– சஜிபிரபு மாறச்சன்
சாதனைகள் படைத்து உயர்வாழ்வு வாழ்வதற்கு வயது ஒரு காரணமே அல்ல. எந்த வயதிலும் எப்போதும் சாதிக்கலாம். அறிஞர்களின் பெருமக்களின் வாழ்வை பார்ப்போம்.
டாக்டர் ஜான்ஸன் கவிஞர்களின் வாழ்க்கை என்னும் நூலை எழுதினார். அது மாபெரும் புகழை கொடுத்தது. உலகமே போற்றும்படி அந்த நூலை எழுதிய போது டாக்டர் ஜான்ஸனுக்கு வயது எழுபத்தெட்டாகும். அரிஸ்டாட்டில் பற்றி தெரியாதவர்கள் எவரும் இல்லை என்று கூறுமளவுக்கு மிகவும் புகழ் பெற்றவர்.
இவர் தனது 50-வயது வரையில் எந்தவித சாதனையையும் நிகழ்த்தவில்லை. ஆனால் 51-ம் வயது முதல் அவர் சாதித்தவை உலகம் உள்ளவரை மறக்க முடியாததாகும். மாவீரன் அலெக்ஸாண்டர் தனது 20-ம் வயதில் முடிசூட்டிக் கொண்டான். தனது 33-வது வயதிற்குள் இந்த உலகை விட்டு மறைந்து விட்டான். அந்த இளம் வயதில், அதுவும் பதிமூன்று ஆண்டுகளுக்குள் உலகத்தின் பாதியை கைப்பற்றி பெரும் புகழை அடைந்தான்.
ஷெல்லி தனது முப்பது வயதிற்குள் மக்களால் இன்றும் போற்றப்படும் கவிதைப் புதையலுக்கு கொடுத்து விட்டு மறைந்தான்.
நமது பாரதநாட்டின் பழம் பெருமையையும், பண்பாட்டையும் இந்து மதத்தின் தத்துவங்களையும் எழுத்தின் மூலமும் பேச்சின் மூலமும் உலகம் முழுவதும் பரப்பியவர் சுவாமி விவேகானந்தர்.
இவர் தன்னுடைய பேச்சின் திறமையால் இந்து மதத் தத்துவத்தை அமெக்க மக்களுக்கு உணர்த்தி உலகமே வியக்குமளவுக்கு சாதனை படைத்தார். மாபெரும் சாதனைப் படைத்த விவேகானந்தருக்கு வயது அப்போது முப்பத்திரண்டு.
இன்றைய விஞ்ஞான உலகத்தில் மிகவும் போற்றபடுபவர் ஐசக் நியூட்டன் என்பவராவார். இவர் சிறுவனாக இருக்கும் போதே ஆகாயத்தில் பறக்க விடும் காற்றாடியின் நூலை எப்படி எந்தக் கோணத்தில் முடி போட்டால் அதிகம் உயரம் பறக்கும் என்று கணக்கிட்டு முடிபோட்டு நேர்த்தியாக பறக்கவிட்டவர்.
அது மட்டுமில்லாது சூரியஒளி பல வண்ணங்களின் சேர்க்கை என்றும், ஒவ்வொரு சலனத்திற்கும் எதிர்சலனம் உண்டு என்பதையும் உலகிற்கு வலியுறுத்தி சாதனைப் படைத்தார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த குற்றாலிசுவரன் என்னும் பனிரெண்டு வயது சிறுவன் கடலில் நீந்தி சாதனை புரிந்துள்ளான். அந்தச் சிறுவன் இலங்கைத் தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடிக்கு (இலங்கையிலிருந்து தமிழ்நாட்டிற்கு) கடலில் நீந்தி வந்தான். அவன் கடலில் 20 மைல்களை 16 மணி நேரத்தில் அதுவும் அலைகள் அதிகமிருந்தும் நீந்தி உலக சாதனை படைத்துள்ளான்.
இதனைப் பாராட்டி தமிழக முதலமைச்சர் மற்றும் பலரும் பரிசுகள் வழங்கி சிறப்பித்தார்கள்.
இந்த சாதனையைப் படைப்பதற்கு வயது ஒரு தடையாக இல்லை என்பது இதன்மூலம் உணர்ந்து கொள்ளலாம். சாதனை நிகழ்ச்சி வாழ்க்கையில் முன்னேற வயது எப்போதும் தடையாக இருந்ததில்லை. மனித சக்திக்கு மாபெரும் ஆற்றல் உண்டு. அந்த ஆற்றலை உணர்ந்து எந்தளவுக்கும் பயன்படுத்துகின்றனரோ அதன்படி பல சாதனைகளை நிகழ்த்த முடியும் .
Leave a Reply