செ.பராந்தகன்
உடல் பருமன் என்பது உடலில் அதிகப்படியான கொழுப்பு சத்து சேர்ந்து உடல் நலத்தை பாதிக்கும் ஒரு நாள்பட்ட நிலை. பிறந்த குழந்தை கொழுகொழுவென்று இருந்தால் நாம் மகிழ்கின்றோம். அதுவே மழலைப் பருவம் தாண்டியும் நீடித்தால் நாம் கவலைப்படுகிறோம். எனவே உடல் பருமன் என்பது உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலை. தனிப்பட்ட ஒருவரின் இயலாமை அல்ல. உடல் பருமன் என்பது எடை பார்க்கும் கருவி மற்றும் வெளிப்புறத் தோற்றத்தோடு தொடர்புடையது மட்டுமல்ல .உடலில் கொழுப்பு சத்து அதிகரித்தால் பல உறுப்புகள் பாதிப்படையும் உடல் பருமன் ஓரு இரவுக்குள் வருவது அல்ல .பல வருடங்கள் அமைதியாக வளர்ச்சி அடைந்து பின் வெளிப்படும். உடல் பருமன் 224 வகை உடல்நலக் கோளாறுகளுக்கு கதவை திறக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன. பருமனால் வரும் நோய்கள் சர்க்கரை நோய், இதயக் கோளாறுகள், கல்லீரலில் கொழுப்பு சேர்தல், அதிக ரத்த அழுத்தம் ,உறக்கம் சம்பந்தப்பட்ட உபாதைகள், நாளமில்லா சுரப்பி கோளாறுகள், சுவாசம் சார்ந்த இன்னல்கள் மூட்டு தசை நோய்கள் போன்றவை ஆகும். உடல் எடையை கூடுவதை ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்தி விட்டால் பின்னாளில் பல நோய்கள் தோன்றுவதை தடுத்து விடலாம். உடல் எடையை கூடுவது எப்படி ?நாம் உண்ணும் உணவுக்கு ஏற்ப உடற்பயிற்சி இல்லாமை ஒரு முக்கிய காரணம். ஆனால் அதிகமாக உணவு உண்ணுதல் மட்டுமே முழு காரணம் என்று சொல்ல முடியாது. அதிக இனிப்பு வகை உணவுகளை உண்பது, அதிக அளவு உணவு எ உண்பது, உடற்பயிற்சியின்மை, தூக்கமின்மை, பரம்பரை காரணங்கள், மன அழுத்தம், பதப்படுத்தப்பட்ட உணவுகள் உண்ணுவது ,சில வகை மருந்துகள் உண்பதாலும், உண்டது போதும் என்ற உணர்வு இல்லாமல் போவது போன்ற காரணங்களால் உடல் பருமன் அதிகரிக்கலாம். உடல் பருமனால் ஏற்படும் அசொளகரியங்கள் பின்வருமாறு .உடல் எடை அதிகரித்தால் நாம் அன்றாடம் வேலைகளை செய்வது கடினமாகும். நடக்கும்போது மூச்சு திணறல் மூட்டு வலி ஏற்படும் .சர்க்கரை அளவு அதிகரிக்கும். இந்தியாவில் பலர் சரியான உடல் எடையுடன் ஒல்லியாக இருந்தாலும் வயிற்றுப் பகுதியில் அதிக கொழுப்பு படிந்திருக்கும். பெண்களுக்கு இடுப்புப் பகுதியில் கொழுப்பு சேரும். இந்த ஒல்லியான கொழுப்பு சேர்ந்த நிலைக்கு (Thin fat phenotype ) என்று பெயர் .தமிழில் ஒல்லியான கொழுப்பு வரையறை என்று சொல்லலாம். பலர் எடை குறைப்பில் ஆர்வம் காட்டி குறைத்தாலும் அதை தக்க வைக்க சிரமப்படுவார்கள். ஏனெனில் நமது உடலானது குறைந்த எடையை திரும்ப பெற முயற்சிக்கும். மீண்டும் மீண்டும் முயற்சிக்கும். ஆகவே அதிக பசி எடுக்கும்.
பரிசோதனைகள்
மருத்துவ ஆலோசனையின் பெயரில் உயரம் ,எடை, இடுப்பு சுற்றளவு, ரத்தத்தில் சர்க்கரை, கொலஸ்ட்ரால், கல்லீரல் பரிசோதனைகள் செய்யலாம். ஆரம்ப நிலையிலே கண்டுபிடித்து தக்க வாழ்வியல் முறை மாற்றங்களால் இதய நோய், கல்லீரல் நோய், சர்க்கரை நோய் வராமல் தடுக்கலாம். உடல் எடையை எவ்வாறு கையாள்வது? சரியான உணவு முறைகள், முறையான உடற்பயிற்சி, ஆழ்ந்த உறக்கம், மன அழுத்தம் தவிர்த்தல், மற்றும் மருத்துவரின் ஆலோசனையோடு மருந்துகள் துணையோடு உடல் பருமனை கட்டுக்குள் கொண்டு வரலாம். சின்ன உடல் அசைவுகள், மற்றும் சின்ன உடற்பயிற்சிகள் கூட நல்ல மாற்றங்களை உண்டு பண்ணும். நடைப்பயிற்சி நல்ல பயன் தரும். உணவு கட்டுப்பாடு என்பது பட்டினி கிடப்பது அல்ல. மெதுவாக உணவு உண்பது, சிறிய அளவு வீட்டில் சமைத்த உணவை உண்பது, சரியான இடைவெளி விட்டு உண்பது ,அடிக்கடி நொறுக்கு தீனி மற்றும் இனிப்பு வகைகளை உண்பதை தவிர்ப்பது ,அதிக அளவில் காய்கறி பழங்களை உண்டு உடல் எடையை கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம். சரியான புரிதலோடு வாழ்வியல் மாற்றங்களை தொடர்ந்து கடைபிடித்து வந்தால் உடல் எடை கூடுவதிலிருந்து விடுபட்டு நல்வாழ்வு வாழலாம்…
Leave a Reply