தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலையடிகள்!

தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலையடிகள்!

  • By Magazine
  • |

பூ.வ.தமிழ்க்கனல்

மறைமலையடிகளின் பெயர் தொடக்கக் காலங்களில் (1916-க்கு முன்பு) நாகை எஸ்.வேதாசலம் பிள்ளை என்றும் சுவாமிவேதாசலம் என்றுமே அறிமுகமாயிருந்தது. தமிழைத் தமது 15-ஆம் அகவையில் கற்கத் தொடங்கிய இவர் 21 அகவைக்குள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்தார். இவர் 15.07.1876 இல் பிறந்தார். நாகைப் புத்தகக்கடை நாராயணசாமியிடம் தமிழைக் கற்றார். பேராசிரியர் மனோன்மணியம் சுந்தரனாரிடம் தொடர்பு கொண்டு, அவரது பரிந்துரையின் பேரில் திருவனந்தபுரத்தில் தமிழாசிரியத் தொழிலில் அமர்ந்தார். சில ஆண்டுகள் கழித்துச் சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் தமிழாசிரியராகவும் துறைத் தலைவராகவும் பணியாற்றினார். பின்னர் பல்லாவரத்தில் பொதுநிலைக்கழகம் கண்டு தமிழுக்குத் தொண்டு செய்து வரலானார்.

                மறைமலையடிகள் 9-ஆம் வகுப்பு வரை மட்டுமே பள்ளியில் படித்தவர். அவர் தனியாகப் பாடங்கேட்டும் தாமாக முயன்று கற்றும், அவர் தமிழ், ஆங்கிலம், வடமொழி ஆகியவற்றில் பெரும் புலமை பெற்றவராக விளங்கினார். இவர் திறனாய்வுக் கடிதங்கள் ஆங்கிலத்தில் எழுதுகிற ஆற்றல் பெற்றதமிழ் அறிஞராக விளங்கினார்.

அதுபோலவே இவரது தமிழ்க்கட்டுரைகள் ‘திராவிடன்” ‘சுதேசமித்திரன்” ‘குடிஅரசு” போன்ற ஏடுகளிலும் வெளிவந்துள்ளன. வடமொழி மூலத்தினின்று சாகுந்தலம் நாடகத்தினை மொழிபெயர்த்து வெளியிட்டார். வேதங்களையும் உபநிடதங்களையும் சுமிருதிகளையும் வடமொழி அறிந்ததால் கற்று, அதனை ஆய்வுக்குப் பயன்படுத்தினார். பின்னர், தமது கருத்துகளை அவரது நூல்களில் வடித்தார்.

                1916-இல் நீதிக்கட்சி, அரசியல் துறையில் பார்ப்பனர் ஆதிக்கத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் சாய்க்கத் தொடங்கியது. சமுதாயத்துறையில் சுயமரியாதை இயக்கம், அவர்களின் மேலாண்மையை வீழத்தப் போராட்டத்தைத் தொடங்கியது. அதேபோல, மொழித் துறையில் அவர்களது ஆதிக்கத்தைச் சமஸ்கிருதத்தின் ஆதிக்கத்தைக் கலப்பைப் போக்கத் தனித்தமிழ் இயக்கத்தை அடிகளார் தொடங்கினார். மறைமலையடிகளுக்குத் தமிழின் இயற்கை அமைப்பும் அதன் இயல்பும் வளமும் மரபும் துணை நின்றன. கால்டுவெல் ஆய்வுகளும் வழிகாட்டின.

                20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் புதிய அணுகுமுறையோடு கூடிய ஓர் அரசியல் உருவாயிற்று. அச்சமயத்தில் சங்க இலக்கியங்களும் பதிப்பிக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. மொகஞ்சதாரோ – அரப்பா அகழ்வாராய்ச்சிகள் வெளியிடப்பட்டுத் தொன்மையான ‘திராவிட” நாகரிகத்தின் எழுச்சிமிக்க அந்நாள்கள் கண்டறியப்பட்டன. ஐரோப்பிய மதகுருமார்களின் ஆய்வுகளில் தமிழுக்கு முக்கிய இடம் இருந்ததை நாம் தெரிந்து கொள்ள உதவின. இத்துறையில் கால்டுவெல் பணி ஒப்பற்றதாக ஆளங்யுயது.

                தமிழின் தொன்மை பயன்படுத்திக் கொள்ளப்பட்டு அவை சமஸ்கிருதத்திற்கு ஏற்றப்பட்டன என அவரது ஆய்வுகள் வெளிப்படுத்தின. வடமொழியின் துணையில்லாமல் தமிழ் ‘தனித்து” இயங்க முடியும் என்பதைத் தமது ‘திராவிடமொழிகளின் ஒப்பிலக்கணம்” எனும் நூலில் கால்டுவெல் வெளியிட்டார். கால்டுவெல் ஆய்வுக்கு முன்பே தமிழ் அறிஞர்கள் இக்கூற்றை அறிந்திருந்தாலும் அவர்கள் வெளிப்படுத்த வாய்ப்பும் கருவியும் இன்றித் தவித்தனர். இப்படி வளர்ச்சியின் போக்கு செல்வதையும் மொழியின் இயற்கைச் செழிப்பையும் உணர்ந்த மறைமலையடிகளார் தமது ஆய்வுகளை வெயியிடத் தொடங்கினார். இவை மக்களிடம் சென்று அடையாமல் படித்தவர்களிடையே மட்டும் கொண்டும் கொள்ளாமலும் உலா வந்தன.

                திரு.வி.க. இவரது ஆய்வை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனைத் தமது வாழ்க்கைக் குறிப்பில் அவர் குறித்திருக்கிறார். எனினும் மறைமலையடிகளால் தமிழகத்தில் ஏற்பட்ட மாறுதல்களைக் குறிக்கும் போது அவர் பின்வருமாறு எழுதுகிறார்.

                ‘தென்னாடு, பன்னெடுங்காலம் தன்னை மறந்து உறங்கியது. அவ்வுறக்கம் போக்கிய பெருமை மறைமலையடிகளுக்கு உண்டு. அவர்தம் தமிழ்ப்புலமையும் வடமொழிப்புலமையும் ஆங்கிலப் புலமையும் ஆராய்ச்சியும் பேச்சும் எழுத்தும் தொண்டும் தென்னாட்டை விழிக்கச் செய்தன. தென்னாடு அடிகளால் விழிப்புற்றது என்று மண்ணும் முழங்கும். மரமும் முழங்கும்.

                அடிகள் பேச்சு, பல பேச்சாளரைப் படைத்தது. எழுத்து பல எழுத்தாளரை ஈன்றது. நூல் பல நூலாசிரியர்களை அளித்தது. அடிகளே தென்னாடு, தென்னாடே அடிகள் என்று கூறுவது மிமையாகாது.

                திரு.ஆ.க. வின் இக்கூற்று, எத்தகைய பரிமாணத்தை அடிகள் உருவாக்கியிருக்கிறார் என்கதை உணர்த்தும்.

                மறைமலையடிகளின் ஆய்வில் தன்னுரிமையும் தன்மானமும் தழைத்தோங்கின. நீதிக்கட்சிகால் கோள் கொண்ட ஆண்டில் தான் (1916) தம் மகள் நீலாம்பிகை அம்மையாரால் உணர்த்தப்பட்டுத் தனித் தமிழில் பேசவும் எழுதவுமான இயக்கத்தை மறைமலையடிகள் தொடங்கினார். இவர் நடத்தி வந்த ‘ஞானசாகரம் “ ‘அறிவுக்கடலாக” மாறிற்று.

                இவரிடம் தனிப்பாடங்கேட்டுப் பெரும்புலவர் ஆனவர்கள் பலர் உண்டு. இவரிடம் பாடம் கேட்டு இவருக்கு எதிரான ஆய்வுகளை வெயியிட்டவர்களும் உண்டு. மறைமலையடிகளாரின் படைப்புகளில் சாதிவேற்றுமையும் போலிச் சைவரும் வோளாளர் நாகரிகம். பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை, முல்லைப்பாட்டுஆராய்ச்சியுரை, திருக்குறள் ஆராய்ச்சி, கட்டுரைக் கோவை, கட்டுரைக்கொத்து, சிந்தனைக்கட்டுரைகள், கோகிலாம்பாள் கடிதங்கள், தமிழர் மதம் ஆகியவை சிந்தனைக்கு விருந்து படைப்பவையாகத் திகழுகின்றன.

                மறைமலையடிகளின் ஆய்வு என்பது, மிக ஆழமான வரலாற்று வேர்களை உடையது. கால்டுவெல் தமது ஒப்பிலக்கணத்தில் தமிழுக்கும் சமஸ்கிருதத்திற்கும் 2,000 ஆண்டுகள் இடையறாத போர் நடந்து வந்துள்ளது என்று குறிப்பிடுகிறார். இந்த இடையறாத போரின் இறுதி வடிவம் தான் மறைமலையடிகள்! அந்த வடிவத்தின் தொடர்ச்சியாகத் திராவிடர் இயக்கம் திகழுகிறது. அவரது சில ஆய்வுகளைப் படித்தால் அந்த உண்மை நமக்கு விளங்கக் கூடும்.

                மறைமலையடிகளார் தமது ஆய்வில் ஒழுக்கத்தைக் கவனிக்க முடியாததும் வேடத்தை மட்டும் கொண்டதும் அறிவுக்குப் பொருந்தாததுமான மதம் எதுவானாலும் அந்த மதத்தின் மீது நமக்கு ஏற்படும் வெறுப்புணச்சி போலவே அவருக்கும் ஏற்பட்டு அதனைச் ‘சாதி வேற்றுமையும் போலிச் சைவமும்” என்ற நூலில் வெளிப்படுத்தி இருக்கிறார். இவரது ‘வேளாளர் நாகரிகம்” எனும் நூலில் ஆய்வுபூர்வமாகப் பல கருத்துகளை வெளியிட்டுள்ளார்.

                அந்நூலில் அவர் அன்பும் அருளும் உடையாரே உயர்ந்த சாதியார் என்றும் தமிழர்கள் உபநிடதம், சாங்கியம் போன்ற நூல்களை வகுத்தனர் என்றும் ஓம் எனும் பிரணவம் தமிழுக்கே உரிமை உடையதென்றும் தமிழர்கள் உபநிடதங்கள் இயற்றியமைக்குச் சான்று காட்டியும் பழைய வேதங்கள் என்பன தமிழ்மறைகளே என்றும் வெளிப்படுத்தினார்.

                மறைமலையடிகள், ‘கோகிலம்பாள் கடிதங்கள்” எனும் புதினத்தை 12.05.1911-இல் எழுதத் தொடங்கினார். இதில் பார்ப்பனக் கைம்பெண் பார்ப்பனரல்லாத சூத்திரனைக் காதலிப்பதாக அமைந்திருக்கும். நீதிக்கட்சியும் சுயமரியாதை இயக்கமும் தோற்றமளிப்பதற்கு முன்பே, இக்கருத்தைக் கொண்டவர் மறைமலையடிகளார் என்பதை நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது.

திருவள்ளுவர் ஆண்டு

                திருவள்ளுவர் ஆண்டு உருவாகக் காரணமானவர்களுள் மறைமலையடிகள் ஒருவர். 1921-ஆம் ஆண்டு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் மறைமலையடிகளார் தலைமையில் தமிழ்ப் பேரறிஞர்களும் வரலாற்றுப் பேராசிரியர்களும் கூடித் திருவள்ளுவர்  ஆண்டை முடிவு செய்தனர். அது முதற்கொண்டு திருவள்ளுவர் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

                மறைமலையடிகளின் பால் நாம் பற்றுக் கொள்வதற்கு இன்னொரு முக்கியமான காரணம், 1938- இல் அவர் இந்தியை எதிர்ப்பதற்கு வெளிப்படையாக ஆதரவு தந்து அவ்வியக்கத்தில் பங்கு கொண்டது ஆகும். இந்த எதிர்ப்புப் போரில் தம் மகன் திருநாவுக்கரசு அவர்களைச் சிறைக்கு அனுப்பியும் வைத்தார்.

தமிழ்நாடு தமிழருக்கே

04.10.1937-இல் சென்னையில் கடந்த இந்கு எதிர்ப்புக் கூட்டத்தில் தனித் தமிழில் பேசினார். சென்னைக் கடற்கரையில் நடந்த கூட்டத்தில் ‘தமிழ்நாடு தமிழருக்கே” எனும் தீர்மானத்தை முன்மொழிந்தனர். இக் கூட்டத்தில் இலட்சம் பேர் திரண்டிருந்தனர்.

மறைமலையடிகளைக் காங்கிரசு பாராட்டியதில்லை. மறைமலையடிகள் எனப் பெயரை மாற்றிய போது, காங்கிரசார் மரஞ் செடிகொடிகள் என்று கேலி செய்தனர். 1990- களில் காங்கிரசார் மறைமலையடிகள் தொடர் வண்டி நிலையத்திற்குக் காமராசர் நகர் என்று பெயர் சூட்டுமாறு கிளர்ச்சி செய்தனர்.

காந்தியின் பலகருத்துகள் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாதவை என மறைமலையடிகள் எழுதினார்.

பகுத்தறிவாளர்

ஈசனும் உமையுமே கடவுள் என்ற கருத்தில் நம்பிக்கை இழந்து விட்டேன். கடவுளால் மனிதனுக்கு ஏதேனும் செய்ய முடியவில்லை. அனைத்தும் நம் முயற்சியிலே சார்ந்துள்ளன என்று எழுதியிருக்கிறார்.

மறைவு

அடிகளார் 15.09.1950-இல் இயற்கை ஏய்தினார். அவரின் 150-ஆவது பிறந்தநாளின் போது அவரை நினைவு கூர்ந்து போற்றி, பாராட்டி அவ்வெழுச்சிகளைத் திரும்பப் பார்ப்போமாக!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *