– சரவணக்குமார் வேல்முருகன்
“பிள்ளைகளா, எல்லோரும் தமிழ் புத்தகத்தை எடுத்துக்கோங்க,” என்று தமிழ் ஆசிரியர் கூறினார்.
வகுப்பு முடியும் நேரத்தில் அவர் மீண்டும் மாணவர்களைப் பார்த்து, “பசங்களா, இன்னும் ரெண்டு நாள்ல விநாயகர் சதுர்த்தி வருது. எல்லாரும் நல்லா சாமிய வேண்டிக்கிட்டு, அடுத்த வாரம் நடக்கப் போற தேர்வுக்கும் நல்லா படிச்சு பாஸ் பண்ணணும். சரியா?” என்று சொல்லிவிட்டு வகுப்பை விட்டு சென்றார்.
அருகில் அமர்ந்திருந்த பிரியாவும் உமாவும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களைப் பற்றி உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
“எங்க தெருவுல பெரிய விநாயகர் சிலை வச்சு பூஜை பண்ணுவாங்க. டான்ஸ் ஆடுவாங்க, பாட்டு போடுவாங்க, பிரசாதமும் தருவாங்க!” என்று அவர்கள் பேசிக் கொண்டிருந்ததை வின்சி ஆர்வமாகக் கேட்டுக் கொண்டிருந்தாள்.
அவளுக்கும் அந்தக் கொண்டாட்டங்களை எல்லாம் பார்க்க வேண்டும் என்ற ஆசை மனதில் பெரிதாக எழுந்தது.
அன்று வீட்டுக்குச் சென்று அப்பாவிடம் அதைப் பற்றி சொன்னபோது, அவர் கண்டிப்புடன், “அதெல்லாம் பார்க்க நீ போகக்கூடாது,” என்று சொல்லிவிட்டார்.
அன்று மாலை, வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த வின்சி, தன் தோழிகள் கையில் களிமண்ணை எடுத்துக்கொண்டு செல்வதைப் பார்த்தாள். “ஏய் உமா, என்னடி மண்ணை எடுத்துட்டுப் போற?” என்று கேட்டாள்.
“விநாயகர் சதுர்த்தி வருதுல்ல? அதனால மண்ணுல விநாயகர் செஞ்சு, ஆத்துல கொண்டு போய் கரைச்சா, நாம வேண்டிக்கிறதெல்லாம் கிடைக்கும்னு எங்க ஆயா சொன்னாங்க,” என்று உமா சொல்லிக்கொண்டே சென்றாள். வின்சி அவள் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
*நாமளும் ஒரு விநாயகரை செஞ்சு வச்சா, நாம வேண்டிக்கிறதும் கிடைக்குமில்லையா?* என்ற எண்ணம் அவள் மனதில் முளைத்தது.
அடுத்த நாள் பள்ளியில், வின்சி பிரியாவிடமும் உமாவிடமும் ஆசையுடன், “நானும் விநாயகர் செய்யுறேன் பா,” என்றாள். “சரி, செய்யு,” என்றாள் பிரியா.
“ஆனா எங்க அப்பா” என்று வின்சி தயக்கத்துடன் இழுத்தாள்.
உமா அவளைப் பார்த்து, “நீங்க வேற சாமிய கும்பிடுறவங்கல்ல? நீ எப்படி விநாயகர் பண்ணுவ?” என்று கேட்டாள். வின்சி தலை குனிந்தாள்.
என்ன செய்வது என்று தெரியாமல், அந்த எண்ணத்தையே மனதில் சுமந்து கொண்டிருந்தாள்.
மதிய வேளையில் பிரியாவிடம் சென்று, “ஏய் ப்ளீஸ் பா எனக்கு விநாயகர் செய்ய கொஞ்சம் மண்ணு மட்டும் கொடுப்பா. நான் விநாயகர் செஞ்சுக்கிறேன்,” என்று கெஞ்சினாள் வின்சி. பிரியாவும் சம்மதித்தாள்.
அவள் மண்ணை எடுத்துக்கொண்டு வந்து வின்சியிடம் கொடுத்தபோது, “விநாயகர் எப்படி செய்யணும்னு தெரியுமா?” என்று கேட்டாள்.
“டிவியில பார்த்திருக்கேன். அதைப் பார்த்தே செஞ்சுக்கிறேன்,” என்றாள் வின்சி.
பள்ளி முடிந்ததும், மண்ணை வீட்டுக்கு எடுத்துச் செல்லாமல், பள்ளி மைதானத்துக்குப் பின்புறம் இருந்த பழைய வகுப்பறைக்குள் இருவரும் சென்றனர்.
பிரியா தன் பையில் வைத்திருந்த காலண்டர் அட்டையில் இருந்த விநாயகர் படத்தைக் காட்டி, “இப்படி செய்யணும்,” என்றாள்.
வின்சியும் அந்தப் படத்தை உற்றுப் பார்த்து, தன்னால் முடிந்த அளவுக்கு ஒரு சிறிய விநாயகரை உருவாக்கினாள்.
அதை வீட்டுக்கு எடுத்துச் செல்லத் துணியாமல், பிரியாவிடம் கொடுத்து, “பத்திரமா வச்சிருடி,” என்று கேட்டுக்கொண்டாள்.
வீட்டிற்கு வர வேண்டிய நேரம் கடந்தும் வின்சி வராததால், அவளைத் தேடிச் செல்லத் தயாரானார் அவளது அப்பா.
அந்த நேரத்தில், முகத்திலும் சட்டையிலும் கைகளிலும் மண் கறைகளுடன் வின்சி வீட்டுக்குள் வந்தாள். “எங்கே போயிருந்த?” என்று பயத்துடன் கேட்டார் அப்பா.
“நானும் பிரியாவும் மண்ணுல விளையாடிட்டு இருந்தோம்,” என்று பயம் கலந்த முகத்துடன் சொன்னாள் வின்சி.
அவளது அப்பா உடனே பிரியாவின் அப்பாவுக்கு தொலைபேசியில் அழைத்து, “உங்க பொண்ணும் என் பொண்ணும் சேர்ந்து விளையாடினாங்களா?” என்று கேட்டார்.
“ஆமா. அப்படித்தான் என் பொண்ணு சொன்னா ஏன்?” என்றார் அவர்.
“இனிமே அப்படி விளையாடக்கூடாதுன்னு கராரா சொல்லி வைங்க. நாங்க வேற,” என்று கூறிவிட்டு தொலைபேசியை வைத்தார் வின்சியின் அப்பா. மறுநாள் விநாயகர் சதுர்த்தி.
வீட்டு ஜன்னல் வழியாக, அனைவரும் விநாயகரை வழிபடச் செல்வதை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள் வின்சி. அருகிலிருந்த கோயிலில் ஒலித்த பக்திப் பாடல்கள் அவள் காதுகளில் விழுந்தன.
“ஜன்னலை மூடு,” என்று அப்பா சொன்னதும், அவள் மனமின்றி ஜன்னலை மூடினாள்.
ஆனால் அவள் மனதில் ஒரே ஆசை-தான் களிமண்ணால் செய்த அந்தச் சிறிய விநாயகரை ஒருமுறையாவது பார்க்க வேண்டும். சிறிது நேரத்தில் வின்சியின் பாட்டி வீட்டிற்கு வந்தார்.
“வாடி, பேத்திய என் வீட்டுக்கு கூட்டிட்டுப் போறேன்,” என்று கூறி வின்சியை அழைத்துச் சென்றார்.
வின்சி மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தாள். ஏனெனில் பாட்டி வீட்டுக்குச் செல்லும் வழியில் பிரியாவின் வீடு இருந்தது. பாட்டியுடன் பேசிக்கொண்டே சென்றவளின் கண்கள் பிரியாவின் வீட்டைத் தேடின. பிரியாவின் வீடு வந்தது.
வீட்டின் வெளியே ஒரு சிறிய பந்தல் போட்டு, பிரியா செய்திருந்த பிள்ளையாரை வைத்து, அதைச் சுற்றி பூக்களை வைத்து பூஜை செய்து கொண்டிருந்தாள்.
ஆனால் வின்சி செய்த விநாயகரை மட்டும் காணவில்லை. சுற்றிலும் தேடிப் பார்த்தாள். வெளியில் நின்றிருந்த பிரியாவிடம் சைகையால், *”என்னோட விநாயகர் எங்கே?”* என்று கேட்டாள்.
பிரியா வீட்டின் பின்புறத்தைச் சுட்டிக்காட்டி, *”அங்கே பத்திரமா வச்சிருக்கேன்,”* என்று சைகையால் சொன்னாள். வின்சியின் முகம் சோகத்தில் மாறியது.
*நானும் என்னுடைய விநாயகருக்கு பூ வைக்கணும்,* என்று நினைத்துக் கொண்டாள்.
மாலை நேரம். பாட்டி வீட்டின் பின்புறம் இருந்த செம்பருத்திப் பூ ஒன்றைப் பறித்து, அதை மடியில் வைத்துக்கொண்டாள். “பாட்டி பாட்டி” என்று அழைத்தாள். “என்னடி?” என்றாள் பாட்டி.
“நான் கடைக்குப் போயிட்டு வரேன்,” என்று சொல்லிவிட்டு வேகமாக ஓடினாள் வின்சி. “பாத்துப் போயிட்டு சீக்கிரம் வாடி. மழை வர மாதிரி இருக்கு,” என்று பாட்டி பின்னால் இருந்து சொன்னாள். வின்சி வேகமாக பிரியாவின் வீட்டை அடைந்தாள்.
“பிரியா… பிரியா…” என்று மனதிற்குள்ளேயே அழைத்துக்கொண்டாள். வாய்விட்டு அழைக்க அவளுக்குப் பயமாக இருந்தது. நேரம் கடந்துகொண்டே இருந்தது. என்ன செய்வது என்று தெரியாமல் நின்றாள்.
பின்னர்,”பின்னாடி இருக்குன்னு சொன்னால்ல போய் பார்த்துடுவோம்,”* என்று நினைத்து வீட்டின் பின்புறம் சென்றாள். ஒரு மூலையில், தான் செய்த அந்தச் சிறிய விநாயகர் இருந்தார்.
அவருக்கு அருகில் ஒரு எலிக்கூண்டு இருந்தது. அதற்குள் ஒரு எலி சிக்கியிருந்தது. அந்த எலி விநாயகரை பார்த்தபடியே அமைதியாக உட்கார்ந்திருந்தது. வின்சி வேகமாக வேலியைத் தாண்டி, விநாயகரின் முன் மண்டியிட்டாள். கொண்டு வந்த செம்பருத்திப் பூவை பக்தியுடன் அவர் முன் வைத்தாள்.
அந்தக் கணத்தில், அவள் திரும்பிச் செல்ல முயன்றபோது, எலிக்கூண்டு கீழே விழுந்தது. எலி வெளியே பாய்ந்தது. வின்சியும் வேகமாக வேலியைத் தாண்டி ஓடினாள். பின்னர் எதுவும் நடக்காதது போல பாட்டி வீட்டிற்குத் திரும்பிச் சென்றாள். சிறிது நேரத்தில் வின்சியின் அப்பா வந்தார்.
“அம்மா, நானும் அவளும் வேலை விஷயமா வெளியூர் போறோம். வின்சியைப் பார்த்துக்கம்மா,” என்றார். சரி,” என்றாள் பாட்டி. மறுநாள் பள்ளியில், பிரியாவிடம் வின்சி மெதுவாக, “நேத்து நான் உங்க வீட்டுக்கு வந்து என்னோட விநாயகருக்கு பூ வச்சிட்டு வந்தேன்,” என்றாள்.
பிரியா அதிர்ச்சியுடன், “அடிப்பாவி! அப்ப எலிக்கூண்டை தட்டி விட்டது நீதானா?” என்று கேட்டாள். “இல்லடி இல்ல. நான் சும்மா பொய் சொன்னேன்,” என்று சமாளித்தாள் வின்சி.
பின்னர் பிரியா, “நாளைக்கு எல்லா விநாயகரையும் எடுத்துக்கிட்டு நம்ம ஊரு ஆத்துல போய் கரைக்கப் போறாங்க,” என்றாள். வின்சியின் மனம் பதறியது. “வேணாம்டி. ஆத்துல விடவேணாம்டி,” என்றாள்.
“இல்லடி. ஆத்துல விட்டாத்தான் நாம நினைச்சது நடக்கும்னு சொன்னாங்க,” என்றாள் பிரியா. வின்சிக்கு அதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
அடுத்த நாள் வகுப்பாசிரியர், “இன்னைக்கு விநாயகர் ஆத்துல கரைக்கிறதுனால, எல்லாருக்கும் அரை நாள் தான் பள்ளிக்கூடம்,” என்று அறிவித்தார். மதியம் பள்ளி முடிந்ததும் வின்சி நேராக வீட்டுக்குச் செல்லவில்லை.
பிரியாவின் வீட்டிற்குச் சென்று, தன்னுடைய சிறிய விநாயகரை வாங்கிக்கொண்டாள். அதை பத்திரமாகத் தன் பையில் வைத்துக்கொண்டு பாட்டி வீட்டிற்குச் சென்றாள். மாலை நான்கு மணி. விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்வதை பாட்டியும் வின்சியும் பார்த்துக் கொண்டிருந்தனர். “சரி, வா. உள்ளே போலாம்,” என்றாள் பாட்டி.
ஆனால் வின்சி தன் பையில் இருந்த விநாயகரை வெளியே எடுத்து, ஒரு துணியில் பத்திரமாகச் சுற்றிக்கொண்டாள். “பாட்டி, நான் ஏஞ்சல் வீட்டுக்குப் போயிட்டு வரேன்,” என்று சொல்லிவிட்டு கிளம்பினாள்.
ஆற்றில் விநாயகரைக் கரைத்துவிட்டு, நனைந்தபடி திரும்பி வரும் மக்களை அவள் பார்த்துக் கொண்டிருந்தாள். மாலை ஐந்து மணி. வின்சி ஆற்றை நோக்கி நடந்தாள். ஆற்றங்கரையை அடைந்தாள். தன் கைகளில் இருந்த விநாயகரைத் தூக்கி ஆற்றில் போட முயன்றாள். ஆனால் அவளால் முடியவில்லை. அவள் அங்கேயே சோகமாக நின்றாள்.
*நான் நினைச்சது நடக்கணும் ஆனா இவரை எப்படி ஆத்துல போடுவேன்?* அவள் மனம் இரண்டாகப் பிளந்தது. இருட்டத் தொடங்கியது.
இறுதியில், விநாயகரை ஆற்றில் போட மனமில்லாமல், ஆற்றங்கரையில் இருந்த ஒரு கல்லின் மீது மெதுவாக வைத்தாள். “கோச்சுக்காதீங்க” என்று மெதுவாகச் சொல்லிவிட்டு திரும்பினாள். சில அடிகள் நடந்தவுடன் மீண்டும் திரும்பிப் பார்த்தாள். மீண்டும் நடந்தாள். மீண்டும் திரும்பிப் பார்த்தாள். அவளது கண்களில் ஏக்கம்.
மனதில் ஒரே எண்ணம்-*விநாயகர் ஆத்துல போய் கரைஞ்சாத்தானே நம்ம வேண்டுதல் நிறைவேறும். அப்போது மெல்ல மழைத்துளிகள் விழத் தொடங்கின. சற்று நேரத்தில் மழை பலமாகப் பெய்ய ஆரம்பித்தது.
வின்சி அருகிலிருந்த அரச மரத்தின் அடியில் இருந்த சிறிய கொட்டகைக்குள் சென்று மழைக்கு ஒதுங்கி நின்றாள். ஆனால் அவளது பார்வை முழுவதும் ஆற்றங்கரையில் தான் இருந்தது.
அவள் விட்டுச் சென்ற அந்தச் சிறிய விநாயகரையே பார்த்துக் கொண்டிருந்தாள். கொட்டகைக்குள் இருந்த விநாயகர் படத்துடன் கூடிய காலண்டரும் அவள் கண்களில் பட்டது. அந்தப் படத்தை நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள். மழை இன்னும் பலமாகப் பெய்தது.
மழைநீர் ஆற்றங்கரையில் இருந்த வின்சி செய்த அந்தச் சிறிய களிமண் விநாயகரை மெதுவாகத் தொட்டது. களிமண் நனைந்தது. மெல்ல மெல்ல அந்த உருவம் கரையத் தொடங்கியது.
வின்சியின் கைகளால் உருவான அந்தச் சிறிய விநாயகர், மழைநீரோடு கலந்து, ஆற்றில் இருந்த மற்ற விநாயகர்களுடன் ஒன்றானார்.
சிறிது நேரத்தில் மழையும் குறையத் தொடங்கியது. வின்சி கொட்டகையை விட்டு வெளியே வந்தாள்.
தான் விநாயகரை வைத்திருந்த இடத்தைப் பார்த்தாள். அவர் அங்கே இல்லை. அவர் கரைந்து போயிருந்தார். அவள் மெதுவாகத்திரும்பி, கொட்டகைக்குள் இருந்த விநாயகர் படத்தைப் பார்த்தாள். பின்னர் கொஞ்சம் வெளியே வந்து வானத்தைப் பார்த்தாள். அரசமரத்தின் ஒரு இலை மெதுவாக வந்து அவளது நெற்றியில் விழுந்தது.
Leave a Reply