– கு.காமராஜ்
“இந்தப் புதிய வீட்டு சமையலறையில் பழைய காலத்து அம்மியும் குழவியும் எதுக்கு?”
அமுதனின் புதுமனைப் புகுவிழாவிற்கு வந்த உறவினர்களும் நண்பர்களும் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டு ஆச்சரியமாகக் கேட்டனர். சமையலறையின் ஒரு மூலையில், புதிதாகக் கட்டப்பட்ட பளபளக்கும் கிரானைட் மேடையில், கருநிறத்தில் மின்னிய அந்தப் பழைய அம்மியும் குழவியும் அமைதியாக அமர்ந்திருந்தன.
அவற்றுக்காகவே அரியணைபோல் தனியாக ஒரு பீடம் கட்டப்பட்டிருந்தது. அதைக் கட்டியபோது கொத்தனார் சிரித்தபடியே,
“சார்… இவ்வளவு அழகான மாடர்ன் கிச்சன்ல இதுக்கு மட்டும் தனியா இடமா? மிக்சி, கிரைண்டர் எல்லாம் இருக்கும்போது இதை எதுக்கு வைக்கணும்?” என்று கேட்டார்.
அமுதன் பதில் சொல்லவில்லை. ஒரு புன்னகையை மட்டும் உதிர்த்தான். ஏனென்றால், அவர் பார்த்தது ஒரு கல்லை மட்டுமே. அவன் பார்த்தது…அவனுடைய அம்மாவை.
சில பொருட்களுக்கு விலை இருக்கும். சில பொருட்களுக்கு மதிப்பு இருக்கும். சில பொருட்களுக்கு பிறரைக் கவரும் அழகு இருக்கும்.
ஆனால் சில பொருட்கள் மட்டுமே உணர்வுடன் கூடிய நினைவுகளைத் தாங்கியிருக்கும்.
அந்த நினைவுகளுக்கு விலை இல்லை; காலமும் இல்லை. அமுதனுக்கு அந்த அம்மியும் குழவியும் அப்படிப்பட்டவை. அவை வெறும் சமையலுக்கு உதவும் பொருட்கள் அல்ல.
அவனது தாயின் உழைப்பையும், அன்பையும், தியாகத்தையும், அவர்கள் குடும்பத்தின் வரலாற்றையும் சுமந்து நிற்கும் மௌன சாட்சி.
அவனது சிறுவயது நினைவுகள் அனைத்தும் அந்த அம்மி-குழவியைச் சுற்றியே சுழல்கின்றன..
அதிகாலைப் பொழுது. கோழியின் கூவல். வாசலில் கோலம். அடுப்பில் எரியும் விறகின் மணம். அந்தச் சூழலில், அவனுடைய அம்மா தரையில் அமர்ந்திருப்பார். அம்மியின் மேல் மிளகு, சீரகம், சின்ன வெங்காயம், பூண்டு, வறுத்த தேங்காய்… குழவியை இரு கைகளாலும் பிடித்து மெதுவாக உருட்டுவார். அந்த உருளும் ஓசை இன்னும் அவன் காதுகளில் ஒலிக்கிறது.
அது வெறும் கல் உராயும் சத்தமல்ல. ஒரு தாயின் அன்பு இசைத்த தாலாட்டு. அரைத்த மிளகின் மணம் மெதுவாக வீடு முழுவதும் பரவும். அந்த மணம் அவர்களின் வயிற்றை மட்டுமல்ல…மனதையும் பசியடையச் செய்யும். சிறிது நேரத்தில் மீன் குழம்பு கொதிக்கும்.
“மக்கா… நம்ம வீட்டு அம்மில அரைச்ச மிளகுவுக்குத் தனி ருசி உண்டு… நல்லா சாப்பிடு…” என்று சிரித்தபடியே அவனது தட்டில் மீன் துண்டுகளை வைத்து குழம்பை ஊற்றுவார்.
அந்த உணவின் சுவை நாவில் எவ்வளவு இருந்ததோ… அதைவிட அதிகமாக இதயத்தில் இருந்தது. காலம் மெதுவாக மனிதர்களை மாற்றிவிடுகிறது.
வீடுகள் மாறின. வாழ்க்கை மாறியது. விறகு அடுப்பு காணாமல் போனது. மிக்சியும் கிரைண்டரும் சமையலறையை ஆக்கிரமித்தன. வேகமான வாழ்க்கை, வேகமான சமையல், வேகமான உலகம்.
ஆனால்… அம்மாவின் அன்பு மட்டும் எந்தக் காலத்திலும் பழையது ஆவதில்லையே..
ஒருநாள் அவர்களது குடும்பத்தின் நிழலாக இருந்த அம்மா, நிரந்தரமாகப் பிரிந்துவிட்டார். வீடு அதே வீடுதான். சமையலறையும் அதே சமையலறைதான். ஆனால் அந்த வீட்டின் உயிர் மட்டும் இல்லாமல் போய்விட்டது.
அம்மா இல்லாத முதல் நாள்… சமையலறைக்குள் செல்லவே அமுதனுக்குத் துணிவில்லை. அங்கே இருந்த ஒவ்வொரு பொருளும் அம்மாவையே நினைவூட்டியது.
அவற்றில் அதிகமாக அவனை அழ வைத்தது…அந்த அம்மியும் குழவியும்.
அதன் மேல் இன்னும் அம்மாவின் கைரேகைகள் பதிந்திருப்பது போல அவனுக்குத் தோன்றியது.
புதிய வீடு கட்டியபோது பல பழைய பொருட்கள் விலக்கப்பட்டன. “இதெல்லாம் எதுக்கு?” என்று பலர் கேட்டார்கள். ஆனால் அந்த அம்மியை மட்டும் அவன் விடவில்லை.
அதை மிகவும் கவனமாக புதிய வீட்டிற்குக் கொண்டு வந்தான். அதற்காகவே தனியாக ஒரு பீடம் அமைக்க ஏற்பாடு செய்தான். அதை ஒரு கல்லுக்குக் கட்டிய மேடையாக அவன் நினைக்கவில்லை.
அவனது தாயின் நினைவுகளுக்காக எழுப்பிய சின்னக் கோயிலாக நினைத்தான்.
சில மாலைகளில் வீட்டில் யாரும் இல்லாத நேரங்களில், அமுதன் அமைதியாக அந்த அம்மி-குழவியின் அருகே செல்வான்.
குழவியை இரண்டு கைகளாலும் மெதுவாகப் பற்றிக் கொள்வான். “இதுதானே… என் அம்மாவின் கை பட்ட இடம்…”
என்று நினைத்தவுடனே அவனது உள்ளம் உடைந்து விடும். கண்களில் கண்ணீர் வழியும். ஆனால் அந்தக் கண்ணீரில் வேதனை மட்டும் இருக்காது.
ஒரு விசித்திரமான ஆறுதலும் இருக்கும். அந்தக் குழவிக்கல்லைத் தொடும் ஒவ்வொரு முறையும்…
யாரோ அவனது தலையை வருடுவது போல இருக்கும். “அழாதே மகனே… நான் இருக்கிறேன்…”
என்று அம்மாவின் குரல் அவனது உள்ளத்தில் ஒலிக்கும். அது கற்பனையா? இல்லை அது தாயன்பின் அழியாத ஆற்றல்.
இப்போது அவர்கள் வீட்டிலும் மிக்சி இருக்கிறது. சில நிமிடங்களில் எல்லாவற்றையும் அரைத்துவிடுகிறது. ஆனால்… மிக்சியால் மிளகை மட்டுமே அரைக்க முடியும். நினைவுகளையும் கலந்து அரைக்க முடியாது. சுவையை உருவாக்க முடியும். அன்பை உருவாக்க முடியாது. அவனது மனைவியும் அதை உணர்ந்துவிட்டாள்.
“இன்று மீன் குழம்பு அம்மா வைத்தது போல இருக்க வேண்டும்” என்று நினைக்கும் நாளெல்லாம், மிக்சியைத் திறப்பதில்லை.
அம்மி-குழவியைத்தான் அவனது மனைவி பயன்படுத்துகிறாள். குழவி உருளத் தொடங்கும் ஓசை கேட்டவுடன்…
அந்த வீட்டின் சமையலறையில் அமுதனின் அம்மா மீண்டும் நடந்து வருவது போல அவனுக்குத் தோன்றுகிறது.
அம்மா உடலால் அவர்களோடு இல்லை. ஆனால் உணர்வால் அவர்களோடுதான் இருக்கிறார்.
அந்த வீட்டு சமையலின் மணத்தில்… அந்த அம்மி-குழவியில் அவர் வாழ்ந்த வாழ்க்கையின் ஒவ்வொரு தடத்திலும்… இன்னும் உயிரோடு இருக்கிறார்.
முன்பெல்லாம் மின்சாரம் இல்லாத நாட்களில் மட்டும் உதவிய அந்த அம்மியும் குழவியும், இன்று அமுதனின் வீட்டில் பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக இருக்கின்றன.
அவை அஃறிணைப் பொருட்கள் அல்ல. ஒரு தாயின் அன்பை தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்லும் உயிருள்ள சான்றுகள்.
இன்று அந்த அம்மி- குழவி மிளகு அரைக்கப் பயன்படும் பழங்கால சமையற்கருவி மட்டுமல்ல. ஒரு குடும்பத்தின் நினைவுகூரப்படும் வரலாறு.
ஒரு தாயின் அளவற்ற பாசம். ஒரு மகனின் நன்றிக்கடன். அதனால்தான், அமுதனின் வீட்டிற்கு வருபவர்கள் அந்த அம்மி-குழவியைப் பார்க்கும்போது பழைய கல்லாகப் பார்க்கிறார்கள். ஆனால் அவனோ… அவனது அம்மாவையே பார்க்கிறான்.
Leave a Reply