இன்று ஆயிரக்கணக்கான மக்களின் நம்பிக்கையாக விளங்கும் அமைப்பின் சமூக சேவகர் திரு.ஸ்டெபி அவர்களை புதிய தென்றலுக்காக சந்தித்தபோது
கேள்வி: வணக்கம் . உங்களைப் பற்றியும், அன்னை அறக்கட்டளை குறித்தும் கூறுங்கள்
பதில்: கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகிலுள்ள அன்னை நகர்தான் எனது சொந்த ஊர். நான் மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கும், எம்பிஏவும் (B.E, MBA) முடித்துள்ளேன். தொழில்முறையில் ஆயில் & கேஸ் (Oil & Gas) துறையில் QA/QC இன்ஜினியராகப் பணியாற்றி வருகிறேன். இதன் நடுவேதான் அன்னை அறக்கட்டளையின் தலைவராக சமூகப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறேன்.
கேள்வி: உங்களை சமூக சேவைக்குத் திருப்பிய அந்தத் திருப்புமுனை தருணம் எப்போது, எப்படி அமைந்தது?
பதில்: மனிதர்களின் வாழ்க்கையில் சில நிகழ்வுகள் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். எனது வாழ்க்கையிலும் அப்படிப்பட்ட ஒரு தருணம் 2018-ஆம் ஆண்டு, எனக்கு 19 வயது நடந்தபோது ஏற்பட்டது. அந்த ஆண்டுதான் நான் முதல் முறையாக இரத்த தானம் செய்தேன். ஒரு உயிருக்கு நம்மால் உதவ முடியும் என்ற அந்த மிகப்பெரிய உணர்வு எனக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. “சமூகத்திற்கு நம்மால் முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டும்” என்ற எண்ணம் அன்றிலிருந்துதான் என் மனதில் ஆழமாக வேரூன்றியது.
கேள்வி: ஆரம்ப காலத்தில் மாணவர்கள் சூழலில் இந்த அறக்கட்டளை எப்படி உருவெடுத்தது?
பதில்: உண்மைதான். அப்போது நான் ஒரு மாணவன், என்னைச் சுற்றியிருந்த நண்பர்களும் பெரும்பாலும் மாணவர்கள் தான். அதனால் பொருளாதார ரீதியாக பெரிய அளவில் உதவி செய்வதற்கு வாய்ப்பு குறைவாக இருந்தது. ஆனால், “உதவும் மனம் இருந்தால் போதும், எதையும் சாதிக்கலாம்” என்ற நம்பிக்கை எங்களிடம் இருந்தது. மனித உயிர்களைக் காப்பாற்றும் நோக்கத்துடன் 2019-ஆம் ஆண்டில் ‘அன்னை அறக்கட்டளை’ (Annai Foundation) என்ற பெயரில் இந்தப் பயணத்தைத் தொடங்கினேன். அவசர நேரங்களில் இரத்தம் தேவைப்படும் மக்களுக்குச் சரியான நேரத்தில் இரத்த தானம் ஏற்பாடு செய்து கொடுப்பதுதான் எங்கள் முதல் சேவையாகத் தொடங்கியது. ஒரு சிறிய முயற்சியாகத் தொடங்கிய இந்த இயக்கம், இன்று பலரின் பங்களிப்போடு விஸ்வரூபம் எடுத்துள்ளது.
கேள்வி: நீங்கள் வெளிநாட்டில் பணியாற்றி வருவதாகக் அறிகிறோம். நேரடிப் பங்களிப்பு எப்படி சாத்தியமாகிறது?
பதில்: தொழில் காரணமாக கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக வெளிநாடுகளில் தான் பணியாற்றி வருகிறேன். இதனால் பல அவசர இரத்த தான வாய்ப்புகளில் என்னால் நேரடியாகக் கலந்துகொள்ள முடியாத சூழல் ஏற்பட்டது உண்மைதான். ஆனால், “நாம் நேரடியாகச் செய்ய முடியாத உதவியையும், மற்றவர்களை இணைப்பதன் மூலம் சாதிக்க முடியும்” என்ற எண்ணத்துடன் செயல்பட்டேன். இன்று அன்னை அறக்கட்டளை மூலம் ஆயிரக்கணக்கான இரத்த தான கொடையாளர்களை ஒருங்கிணைத்து இந்த சேவையைத் தடையின்றித் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறோம். அதுமட்டுமின்றி, 2018 முதல் இதுவரை நான் நேரடியாக 15 முறை இரத்த தானம் செய்துள்ளேன்.
கேள்வி: கொரோனா போன்ற இக்கட்டான காலக்கட்டங்களில் அறக்கட்டளையின் பங்களிப்பு எவ்வாறு இருந்தது?
பதில்: கொரோனா பெருந்தொற்று காலம் மக்கள் அனைவருக்குமே மிகப்பெரிய சோதனைக் காலமாக இருந்தது. அந்தச் சிரமங்களை உணர்ந்து, அன்னை அறக்கட்டளை சார்பில் பல்வேறு நிவாரணப் பணிகளை மேற்கொண்டோம். பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்குவது, உணவுப் பொருட்கள், மளிகைப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியத் தேவைகளைச் செய்து தருவது என பல குடும்பங்களுக்கு எங்களால் இயன்ற உதவியைச் செய்தோம். அந்த இக்கட்டான காலகட்டத்தில் மக்களிடமிருந்து எங்களுக்குக் கிடைத்த ஆதரவும் நம்பிக்கையும்தான், எங்களது சேவைப் பணிகளை மேலும் விரிவுபடுத்த மிகப்பெரிய ஊக்கமாக அமைந்தது.
கேள்வி: வெறும் இரத்த தானத்தைத் தாண்டி, தற்போது அறக்கட்டளை என்னென்ன துறைகளில் இயங்கி வருகிறது?
பதில்: இரத்த தான சேவையோடு சேர்த்து, மருத்துவ உதவிகள், கல்வி உதவிகள், கண் தான விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரக்கன்றுகள் நடுதல் மற்றும் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் எனப் பல்துறைகளிலும் அன்னை அறக்கட்டளை தொடர்ச்சியாகச் செயல்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடந்து வந்த எங்களது சேவையைப் போற்றும் வகையிலும், சட்டப்பூர்வமாகச் செயல்படுத்துவதற்காகவும் 2023-ஆம் ஆண்டு அன்னை அறக்கட்டளை அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டது (Reg No: 39/2023). .
கேள்வி: இதுவரை அறக்கட்டளை கடந்து வந்த பாதையில் குறிப்பிடத்தக்க சாதனைகள் என்று எவற்றைக் கூறுவீர்கள்?
பதில்: இது தனி ஒரு மனிதனின் முயற்சியால் சாத்தியமானதல்ல; பல நல்ல உள்ளங்களின் கூட்டு முயற்சி. எங்களின் முக்கிய சாதனைகளாகக் கீழ்க் காண்பவற்றைக் குறிப்பிடலாம்:
அவசர காலங்களில் உதவ ஆயிரக்கணக்கான இரத்த தான கொடையாளர்களைக் கொண்ட வலுவான வலைப்பின்னல்.
இதுவரை 2600 அலகு இரத்த தானம் செய்யப்பட்டுள்ளது.
160 கண் தான உறுதிமொழிகள் பெறப்பட்டுள்ளன.
அவதிப்படும் மக்களுக்கு 18 லட்சத்திற்கும் அதிகமான மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
ஏழை மாணவர்களின் எதிர்காலத்திற்குத் துணையாக 310 மாணவர்களுக்கு கல்வி உதவிகள் அளிக்கப்பட்டுள்ளன.
6.3 லட்சத்திற்கும் அதிகமான உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக 850 மரக்கன்றுகள் நடுதல் மற்றும் ஒரு கடற்கரையை முழுமையாகத் தூய்மைப்படுத்தி அதன் இயல்பு நிலையை மீட்டெடுத்தல் போன்ற பணிகள்.
எங்கள் சேவைக்காக சமூகத்தின் மூலம் 65 விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள் கிடைத்துள்ளன.
கேள்வி: உங்கள் தொழில் வாழ்க்கையையும் சமூக சேவையையும் எவ்வாறு சமன் செய்கிறீர்கள்?
பதில்: QA/QC இன்ஜினியர் என்ற தொழில்முறை பொறுப்பு எனக்கு நிறைய சவால்களைத் தந்தாலும், சமூகப் பொறுப்பையும் அதனுடன் இணைத்தே பயணித்து வருகிறேன். தொழிலில் ‘தரம்’ (Quality) எவ்வளவு முக்கியமோ, அதேபோல் சமூகத்தில் ‘மனிதநேயம்’ மிகவும் முக்கியம் என்று கருதுகிறேன். இந்த இரண்டையும் சரியாகக் கையாள்வதுதான் எனது தனிச்சிறப்பாகக் கருதுகிறேன்.
கேள்வி: இந்த வெற்றிப் பயணத்தின் பின்னணியில் இருப்பவர்கள் யார்?
பதில்: ஏற்கனவே சொன்னது போல, இது என் ஒருவனின் பயணம் அல்ல. அன்னை அறக்கட்டளை நிர்வாக உறுப்பினர்களின் அர்ப்பணிப்பு, உறுப்பினர்களின் ஒத்துழைப்பு, தன்னார்வலர்களின் தன்னலமற்ற உழைப்பு மற்றும் பொதுமக்களின் அசைக்க முடியாத ஆதரவு ஆகியவைதான் இந்த அறக்கட்டளையின் உண்மையான பலம். “ஒரு மனிதனால் தொடங்கப்பட்ட ஒரு சிறிய முயற்சி, பல நல்ல உள்ளங்களின் கைகளால் இன்று ஒரு பெரிய சமூக இயக்கமாக மாறியுள்ளது”.
கேள்வி: எதிர்கால இலக்கு என்னவாக இருக்கிறது?
பதில்: எதிர்காலத்தில் இன்னும் அதிகமான மக்களைச் சென்றடைய வேண்டும். அவசர மருத்துவ உதவி, கல்வி ஆதரவு, இரத்த தானம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற சமூக நலப் பணிகளை மேலும் பல பகுதிகளுக்கு விரிவுபடுத்துவதே எங்களது பிரதான நோக்கமாகும். “மனிதநேயம் என்பது வெறும் வார்த்தைகளில் அல்ல… நாம் செய்யும் செயல்களில் வெளிப்பட வேண்டும்” என்ற உயரிய நோக்கத்துடன் எங்கள் சேவையைத் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செய்வோம்.
சிறுவயதிலேயே தொடங்கி சமூகப் பணி செய்து வரும் திரு. ஸ்டெபி அவர்களின் பணி மேலும் சிறக்க ‘புதிய தென்றல்’ இதழ் சார்பாக வாழ்த்தி விடைபெற்றோம்.
நீங்களும் பாராட்ட வேண்டுமா?
பேசி +91 81246 28477நேர்காணல்
ஜி.ஜெய கர்ணன் இணை ஆசிரியர்,
Leave a Reply