தமிழை வளர்க்க மண் வெட்டினேன்

தமிழை வளர்க்க மண் வெட்டினேன்

  • By Magazine
  • |

– தமிழ் செம்மல் முழங்குழி லாசர் – பேட்டி

மண் வெட்டும் வேலை செய்து தமிழ் சங்கத்திற்கு வாடகை கொடுத்தேன் என்கிறார் தமிழ் செம்மல் முழங்குழி.பா. லாசர் அவர்கள்.

ஐம்பத்தி மூன்று ஆண்டுகால மேடைப் பயணம், 3,800 பட்டிமன்றங்கள், தட்டப்பாறை சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் ஆற்றிய  ஆசிரியர் பணி, பதினான்கு நூல்களின் ஆசிரியர் எனத் தாரகையாக மிளிரும் அவரை, ‘புதிய தென்றல்’ இதழுக்காகச் அவரது இல்லத்தில் சந்தித்தபோது  கொண்ட நினைவுகளின் தொகுப்பு இதோ:

 ஐயா, உங்களின் தொடக்கால வாழ்க்கை மற்றும் தமிழ் மீதான ஈடுபாடு எப்படித் தொடங்கியது?

பதில்:

நான் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்தவன். எனது தந்தை பனை ஏறும் கூலி வேலை செய்து எங்களை (எட்டு சகோதர சகோதரிகள்) படிக்க வைத்தார். எனது  தந்தைக்கு தினமும் நாளிதழ் படிக்கும் பழக்கம் இருந்தது. அவர் ஒரு மொழிப்போர் தியாகி. அவர் மொழிப்போரில் ஈடுபட்டதால் கேரள போலீசிடம் இருந்து தடியடி பட்டார். புதுக்கடை துப்பாக்கி சூட்டில் மயிரிழையில் உயிர் தப்பினார். அவர் மார்ஷல் நேசமணி அவர்கள் பரமசீடராக வாழ்வின் இறுதி வரை இருந்தார். அவரைப் பார்த்துதான் எனக்கும் வாசிப்புப் பழக்கம் தொற்றிக்கொண்டது.

 இதனால் நான் 10-ஆம் வகுப்பு படிக்கும்போதே, மதிய உணவுக்காக வீட்டில் தரும் காசுகளை சேமித்து மூன்று ரூபாய் 85 காசுகள் கொடுத்து வாழ்வில் முதன் முதலாக ‘தினத்தந்தி வெள்ளிவிழா மலரை’ வாங்கினேன். அந்தப் புத்தகத்தை என்னிடமிருந்து ஏறத்தாழ 1,000 பேர் வாங்கிப் படித்தனர். இன்றும் அதனை பாதுகாத்து வைத்து இருக்கிறேன். எனது வாழ்வின் முன்னேற்றத்திற்கு நான் தினத்தந்தி படித்தது ஒரு முக்கிய அடிப்படை காரணமாகும் அந்த பத்திரிகை படித்ததால்  தான் TNPSC தேர்வில் தமிழ்நாட்டில் முதலிடம் பெற்று வெற்றி பெற முடிந்தது.

பள்ளிப் படிப்பை முடித்ததும் பெற்றோர் என்னை கல்லூரியில் சேர்க்க விரும்பினர். ஆனால், மொழிப்போர் தியாகி திரு. நேசமணி அவர்களின் சீடரின் மகன் என்ற பெருமிதமும், தமிழ் மீதிருந்த தீராத காதலும் என்னை குழித்துறை அழகப்பா தனித்தமிழ் கல்லூரியை நோக்கி இழுத்தன. அங்கு புலவர் பட்டம் பெற்றேன்.

 ‘முழங்குழி முத்தமிழ் கலை மன்றம்’ தொடங்கி 51 ஆண்டுகள் ஆகின்றன. இதன் பின்னணி மற்றும் சாதனைகள் பற்றிப் பகிருங்கள்?

பதில்:

நான் பிறந்த முழங்குழி கிராமத்தில் அப்போது பேச்சாளர்களோ, எழுத்தாளர்களோ கிடையாது. 1975-இல் இந்த ‘முத்தமிழ் கலை மன்றத்தை’த் தொடங்கினேன். ஆரம்பக் காலத்தில் மன்றத்திற்கான வாடகை கொடுக்கப் பணம் இல்லாததால், அதிகாலை 5 மணி முதல் சாயங்காலம் 5 மணி வரை மண்வெட்டும்   வேலை செய்து வாடகை செலுத்தினேன்.

ஆனால், இன்று 51 ஆண்டுகளாகச் சொந்த இடத்தில், சொந்தக் கட்டிடத்தில் கம்பீரமாக இயங்கி வருகிறது முழங்குழி கலைமன்றம். மேலும் எனது முயற்சியால் எழுபத்தி மூன்று பேச்சாளர்கள், முப்பத்தி ஒன்று எழுத்தாளர்கள், இருபத்தி ஆறு நாடகக் கலைஞர்கள், பதினொன்று கவிஞர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர். குமரி முத்தமிழ் மன்றம் தொல்காப்பியர் கழகம் மூலம் 74 தமிழறிஞர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்துள்ளோம். 38 நூல் வெளியீட்டு விழா நடத்தி உள்ளோம்.

தமிழக அளவில் 17,000 பேர் எழுதிய அரசுத் தேர்வில் முதலிடம் பெற்று, நீங்களாகத் தேர்ந்தெடுத்த ‘தட்டப்பாறை சிறுவர் சீர்திருத்தப் பள்ளி’ அனுபவம் எப்படியிருந்தது?

பதில்:

அது என் வாழ்வின் மிக முக்கியமான காலகட்டம். அங்கு 6 ஆண்டுகள் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினேன். அந்தச் சிறுவர்கள் 20 நிமிடங்களுக்கு மேல் பாடம் கவனிக்க மாட்டார்கள். அதனால், இடைவேளையில் ஒவ்வொருவரையும் அழைத்து அவர்களின் வாழ்க்கை வரலாறு கேட்பேன். அப்படி நான் சேகரித்த 76 உண்மைச் சம்பவங்களின் தொகுப்புதான், என் வாழ்நாளில் பெரும் வரவேற்பைப் பெற்ற “இளம் குற்றவாளிகள் உருவாவது ஏன்?” என்ற நூல் ஆகும்.

இந்த நூலை மையமாக வைத்து 7 நாடகங்கள், 4 குறும்படங்கள் வந்துள்ளன. இப்போது திரைப்படமாகவும் தயாராகி வருகிறது. சீர்திருத்தப்பள்ளி மாணவர்களுக்குப் புத்தகங்களை வாங்கிக் கொடுத்து வாசிப்புப் பழக்கத்தை உருவாக்கினேன். இன்று அவர்களில் பலர் பெரிய தொழிலதிபர்களாக உயர்ந்துள்ளனர். இதை ‘நக்கீரன்’ இதழும் பாராட்டிப் பதிவு செய்துள்ளது.

உங்களின் பட்டிமன்றப் பயணங்கள் மற்றும் மறக்க முடியாத மேடைச் சம்பவங்கள் பற்றிக் கூற முடியுமா?

பதில்:

இதுவரை 53 தலைப்புகளில், 67 நடுவர்களின் கீழ், 3,800 பட்டிமன்றங்களில் பேசியுள்ளேன். ஒரே நாளில் 4 இடங்களில் பேசிய சாதனையும் உண்டு (1995 ஆயுத பூஜை நாள்).  குமரியின் மேற்குப் பகுதியில் பட்டிமன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றியது நான்தான். இதைக் குறிப்பிட்டுப் பேசும்போது, மாபெரும் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் அவர்கள், “கன்னியாகுமரி மாவட்ட பட்டிமன்ற வரலாறு எழுதப்படும் போது முழங்குழி லாசரைத் தவிர்த்துவிட்டு யாராலும் எழுத முடியாது” என்று பாராட்டியது நெகிழ்ச்சியானது.

மறக்க முடியாத சம்பவம்: சேலம் குமாரபாளையம் பி.எட் கல்லூரியில் என்னுடன் 100 பேர் தமிழாசிரியர் பயிற்சி பெற்றனர்.  எந்த நிகழ்ச்சியிலும் வரவேற்புரை சொல்லக் கூட வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆனால், 40 புலவர்கள் பங்கேற்ற பேச்சுப் போட்டியில் நான் முதல் பரிசு பெற்றேன். அது என் வாழ்வின் திருப்புமுனை ஆகும். அந்த பேச்சுப்போட்டியில் என்னுடன் பேசியவர்களில் ஒருவர் பின்னாளில் அமைச்சர் ஆனார்.

சமூக விழிப்புணர்வுப் பேச்சுகளால் உங்களுக்கு ஏதேனும் அச்சுறுத்தல்கள் வந்ததுண்டா?

பதில்:

நிச்சயமாக. நான் சுமார் 507 பட்டிமன்றங்களில் ‘மதுவின் தீமைகள்’ பற்றிப் பேசியுள்ளேன். ஒருமுறை மேக்காமண்டபம் அருகே நடந்த பட்டிமன்றத்தில், நான் நடுவராக செயல்பட்டேன் அப்போது ”குடிப்பவர் குற்றவாளி.  எனவே குடிக்காதீர்கள்” என்று திருக்குறளைச் சான்றாகக் காட்டி தீர்ப்பு கூறினேன். இதனால் ஆத்திரமடைந்த குடிகாரர்கள் கூட்டம் எங்களைத் தாக்க வந்தது. அப்போது பட்டிமன்றத்தை ஏற்பாடு செய்த போதகர் மோசஸ் கேசரி என்பவர் எங்களைப் பின்புற வாசல் வழியாகக் காப்பாற்றி அனுப்பி வைத்தார். அன்றைய பட்டிமன்றத்தில் வழக்காடிய வழக்கறிஞர்தான் இன்றைய திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ராபர்ட் புரூஸ் அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவங்களையும் குடியால் ஏற்படும் தீமைகளையும் மையமாக வைத்து “மேதையையும் பேதையாக்கும் போதை” என்ற நூலை எழுதினேன். இது எனக்கு மிகவும் பிடித்தமான நூல் ஆகும்.  இந்த நூலை படித்து பலர் மதுப்பழக்கத்தை நிறுத்தியதாக தெரிய வருகிறது. இந்நூலை சென்னை மேயராக இருந்த திரு.சைதை    துரைசாமி அவர்கள் படித்து பார்த்து விட்டு பாராட்டி 100 புத்தகங்களை  விலைக்கு வாங்கினார். இது எனக்கு கிடைத்த அங்கீகாரம் ஆகும்.

 உங்களின் எழுத்துலகப் பங்களிப்பு மற்றும் கல்வித்துறைப் பணி பற்றிக் கூறுங்கள்?

பதில்:

நான் நான்கு குறுநாடகங்கள், நான்கு வானொலி நாடகங்கள், 17 மேடை நாடகங்கள் இருபத்தி ஆறு ஓரங்க நாடகங்களை எழுதியுள்ளேன். தட்டப்பாறையில் நான் எழுதிய ‘வேங்கை மார்பன் நாடகம் தஞ்சாவூரில் நடந்த அனைத்து சீர்திருத்தப் பள்ளி நாடக போட்டியில் மாநில அளவில் முதற்பரிசு பெற்றது. அதில் நடித்த சாத்தூர் முருகன் இன்று சினிமா நடிகராகி விட்டார். நான் எழுதிய “யூத இனம் காத்த மகாராணி எஸ்தர் ராணி” என்ற நாடக நூல், நாகர்கோவில் ஹோலி கிராஸ் கல்லூரியின் தமிழ் பி.ஏ. முதலாமாண்டு பாடத்திட்டமாக வைக்கப்பட்டுள்ளது.

மேலும் நான் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பின் IIMT மீடியா கல்லூரி மற்றும் சிக்மா பொறியியல் கல்லூரிகளில் பேராசிரியராகப் பணியாற்றினேன்.

தமிழ் உங்களின் சொந்த வாழ்க்கையில் நிகழ்த்திய அற்புதங்கள் என்ன?

பதில்:

என் தமிழ்ப் புலமையைக் கண்டு வியந்து பலர் தமிழ் படித்துள்ளனர். என் மாணவி அஜிதா, தன் மகனுக்கு ‘வித்தியாரம்பம்’ (படிப்பு தொடங்கும் நிகழ்ச்சி) செய்யும் நிகழ்வை என் கைகளால் நடத்தினார். ரோஸ்மேரி என்ற மாணவியைப் பேச்சாளராக்கினேன். அவரது திருமணத்தை எங்களது முத்தமிழ் மன்றம் முன்னின்று நடத்தியது.

இன்னொரு சுவாரசியமான விஷயம், ஒரு நண்பர் தன் கையில் 400 ரூபாயை வைத்துக்கொண்டு, “என் திருமணம் உன் கையில் தான் இருக்கிறது” என்றார். நண்பர்களிடம் ரூ.5000 வட்டிக்குக் கடன் வாங்கி அவர் திருமணத்தை நடத்தி வைத்தேன். என்னோடு பட்டிமன்றம் பேசும் ஒரு நண்பருக்கு, அவரது தந்தையிடம் வாதிட்டு வீடு கட்டிக் கொடுத்திருக்கிறேன். இதுவரை 19 திருமணங்களை நடத்தி வைத்துள்ளேன்; பிரியும் நிலையிலிருந்த நான்கு தம்பதியரைச் சேர்த்து வைத்துள்ளேன்.

 உங்களுக்குப் பிடித்த ஆளுமை யார்?

பதில்:

எனக்குப் பிடித்த பேச்சாளர் திரு. வைகோ அவர்கள் ஆவார். ஈரோட்டில் அவர் ‘எழுத்து என்னும் கருவறை’ என்ற தலைப்பில், எந்தக் குறிப்பும் இல்லாமல் 253 தமிழறிஞர்களின் பெயர்களைக் குறிப்பிட்டுப் பேசியது என்னை வியக்க வைத்தது. என்னைக் கவர்ந்த இன்னொரு ஆளுமை வலம்புரி ஜாண் ஆவார்.

தாங்கள் என்னென்ன விருதுகளை பெற்றுள்ளீர்கள்

தமிழக அரசின் ‘தமிழ் செம்மல் விருது’,  தந்த தூத்துக்குடி கலை இலக்கிய பெருமன்றம் சார்பில் இளசை அருணா வழங்கிய நாஞ்சில் நாடு வழங்கிய நல்ல தமிழ் பேச்சாளர் விருது, சிங்கம்பட்டி மன்னரின் ‘இலக்கிய மாமணி’ உட்பட 24 விருதுகளைப் பெற்றுள்ளேன்.

தங்களின் சுறுசுறுப்புக்கு காரணம் என்ன

 எனக்கு வயது 75 ஆகிறது. ஆனால் யார் எந்த நேரத்தில், எந்த இடத்திற்கு, எந்தத் தலைப்பில் பேச அழைத்தாலும், உடனடியாக மேடை ஏற நான் இப்போதும் தயாராக இருக்கிறேன்! தமிழ் இருக்கும் வரை எனக்குள் இந்த இளமை இருந்துகொண்டே இருக்கும்.

ஒரு கூலித் தொழிலாளியின் மகனாக, வறுமையிலும் தமிழ் வளர்த்து, வீழ்ந்து கிடந்த பல மனிதர்களின் வாழ்வை உயர்த்திய முழங்குழி லாசர் அவர்களின் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம்.

தமிழுக்கும் சமூகத்திற்கும் அவர் ஆற்றிய தொண்டு காலத்தால் அழியாதது. ‘புதிய தென்றல்’ இதழ் சார்பில் அவருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்து விடைபெற்றோம்.

நீங்களும் பாராட்ட வேண்டுமா : 9443313062

பேட்டி:ஜி.ஜெயகர்ணன்- இணைஆசிரியர்

உதவி : குளச்சல் முகமது சபீர், சமூக சேவகர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *