– அருள்மொழிவர்மன்
வீடு பூராவும் சொந்தக்காரங்க கூட்டமாக இருக்கு. அம்மாவை நடுக்கூடத்தில் படுக்க வச்சிருக்காங்க. ஒரு பாட்டி வந்து என்னைக் கட்டிப்பிடிச்சு அழுதாங்க. “பாவி கண்நிறைஞ்ச புருசன், சொத்து பத்து ஆசைக்கு மவன், ஆஸ்திக்கு மவன்னு ஒரு குறையில்லாம இருந்தியே யார் கண்ணு பட்டுதோ தெரியலையே” அண்ணன் என் கையை பிடிச்சுட்டு பேசாம உட்கார்ந்திருக்கான். அப்பா வாயில் துண்டை வச்சிட்டு அழுகிறார். செல்வி அத்தை தான் எல்லா காரியத்தையும் பொறுப்பாக பாத்துக்கறா. அத்தை எங்க அண்ணி திடீர்னு போகலியே கேன்சர் தான். எவ்வளவோ வைத்தியம் பாத்தாச்சு. முத்திப்போச்சுன்னு சொல்லிட்டாங்க. நாங்க கொடுத்து வச்சது அவ்வளவுதான்னு விவரம் சொல்லுதா. பதினைஞ்சு வயது பையன், பத்து வயசு மகள் எங்க பொறுப்பும்…
சரி ஆக வேண்டியதை பார்ப்போம். மாமா குரல் கொடுக்க பத்து நாளாவே படுக்கையில் தான் இருந்தா. நேத்து என்னையும் அண்ணனையும் கை சாடை காட்டி கூப்பிட்டா. அப்பாவும் செல்வி அத்தையும் ஓடி வந்தாங்க. அம்மா என் கையை புடிச்சா. கண்ணீரா கொட்டுது. செல்வி அத்தை குமார் அண்ணன் கையில் பாலை கொடுத்து அம்மா வாயில் விடச் சொன்னாங்க. பால் வழியுது. அப்படியே மூடின கண்ணு அப்புறம் திறக்கவேயில்லை. அம்மா சாமிகிட்ட போயிட்டாங்களாம்.
எல்லாரும் அழுதாங்க. எனக்கு அழுகையே வரவில்லை. அம்மா முகத்தில் சிரிப்பு மாறவேயில்லை. இப்பகூட எந்திரிச்சு என்னை அணைச்சுக்குவான்னு தோணுது. அம்மாவை தூக்கிட்டு போயாச்சு. தங்கம் தங்கம்னு என்னை கட்டிப்பிடிச்சிட்டு செல்வி அத்தை அழுது.சரி தங்கம் சாப்பிட வா. செல்வி அத்தை தட்டில் எல்லாத்தையும் எடுத்து வச்சா. எனக்கு சாப்பிட பிடிக்கவில்ல. ஏங்கி ஏங்கி அழ ஆரம்பிச்சிட்டேன். எல்லாரும் என்னைய சுத்தி நின்னாங்க. அழுகையை நிறுத்தவே முடியல.
ஒருநாள் எல்லாரும் கூடி கூடி பேசுறாங்க. குமார் மாடிக்கு போ. செல்வி அத்தை அண்ணனை அனுப்பி விட்டாள். நான் கட்டிலுக்கு அடியில் போய் படுத்து விட்டேன். யாரும் என்னைக் கவனிக்கவே இல்லை. செல்வி அத்தை ரகு அண்ணா போனவங்க போயிட்டாங்க. இனி நடக்க வேண்டியதை பார்க்கணும். என்ன சொல்றே? அப்படின்னா நா என்ன செய்வேன். என் தங்கம் எங்களை இப்படி அனாதையா தவிக்க விட்டுகிட்டு போயிட்டாளே என்று சொல்லி அப்பா அழுகிறார். செல்வி அத்தை கொஞ்ச நேரம் அப்பாவை அழவிட்டாள். ரகு அண்ணா இரண்டு பிள்ளைகளை எப்படி வளர்ப்பே? உனக்கு அப்படி ஒண்ணும் வயசாயி போயிடல. இன்னொரு கல்யாணம் பண்ணிக்கோ. மாயவரம் காமாட்சி அத்தை வீட்டில் ஒரு பெண் இருக்கா அதை கேட்கலாம்.
அவளுக்கு வயசு இருக்குமே… ஒரு பெரியம்மா சொல்கிறாள். அதெல்லாம் சரியா வரும். நான் சொன்னா கேப்பாங்க. குடும்பத்துக்கு ஏத்தவ… செல்வி அத்தை சத்தமாக சொல்கிறாள். கொஞ்சநேரம் யாருமே பேசவே இல்ல. அப்படியே நான் தூங்கிட்டேன். காலையில் எந்திரிச்சு பாத்தா கட்டிலில் கிடக்கேன். அம்மா நினைப்பு வந்திடுச்சு. கண்ணை திறக்க மனசில்லை. செல்வி அத்தை சத்தம் தான் பெரிசா கேக்குது. அப்பாவுக்கு ஒரே தங்கச்சி செல்வி அத்தை தான். அப்புறம் இரண்டு பெரியப்பா… ஒரு சித்தப்பா. இந்த செல்வி அத்தை பத்து நாளைக்கு ஒரு தடவை எங்க வீட்டுக்கு வருவா. எங்க அம்மாவை ரொம்ப அதிகாரம் பண்ணுவா. அண்ணி உங்க தீபாவளி புடவை ரொம்ப நல்லாயிருக்கே.. நான் எடுத்துக்கிறேன் அப்படிம்பா. அம்மா சிரிப்பு மாறாமல் கொடுத்திடுவா. குமார் அண்ணனுக்கு இந்த செல்வி அத்தையை கொஞ்சம் கூட பிடிக்காது. ஊர் உலகத்தில் இல்லாத தங்கச்சி அப்பாவுக்கு. குமார் பெரியவங்களை அப்படியெல்லாம் சொல்லக்கூடாது என்று அம்மா அவனை அடக்கி வைப்பாங்க.
செல்வி அத்தை என்ன கேட்டாலும் அப்பா வாங்கி கொடுப்பார். அவ பேச்சுக்கு மறுவார்த்தை பேச மாட்டார். அத்தை குத்தலும் கேலியுமாக தான் பேசுவாங்க. மாமா சத்தமா பேசி நாங்க கேட்டதே இல்லை. எங்க மேலே எல்லாம் ரொம்ப பாசமாக இருப்பார். ஊருக்கு வரும் போது எனக்கும் அண்ணனுக்கும் மறக்காம டிரஸ் வாங்கிட்டு வருவார். நிறைய சென்ட் போடுவார். செல்வி அத்தை என்னை மடியில் உட்கார வச்சு தலையை தடவினாள். தங்கம் உனக்கு புது சித்தி வரபோறா. புது சித்தியை உனக்கு பிடிக்கும் தானே? அப்படின்னா புது சித்தியா? ஆமாம் தங்கம் உங்களையெல்லாம் பாக்க ஆள் வேண்டாமா? அப்பாவுக்கு சாப்பாடு வைக்கணும். மாடு கண்ணு பாக்கணும். வீட்டுக்கு பொறுப்பாக ஒரு பொம்பளை வேணும் இல்லா. செல்வி அத்தை முகத்தை உத்து பாத்தேன். அப்படியே என்னை கட்டிபிடிச்சு ஒரு மூச்சு அழுதா.
அப்புறம் குமாரை கூப்பிட்டாள். குமார் உங்களுக்கு புது சித்தி வரபோறா தெரியுமா? உடனே குமார் அண்ணன் அவளை முறைத்தான். என்னடா சொல்லு பேசாமல் போய்விட்டான். அப்பா அறைக்குள் இருந்து வெளியே வந்தார். ரகு அண்ணா அவனைப்பத்தி கவலைப்படாதே. எல்லாம் சரி பண்ணிடலாம். ரெண்டும்கெட்ட வயது சிரிக்கிறா. எங்க அம்மாவுக்கு அடிக்கடி உடம்பு சரியில்லாமல் போகும். உங்க அம்மாவுவக்கு வருசம் பூரா உடம்பு இப்படித்தான் அதுவும் என்னைக் கண்டா கட்டிலை விட்டு எந்திரிக்கவே முடியாது அப்படின்னு அத்தை சிடுசிடுப்பா. அம்மா அதுக்கும் பதில் சொல்ல மாட்டாங்க. அம்மா என்ன நினைக்கிறான்னு எனக்கு புரியாது. அவளைப் பாக்கவே பாவமா இருக்கும். எங்க வீட்டில் எப்பவும் வேலை இருந்துகிட்டே இருக்கும்.
தங்கம் நாளைக்கு புது சித்தியை பாக்க போறோம். உன்னையும் அண்ணனையும் பாக்கணும்னு அவளும் ஆசைப்படறாளாம். சரி அப்பா வருவாரா அத்தை? வருவார்.. பெரியம்மா, பெரியப்பா, சித்தி, சித்தப்பா, மாமா பாட்டின்னு நிறைய பேர் போனோம். அப்பா செல்வி அத்தை வந்தாங்க. அங்கேயும் ரொம்ப கூட்டமாகத்தான் இருந்துச்சு. புது சித்தி என்னை கூப்பிட்டு மடியில் உட்கார வச்சாங்க. இவங்க ரொம்ப ஒல்லிக்குச்சியா இருக்காங்க. கருப்பு, பல் உசரமாக இருக்கு. யாரையும் தப்பா பேசக்கூடாதுன்னு அம்மா சொல்லியிருக்காங்க. சாமி மன்னிச்சுக்க. பல் ரொம்ப வெள்ளை… சிரிச்சா நல்லா இருக்கு. பாப்பா என்ன படிக்கிற? என்னை உங்க வீட்டுக்கு அழைச்சிட்டு போறியா தங்கம்? ம் வாங்க சித்தின்னு சொல்லும்மா என்று செல்வி அத்தை சொல்லவும் எல்லாரும் சிரிச்சாங்க.
நான் அப்பாவை பாக்கிறேன். சிரிச்சிக்கிட்டு இருக்கார். அவர் சிரிப்பு எனக்கு பிடிக்கலை. அண்ணன் முகத்தில சிரிப்பே இல்லை. உம்முன்னு இருக்கான். கல்யாணம் முடிஞ்சுது. புது சித்தி வீட்டுக்கு வந்தாச்சு. செல்வி அத்தைக்கும் புது சித்திக்கும் சரியா வரல. செல்வி அத்தை என்னை தனியா கூப்பிட்டா பானு தங்கம் நீ என்னோட வந்துடும்மா. நானும் மாமாவும் உன்னை நல்லா பாத்துக்கிடுவோம். நீ அங்கேயே படி கான்வென்ட்டில் உன்னை சேர்த்து விடுகிறேன். ம் அண்ணன் வருவானா? அவன் இங்கேயே கிடக்கட்டும். நீ மட்டும் வா… அப்பா அந்த நேரம் வந்துவிட்டார். பானு செல்வி அத்தை வீட்டுக்கு போய் நல்லா படிம்மா அப்படின்னார். ரெண்டு பேரும் முதலிலேயே பேசி முடிவு பண்ணின மாதிரி இருக்கு. நான் வெளியே ஓடி வந்துட்டேன்.
மாமரத்தடியிலே அண்ணன் உட்கார்ந்திருந்தான். போய் இந்த விசயத்தை சொன்னேன். அப்படியே என்னை அணைச்சுட்டு அழுதான். குமார் அண்ணா நான் என்ன செய்யட்டும்? அம்மா இருந்தா நல்லா இருக்கும் தானே? எனக்கும் அழுகை வந்துடுச்சு. அழாதே பாப்பா செல்வி அத்தை வீட்டுக்கு போ. அவங்க உன்னை நல்லா பாத்துக்குவாங்க. அப்போ நீ வரமாட்டியா? அப்பாவை பாக்கணுமே இங்கே இருக்கேன். உனக்கு செல்வி அத்தையை பிடிக்காதுதானே? குமார் அண்ணன் பேசாமல் இருந்தான். அப்போ நான் போகட்டுமா? நீ போ பானும்மா. சமத்தா இரு புதுசித்தி அப்பாவிடம் பானு இங்க இருக்கட்டுமே என்கிறாள். செல்வி அத்தை உன்னிடம் யாரும் கேக்கலியே? என்று கடுகடுத்தாள். நான் உங்களிடம் சொல்லவில்லையே என்று புதுசித்தியும் பதில் சொன்னாள்.
செல்வி அத்தை வீட்டுக்கு வந்தாச்சு. அம்மா இருக்கும் போது லீவுக்கு வந்திருக்கேன். இப்ப ஒரேயடியா வந்துட்டேன். செல்வி அத்தை நல்லவதான். இருந்தாலும் சிலசமயம் வெடுக்குன்னு ஏதாச்சும் சொல்லிடுவா. வீட்டுக்குள் காலடி எடுத்து வச்சவுடனே நான் பாத்து கொண்டு வந்தேன். ரெண்டாம் தரமா வந்தவளுக்கு வாயை பாருங்க என்று மாமாவிடம் குறை சொன்னாள். சரி விடு. இப்ப எல்லாம் நாம் ரொம்ப பேசாம இருக்கிறதுதான் நல்லது. நம்ம மரியாதையை நாம தான் காப்பாத்திக்கணும். எனக்கு குழந்தை குட்டி இல்லாம போச்சே. பானுவை என் தலையில் கட்டியாச்சு. ஏய் பச்சைபுள்ளை முன்னால என்ன பேசறதுன்னு தெரியாதா? வாயை மூடு மாமா கத்தவும் செல்வி அத்தை போய்விட்டாள். இவ கூட எப்படி இருக்க போறேனோ?
என்னை பெரிய பள்ளிக்கூடத்தில் சேர்த்துட்டாங்க. மாலதி மிஸ் அப்படிங்கிறவங்கதான் எனக்கு கிளாஸ் மிஸ். மடிப்பு மடிப்பா அழகா சேலை கட்டியிருக்காங்க. சின்னதா கண்ணாடி போட்டிருக்காங்க. முகம் பூரா பருவா இருக்கு. அம்மா பரு வந்தா கிள்ள கூடாதுன்னு சொல்லி இருக்காங்க. அப்படியே பரவுமாம். இவங்க அம்மா சொல்லி தரல போல, முதல்நாளே என்கிட்ட நல்லா பேசினாங்க. எல்லாரும் இங்கிலீஸ்லதான் பேசணுமாம். நீ பயப்படாதே பானு. நான் எல்லாம் சொல்லித்தரேன். மாமாவும் நானும் சாப்பிட உட்கார்ந்தோம். தங்கம் வேர்கடலை சட்னி வச்சிருக்கேன். சாப்பிடு இவங்கய்யாவுக்கு இன்னும் பணம் அனுப்ப மனசு வரல. பாருங்க மக இங்க இருக்கிறது மறந்துடுச்சு போலிருக்கு என்று செல்வி அத்தை கோபமாக சொல்றா. நான் கையை உதறிட்டு எந்திரிச்சிட்டேன். மாமா எட்டி எங்கையை புடிச்சார். ம் மகாராணிக்கு றோசம் வந்திடுச்சு. போகட்டும் விடுங்க…
அன்னைக்கு பட்டினியா ஸ்கூலுக்கு போனேன். மாலதி மிஸ் என்னை உத்து பாத்தாங்க. தனியா கூப்பிட்டு விசாரிச்சாங்க. தாங்க முடியாம கதறிட்டேன். என்னை அணைச்சுக்கிட்டாங்க. வற்புறுத்தி சாதத்தை ஊட்டி விட்டாங்க. எல்லாக்கதையும் சொல்லிட்டேன். சாயங்காலம் செல்வி அத்தை வந்து விட்டாள். என்னை கட்டியணைச்சு முத்தம் கொடுத்தா. என்தங்கம் சாப்பிடாம வந்துடுச்சே. நானும் காலையில இருந்தே சாப்பிடல. அத்தை தெரியாம சொல்லிட்டேன். எங்க அண்ணனை நான் சொல்ல கூடாதாக்கும்? எனக்கு பதில் சொல்ல தெரியவில்லை. ராத்திரி படுக்கப்போகும் போது செல்வி அத்தை போன் கொடுங்க அப்பாகிட்ட பேசணும் அப்படின்னேன். காலையில் நான் சொன்னதை உங்கப்பாவிடம் சொல்லணும். அதானே? சொல்லிக்கோ. எனக்கென்ன பயம்? அத்தை அப்பாவிடம் பேசணும்னு ஆசையாயிருக்கு. பிளீஸ் போனை கையில் கொடுத்து விட்டு வேகமாய் போய்விட்டாள்.
அண்ணன் தான் போனை எடுத்தான். பாப்பா நல்லாயிருக்கியாம்மா? சாப்பிட்டியா தங்கம்? அதுக்கு மேல அவனுக்கு பேச முடியல. அழுகை வந்திருக்கும்னு நினைக்கிறேன். புது சித்தி பேசுனா பானும்மா எப்படி இருக்கே? ஊருக்கு எப்ப வருவே? லீவு விட்டபிறகு வரேன் சித்தி. அப்பாவை பேச சொல்லுங்க. என்னங்க பானும்மா பேசுறா.
பானுதங்கம் நல்லாருக்கியா அத்தையும் மாமாவும் நல்லாயிருக்காங்களா? அப்பா குரலை கேட்டதும் எனக்கு அழுகை வந்திடுச்சு. சரி தங்கம் அழாதே. என் கண்ணமாவுக்கு என்னடா வேணும்? அப்பாவும் பேச முடியாமல் திணறினார். நான் என்னன்னு சொல்லுவேன்? அம்மா மடியில் படுக்கணும் போல இருக்கு. நான் லேசா சிணுங்கினாலே அவ மடியில் போட்டு தட்டிக் கொடுப்பா. கதையெல்லாம் சொல்லுவா.
அத்தை வேமாக வந்து போனை பிடுங்கினா. பேசுனது போதும் என்ன சிணுங்கல்? செல்லம் கொடுத்து கெடுத்து வச்சிருக்கா உங்க அம்மா… உடனே அப்பாவுக்கு போன் போட்டா. குரலை மாத்தினா. ரகு அண்ணா எப்படியிருக்கா? பானு நல்லா இருக்கா. நல்லா படிக்கிறா. அங்கே இருந்தா கான்வெண்டில் படிக்க முடியுமா? இந்த குமார் பையன் கூட இங்க வந்து படிக்கலாம். முச்சு வாங்கினாள். நான் அறைக்கு வந்துட்டேன். மறுநாள் அப்பாவிடம் இருந்து பணம் வந்து விட்டது. அத்தை எனக்கு ரொம்ப உபசாரம் பண்ணினா… எதுவும் புரியல. மாமா எதிலும் தலையிடறதேயில்லை.
மூணாவது மனுசன் மாதிரி இந்த அண்ணன் பணம் அனுப்பறதை பாருங்களேன். அத்தை அலுத்துக் கொண்டாள். மாலதி மிஸ் தினமும் என்னிடம் பேசுவாங்க. எதைப்பத்தியும் கவலைப்பட கூடாது பானு. நீ நல்லா படிக்கணும். பெத்தவளை முழுங்கியாச்சு. இன்னும் என்னவெல்லாம் பண்ண காத்திருக்கோ? படிக்கறதை பாரேன். திடீர் திடீர் என்று அத்தை முனகுவாள். நல்லாபடி தங்கம். காப்பி கொண்டு வரவா. சில சமயம் இது அத்தை தானா என்று சந்தேகம் வந்துவிடும். நாளைக்கு அப்பா, புதுசித்தி, குமார் அண்ணன் எல்லாரும் வாராங்க. இப்ப இங்க என்ன வேலை? மகளை கடிச்சா முழுங்கப்போறோம்? எல்லாம் அந்த புதுக்குரங்கு பண்ற வேலை? செல்வி நீதானே குழந்தையை தூக்கிட்டு வந்தே? அவங்க குழந்தையை அவங்க பார்க்க வாரங்க. இதில் உனக்கு என்ன பிரச்சனை? மாமா கண்டிச்சார்.
புதுசித்தி என்னை அணைச்சுகிட்டா. தங்கம் நல்லா படிக்கிறியா? கிளாஸில் நீதான் பர்ஸ்ட் ரேங்காம். ஆமா சித்தி… அண்ணன் நல்லா வளர்ந்துட்டான். பாசமா என் கையை பிடிச்சிக்கிட்டான் அதிலே எல்லாம் இருந்துச்சு. அப்பா ரொம்ப நேரமா என்னை உத்து பாத்துட்டே இருந்தார். செல்வி நம்ம பானுவை பாத்தா அவ அம்மா சாடை தெரியுது பாரேன் என்று சொன்னார் அத்தை முகத்தை சுளித்தபடி நகர்ந்து விட்டாள். ஆமா அத்தான். இவ பேச்சும் சிரிப்பும் அப்படியே அவ அம்மாதான் என்று மாமா சிரித்தப்படி சொன்னார். அப்பாவுக்கு முன்தலையில் வழுக்கை தெரியுது. அப்பா உனக்கு வழுக்கை தெரியுது நான் சொன்னதும் புது சித்தி வேகமாக வந்து வழுக்கை இல்ல தங்கம். முடி காத்தில பறக்குது அதான். அப்பா சந்தோசமாக சிரிச்சார். எனக்கு ஒருமாதிரி ஆயிடுச்சு.
சித்தி அப்பாவைத்தான் நல்லா கவனிக்கிறாங்க. அப்பாவும் பொன்னி பொன்னி என்று சொல்லிக்கிட்டே இருக்கார். அம்மா மேலே உயிரா இருந்த அப்பா எப்படி மாறிட்டார்? எனக்கு ரொம்ப வருத்தமாக இருக்கு. ஊருக்கு கிளம்பும் போதும் அப்பா முகத்தில் வருத்தம் இல்லை. சித்தி தான் பானு ஊருக்கு வாயேன் என்றார். அண்ணன் வழக்கம் போல் என் கையை பிடித்து அழுத்தியபடியே பேசாமல் இருந்தான். வேகமாய் வெளியே போய்விட்டான். நான் அழத்தொடங்கவும் செல்வி அத்தை என்னை அணைத்துக் கொண்டாள். உங்க அப்பாவுக்கு புது சித்தியை ரொம்ப பிடிச்சி போலிருக்கு. இனி அவதான் உலகம். உனக்கு நான் இருக்கேண்டா தங்கம் என்று கூறவும் எனக்கு கண்ணீர் முட்டியது.
மறுநாள் பெத்தவர் தலைமுழுகியாச்சு. எல்லாம் நம் தலையில் விழுந்தாச்சு. எனக்கு கேட்கிற மாதிரி முனகினாள். எப்பவும் அவளை கண்டிக்கிற மாமா இப்போ பேசாமல் இருந்தார். அதுக்கப்புறம் செல்வி அத்தை ரொம்ப மாறிட்டா. வேண்டாத வேலை… எனக்கு இதெல்லாம் வேணுமா? கடவுளே அப்படிம்பா… தண்டசோறு, தலையெழுத்து… நானும் பொறுத்து பொறுத்து பார்த்தேன். முடியவே இல்லை. எங்க மாலதி மிஸ்ஸிடம் சொல்லி அப்பாவுக்கு போன் பண்ணிட்டேன். அப்பா செல்வி அப்படியெல்லாம் சொல்ல மாட்டாளே. அலட்சியமா பதில் சொன்னார். மாலதி மிஸ் எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுங்களேன். உங்க வீட்டுக்கு நான் வரேன். ஏதாவது ஒரு வேலை கொடுங்க. அங்கேயே தங்கிக்கிறேன். மாலதி மிஸ் கலங்கினாங்க. அப்படியெல்லாம் சொல்லகூடாதும்மா… தைரியமாக இரு. எல்லாம் சரியாயிடும். அப்படின்னாங்க. ஒருநாள் அத்தை இல்லாத சமயம் மாமா என்னை கூப்பிட்டார். பானும்மா நீ உங்க வீட்டுக்கு போறதுதான் நல்லது. இவளிடம் கிடந்து கஷ்டப்பட வேண்டாமே. மறுவாரம் மாரடைப்பு வந்து இறந்து போனார். அப்பா, புதுசித்தி சொந்தக்காரங்க எல்லாரும் வந்தாச்சு. தரித்திரம் பிடிச்சதுகள் மாமனாரை தூக்கி விட்டாச்சு. இன்னும் என்னவெல்லாம் நடக்க போகுதோ? செல்வி அத்தை கதறினாள். எல்லா காரியமும் முடிஞ்சுது… சொந்தக்காரங்களெல்லாம் கிளம்பிட்டாங்க. அப்பா என்னை கூப்பிடவே இல்லை. நான் ஏக்கமாய் நிக்கிறேன். தெருமுனை வரை போன குமார் அண்ணன் ஓட்டமாய் ஓடி வந்து கையை பிடித்தான். பானு தங்கம் கிளம்பு போவோம். அத்தனை பேரும் பேச்சு வராமல் நிக்கிறாங்க.
Leave a Reply