– முனைவர் முல்லைத்தமிழ்
மணிபந்த வர்மம்
சென்ற மாத இதழில் கையில் உள்ள வர்மங்களில் ஒன்றான சூண்டோதரி வர்மம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் மணிபந்த வர்மம் பற்றி அறிவோம்.
இவ்வர்மம் கை மணிக்கட்டு பகுதியில் அமைந்துள்ளது. மணிபந்தக்காலம், கோழிக்கழுத்து வர்மம், புறமணிபந்த வர்மம் என்னும் வேறுபெயர்களாலும் இவ்வர்மம் வழங்கப்படுகிறது.
“பிரியாத மணிக்கட்டில் மணிபந்தவர்மம்”.
– வர்ம கருவிநூல் -500
“இகயதாம் மணிக்கெட்டாகும்
இடத்திலே மணிபந்தம் பார்”.
– இலாடச்சூத்திரம்
முடிகூடும் மணிபெந்தம் காலத்தின் செய்கைகேளு
முளைப்பாக கை கழைப்பு அதிகம் காட்டும்
படிகூடும் மணிக்கெட்டு வீங்கிக்காணும்
பதைப்பான தேகமது குளிருமப்பா
முடிகூடும் சன்னியது கூட்டமாகும்
மிதமாக யெண்ணைவிட்டு தடவிப்பாரு
பிடிபோகும் பணி பூத்த விகடக்காலம்
பிணிவிட்டு சுகமாய் வருமே விதி கண்டீரே.
– வர்ம கருவிநூல்-500
வீழுமந்த முன்கையில் மையம் பற்றி
விழுமான மணிபந்த வர்மமாகும்
வேணுமிந்த மணிநடுவில் முறிவு கொண்டால்
தயவான நடுவெலும்பு முறிந்து வாங்கும்
வாணுமிந்த வர்மத்தில் முறிவு கொண்டால்
வளமே என்ன பன்னிரண்டில் மரணமாகும்
நாளுமது கழுத்துமது நீண்டதானால்
நன்மையுள்ள மூடில்லா தாளி சாற்றில்
ஆணமிந்த உளுந்துவிதை அரைத்து மைந்தா
அடவான துணியதிலே ஊட்டி சுற்றி
சுற்றுகின்ற துணியதின் மேல் நாலுசீளி
சுகமாக அதன்மேலே கயிற்றை சுற்றி
முற்றுகின்ற முறிவெண்ணை தாரை கோரி
முடிந்த நல்ல வல்லாரை தாக்குவாயே
பற்றுகின்ற வர்மமது தீரும் சொன்னேன்
பரமகுரு கிருபையினால் தீர்ந்தாலாச்சு.
– வர்ம சூத்திரம்-300
தொகுத்துமே மணிபந்தவர்மம் கொண்டால்
சொல்பெரிய செய்குணத்தை செப்பக்கேளு
துகையான கழைப்பிளகி வீங்குமப்பா
தொகுப்பாகச் சன்னியொடு சீதமுண்டாம்
பகைத்துடனே அணியதிலே கொள்ளுமானால்
பழிசெய்யும் ஐயிரண்டில் அசாத்தியமாகும்
நகையான இக்குணங்கள் அறிந்து நீயும்
நாடியே செய்யாதே நாடிப்பாரே.
– வர்ம ஒடிவுமுறிவு பெருநூல்-1500
“என்றபடி நடுவிரலின் மொழியின் மென்மேல்
வகையான மணிபந்த வர்மங்கொண்டால்
மருவியே வரும் குணந்தன்னை வருந்திக்கேளு
துகையாக கடுப்பிளகி வீங்குமப்பா
தொகுப்பாக சன்னியோடு சீதமுண்டாம்
பகையான அறுபதிலே அழிந்து வீழும்
பழி செய்யுமாமிரண்டில் அசாத்தியமாகும்
நகையான இக்குணங்கள் அறிந்து நீயும்
நாடியே செய்யாதே நாடிப்பாரே”.
– வர்ம அகஸ்தியசாரி
“முடவதற்கு மணிபந்த வர்மம் கொண்டால்
முடங்கின கை உளைச்சலோடு வீக்கமாமே
உளைச்சலோடு தேகமது குளிரும் பாரு
உற்றதொரு நூல் மு¬றாய் தடவிப்பார்த்தால்
முளைச்சலோடு கைமுறைகள் இதமாய் செய்தால்
ஏகும் பிணி அத்தனையும் போகும் வாறாம்”.
– வர்மக் கண்ணாடி
“வகுத்த மணிபந்த உறை தொட்டு மேல் பெரு
விரலடி கவளியது தொடர கைக்குழி
பகுத்த மணிசுழியாடி யேந்திக் கூட்டடங்கல்
செய்யிதமாய் தடவி தட்டி தானிறக்கிப்பூட்டி
புகுத்த பழந்தூசியதால் சுற்றிக்கட்டி சுகம்வரவே
தேசிக்காய் சேர் முறிவெண்ணெய் தொடரவிட
தொகுத்த மணித்தொடர் இறுகி துலக்கமாகும்
துய்யவலி மாறிடினும் தொடரும் காணே”.
– வர்ம குருநூல்
கையொடு மிணைந்துறும் விரலுறுமைந்தும்
பையொடும்மெய்யுறச்சேர்ந்துறும் நடுவரிகுழி
தைத்துறும்தலமதில் மணியினை வன்மமஃது
நைத்துறும் வலிமிகின் கொண்டிடிலென்னே.
– வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்
கையொடு விரல்கள் ஐந்தும் இணைந்துள் துண்டானது பை போன்று உடலில் சேர்ந்திருக்கும் நடுவரிக்குழியில் பிணைக்கப்பட்ட தலமதில் அமைந்தது மணியிணை வன்மம் என்பதாகும். இவ்வன்மம் கொண்டிடில் வலியினால் மிக துன்பமடையச் செய்யும் என்பதாம்.
மணியிணை வன்மம் கொண்டுறில் களைத்துறும் கையும்
பணியதுமுடங்குறும்பண்புறும் வீக்கமும்வலியதும்மிஞ்சியே
தணிவதும் மாறியே எதிர்துறைமிஞ்சுறும்விள்ளெனவீறியே
அணிந்துறும் அகமதில் நடுங்குற வியர்த்துறுமாணே.
– வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்
மணியிணை வர்மம் என்னும் மணிப்பொருத்து வன்மம் கொண்டால் கையில் களைப்புண்ணடாகும். எந்த வேலையும் செய்ய முடியாவண்ணம் முடக்கம் ஏற்படும். இத்தலத்தில் தாக்கம் கொள்ளும்போது அதன் தன்மையாகிய வீக்கமும் வலியும் அதிகம் தோன்றும். தணிவுடன் இருப்பதற்குப் பதில் அதற்கு எதிரான சூடு மிஞ்சி விள்ளென அகமதில் வலியுடன் வியர்வையும் தோன்றும் என்பதாம்.
என்னுறும் மணிப்பொருத்து விடமதில் முறிந்துறில்
கன்னுறும் வலியுடன் மயக்கமும் மிஞ்சுறு மீதுறில்
தன்னுறப் பிறழ்ந்துறும்தட்டதும் மாறியேவிட்டென
உன்னுறும் போதிலுமுள் வலியாயுறுமென்னே.
– வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்
மணிப்பொருத்து வர்மம் விசநிலையில் முறிவுற்றால் கண்ணில் கலக்கமுடன் வலிமிஞ்சி மயக்கமும் மிஞ்சும். மணிக்கெட்டு தன்னிலை விட்டு விலகி அதன் இணைவுத்தட்டு மாறிப்போகும். நினைத்தாலே உள்ளே வலிக்கும் தன்மை உண்டாகும் என்பதாம்.
வலியது மிஞ்சுறில் வழியது கேள்பின்
தலியது விரலுறவெளியதாய் நெட்டுற
இலியதிலிழுத்துடன்நெடுக்கியேவிட்டுற
பலியதுபோல பண்புறவலியதும் இழிவே.
– வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்
இவ்வாறு மணிப்பொருத்து வர்மத்தில் வலிமிஞ்சிப் போனால், எல்லா விரல்களையும் வெளிப்புறமாக நீட்டி இழுத்து நெட்டி வாங்கி நன்கு இழுத்து நீட்டி வலித்து விட பலியிட்டது போல் வலி மாறிவிடும் என்பதாம்.
முனைந்துறும் வன்மம் முறையுறத் தொட்டுறில்
இணைவுறும் கண்டம் நவிரத்துறுவலிகளும்மாறி
அணிவிரல்அணைத்துறத்தூண்டில்மிக்குறும்சூடும்
தணிவுறும் நடுக்கம் குளிரும் நலம்படும் என்னே.
– வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்
மணிப்பொருத்து வர்மத்தை முறைப்படித் தொட்டுத் தூண்டி வந்தால் கழுத்துவலி, தலைவலி, அதிகச்சூடு, குளிர் நடுக்கம் போன்றவைகளும் மாறி நலம்பெறும் என்பதாம் என வர்ம யோகச்சூத்திரமும் குறிப்பிடுகிறது.
இவ்வர்மத்தில் தாக்கம் கொண்டால் உடல் குளிர்ந்து கடுப்புடன் வீக்கமும் ஜன்னியோடு சீதமும் உண்டாகும். கை மணிக்கட்டு நழுவி முடக்கம் ஏற்படும். விசகலையில் கொண்டால் அறுபதாம் நாள் மயக்கமும் தளர்ச்சையும் உண்டாகி படபடப்பு தோன்றி இரண்டு நாட்கள் கழிந்தால் அசாத்தியமாகும். இதற்கு நாழிகை பத்து என வர்ம நூல்கள் குறிப்பிடுகின்றன.
மேலும் இவ்வர்மத்தை இளக்குவதற்கு கழுத்துறை வழியே கை வரை தடவி, பின்னர் கைக்குழி அடங்கல், கவளி அடங்கல், சுழியாடி அடங்கல், ஏந்தி நரம்படங்கல், கூட்டடங்கல்களை தூண்டி தடவி, தொடர்ந்து கழுத்துறை வழி முன்னும் பின்னும் கத்தரிக்கோல் மாறலாக மார்பு, முதுகு தடவி, மேல்நோக்கி ஏற்றி தடவி, இதமாக செய்து, சிறந்த அகமருந்துகளையும், புறமருந்தாக பற்று, ஒற்றல், எண்ணெய் பாளமிடுதல் போன்றவைகளையும் செய்துவர சுகம் உண்டாகும் என அனுபவமிக்க வர்ம வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.
இவ்வர்ம பாதிப்படைந்தவர்களுக்கு பிற்காலத்தில் மணிக்கட்டை உயர்த்த முடியாமை, உடல் நடுக்கம், நீண்டநாள் தீராத தலைவலி போன்ற பின்விளைவுகள் உண்டாகும் என வர்ம நூல்கள் குறிப்பிடுகின்றன. இவ்வர்மத்தை பெருவிரல், நடுவிரல், இருபெருவிரல் போன்றவைகளாலான தூண்டல், அழுத்தல், அனுக்கல், தட்டல், அதிர்த்தல், அமத்தல் போன்ற தூண்டுமுறை நுட்பங்களைக் கொண்டு தூண்டிவர கழுத்துநோய்கள், கைவலி, அதிகச்சூடு, குளிர், நடுக்கம், கோபம் தீரும் என வர்ம சுவடிகள் குறிப்பிடுகின்றது.
Leave a Reply