன்படுத்துபவர்கள்
இவர்கள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில், வைட்டமின் B12 பரிசோதனை செய்து கொள்ளவோ, தேவையானால் கூடுதல் சத்துணவு (Supplement) எடுத்துக் கொள்ளவோ வேண்டியிருக்கலாம்.
சோர்வுக்குக் காரணம் ரத்தச்சோகை மட்டும்தானா?
· நீண்ட காலமாக மருத்துவர்கள், வைட்டமின் B12 குறைபாட்டால் ஏற்படும் சோர்விற்கும் ரத்தச்சோகைக்கும் நேரடி தொடர்பு இருப்பதாகவே கருதி வந்தனர்.
· இதற்குக் காரணமும் உள்ளது. உடலில் போதுமான அளவு வைட்டமின் B12 இல்லையென்றால், எலும்பு மஜ்ஜையால் (Bone Marrow) ஆரோக்கியமான சிவப்பணுக்களை உருவாக்க முடியாது.
· அதற்குப் பதிலாக, வழக்கத்திற்கு மாறாக மிகப் பெரியதும், முழுமையாக வளர்ச்சியடையாததுமான சிவப்பணுக்களே உருவாகின்றன.
· இத்தகைய செல்கள் உடலின் பல பகுதிகளுக்கும் ஆக்சிஜனை திறம்பட எடுத்துச் செல்ல முடியாது.
· அதன் விளைவாக, உடல் விரைவில் சோர்வடைகிறது.
· ஆற்றல் குறைகிறது.
· சிறிய முயற்சியே பெரிய சுமையாக உணரப்படுகிறது.
· ஆனால்…வைட்டமின் B12 குறைவாக உள்ளவர்கள் ஏன் இவ்வளவு சோர்வாக உணர்கிறார்கள் என்பதற்குஇரத்தச்சோகை மட்டுமே ஒரே காரணமாக இருக்க வேண்டிய அவசியமில்லைஎன்று புதிய ஆய்வுகள் இன்று சுட்டிக்காட்டத் தொடங்கியுள்ளன.
· உடலின் ஆற்றலை நிர்ணயிக்கும் இன்னொரு ஆழமான மர்மத்தின் கதவு இப்போது மெதுவாகத் திறக்கத் தொடங்கியுள்ளது.
குறைந்த ஆற்றல் (Low Energy) மனித உடலில் நடைபெறும் எண்ணற்ற வேதியியல் வினைகளை இயக்க உதவும் புரதங்களே நொதிகள் (Enzymes). ஆச்சரியமாக, மனித உடலில் வைட்டமின் B12 நேரடியாகத் தேவைப்படுவது இரண்டு நொதிகளுக்கு மட்டுமே. அவற்றில் ஒன்று, உயிரணுக்கள் பிரியும் ஒவ்வொரு தருணத்திலும் அவற்றுக்குத் தேவையான மரபணுக் குறியீடான ஞிழிகி உருவாக உதவுகிறது.மற்றொன்று, உயிரணுக்களின் ஆற்றல் உற்பத்தி நிலையங்களாக விளங்கும் மைட்டோகாண்ட்ரியா (Mitochondria), சில வகை கொழுப்புகளையும் புரதங்களின் கட்டுமான அலகுகளையும் (Protein Building Blocks) முறையாகச் செயலாக்க உதவுகிறது.
மைட்டோகாண்ட்ரியா
மைட்டோகாண்ட்ரியா என்பது உயிரணுக்களுக்குள் அமைந்துள்ள மிகச் சிறிய அமைப்பு. ஆனால் அதன் பணி அளவிட முடியாதது. நாம் உண்ணும் உணவை உடலால் பயன்படுத்தக்கூடிய ஆற்றலாக மாற்றும் அமைதியான மின் நிலையங்கள் அவையே. மைட்டோகாண்ட்ரியாவை நோக்கித் திரும்பிய விஞ்ஞானிகளின் பார்வை வைட்டமின் B12-ன் இந்தப் பணி, முதுமை, தசைச் செயல்பாடு, உடலில் B12-ன் அளவு ஆகியவற்றை ஆய்வு செய்துவரும் விஞ்ஞானிகளின் கவனத்தை நாளுக்கு நாள் அதிகமாக ஈர்த்து வருகிறது.
2026-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஓர் ஆய்வு, உயிரணுக்களுக்கு போதுமான அளவு வைட்டமின் B12 கிடைக்காதபோது என்ன நடைபெறுகிறது என்பதை ஆராய்ந்தது.
ஆய்வு முடிவு அந்த ஆய்வில் B12 குறைவாக இருந்தால், மைட்டோகாண்ட்ரியாவுக்குள் இருக்கும் ஞிழிகி-வின் இயல்பான செயல்பாடு பாதிக்கப்படுவதோடு, ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட எலும்புத் தசை உயிரணுக்களில் (மனித உடலுக்கு வெளியே ஆய்வு செய்யப்பட்ட தசைச் செல்கள்) ஆற்றல் உற்பத்தியும் குறைகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
முதிர்ந்த எலிகளில் கிடைத்த சுவாரசியமான கண்டுபிடிப்பு
· இதனுடன் தொடர்புடைய மற்றொரு ஆய்வில், வயதான பெண் எலிகளுக்கு வைட்டமின் B12 கூடுதலாக வழங்கப்பட்டது.
· அதன் விளைவாக, தசைகளில் உள்ள மைட்டோகாண்ட்ரியாவின் ஆரோக்கியம் பல்வேறு அளவுகளில் மேம்பட்டது.
· மைட்டோகாண்ட்ரியாவின் எண்ணிக்கை அதிகரித்தது.
· அவற்றின் அமைப்பும் ஆரோக்கியமானதாக மாறியது.
· மொத்தத்தில், உயிரணுக்களின் ஆற்றல் உற்பத்தி நிலையங்கள் புத்துயிர் பெற்றதற்கான பல அடையாளங்கள் காணப்பட்டன.
இந்த இரண்டு ஆய்வுகளையும் ஒன்றாகப் பார்க்கும்போது, வைட்டமின் B12 குறைவாக உள்ள சிலர், வெளிப்படையான இரத்தச்சோகை கண்டறியப்படுவதற்கு முன்பே ஏன் கடுமையான சோர்வைப் பற்றி புகார் தெரிவிக்கிறார்கள் என்பதற்கான ஒரு சாத்தியமான விளக்கம் கிடைக்கிறது.
B12 முதுமையை மாற்றிவிடுமா?
இல்லவே இல்லை. இந்த ஆய்வுகள், வைட்டமின் B12 கூடுதல் மருந்துகள் முதுமையைத் திருப்பிவிடும் அல்லது ஏற்கனவே உடலில் போதுமான ஙி12 உள்ளவர்களுக்கு அதிசய ஆற்றல் ஊக்கியாக (Energy Booster) செயல்படும் என்று அர்த்தமல்ல. அவ்வாறு முடிவு செய்வது அறிவியல் ஆதாரங்களைக் கடந்து செல்லும் தவறான புரிதலாகும்.
பல ஆண்டுகள் சந்தேகத்திற்கு வலு சேர்க்கும் புதிய ஆய்வுகள்
1. வைட்டமின் B12-க்கும் மைட்டோகாண்ட்ரியாவின் செயல்பாட்டிற்கும் இடையே தொடர்பு இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாகவே கருதி வந்தனர்.
2. காரணம், வைட்டமின் B12-ஐச் சார்ந்து செயல்படும், இரண்டு நொதிகளில் ஒன்று மைட்டோகாண்ட்ரியாவுக்குள்ளேயே இயங்குகிறது.
3. முன்னர் நடைபெற்ற சில ஆய்வுகளும், முதியவர்களிடம் வைட்டமின் B12 குறைவாக இருப்பது, தசைச் செயல்திறன் குறைவுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று சுட்டிக்காட்டியுள்ளன.
4. ஆனால், அந்த ஆய்வுகளில் பெரும்பாலானவைகண்காணிப்பு ஆய்வுகள் (Observational Studies) மட்டுமே.
5. எனவே, “B12 குறைபாடுதான் நேரடியாக தசைச் செயல்திறனைக் குறைக்கிறது” என்று உறுதியாக நிரூபிக்க அவை போதுமானவை அல்ல.
6. காரணத்திற்கும் விளைவிற்கும் இடையேயான உறவை அவற்றால் உறுதிப்படுத்த முடியாது.
எப்போதும் சோர்வாக இருக்கிறீர்களா? உடனே B12 ஊசி போட வேண்டுமா?
நீண்ட நாட்களாக சோர்வாக உணர்ந்தால், உடனே ஒரு நலவாழ்வு மையம் (Wellness Clinic), மருத்துவ ஸ்பா (MediSpa) சென்று வைட்டமின் B12 ஊசி போட்டுக் கொள்வது சரியான தீர்வா?பெரும்பாலான மக்களுக்கு – இல்லை.
வைட்டமின் B12 குறைபாடு மருத்துவ ரீதியாக உறுதி செய்யப்பட்டிருந்தால், குறிப்பாக உடலால் B12-ஐ உறிஞ்சிக் கொள்ள முடியாத நிலை இருந்தால், ஙி12 ஊசிகள் ஏற்கனவே நன்கு நிரூபிக்கப்பட்ட சிகிச்சை முறையாகும்.
ஆதாரமின்மை
இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவையான NHS, வைட்டமின் B12 குறைபாட்டால் ஏற்படும் இரத்தச்சோகைக்கு ஹைட்ராக்சோகோபாலமின் (Hydroxocobalamin) என்ற மருந்தை ஊசி வடிவில் பயன்படுத்துகிறது. ஆனால் ஏற்கனவே உடலில் B12 அளவு இயல்பாக உள்ளவர்களுக்கு, B12 ஊசிகள் கூடுதல் ஆற்றலை அளிக்கின்றன, உடல் எடையைக் குறைக்கின்றன அல்லது உடல் செயல்திறனை உயர்த்துகின்றன என்பதற்குப் போதுமான அறிவியல் ஆதாரங்கள் இதுவரை இல்லை. எனவே, நீண்டகால சோர்வுக்கான சிறந்த முதல் நடவடிக்கை, B12 ஊசி போட்டுக் கொள்வது அல்ல. அந்தச் சோர்வின் உண்மையான காரணம் என்ன என்பதை முதலில் கண்டறிவதே மிகவும் பயனுள்ள வழியாகும்.
ஒரு நுண்துளி… ஒரு பேராற்றல்
· வைட்டமின் B12-ன் வரலாறு மருத்துவ அறிவியலில் மிகவும் வியப்பூட்டும் ஒன்றாகும்.
· மனித உடலுக்குத் தேவையான அதன் அளவு கற்பனைக்கே எட்டாத அளவுக்கு மிக மிகச் சிறியது.
· ஆனால், அதன் பற்றாக்குறையால் ஏற்படும் விளைவுகள் மனித வாழ்வையே ஆழமாகப் பாதிக்கும் அளவிற்கு பெரிதாக இருக்கக்கூடும்.
· அதன் வேதியியல் அமைப்பை விஞ்ஞானிகள் புரிந்துகொள்வதற்கு வெகுநாட்களுக்கு முன்பே கல்லீரலில் ஏதோ ஒரு மர்மமான உயிர்ச்சக்தி இருப்பதை மருத்துவர்கள் உணர்ந்திருந்தனர்.
· மிகவும் மோசமான நிலையில் இருந்த நோயாளிகளுக்குக் கூட, அது மீண்டும் உடல் வலிமையையும், பசியையும், உயிர்த்துடிப்பையும் அளிக்கக்கூடும் என்பதை அவர்கள் அனுபவத்தின் மூலம் அறிந்திருந்தனர்.
நூறு ஆண்டுகளுக்குப் பிறகும் தொடரும் ஓர் ஆச்சரியம்
ஒரு நூற்றாண்டு கடந்த பின்னரும், கோபால்ட் (Cobalt) என்ற தனிமத்தைக் கொண்ட இந்தச் சிறிய மூலக்கூறு, ரத்தச்சோகையைத் தடுப்பதைவிடப் பல மடங்கு அதிகமான பணிகளைச் செய்கிறது என்பதை ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து கண்டுபிடித்து வருகின்றனர்.
வயது அதிகரிக்கும் காலத்தில், உயிரணுக்கள் தங்களின் ஆற்றலை எவ்வாறு பாதுகாத்துக் கொள்கின்றன? அவற்றின் செயல்திறன் எவ்வாறு நீடிக்கிறது?
இந்தக் கேள்விகளுக்கான விடையிலும், வைட்டமின் B12 ஒரு முக்கியமான பங்கைக் கொண்டிருக்கலாம்.
உடலின் ஆழத்தில், கண்களுக்குப் புலப்படாமல் இயங்கிக் கொண்டிருக்கும் கோடிக்கணக்கான உயிரணுக்களின் அமைதியான இசையில், மிகச் சிறிய இந்த வைட்டமின் ஙி12 ஒரு மறைந்த இசைக்கலைஞனைப் போலத் தனது பணியைச் செய்து கொண்டிருக்கிறது.
அதனால்தான், சில நேரங்களில் வாழ்க்கையின் மிகப் பெரிய வலிமை, கண்களால் காண முடியாத அளவிற்கு மிகச் சிறிய ஒன்றின் உள்ளேயே ஒளிந்து கிடக்கிறது என்பதை வைட்டமின் ஙி12-ன் நூற்றாண்டு காலப் பயணம் என்பது வைட்டமின் ஙி12-ன் நூற்றாண்டு காலப் பயணம் மீண்டும் ஒருமுறை நமக்கு நினைவூட்டுகிறது
சிறிய துளி… பெரிய பொறுப்பு
· வைட்டமின் B12-ன் வரலாறு மருத்துவ அறிவியலில் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது.
· உடலுக்குத் தேவையான அதன் அளவு, கண்களால் காண முடியாத அளவுக்கு மிகச் சிறியது. 2mcg.. அதாவது, 0.0000002 கிராம்தான்.
· அந்தச் சிறிய அளவு குறைந்துவிட்டால், அதன் தாக்கம் மனித வாழ்வின் பல அடுக்குகளிலும் ஆழமாகப் பிரதிபலிக்கக் கூடும்.
· அதன் வேதியியல் இயல்பை விஞ்ஞானிகள் முழுமையாகப் புரிந்து கொள்வதற்கு வெகுகாலம் முன்பே, கல்லீரலில் ஏதோ ஒரு உயிரூட்டும் சக்தி இருப்பதை மருத்துவர்கள் தங்கள் அனுபவத்தின் மூலம் உணர்ந்திருந்தனர்.
· மரணத்தின் விளிம்பில் நின்ற நோயாளிகளுக்குக் கூட, அந்தக் கல்லீரல் உணவு மீண்டும் உடல் வலிமையையும், பசியையும், உயிர்த்துடிப்பையும் அளித்தது.
· அந்தக் காலத்தில் அவர்கள் அதன் பெயரை அறிந்திருக்கவில்லை.
· அதன் மூலக்கூறு அமைப்பும் தெரியவில்லை.
· ஆனால், அது உயிரைக் காக்கும் சக்தி கொண்டது என்பதை மட்டும் அவர்கள் தெளிவாக அறிந்திருந்தனர்.
நூற்றாண்டுக்குப் பிறகும் தொடரும் தேடல்
1. இன்று, அந்த வரலாற்றுச் சம்பவத்திற்கு நூறு ஆண்டுகள் கடந்து விட்டன.
2. ஆயினும், ஆராய்ச்சியாளர்களின் தேடல் முடிவுக்கு வரவில்லை.
3. மாறாக, ஒவ்வொரு புதிய ஆய்வும் வைட்டமின் B12-ன் இன்னொரு மறைந்த முகத்தை உலகிற்கு அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறது.
4. ரத்தச்சோகையைத் தடுப்பது மட்டுமல்ல…
5. உயிரணுக்களின் ஆற்றல் உற்பத்தியைப் பாதுகாப்பதிலும்,
6. வயது அதிகரிக்கும் காலத்தில் அவற்றின் செயல்திறனைத் தக்க வைத்திருப்பதிலும், உடலின் இயற்கையான உயிர்த்துடிப்பை நிலைநிறுத்துவதிலும், இந்தச் சிறிய கோபால்ட் (Cobalt) தனிமத்தைக் கொண்ட மூலக்கூறு முக்கியப் பங்கு வகிக்கக்கூடும் என்று இன்று விஞ்ஞானிகள் கருதத் தொடங்கியுள்ளனர்.
7. இது இன்னும் முழுமையாக நிறைவடைந்த கதை அல்ல.
8. புதிய அத்தியாயங்கள் தொடர்ந்து எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் அறிவியல் பயணமிது.
நிறைவாக
சில நேரங்களில், வாழ்க்கையின் மிகப் பெரிய உண்மைகள், மிகச் சிறியவற்றின் உள்ளேயே மறைந்திருக்கும். அதுபோலவே, மனித உடலுக்குத் தினமும் தேவையானது வெறும் இரண்டு மைக்ரோகிராம் மட்டுமே என்றாலும், அந்தச் சிறிய வைட்டமின் B12, நம் உடலின் எண்ணற்ற உயிரணுக்களில் அமைதியாக இயங்கும் ஆற்றல் விளக்காகத் திகழ்கிறது.
முதுமை என்பது வாழ்க்கையின் இயல்பான பருவம்.
சில நேரங்களில் நாம் “முதுமை” என்று நினைக்கும் சோர்வும், மறதியும், உயிர்த்துடிப்பு குறைவும், உண்மையில் ஓர் அமைதியான வைட்டமின் குறைபாட்டின் மெல்லிய எச்சரிக்கையாக இருக்கலாம். எனவே, காரணமின்றி நீடித்துச் சோர்வாக இருப்பது, கை கால்களில் சில்லிப்பு ஏற்படுவது, நினைவாற்றல் மங்குவது அல்லது சமநிலை பாதிக்கப்படுவது போன்ற அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல், மருத்துவ ஆலோசனையுடன் பரிசோதனை செய்து கொள்வதே புத்திசாலித்தனமான அணுகுமுறையாகும். ஏனெனில் சில சமயங்களில், உடலின் மிகப் பெரிய ஆற்றலையும், உயிரின் நீடித்த ஒளியையும் காக்கும் காவலன், கண்களால் காண முடியாத அளவுக்கு மிகச் சிறிய ஒரு வைட்டமினாகவே இருக்கிறது. சில நேரங்களில், வாழ்க்கையின் மிகப் பெரிய சக்திகள் கண்களுக்குப் புலப்படாத மிகச் சிறிய துகள்களில்தான் மறைந்து கிடக்கின்றன.
Leave a Reply