கைபேசியின் கதறல்

கைபேசியின் கதறல்

  • By Magazine
  • |

இராஜாராம்

அலெக்ஸாண்டர் கிரகாம்பெல் (ஸ்காட்லாந்து) என்பவரால் 1874-ல் தொலைபேசியாக தோன்றினேன். 19.11.1881-ல் சென்னையில்  முதன்முதலில் 17 பேர் வீடுகளில் குடியேறினேன். 1910 வரை அவ்வளவாக எனக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை. பின்பு படிப்படியாக வசதியானவர்கள் வீடுகளில் எல்லாம் எனக்கு இடம் தரத் தொடங்கினார்கள். அப்போது என்னை ஒரு அதிசய பொருளாகவே பார்த்தனர். வெளியூரில் வசிக்கும் உற்றார், உறவினர்களுடனும், நண்பர்களுடனும் அளவோடு பேசித் தகவல்களை பரிமாறிக் கொண்டனர். நான் இல்லாத அண்டை வீட்டாருக்கு அவசரத் தேவைக்கு பேசிட உதவினர்.

எனது பரிணாமம் நின்றதா?  Motorola நிறுவனத்தின் பொறியாளர் மார்டின் கூப்பர் என்பவரால் 1983-ல் கையடக்க கைபேசியாக உருமாற்றம் அடைந்தேன். 12 ஆண்டுகளுக்குப் பின் 1995 ஜீலை 31-ல் இந்தியாவில் கல்கத்தா நகரில் குடியேறி சில ஆண்டுகளிலேயே நாடு முழுவதும் பலர் கைகளில் தவழ ஆரம்பித்தேன். அப்போது என்னை வைத்து நீங்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை எனலாம். படிப்படியாக தேவைக்கு மிகுதியாகவும், தேவையின்றியும் என்னை வைத்துப் பேசி உங்கள் பொன்னான நேரத்தை வீணடிக்க தொடங்கினீர்கள். அதில் எனக்கு சற்று வருத்தம் தான்.

அத்தோடு நின்றதா என் பரிணாமம். IBM  நிறுவனத்தால் 1994-ல் அறிதிறன் பேசியாக (Smart Phone)  மாற்றம் பெற்றேன். 2002-ல் இந்தியாவிற்குள் புகுந்து 2008-ல் பரவலாக என்னை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். எனது பெரியண்ணன் (TV) வசம் முடங்கியிருந்த உங்களில் பலரை வாரிச்சுருட்டி என் வசம் கொண்டு வந்து விட்டேன். இப்போதோ சிறு குழந்தை முதல் தொண்டு கிழம் வரை நான் இன்றி இல்லை என்ற உச்சநிலையை எட்டி விட்டேன். ஆக்கபூர்வமான பணிகளுக்கும், அவசியத்திற்கும் என்னைப் பயன்படுத்துவோர் பலர் இருப்பினும், கேளிக்கை, வீடியோ விளையாட்டு, வதந்திகள், மோசடி (சைபர் குற்றங்கள்) பொய், சூது, பித்தலாட்டம் எனப் பகுத்தறிவுக்கு சற்றும் பொருந்தாத பல நிகழ்வுகளை ஒரு சாரார் என் மூலம் நிகழ்த்தி வருவதைப் பார்த்தால் என் நெஞ்சு குமுறுகிறது.

சிறு குழந்தைகள் வீட்டின் உள்ளும், புறமும் ஓடி, ஓடி விளையாடிய காலம் போய் என்னை வீட்டில் உட்கார்ந்த இடத்திலேயே வைத்து தேவையற்ற நிகழ்ச்சிகளைப் பார்த்து உடலையும், மனதையும் முடமாக்கி கொண்டிருக்கிறார்கள். இதனைப் பெற்றோர்களும் பெரும்பாலும் கண்டு கொள்வதில்லை. இளைஞர்கள் விளையாட்டு, ஓட்டம், குதி ஒட்டம் என இருந்தநிலை மாறி என்னை வைத்து பொழுதை போக்கிடும் நிலையைப் பார்க்கும் போது மிகவும் வருத்தமாகவே உள்ளது.

உங்களின் இயல்பான ஆற்றலையும், செயல்திறனையும், குணங்களையும் முடக்கியது நான்தான் என என்னை நீங்கள் குறை கூற முடியாது. நானோ உங்களில் ஒருவர் கண்டுபிடித்த கள்ளங்கபடமற்ற ஒரு கருவிதான். என்னை எப்படி பயன்படுத்துகிறீர்கள் என்பதை பொறுத்தே உங்கள் வாழ்வு அமைந்திடும். நீங்கள் வாழ்வதும், என் மூலம் நேரத்தை வீணடித்து வீழ்வதும் உங்கள் கைகளில் தான் உள்ளது. தீதும் நன்றும் பிறர்தர வாரா என்ற புறநானூற்று வரிகளை அவ்வப்போது நினைத்துப் பாருங்கள். உங்களை படைத்த இறைவன் ஒவ்வொருவருக்கும் தனித்த இயல்புகளையும், திறன்களையும் தந்து மகிழ்வுடன் இருக்க எண்ணற்ற இயற்கை வளங்களையும், அற்புதக் காட்சிகளையும் தந்துள்ளான். எங்கோ போக வேண்டாம் உங்களின் உயிரும், உடலும், மனமும் அதன் இயக்கமும் உலகில் மிகப் பெரிய விந்தைதானே! அதோடு ஒப்பிட்டால் நான் ஒரு சிறு தூசிக்கு சமம் என்பதை மறந்து விடாதீர்கள்.

அங்கிங்கனாதபடி எங்கும் என்னை வைத்துச் சீராட்டுவது எனக்கே தர்மசங்கடமாக உள்ளது. வாகனம் ஒட்டிச் செல்லும் போது என்னை வைத்து பேசிக்கொண்டே செல்வது, அமைதியாக வழிபாடு செய்துவிட்டு வரவேண்டிய கோவிலுக்குள்ளும் என்னை வைத்துப் பேசி வழிபாடு செய்ய வந்தவர்களை நோகடிப்பது, பேருந்து, இரயில் பயணங்களில் அருகில் உள்ளவர்களைப் பொருட்படுத்தாமல் உரக்கப் பேசி இடையூறு செய்வது என எத்தனையோ அற்பச் செயல்களில் என்னை ஈடுபடுத்துவது மனித மாண்பாகுமா?

உணவு உண்ணும் நேரத்தில் கூட என்னையோ, என் பெரியண்ணாவையோ (TV) பார்த்துக் கொண்டு உண்பது என்பது உணவை அவமதிக்கும் பாவகரமான செயல் மட்டுமல்ல, உடலுக்கும், உள்ளத்திற்கும் கேடு என்பதை உணர்ந்தீர்களா? தலைக்கவசம் இன்றிப் போனால் தனக்கு மட்டும் தான் ஆபத்து எனில், என்னை வைத்துப் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டினால், தனக்கும் சாலையில் செல்லும் மற்றவர்களும் ஆபத்தை விளைவிக்கும் என்பதை ஏன் உங்கள் பகுத்தறிவு உணர்த்தவில்லை. இதனைக் கடுமையான தண்டனைகள் வழங்கித்தான் தடுக்க வேண்டும் என்ற நிலையை உண்டாக்கி விட்டீர்கள்.

இது போதாதென்று ஆபத்தான இடங்களில் செல்பி எடுத்து சாகசம் என பதிவிடுவது, ஆபாசக் காட்சிகளை எடுத்து பதிவிடுவது, பொய்யான காட்சிகளை உண்மை போல சித்தரித்து போடுவது என எத்தனையோ கேடுகளை என் மூலம் பரப்பும் நீங்கள் பாவிகளா? நான் பாவியா? சற்றே சிந்தியுங்கள். என்னை எதற்கு, எப்படி, எப்போது, எவ்வளவு நேரம் பயன்படுத்துவது என்பதை பகுத்தறிந்து பயன்படுத்துங்கள். உங்களின் பொன்னான நேரத்தை உங்கள் உடல்நலனையும், மனநலனையும், செய்யும் தொழிலையும் மேம்படுத்த வழிபாருங்கள். அணுவை ஆக்க சக்திக்கு பயன்படுத்தலாம். அழிவு சக்திக்கும் பயன்படுத்தலாம் என்ற நிலையில் அதனை ஆக்கச்சக்திக்கே பயன்படுத்தி பயனுறுவது போல, என்னையும் ஆக்கசக்திக்கே பயன்படுத்தி பயன்கள் பல பெற்றிடுங்கள்.

நிறைவாக நோபல் பரிசுபெற்ற இயற்பியல் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் 1950-ல் தடம் மாறிய மனிதன் என்ற தலைப்பில் தந்த சிறு குறிப்பினை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். அன்பு செலுத்துவதற்காகவே மனிதன் உருவாக்கப்பட்டான். பயன்படுத்த மட்டுமே பொருட்கள் படைக்கப்பட்டன. இந்த உலகம் உருப்படாமல் போனதற்கு காரணம் மனிதன் பயன்படுத்தப்படுகிறான். பொருட்கள் நேசிக்கப்படுகின்றன. மாண்புமிகு மனித சமுதாயமே எனது அடுத்த பரிணாமம் செயற்கை நுண்ணறிவுடன் கூடியதாக இருந்திடும். அதனை வைத்து நீங்கள் என்னை எப்படி பயன்படுத்தப் போகிறீர்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மொத்தத்தில் வருங்காலம் நான் மட்டுமே உங்களுக்கு உறவு, என்மூலம் மட்டுமே பேச்சும், காட்சியும் நானேதான் உலகம் என்ற நிலைக்கு போய்விடுமோ என்று அஞ்சுகிறேன். இறையருள்தான் உங்களை காக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *