சித்த மருத்துவத்தை அரசு வளர்க்க வேண்டும்!

சித்த மருத்துவத்தை அரசு வளர்க்க வேண்டும்!

  • By Magazine
  • |

– முனைவர் முல்லைத்தமிழ்

இந்திய பாரம்பரியத்தில் தொன்மையான கலாச்சாரம் திராவிட கலாச்சாரம். கி.மு.க்களில் வாழ்ந்த பழங்கால மக்கள் இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் பரவி வாழ்ந்துள்ளனர். இவர்களின் வாழ்க்கை சூழ்நிலைக்கேற்ப மொழி வளர்ச்சிகளை ஏற்படுத்தி வெறும் பேச்சு வழக்கிலேயே வழங்கி வந்தனர். இவைகளில் மிக முக்கிய நான்கு பிரிவுகளாக விளங்கிய இந்தோ ஆரிய மொழிகளாக இந்தி, குஜராத்தி, அசாமி, வங்காளி முதலியனவும் திராவிட மொழிகளாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலியனவும் சைனோ – திபெத்திய பர்மிய மொழிகளாக போடோ ராகா, மைதிலி போன்றவைகளும், ஆடிரிக் மொழிகளாக சாதாலி, கோரா, முண்டாரி முதலியவைகளும் இன்று நான்கு மொழி குடும்பங்களாக வழங்கப்படுகின்றன.  பின்னர் அன்னிய மொழிக்கலப்புகளும் கலாச்சார சேர்க்கைகளும் பன்நெடுங்காலத்திற்குப் பிறகு புதிய மொழியாகிய சமஸ்கிருதம் (செம்மையாக செய்யப்பட்டது) தோன்றுவதற்கு வழிகோலியது.

இந்த சமஸ்கிருதமொழிக்கு எழுத்து வடிவம் இன்றுவரையிலும் இல்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். கலாச்சாரத்திலும் காலவளர்ச்சியிலும் பங்கேற்று வளர்ச்சியடைந்த மேல்தட்டு மக்கள் தங்கள் சுயகவுரவத்தை காப்பாற்றும் வண்ணம் இம்மொழியை பேசிவந்தனரே தவிர சாதராண மக்களிடம் இது பரவி வளரவில்லை பரவ விடப்படவும் இல்லை. அரசன், மந்திரி, ஜமீன்கள், பூசாரிகள் என உயர்நிலையில் மட்டும் வழங்கப்பட்டு வந்ததால்; சிறந்த கல்விமான்களின் கருத்துக்கள், மருத்துவ வல்லுநர்களின் நு£ல்கள் அனைத்தும் சமஸ்கிருத பேச்சு வழக்கிற்கு மாற்றப்பட்டன. ஏனெனில் அரசும் அரசு சார்ந்த துணையும் இம்மொழி வல்லுநர்களும் ஒருசேர இணைந்து இருந்தமையால் அஃது எளிதாயிற்று.  அதனால்தான் அக்கினிவேசர் எழுதிய சரகசம்கிதை என்ற தமிழ் மூல நூல் பிற்காலத்தில் சமஸ்கிருத நூலாக மாறிவிட்டது. இது இன்றும் பலருக்கு தெரியாத-புரியாத விசயமாகும். சரி இஃது இப்படி என்றால் எத்தனை தமிழ் நு£ல்கள் இப்படி மாறியிருக்க வாய்ப்பு உண்டு என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

இந்திய மொழிகள் அனைத்தும் மிக பிற்பட்ட காலங்களிலேயே எழுத்து வடிவம் கண்டுள்ளன. சித்திர எழுத்துக்களும், குறியீடுகளும் கொண்டு வெறும் பேச்சு வழக்கிலேயே வழங்கப்பட்ட இன்றைய மொழிகளுக்கு “சம வயங்கச் சூத்திரம்” என்ற சமண நு£லின் 18 வகையான எழுத்து வடிவங்களே பிற்காலங்களில் பயன்பட்டுள்ளன.  இந்த எழுத்து வடிவங்களுள் பாம்மி (பிராமி) தாமிழி (தமிழ்) எனும் இருவகை எழுத்து வடிவங்களே தமிழ்மொழியை எழுதுவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளன.  பிராமி எழுத்துக்கள் அசோகர் கல்வெட்டுகளிலும் தமிழ்நாட்டு குகைகளிலும் இன்றும் காணப்படுவது இதற்கு சான்றாகும். இந்த பிராமியின் திரிந்த வடிவங்களே இந்தியாவின் எல்லா மொழி எழுத்துக்களையும் எழுத பயன்பட்டன. இதில் தென்பிராமி அல்லது தாமிழிலிருந்து தோன்றிய எழுத்துக்களே திராவிட மொழிகள் எழுதுவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளன. இத்தகைய பாரம்பரியமிக்க திராவிடமொழிக் கலாச்சாரத்தில் செவிவழி செல்வமாக வளர்ந்த மருத்துவம் தான் சித்த மருத்துவம். மேல்தட்டு மக்கள் சாதாராண மக்களைத் தொட்டுப் பேசுவதையே தீட்டாக நினைத்த காலத்தில் யாரிடம் யார் மூலம் இம்மருத்துவம் வளர்ந்திருக்கும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். பழந்தமிழ் பரம்பரையினர் இந்தியா முழுவதும் வாழ்ந்து அனைவரையும் ஒன்றாக மதித்து வாழ்ந்தவர்கள். எல்லோர் உறவையும் நேசித்த வர்கள். ஆனால் சாதாரண ஏழை மக்கள் மந்திரவாதிகளாக இகழப்பட்டனர். அதே மந்திரத்தை ஓதிய மற்றவர்கள் பூசாரிகளாக மதிக்கப்பட்டனர். மந்திரம் ஒன்றாயினும் தந்திரத்தால் தகர்க்கப்பட்டனர். தென்னிந்திய வரலாறுகளைத் தொகுத்த மேனாட்டு அறிஞர் எட்கார் தாட்சன் இதுபோன்ற பல்வேறு தகவல்களை குறிப்பிடுகின்றார்.  மேலும் மிக ஆரம்பத்தில் பழங்கால மருத்துவங்களை உலகம் முழுவதும் சமயம் சார்ந்த துறவிகளே செய்து வந்துள்ளனர். இந்தியாவில் புத்தரும், மகாவீரரும் தோன்றிய பின்னர்தான் மக்களிடையே துறவுநிலை விழிப்படையத் தொடங்கி உள்ளது. இவர்கள் மருத்துவம் செய்தலை தங்கள் கொள்கையாகவே கொண்டு வாழ்ந்துள்ளனர். ஆனால் பிற்காலத்தில் சமஸ்கிருதம் பேசி வந்த பூசாரிகளோ, துறவிகளோ சாதாரண மக்களை தொடுவதையோ, அவர்கள் நிழல்படுவதையோ, பாவமாகவும், தீட்டாகவும் கருதி வந்துள்ளனர். எனில் இன்றைய மிகப்பழங்கால மருத்துவநூல்களுக்கும் வழிமுறைகளுக்கும் யார் தான் மூலமாக, காரணமாக இருந்திருப்பர். இங்ஙனம் தமிழ் வழியாக வளர்ந்த நு£ல்களின் பல்வேறு மருத்துவ ரகசியங்கள் இந்தியா முழுவதும் பரவி மேல்தட்டு பாசைகளில் மாற்றி வளர்க்கப்பட்டன.  மருந்துகளும், பெயர்களும் அதன் வழியே பெயர் மாற்றங்களையும் பெற்றன. கி.மு.க்களில் இந்திய கலாச்சாரத்தின் மருத்துவ வல்லுநர்களின் வழிவழியான மருத்துவவளங்கள் தமிழ் மருத்துவமாகவும் பின்னர் சித்த மருத்துவமாகவும் வழங்கப்பட்டது.

சித்த மருத்தவம் தமிழர் மருத்துவமாக கடைபிடிக்கப்பட்ட ஆதிகாலங்களிலிருந்தே மந்திரம், ஜோதிடம் (காலக்கணிதம்), மருத்துவம் என பலபிரிவுகள் கடைபிடிக்கப்பட்டு பின்னர் படிப்படியாக மருந்துகளின் வகைகளும் அவைதம் சீரான வளர்ச்சிக்கு பயன்படும் விதங்களும் ஆய்வு செய்யப்பட்டன என்பது உண்மை. எந்த ஆய்வுக்கருவிகளும் இல்லாத காலத்திலிருந்தே அனுபவ வகையில் பல்வேறு சாதனைகளை சித்தர்கள் செய்துள்ளனர். அகமருந்து 32 புறமருந்து 32 என்று அனுபவித்து நான்கு வகைப்பாடுகளையும், குழந்தை மருத்துவம், விசமருத்துவம், மனநோய் மருத்துவம், ஒடிவுமுறிவு மருத்துவம், கண்நோய் மருத்துவம், தலைநோய் மருத்துவம் என பல்வேறு பிரிவுகளையும் தனித்தனியேக் கையாண்டுள்ளனர்.

மேலும் மிக உயரிய உருகுநிலை கொண்ட இரும்பு, செம்பு, தஙகம் போன்ற பலவேறு உலோகங்களை மிக சாதராண வெப்பநிலையில் எந்த அறிவியல் துணையும் இல்லாத காலக்கட்டத்தில் பற்பங்களாகவும், செந்தூரங்களாகவும், கட்டுகளாகவும் செய்துள்ளமை உலக வரலாற்றிலே இல்லாத அதிசயமாகும். அவர்கள் கையாண்ட பல்வேறு நுட்பங்களைக்கூட இன்றுவரை கண்டுபிடிக்க முடியாத நிலையிலே உள்ளன.  மட்டுமன்றி உடலை அழியாமல் காக்கும் கற்ப மருந்துகளின் (செல்கள் எளிதில் சிதைந்து விடுவதை தடுத்து) ஆய்வுகளும் தொகுப்புகளும் இந்த மனித இனம் இருக்கும் வரை பயனுள்ள ஒன்றாகும்.

அடுத்து இன்றைய நவீன மருத்துவத்துறையின் பல்வேறு வளர்ச்சிகளுக்கு முன்னால் வளர்ந்து பூத்துக்குலுங்கிய இந்த மருந்துவத்துறையானது முறையான ஆய்வு செய்யப்பட்டு உலகின் மற்ற மருத்துவத்துறைகளை விஞ்சும் வண்ணம் வளர்க்கப்பட வேண்டுவது தமிழக அரசின் கடமை. அதற்கு அரசானது சித்த மருத்துவ நூல்களையும், அவைகளில் பயின்றுவரும் மருந்துகளையும் மறுபரிசீலினை செய்து, நவீன அறிவியல் நடைமுறைக்கேற்ப மருந்து ஆய்வுகள்செய்து மக்கள் நலனுக்கு பயன்படுத்த முன்வர வேண்டும். அதாவது புகழ்பெற்ற மருத்துவத்துறைக்கு இணையாக உயிரியல் ஆய்வுகளும், உயிர் வேதியல் ஆய்வுகளும் செய்ய முன்வர வேண்டும். அதேநேரம் நவீன விரும்பிகள் இம்மருந்துகளை அயல்நாட்டிற்கு விற்று பொருள் குவிக்கும் நோக்கினையும் அரசு மனதில் கொள்ள வேண்டும். சித்த மருத்துவத்திற்குரிய மருந்துகள், நவீன ஆய்வுகளுக்குட்படுத்தப்பட்டு மிகக்கொடிய நோய்களாகிய நரம்புசிதைவுகள், முதுகெலும்புநோய்கள், தசை சார்ந்த நோய்கள், முடக்குவாதம், பாலவாதம், சோரியாசிஸ் போன்ற நாட்பட்ட தீராத பல நோய்களுக்கும் பயன்படுத்தப்படுமானால் உலக அரங்கில் ஓர் உன்னத இடத்தை பிடிக்கும் நாள் வெகு அருகில் உள்ளது.

தமிழர் மருத்துவம் மருத்துவ உலகிற்கும் மக்கள் வாழ்விற்கும் மகத்தான புதையல்கள் என்பதை இந்த உலகம் அறியவேண்டும். அதற்கு பெற்ற தாயை பேணும் அரசின் துணையும், பிள்ளைகளாகிய மருத்துவ வல்லுநர்களின் துணையும் வேண்டும். வேற்று மருத்துவத்துறை என்றால் மாற்று மனதுடன் பார்க்காத நல்ல மருத்துவர்கள் தோன்றிவிட்டால் நம் மருத்துவம் உலகெங்கும் பரவ வழியும் பிறக்கும். நம் தாய் மருத்துவத்தின் விழியும் திறக்கும். அதனால் பல கொடிய நோய்களுக்கான விடிவும் பிறக்கும் என்பது உண்மை.

எலும்புமுறிவு மருத்துவம் தமிழ் மருத்துவத்துறையில் ஒரு வரப்பிரசாதமாகும். மிக எளியமுறையில் சுமார் எண்பது சதவீத முறிவுகளை மிக விரைவாக குறுகியக்காலங்களில் எந்த பக்கவிளைவுகளும் இல்லாமல் மிகக்குறைந்த செலவில் குணப்படுத்தும் புறமருந்துகளும் அகமருந்துகளும் செய்முறைகளும் நம் வர்ம மருத்துவத்துறையின் தனிச்சிறப்பு அம்சமாகும்.

எனவே இதுபோன்ற ஏராளமான சிறப்பு அங்கங்களைக் கொண்ட அனுபவங்களை தெளிந்து நம் மருத்துவ வல்லுநர்கள் இத்துறை வளர நம்பிக்கையோடு உழைக்கவும்-பயன்படுத்தவும் முன்வர வேண்டும்.

முதுகெலும்பு தேய்வுகள், தசைநோய்கள், நரம்புநோய்கள், தோல்நோய்கள், மூளைச்சுருக்க நோய்கள் என பற்பல நோய்களின் பாதிப்பால் துன்புறும் நோயாளிகள் பல ஆண்டுகள் பலர் அறிவியல் தெளிவுள்ள மருந்துகள் எனக்கூறும் நவீன மருத்துவர் பலரிடம் மருத்துவம் செய்து சுற்றி களைத்து, சலித்தும் போன பின்னர் தமிழ் மருத்துவர்களிடம் வந்து நல்ல பலனைப் பெற்றுள்ளனர். பலர் முழுமையான தீர்வையும் சிலர் குறிகுணங்களிலிருந்து விடுதலையையும் அடைந்துள்ளனர். இத்தகைய சிகிட்சைமுறைகள் எங்கு நடைபெறுகிறதோ அவைகளை அரசும், சித்த மருத்துவத்துறையும் பதிவுபெற்றவர் பதிவுபெறாதவர் என்ற குறுகிய சிந்தனைப் பாகுபாட்டை மாற்றி நம் மருத்துவம் உலக அரங்கில் உயர்வடைய வேண்டும் என்ற நோக்கில் அவைகளை பதிவுசெய்து கொண்டு அரசு சார்ந்த ஆய்வு அமைப்பிற்கு பரிந்துரை செய்யவேண்டும். மட்டுமல்ல, அத்தகைய பதிவுமுறைகளை அறியாத மருத்துவர்களுக்கு அதற்கான வழிவகைகளை நெறிப்படுத்தி உதவவும் முன்வர வேண்டும்.

நாம் பின்தங்கியிருப்பமைக்கு அறியாமையும், விழிப்புணர்வின்மையும், பொறாமை எண்ணங்களும், நம் உயர்வுறுத்து நிலைகளுமே காரணம் என்பதை புரிந்து கொள்ளவேண்டும். சேற்றிலே செந்தாமரை முளைக்கும் என்று உலகிற்கே கருத்தூட்டிய நாம் ஏன்? கற்றவர் மற்றவர் என பாகுபடுத்துகிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *