முனைவர் ச. தினகரன்
இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர்விலங்கியல் துறை, நீர்வாழ் பூச்சியியல் ஆய்வு மையம், மதுரை கல்லூரி
மனிதன் மகத்தானவனா? மனிதன் தனியனா? மனிதன் அனாதையா? இப்படி எத்தனை கேள்விகள் கேட்டாலும் இல்லை என்று தான் பதில் கிடைக்கும். உண்மையில் அவன் தனியாளல்ல! அவன் ஒரு நடமாடும் சூழல் மண்டலம். அவனை நம்பி அத்தனை உயிர்கள் இருக்கிறது. அத்தனையும் ரத்த சொந்தம். அம்மாவை விடவும், காதலியை விடவும், குழந்தைகளை விடவும் உங்களில் நிலைத்து, பரம்பரை பரம்பரையாக உங்களையே சார்ந்திருக்கும் உயிர்கள் லட்சோபலட்சம்.
பிரபலமான புத்தகம் ஒன்று உண்டு. 10% Human என்ற புத்தகம் தான் அது. எழுதியவர் அலன்னா கோலன். வெளிவந்த ஆண்டு 2015. பொருள் என்னவெனில் 10 சதமானம் தான் மனித செல்கள் மீதமுள்ளது பாக்டீரியாக்கள, பூஞ்சைகள், வைரோம்கள் (வைரசுகள் அல்ல!) சில குடல் புழுக்கள், நெமடோடுகள், இன்ன பிற! ஆனால் அப்படியொன்றும் இல்லை வேண்டுமானால், 50:50 யாக இருக்கலாம்! 30 டிரில்லியன் மனித செல்கள் 38 டிரில்லியன்கள் பிற உயிர்கள் என்று கணித்திருக்கிறர்கள்! அஜித் பட வசனத்தை வேண்டுமானல் நினைவில் வைத்து நான் தனியாளு இல்ல! என ஒவ்வொருவரும் வசனம் பேசிக்கொள்ளலாம். அது தான் உண்மையும் கூட!
கட்டுரை அதைப்பற்றி அமைந்தால் தான் சுலபமாக புரிந்து கொள்ள முடியும். பரிணாமத்தில் குகை வாழ்க்கையை விட்டு வெளியேறும் போது, இரண்டு கால்களால் நடந்து, ஓடிப்பழகிய பிறகு, ஹோமோ சேப்பியனாக பரிணமித்த பிறகு தான் அவன் ஆடை அணிந்திருக்க முடியும். பரிணாமம் மற்ற விலங்குகள் போல மனிதர்களுக்கு உடலில் அடர்த்தியான ரோமங்களை அனுமதிக்கவில்லை. அதனாலேயே டெஸ்மண்ட் மோரிஸ் மனிதர்களை நிர்வானக்குரங்குகள் என்பர். மயிர் போனதாலும் நாம் மனிதர்கள் ஆனோம். சில காலங்கள் ஓடியது. மனிதர்களும் பெருகினர். குழுச்சண்டைகளின் காரணமாக சிறு சிறு குழுக்களாக வெளியேறத்தொடங்கினர். அப்போதிருந்தே உடைகளையும் அணியத்தொடங்கிவிட்டனர். இலை, தழைகளை உடுத்திய வரலாறுகளுக்குச்சான்றில்லை. ஆனால் மரப்பட்டைகளை மார்க்கச்சைகளாக, இடைக்கச்சைகளாக அணிந்த சான்றுகள் உண்டு.
ஆனால் இவையெல்லம் நாம் உடை அணிந்த வரலாற்றை தீர்மானமாக சொல்லவில்லை. இழைகளாக நெய்ய பழகியபொழுது, வண்ணத்தில் மிக்க மெருகேற்றத்தெரிந்தபோது தான் நமக்கு ஆடை உடுத்திய உத்தேசமான ஆண்டுகளை கண்டறிய முடிந்தது. 170,000 ஆண்டுகள் ஆகிறது நாம் உடைகள் அணிய பழகி. இன்னும் சரியாக எனில் 70,000 களிலிருந்து 190, 000 ஆண்டுகளுக்குள் இருக்கலாம். இந்த ஆய்வுகளுக்கு உதவியது எது தெரியுமா? பேன்கள்!
பொதுவாக தலையில் தானே பேன் இருக்கும். மிடியின் அடியில் கொடுக்க போல் பிடித்துக்கொண்டு தலையிலையே இருந்து நம் ரத்தத்தை உறிஞ்சி வாழ்ந்திருக்கும்! இன்றைக்கும் பெருவாரியன பெண்களின் தலையில் பேன்கள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. இப்படி காலங்கள் செல்லும் போது பரிணாமத்தின் விளைவாக தலைப்பேன்கள் உடம்பிலும் ஊர்ந்து ரத்தத்தை உறிஞ்சத்தொடங்கின. ஆனால் இவற்றால் நிலையாக உடம்பில் ஒட்டி இருக்க போதுமான பிடிமானம் கிடையாது. உடம்பில் உள்ள முடியை லெனுகோ எனும் பூனை முடி என்பார்கள். அதனாலேயே அவை ஆடைகளில் தஞ்சம் புகுந்தன. ரத்த உணவிற்காக மட்டும் உடலில் ஊர்ந்து, முடிந்தபின் நூலிடைகளில் பாதுகாப்பாக இருந்துகொண்டன. தலைப்பேன் கறுப்பாகவும், உடல் பேன் வெளிறியும் இருக்கும். அந்தரங்க பகுதிகளிலும், கக்கத்து முடிகளிலும் கூடுதலாக இருக்கும். அப்போதெல்லாம் அடிக்கடி குளிப்பதும், உடை மாற்றுவதும் பெரிய ஆடம்பரமான செயல். அதனாலேயே இவைகளும் வசதியாக நம் உடலில் வாழ்ந்து வந்த்து. சரி, நாம் ஏன் உடை அணிந்தோம்? குளிரைச்சமாளிக்க, பூச்சிகள், வண்டுகள், கொசுக்களிடமிருந்து உடலை மூடிக்கொள்ள, சருமத்தை வெயிலிலிருந்து பாதுகாக்க என்று பல காரணங்களைச் சொல்லலாம். கனமான உடைகள் அணிந்த பிறகு தான் குளிர்பிரதேசங்களில் குடியேற முடிந்தது. அதனாலேயே மனித குலம் உலகெங்கும் பரவ முடிந்த்து. சரி எப்படி ஆடை அணிந்த வருடங்களை தோராயமாக கண்டறிய முடிந்தது. பேன்களின் செல்களில் உள்ள மிட்டோகாண்ட்ரிய டி என் ஏ க்களின் மரபணுபிறழ்வு வேகத்தை வைத்து கண்டறிந்தார்கள். கிட்லர் (ஹிட்லர் அல்ல), கைசர், ஸ்டோன்கிங் இவர்கள் மூவரும் தான் 2003 ஆம் ஆண்டு ஒரு ஆய்வறிக்கையை சமரப்பித்தார்கள். அதன் பின்னர் 2011 ஆம் ஆண்டுவாக்கில் டூப்சும் அவரது உதவியாளர்களும் இதை தெளிவாக உறுதிபடுத்தினார்கள். உடல் பேனிற்கும், தலைப்பேனிற்கும் உள்ள மாறுபாடுகள், அவை எப்படியெல்லாம் வேறுபாடைடைந்தன என்று ஆய்வுகள் மூலம் உத்தேசமாக 1,07,000 ஆண்டுகள் இருக்கலாம் கணித்தார்கள். இவ்வாய்வை மரபணுப்பிழை மாடல் என்பர். மரபியல் தெரிந்தவர்கள் கூடுதலாக புரிந்துகொள்ள இயலும். இவ்வாறாக ஈரை பேனாக்கி, பின் பெருமாளாக்கி ஆய்வாளர்கள் நாம் எவ்வளவு ஆண்டுகளாக உடை அணிந்தோம் என்று கணித்தார்கள். உடைகளை வைத்து ஏழை, பணக்காரன், மன்னன், பழங்குடி, அதிகாரி, ரானுவ வீரன், தளபதி என்று வேறுபடுத்தி பார்த்ததெல்லாம் பிற்கால பண்பாட்டுப்பரிணாமம். மயிர்நீப்பின் உயிர் வாழா கடமான், ஆடை நீக்கி அவமானப்படுவான் மனிதன் என்ற அளவிற்கு நாம் பரிணாமம் அனைத்தும்! உடுக்கை இழந்தவன் கைபோல என்று வள்ளுவனும் பிற்காலத்தில் எழுதிவைத்தான்.
Leave a Reply