வர்ம அறிவியல் மாமேதை மூலச்சல் Dr.T.இராஜேந்திரன்
சென்ற மாத இதழின் தொடர்ச்சி…
உயிர்களின் தோற்றம்
7.2 முதல்நிலை ஒருசெல் உயிரிகளின் தோற்றம் (Prokaryotes)
நியூக்ளியோ புரோட்டீன்கள் தொடர்ந்து தனக்குள்ளே தானே இரண்டாய் பிளவடையும் இந்த செயலானது ஒருசெல் போன்ற உயிரிகள் கடலில் தோன்ற காரணமானது. அறிவியலறிஞர் ஒப்பாரின் கருதுகோள்படி, நியூக்ளியோ புரோட்டீன்களுடன் கூடிய கோசர்வேட்ஸுகளே முதல் செல்லுலார் உயிரிகளாகும். இவைகள் அனைத்தும் இன்றைய பாக்டீரியாக்களுக்கு ஒப்பானவையாக கருதப்படுகிறது. காற்றற்ற இடமான கடலுக்குள் மாறுபட்ட அமைப்புகளைக் கொண்ட இந்த முதல்நிலை பாக்டீரியா போன்ற புரோகேரியோட்டுகள் (Prokaryotes) படிப்படியாக கடலில் உள்ள உயிரற்ற கரிம சத்துக்களை உண்டு, நிலைத்து வாழ்வதற்கு போராடிக்கொண்டிருந்தன. இந்த போராட்டத்தில் மிகமிக முந்தைய புரோகேரியோட்டுகளிடம் காணப்பட்ட சில நொதிகள் (Enzymes வினையூக்கிகளாக (Cata;ysts) செயல்பட்டு, கடல்நீரின் கனிமப்பொருட்களிலிருந்து எளிய வகை கார்போஹைட்ரேட்டுகளை உருவாக்கின. இதுவே தன்வினையாக்கம் எனப்பட்டது (Auto trophism).
இந்த அடிப்படையில், காற்றற்ற சூழல் உயிரிகளின் பிரிதலிலிருந்து கரிம மூலக்கூறுகள் உருவாக்கத்திற்கான ஆற்றல் பயன்படுத்தப்பட்டது. இதனால், இது வேதியல் தன்வினையாக்கம் (Chemo auto trophism) என்று அழைக்கப்படுகிறது. இயற்கை தேர்வின் சாதகமான வளர்ச்சியின்போது தன்வினையாக்கமானது (Auto trophism) தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருந்தது. இந்த உருவாக்கப்பொருளை இன்றைய ஆழ்கடல் கந்தக பாக்டீரியாக்களுக்கு ஒப்பிடலாம் (Sulfur bacteria). பின்னர், சில குறிப்பிட்ட தன்வினையாக்க பாக்டீரியாக்கள், முன்னோடி உயிரிகள் குளோரோபில் நிறமிகளை (Bacterio chlorophylls) கடல்நீரின் மக்னீசியம் போர்பைரினிலிருந்து (Magnesium porphyrin) உருவாக்கம் செய்தன. இந்த நிறமிகள் கார்போஹைட்ரேட்டுகள் உருவாக்கத்திற்கு தேவையான சூரிய ஆற்றலை, சூரியஒளியை கிரகிப்பதன் மூலம் பெற்றன. இன்றும் கூட கடலில் உள்ள ஒருவகை கந்தக பாக்டீரியாக்களில் இந்த வகை தன்வினை ஒளிச்சேர்க்கை (Photo synthetic auto trophysm) நடைபெறுவதைக் காணமுடிகிறது.
தொடர்ந்து பாக்டீரியா குளோரோபில்களின் மூலக்கூறு அமைப்பில் ஏற்பட்ட குறிப்பிட்ட மாறுபாடுகள் உண்மையான குளோரோபில் உருவாவதற்கு காரணமாகியது. இந்த உருவாக்கமே ஆரம்பகால புரோகேரியோட்டுகள் தண்ணீரின் உதவியால் கந்தகம் அல்லது வேறு கனிம மூலக்கூறுகளிலிருந்து கார்போஹைட்ரேட்டுகளை தயாரிப்பதற்கு வழிவகுத்தது. இந்தவகை குளோரோபில்களை (பச்சைய நிறமிகளை) கொண்ட புரோகேரியோட்டுகளை இன்றைய நீல பச்சை (Blue green algae) பாசிகளுக்கு ஒப்பிடலாம்.
7.3 முதல்நிலை இருசெல்உயிரிகளின் தோற்றம் (Origin of Eukaryotic cells)
கடலில் உருவான நீலப்பச்சைப் பாசிகளிலிருந்து ஆக்ஸிஜன் மற்றும் தனித்து விடப்பட்ட ஆக்ஸிஜன் மூலக்கூறுகள் ஆரம்பகால பூமியின் பரப்பில் கொஞ்சம் கொஞ்சமாக பரவ ஆரம்பித்த சூழல் ஒரு புரட்சிகரமான நிகழ்வாகும். இந்த ஆக்ஸிஜன் பூமியிலுள்ள மீத்தேன், அம்மோனியா இவைகளோடிணைந்து கார்பன் டை ஆக்ஸைடு, நைட்ரஜன், நீர் போன்றவைகளை உருவாக்கின. இது பழைய சூழலிலிருந்து பல்வேறு மாற்றங்களுடன் கூடிய ஒரு புதிய சூழலை பூமியில் உருவாக்கியதால் பூமியில் மாறுபட்ட உயிரிகள் தோன்றுவதற்கு சாதகமாக அமைந்தது. ஆக்ஸிஜன் அதிகரிப்பினால் ஓசோன் படலம் உருவாகி, சூரிய ஒளியிலிருந்து வரும் புறஊதாக்கதிர்களை தடுத்ததன் காரணமாக கடலில் உள்ள உயிரிகள் படிப்படியாக நிலத்தை நோக்கி நகரத் தொடங்கின. இவ்வாறு ஆக்ஸிஜன் வெளிப்பாடு காரணமாக மேலும் மேலும் சுவாசிக்கும் ஆற்றலுடைய உயிரிகள் பூமியின் மேல் உருவாகத் தொடங்கின. இந்த நிலை சுமார் 270 கோடி ஆண்டுகளுக்கு முன் நிழ்ந்ததாக அறிவியலாளர்கள் கருதுகின்றனர். எனினும் புரோகேரியோட்ஸ் எனப்படும் முதல்நிலை ஒருசெல் உயிரிகளின் உண்மையான நியூக்ளியஸும், மைட்டோகாண்டிரியா மற்றும் பல்வேறு ஆர்கனைஸுகளும் சுமார் 150 கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடலில் தோன்றிய உயிரிகளில் தான் காணப்பட்டன.
இங்ஙனம் தோன்றிய முதன்மை உயிரிகளை அடிப்படையாகக் கொண்டு, படிப்படியாக சிக்கலான பல்லுயிர்கள் தோன்றத் தொடங்கின. இயற்கைத் தேர்வுக்கும், மரபணு மாற்றங்களுக்கும் ஏற்ப அவைகளின் பரிணாம மாற்றங்களும், வளர்ச்சிகளும் தோற்றமளித்தன. அந்த வளர்ச்சிகளின் மாற்றங்கள் ஒன்றுக்கொன்று சார்புடைய உருவாக்கங்களைப் பெற்றிருந்தாலும் அவைகளின் உணவுத்தேவைகள் ஒன்றுக்கொன்று நன்மைபயப்பனவாகவே அமைந்து காணப்பட்டது. ஆரம்பகால உயிரிகள் கார்பன்டை ஆக்ஸைடை பயன்படுத்தி சூரியஒளியின் ஆற்றலால் ஒளிச்சேர்க்கை அடிப்படையில் தங்களுக்கு தேவையான உணவை பெறத்தொடங்கின. அவைகளால் வெளிவிடப்பட்ட ஆக்ஸிஜன் அடுத்த உயிர்களுக்கு பயன்மிக்கதாக மாறின. இப்படி தொடர்புடைய பரிணாம மாற்றங்கள் சிறியவைகளிலிருந்து பெரியவைகளாக தோன்றி பல்லாயிரக்கணக்கான உயிரிகளின் பெருக்கத்திற்கு காரணமாகிவிட்டன.
அறிவியல் அறிஞர்கள் உயிரிகளின் பரிணாம வளர்ச்சியை காலசூளல் அடிப்படையில், பல்வேறு கட்டங்களாக ஆய்ந்தறிந்துள்ளனர். அந்த அடிப்படையில், ஆரம்பகாலத்தில் தோன்றிய ஒருசெல் உயிரி முதல் பாக்டீரியா மற்றும் அக்கால தாவரங்களும், அந்த ஒரு செல் உயிரியிலிருந்தே பலகோடி ஆண்டுகளாக பல்வேறு பரிணாம மாற்றங்களைப் பெற்று புல், பூண்டு, தாவரங்கள், மொலஸ்கா, கடற்புழுக்கள், எக்கிடெர்ம் என தோன்றிய காலத்தை இயோசோயிக் காலம் என குறிப்பிடுகின்றனர். இதைத் தொடர்ந்து பல்வேறு தாவரங்களும், பிராணிகளும் தோன்றிய அடுத்த காலகட்டத்தை பாலிசோயிக் காலம் என அழைக்கின்றனர். இன்றிலிருந்து ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முந்திய கேம்பிரியன் காலத்தில் கடல் பரப்பில் தோன்றிய எந்த உயிரிகளும் கடலை விட்டு பூமியின் மேற்பரப்பிற்கு வரும் தன்மையை அடையவில்லை. இந்த காலகட்டத்தில், கடலில் பூக்கள் உள்ள மரங்களோ, செடிகொடிகளோ தோன்றவில்லை. மேலும் மீன், நீரிலும் நிலத்திலும் வாழ்வன, ஊர்வன, பறப்பன போன்ற எந்த விலங்குகளும் வளர்ச்சியடையவில்லை. தொடர்ந்து இயற்கை சூளலில் விரைவான பரிணாம மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. இதனை சிலூரியன் காலம் என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த காலகட்டத்தில் செடிகளும், கொடிகளும், முதுகெலும்புள்ள பிராணிகளும் அதிகமாக வளர்ச்சியடையத் தொடங்கின. இன்றிலிருந்து 35 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் குறிப்பிடப்படும் டிவானியன் காலத்தில் கடலில் பலவகையான உயிரினங்களும், வகைவகையான மீன்களும் உண்டாகின. இக்காலத்தில் தான் ஆறுகளிலும், நீர்நிலைகளிலும் மீன்கள் பரவத்தொடங்கின. தொடர்ந்து 25 கோடி ஆண்டுகளுக்கு முன்புள்ள கார்னிவோரஸ் காலத்தில் பிரமாண்டமான மரங்களும், செடிகொடிகளும் தோன்றின. கடற்கரைகள், ஆற்றங்கரைகள் போன்றவைகளில் வாழும் தாவரங்களும், உயிரினங்களும் கூட்டம் கூட்டமாய் வளர்ச்சியடைந்தன. இவைகள் கடல்நீரிலிருந்து நிலப்பரப்பை நோக்கி நகர்ந்ததால் வெப்பத்தின் காரணமாக அவைகளின் தோல் உலர்ந்துவிடாமல் இருக்கும்பொருட்டு நீர்நிலைகளை சார்ந்தே வாழ்ந்துள்ளன. இந்த காலகட்டத்தின் முடிவில் தான் ஊர்ந்துவாழும் பிராணிகள் தோன்றின. மேலும், நீர்நிலைக்கு அப்பால் வெகுதூரம் சென்று வாழும் பிராணிகளும் இக்காலத்தின் இறுதியில் தோன்றியவைகளாகும். இதனைத் தொடர்ந்து உண்டான பெர்மியன் காலத்தில் பூத்துக் குலுங்கும் மரங்களும், செடிகொடிகளும் தோன்றி வளர்ந்தன. சூரியவெப்பத்தை தாங்கி நிலத்திலும், நீரிலும் வாழும் பிராணிகளும் பெருகத் தொடங்கின. இதில், வெப்பத்தை தாங்கமுடியாத பல உயிரினங்கள் தானாகவே அழிந்தன. இக்காலகட்டத்தில் தான் கடலுக்குள் தோன்றி வளர்ந்த தாவரங்களில் பல நிலத்திற்குள்ளும் பரவத் தொடங்கின. டைனோசர், பறக்கும் டிராகன், பாம்புகள் போன்ற பல விலங்குகள் பரிணாம வளர்ச்சியடைந்து எங்கும் காணப்பட்டன. குட்டிப்போட்டு பாலூட்டும் விலங்குகளும் தோன்றின. இவை இன்றிலிருந்து மூன்றரை கோடி ஆண்டுகளுக்கு முன்னே தோன்றியதாக கருதப்படுகிறது. தொடர்ந்து உண்டான பரிணாம வளர்ச்சியின் காரணமாக பல்வேறு புதிய உயிரினங்கள் தோன்றின. இதனைத் தொடர்ந்து மூன்றாவது கற்பகாலமாகிய சுமார் 20 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் பூமியில் ஏற்பட்ட இயற்கை சூழல் மாற்றங்களுக்கு ஈடு கொடுக்க முடியாத டைனோசர் போன்ற ராட்சத விலங்குகள் பெரும்பாலும் அழிந்துவிட்டன. இக்காலத்தின் மத்தியப்பகுதியில் தான் இன்று நாம் காணும் பெரும்பாலான விலங்குகள் உருவாகத் தொடங்கின. இதன் முடிவில் மான், குதிரை, காண்டாமிருகம், யானை, வாலில்லா குரங்குகள் மற்றும் மனிதக்குரங்குகளும் தோன்றின.
தொடர்ந்து பத்து லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் உண்டான நான்காம் கற்பகாலத்தில் தான் குரங்கு மனிதன் தோன்றினான். பித்திக்காந்திரோபஸ் என அழைக்கப்படும் அவன், வேலை செய்வதற்கான சில கருவிகளையும் பயன்படுத்தத் தொடங்கினான். இந்த குரங்கு மனிதனுடைய வழித்தோன்றல்களே நம்முடைய மூதாதையர்கள் என பரிணாமம் மற்றும் உயிர் வேதியியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்1.
மனித வளர்ச்சிப் படிநிலையிலும் பல தொடர்நிலைகள் உள்ளன என்பதைக் கண்டறிந்த உயிரியல் ஆய்வாளர்கள், குரங்கு மனிதனிலிருந்து வளர்ச்சியுற்ற மனிதனுக்கிடையேயான படிநிலை வளர்ச்சியின் இணைப்பு மனிதர்களை தேடத் தொடங்கினர். அந்த அடிப்படை தேடலில் தங்கள் கைகளுக்கும், கண்களுக்கும் எட்டியவைகளை இணைத்துக் கொண்டவைகளைக் கொண்டு முடிந்தவரை விளக்கி உள்ளனர் என்பதுதான் இன்றைய கண்டுபிடிப்புகளின் உண்மையாகும்.
அந்த தேடலில் மரபணு ஆய்வாளர்கள் 10 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் மிகப்பெரிய மூளையுடன் தோன்றிய உயிரினமே “ஏப்” எனப்படும் இனமாகும். இதில், இரண்டு பெரும் இனங்கள் இருந்தன. இவைகளிலிருந்து கொரில்லா வகை உயிரினங்கள் தோன்றி அவைகள் மலைகள், எரிமலைப் பள்ளத்தாக்கு என தங்கள் வாழ்விடத்தை அமைத்துக்கொண்டதன் விளைவாக சக ஏப் இனங்களிலிருந்து ஜீன் கலப்பில்லாமல் தனிக்கூட்டமாகி விட்டது. அடுத்து, சிம்பன்ஸி மற்றும் மனித வகையறாக்களின் மூதாதையர்கள் தோன்றினர். இஃது அடுத்த 5 மில்லியன் ஆண்டுவாக்கில் இரண்டாகப் பிரிந்து மனித மூதாதையாகவும், சிம்பன்ஸியின் மூதாதையாகவும் மாறின2.
மனிதர்களுக்கும், சிம்பன்ஸிகளுக்கு மிடையே உள்ள மரபணு உறவை, எளிதில் கண்டுபிடிப்பதற்கு அவ்வணுக்கூறில் உள்ள புரத வரிசைகளைக் குறிப்பிடும் எழுத்துப்பிழைகள் பெரிதும் உதவுகின்றன. அதன் அடிப்படையில் சிம்பன்ஸிக்கும், கொரில்லாவுக்கும் உள்ள டி.என்.ஏ. ஒற்றுமையை விட சிம்பன்ஸிக்கும், மனிதனுக்குமே டி.என்.ஏ. யில் அதிக ஒற்றுமை உள்ளது. பொதுவாக இவ்வகை ஒற்றுமைகளை எளிதில் கண்டுபிடிக்க முடிந்தாலும் அவைகளின் உறவுகள் எப்போது பிரிந்தன என்பதைக் கண்டுபிடிப்பது தற்போதைய அறிவியல் வளர்ச்சியில் சற்று கடினமாகவே உள்ளது என்பதே மரபணு ஆய்வாளர்களின் கருத்தாகும். ஏனெனில், மரபணு எழுத்துப்பிழைகளின் எண்ணிக்கையே இக்கால கட்டங்களை நிர்ணயிக்கும் அடிப்படை மூலக்கடிகாரம் ஆகும்3.
இரு இனங்களுக்கு இடையேயான மரபணு எழுத்துப்பிழைகள் அதிகமாக இருப்பின் அவ்வினங்கள் பிரிந்து வெகுகாலங்கள் ஆகியிருக்க வேண்டும் என்பதும் பிழைகள் குறைவாக இருப்பின் குறைந்தகாலமே ஆகியிருக்க வேண்டும் என்பதுமே இன்றைய பரிணாம காலகட்ட கணிப்பாகும். இவைகளை கணிப்பதற்கு இன்று மைட்டோகாண்டிரியாவின் ஜீன்களையே அதிகம் பயன்படுத்துகின்றனர். அந்த அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டதில் சிம்பன்சியும் மனிதனும் பிரிந்த காலம் 10 மில்லியன் ஆண்டுகளாக இருக்கலாம் என கணித்துள்ளனர்.
இதன்படி, 10 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இருவருக்கும் ஒரே மூதாதையரே இருந்துள்ளனர் என்பதே உண்மையாகும். பொது மூதாதையரின் ஒரு பிரிவினரின் இரண்டாம் குரோமோசோம் வேறொரு குரோமோசோமுடன் ஒட்டிக்கொண்டதைத் தவிர வேறு வேற்றுமைகள் மனிதனுக்கும் சிம்பன்சிக்குமிடையே காணப்படவில்லை. இந்த இரண்டாம் குரோமோசோமின் இணைவே எதையும் நிதானமாக சிந்தித்து செயல்படுத்தும் திறன் படைத்த மனிதர்களை உருவாக்கி உள்ளது என்பது மட்டுமே உண்மை4. இங்ஙனம் தோன்றிய மனித இனத்துக்கும், சிம்பன்ஸிக்கும் 98 சதவிகித ஒற்றுமை உள்ளன என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும். கொரில்லாக்களுக்கும், நமக்கும் 97சதவீதம் ஒற்றுமை உள்ளது.
நம்மை இணைக்கும் விடுபட்ட (missing link) அந்த இடையினம் எது என்பதைக் கண்டறிய தேடியபோது பூமிக்கடியிலிருந்து பழைய எலும்புகள் பல கிடைத்தன. அது மனித குரங்கு வடிவினை உடையதாக இருந்ததால் அதற்கு “ஆர்டி பித்தேகஸ்” (Ardi pithecus) என்று பெயரிட்டு ஆய்வாளர்களின் விவாதத்திற்கு வைக்கப்பட்டது. விவாதத்தில் இதன் இடுப்பெலும்பு நிமிர்ந்து நடக்கும் அமைப்பிலிருந்தால் இதைவிட முந்தைய காலத்திலுள்ளவைகளே நமது மூதாதையர் என இதனை கைவிட்டனர்.
ஜாவாத்தீவில் உணங்குட்டான் என்ற குரங்கினம் ஏராளமாக உள்ளது. இதனைக் கண்டறிந்த டச்சு பேராசிரியர். ‘டூபி’ என்பவர் ஆம்ஸ்டர்டாம் பல்கலைக்கழகத்திலிருந்து ஜாவாவின் குரங்கினத்தில் தன் ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். மனிதனின் விடுபட்ட பரம்பரை இணைப்பை கண்டுகொள்ளலாம் என எண்ணி தேடிய அவர் 1891-ஆம் ஆண்டு “சாலோ” ஆற்றின் கரையில் தினுல் என்னுமிடத்தில் சில மண்டை ஓடுகளையும், தொடை எலும்புகளையும் கண்டுபிடித்து அதுவே விடுபட்ட பரம்பரை என அறிவித்தார். ஜாவாவில் கண்டுபிடித்த அந்த மனிதனுக்கு “பித்தகாந்த்ரோரெக்ட்ஸ்” என்று பெயர் சூட்டினார். கிரேக்க மொழியில் “பித்தகோ” என்றால் குரங்கு என்று பொருள். “அந்தரோபஸ்” என்றால் மனிதன் என்று பொருள். “ரெக்டஸ்” என்றால், நிமிர்ந்து நடந்த குரங்கு மனிதன் என்றும் பொருள். பேராசிரியர் டூபி மனிதகுலத்தின் முதல்வன் இவனே எனக் கருதினார். இவனுக்கு ஜாவாமனிதன் என பெயரிட்டார்5.
1912-ம் ஆண்டு லண்டன் நகருக்கு அருகில் உள்ள பில்ட் டவுண் எனும் இடத்தில் “சார்லஸ் டார்வின்” சாலை போடும் பணியாளர்கள் கொட்டிய கற்குவியலுக்குள் ஒரு பெரிய மனித தாடை எலும்பைக் கண்டார். அதனை ஆய்வுசெய்த சார்லஸ் டார்வின், லண்டன் மியூசியத்தின் அறிஞர் “ஆர்தர் சுமித்தும்” பணியாளர் கற்கள் எடுத்த இடத்தினை தோண்டுமாறு கேட்டுக்கொண்டனர். அங்கு ஒரு மண்டை ஓடு கிடைத்தது. அதை மேலும் ஆய்வு செய்ததில் பீஜிங்கில் கிடைத்த குரங்கு மனிதனுக்குப் பிறகு தோன்றிய மனிதன் இவன் என முடிவு செய்து, அவனுக்கு “இயோன்த்ரோபஸ் டாசோனி” என்று பெயரிட்டனர். இதற்கு டாசன் கண்ட “உதய கால குரங்கு மனிதன்” என்று பொருள்6.
ஜெர்மனியில் “ஹீடல்பர்க்” நகருக்கு அருகே நெச்சாறு என்ற ஒரு ஆறு ஓடுகின்றது. அதில், 1907-ஆம் ஆண்டு சில மண்டை ஓடுகளும், எலும்புகளும் கண்டெடுக்கப்பட்டன. அதனை ஆய்வுசெய்த அறிஞர்கள் இவன் “பில் டவுண் மனிதனான இயோஸ்ரோபஸ் டாசோனி”-க்கு பின்னர் தோன்றியவன் என முடிவுசெய்து அவனுக்கு ஹீடல்பர்க் மனிதன் எனப் பெயரிட்டனர்.
1857-ஆம் ஆண்டு ஜெர்மனியின் நியாண்டர்தால் மலைச்சரிவில் இருந்த குகையில் சில மண்டை ஓடுகளும், எலும்புகளும் கண்டுபிடிக்கப்பட்டன. இதனை ஆய்வுசெய்த அறிஞர்கள், உலகின் மிகப் பழமையான மனித இனமாக கருதிவந்தனர். ஆனால், 1907-ஆம் ஆண்டு கிடைத்த ஹீடல்பர்க் மனித எலும்புகளை ஆய்வுசெய்த பின்னர், இந்த நியாண்டர்தால் மனிதன் ஹீடல்பர்க் மனிதனுக்கும் பிந்தியவன் என முடிவுசெய்தனர்.
பிரான்ஸ் நாட்டிலுள்ள குரோமாக்னன் என்ற இடத்தின் ஒரு குகையிலிருந்து கி.மு. 35000-10000 ஆண்டுவாக்கில் வாழ்ந்த மனிதர்களில் சில மண்டை ஓடுகளும், எலும்புகளும் கிடைத்தன. இந்த எலும்புகளை ஆய்வுசெய்த வல்லுநர்கள் இவர்களை குரோமாக்னான் மனிதன் என பெயரிட்டனர். இவர்களே பூரண வளர்ச்சியுற்ற மனிதர்கள் என முடிவுசெய்தனர்7. இவனது சராசரி உயரம் 180 செ.மீ ஆகும். இவன் மூளையளவு 1600 க.செ.மீ. இஃது இன்றைய மனித மூளையை விட 200 க.செ.மீ அதிகம். கி.மு. 6500 வாக்கில் மேற்காசியாவிலிருந்து ஐரோப்பாவிற்குள் குடியேறிய புதிய கற்கால நாகரீக மக்கள் அங்குள்ள அதிக உயரமும், நாகரீகமற்ற குரோமாக்னான் மக்களை அரக்கர்களாக தங்கள் புராணங்களில் குறிப்பிட்டுள்ளதாக ஐரோப்பிய வரலாற்றாய்வாளர்கள் விவரிக்கின்றனர்8.
அறிவியல் அறிஞர்கள் தங்கள் தொடர் ஆய்வுகள் மூலம் கண்டறிந்தபடி, தென்னாப்பிரிக்காவின் முதல் குரங்கு மனிதனிடமிருந்து மனிதனாகி பரிணமித்துள்ளதாக முடிவு செய்துள்ளனர். அதன் அடிப்படையில், ஆப்பிரிக்க குரங்கு மனிதன், அடுத்து ஜாவாவில் கண்டறிந்த ஜாவா மனிதன் அவனுக்குப்பின் சற்று வளர்ச்சி அடைந்த சீன டீஜிங் டவுன் மனிதன், அதனைத் தொடர்ந்து ஹீடல் பர்க் மனிதன், பின்னர் நியாண்டர்தால் மனிதன், அதற்குப்பின் வளர்ச்சியுற்ற குரோமாக்னான் மனிதன், இவையனைத்தும் அங்குமிங்கும் கிடைத்த எலும்புகளின் ஆய்வு சார்ந்த உண்மைகளாகும்.
1. மனிதகுல வரலாறு – ஆசிரியர், S.A பெருமாள், பக். 43-47
2. மனிதர்களே, க. மணி, பக். 49
3. மனித ஜீனோம், க.மணி, பக். 50
4. மனித ஜீனோம், க.மணி, பக். 50
5. மனிதகுல வரலாறு, எஸ். ஏ. பெருமாள், பக். 59
6. மனிதகுல வரலாறு, எஸ்.ஏ. பெருமாள், பக். 60
7. மனிதகுல வரலாறு, எஸ்.ஏ. பெருமாள், பக். 61
8. மீண்டும் ஆரியர்களை தேடி, த. தங்கவேல், பக். 84
Leave a Reply