சட்டத்தை தெரிந்து கொள்ளுங்கள்

சட்டத்தை தெரிந்து கொள்ளுங்கள்

  • By Magazine
  • |

வழக்கறிஞர்  பி. விஜயகுமார்

மரண தண்டனையை செயல்படுத்துவதில் மாற்றம் தேவையா?

நமது நாட்டில் மரண தண்டனையை செயல்படுத்துவது தூக்குக் கயிறு மூலம் நடக்கிறது. இது வெள்ளைக்காரன் முறை. இந்த முறையை மாற்ற வேண்டுமென்று உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு பலரால் 1982 முதல் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. உச்சநீதிமன்றமே இந்த முறையை மாற்றம் செய்யும் அதிகாரம் எங்களிடமில்லை, மத்திய அரசிடம் மட்டுமே உள்ளது என அனைத்து மனுக்களையும் நிராகரித்த வண்ணமும் உள்ளது. ஏனென்றால் பழைய புதிய என இரு குற்றவியல் நடைமுறைச் சட்டத்திலும் முறையே பிரிவுகள் 354(5), 393 (5) படி மரண தண்டனை குற்றவாளிகள் தூக்கிலிட்டுத் தான் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டுமென்று உள்ளது என்பதை உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

தற்போதும் கூட இப்படியொரு பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் தூக்கு மூலம் தண்டனை நிறைவேற்றுவது கொடூரமான செயல் என்றும் குற்றவாளி சித்திரவதைப் படுத்தி கொல்லப்படுகிறார், நிமிடம் நிமிடமாக சாகிறார். சுமார் அரைமணி நேரம் அளவுக்கு சித்திரவதை செய்யப்பட்டு குற்றவாளி சாகடிக்கப்படுகிறார் என்ற வாதம் வைக்கப்பட்டுள்ளது. இது நமது அரசியல் சாசனம் பிரிவு 21-க்கு எதிரானது என்ற வாதம் வைக்கப்பட்டுள்ளது. ஆதலால் இதற்கு மாற்றுவழி கண்டுபிடிக்க வேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளது.

மேலும் ஐரோப்பிய நாடுகளில், குறிப்பாக அமெரிக்காவில் மரண தண்டனை குற்றவாளிகளை விஷ ஊசி மூலம் கொல்லப்படுகிறது என்ற வாதம் வைக்கப்பட்டுள்ளது. இதில் இறப்பவர் எந்த ஒரு சிரமுமின்றி எளிதாக ஒரு நிமிடத்தில் இறந்து விடுவார். இன்னும் சில நாடுகளில் விஷ வாயு மூலமும் துப்பாக்கிச்சூடு மூலமும் இத்தண்டனை நிறைவேற்றப்படுகிறது. இம்முறைகளையே நம் நாட்டிலும் கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளது. மேலும் நமது ராணுவச்சட்டத்தில் மரண தண்டனையை துப்பாக்கி சூடு மூலம் செயல்படுத்தலாம் என்று குறிப்பிட்டுள்ள விபரத்தையும் உச்ச நீதிமன்றத்துக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. தூக்குக்கயிறு முறை மனித உரிமைக்கு எதிரானது என்றும் வாதிடப்பட்டது. ஆனால் திரும்பவும் உச்சநீதிமன்றம் இந்த மாற்றத்தை கொண்டுவரும் அதிகாரம் எங்களிடத்தில் இல்லையென்றும், ஆனால் இது குறித்து மத்திய அரசுக்கு பரிந்துரைக்கிறோம் என்று கூறி இம்மனுவை நிலுவையில் வைத்துள்ளது. இம்மாற்றம் குறித்து நமது பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் தனித்தீர்மானங்கள் கொண்டு வந்து புதிய முறைக்கு சட்டத்திருத்தம் கொண்டுவர முடியும். ஆனால் இது குறித்து நமது பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் இதுவரை விவாதித்தாகத் தெரியவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *