வசந்தம்

வசந்தம்

  • By Magazine
  • |

– கை. செல்லத்தங்கம்

நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அந்தக் கல்லூரி ஆண்களும் பெண்களும் சேர்ந்து படிக்கும் கல்லூரி. அக்கல்லூரியில் வைத்து செயற்கை நுண்ணறிவு (A.I) சார்ந்த மூன்று நாள் கருத்தரங்கம். எங்கள் கல்லூரியில் இருந்தது. அத்துறை சார்ந்த நானும் எனது சகநண்பர்கள் நால்வரும் கலந்து கொள்வதாக முடிவு. பல்வேறு கல்லூரியில் இருந்து கருத்தரங்கத்திற்கு மாணவர்கள் வருவார்கள். துறை சார்ந்த நிபுணர்கள் பலர் வருவர். இந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி கல்லூரிக்கு நல்ல பெயர் வாங்கி தர வேண்டும் என்று முதல்வரும் எங்க H.O.D -யும் சொல்லிவிட்டார்கள். எங்க புரொபசரோ பெண் பிள்ளைகளும் வருவாங்க. வாலை சுருட்டி வச்சிக்கோங்க என்றார். நானும் எனது நண்பர்களும் நமட்டு சிரிப்போடு சரியென்று தலையாட்டினோம்.

மறுநாள் காலை 9.30 க்கு கல்லூரிக்குள் நுழைந்தோம். சாரை சாரையாக மாணவர்கள் வண்ண வண்ண ஆடைகளில் கதம்ப பூச்சரம் போல. நுழைவுப் பகுதி தாண்டி கான்பரன்ஸ் ஹாலுக்கு முன்னால் வருகை தந்தவர்கள் கல்லூரி வாரியாக பதிவு செய்ய வேண்டும். அங்கே பதிவு செய்ய மாணவிகளே அமர்ந்திருந்தார்கள். ஒரு மேஜையில் மூன்று பேர் உட்கார்ந்து இருந்தனர். மேசையின் மேல் சந்தனம், குங்குமம், கற்கண்டு, ரோஜாப்பூ என் ரசனையோடு அடுக்கி வைத்திருந்தார். அருகில் சென்றதுமே சுகந்தமான வாசனை மனதை மயக்கியது. வெல்கம் சார்… எந்த காலேஜ் … உங்க பெயரை சொல்லுங்க. தேனினும் இனிய குரல். குரலுக்கு உரியவள் யார் என முகம் பார்த்தேன். கண்கள் இமைக்க மறந்தன. மயில் தோகையென விரித்த கூந்தல் நீண்ட மூக்கு அகன்ற கண்கள் பரந்தநெற்றி அதிலே கோபுரப் பொட்டு. வானநீலத்தில் சேலை என அப்போது பூத்த ரோஜா போல இருந்தாள். சக நண்பர்கள் பெயரை சொல்லி பதிவு செய்து விட்டார்கள். எக்ஸ்யூஸ் மீ உங்க பெயர். மீண்டும் அக்குரல் கேட்டு நிகழுலகிற்கு வந்தேன். ஆம் கனவுலகிலிருந்து மீண்டேன் முகில் என்றேன். ஓ… அதுதான் வானத்தில் மிதந்தீர்களோ என்றாள். மலைத்தேன்… நல்ல பேச்சுத்திறன். நான் சொன்னேன் இல்லை இல்லை. மிதந்த நான் பொத்தென்று விழுந்து விட்டேன் என்றேன். என் நண்பர்களும் மாணவியரும் சேர்ந்தே சிரித்தனர். வாடா… என்று கைகளை பிடித்து இழுந்து ஹாலுக்கு சென்றனர். வழக்கமான குத்துவிளக்கு ஏற்றுதல், சிறப்பு விருந்தினர் தொடங்கி வைத்தல், வரவேற்புரை என எந்த நிகழ்விலும் மனம் ஒட்டவில்லை. நினைவில் அவளே இருந்தாள். எத்தனை அழகு.. இனிமையான குரல்… பார்த்தவர்களை தன் அழகாலும் இயல்பான பேச்சாலும் மீண்டும் திரும்பி பார்க்க வைக்கும் ஈர்ப்பு சக்தி.

என் கவனம் முழுதும் வகுப்பில் இல்லை. மிகப்பெரிய நிபுணரால் கருத்தரங்க உரை தொடங்கியது. அத்துறையின் மிகப்பெரிய பற்றும் தேடலும் உள்ள நான் அமைதியாக இருந்ததை பார்த்து நண்பர்கள் சீண்டினர். எப்போதும் நான் இருக்கும் இடம் கலகல வென்றிருக்கும். வகுப்பும் அப்படித்தான். பேராசிரியர்களிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டு திணற வைப்பேன். ஆனால் இன்று தேன் குடித்த வண்டு மாதிரி மயங்கிய நிலையில் நான் மீண்டும் எப்போது அவளைப் பார்ப்பேன். அவளை பற்றி தெரிய வேண்டும். அவள் பெயர், என்ன படிக்கிறாள் என்று அறிய வேண்டும். இனிய குரலை கேட்க வேண்டும் என்று மனது தவித்தது.

உணவு இடைவேளை வந்தது. வெளியில் வந்தோம். தேடி பார்த்தேன் கண்ணில் படவில்லை. தொடர்ந்த வகுப்பிலும் மனம் லயிக்கவில்லை. இரவு அறையில் தூக்கம் இல்லை. 3 நாள்களில் இன்னும் 2 நாள்கள் இருக்கிறதே பார்த்து விடலாம் என்ற நம்பிக்கை. மறுநாள் வேறு மாணவியர்… நேற்று இருந்தவர்கள் எங்கே… என்ற கேள்வி… இங்கே தான் இருப்பாங்க… ஒவ்வொரு நாளும் வேறு வேறு நபர்கள் பதிவில் இருப்போம்.

ஒரு மாணவியின் பதில் இந்தக் கூட்டத்தில் நாளைக்குள் அவளை பார்த்து விட வேண்டும் பரபரப்பு. அடுத்த நாளும் வந்தது. அவளை காணவில்லை நிறைவு பகுதி. நன்றி சொல்ல மேடை ஏறினாள். அவள் பெயர் இனியா… பொருத்தமான பெயர். அதே கல்லூரி மாணவி. பெயரும், காலேஜீம் தெரிந்து விட்டது. அவளிடம் எப்படி பேசுவது தவித்தேன். நன்றி சொல்லி மேடை இறங்க கூட்டமும் எழுந்தது. அவள் பின்னால் பதுங்கியபடி சென்ற நான் இனியா என்றேன். சட்டெனத் திரும்பினாள். கொஞ்சம் போசணும் என்றேன். என்ன? என்ற கேள்வியுடன் புருவம் தூக்கினாள். ப்ளீஸ் என்றேன். சற்றே ஒதுங்கி என்ன? என்றாள். பேச்சு வரவில்லை… தயங்கினேன்… தவித்தேன்… அவள் பேசினாள். சொல்லுங்க என்று தட்டு தடுமாறி சொன்னேன். இரண்டு நாள்களாக நான் தூங்கல… என் மனசு என்னிடம் இல்லை அப்படியா? அது எங்க இருக்கு என்றாள். உங்களிடம் என்றேன். நகைத்தாள் மேலே சொல்லுங்க என்றாள். எனக்கு உங்களை பிடிச்சிருக்கு என்றேன். கண்டவுடன் காதலா என்றாள். பதில் வரவில்லை… தலையாட்டினான்… உங்கள் நம்பர் தாருங்கள் மீண்டும் சந்திப்போம் என்றேன். உங்கள் நம்பர் தாருங்கள் எனக்கு பேச வேண்டும் என்று தோன்றினால் பேசுகிறேன் என்றாள்.

நம்பர் கொடுத்தேன்… சற்றே மனம் லேசானது. ஒவ்வொரு நாளும் எந்த அழைப்பு வந்தாலும் புதிய நம்பரா என்று எதிர்பார்த்தேன். காத்திருந்து … காத்திருந்து அவளை சந்திக்கும் ஆவல் அதிகரித்தது. ஒருநாள் அழைத்தாள்… சந்தித்தோம்… பேசினோம்… காதல் மலர்ந்தது… உரிய வேலையைத் தேடி விட்டு வந்து பெண் கேளுங்கள். முதலில் படிப்பில் கவனம் செலுத்துங்கள் என்றாள். “கன்னியர் தம் கடைக்கண் பார்வை பட்டுவிட்டால் காளையர்க்கு மாமலையும் ஒர்கடுகாம்” வருடங்கள் மூன்று கழிந்தது. நல்லப் பணி கிடைத்தது. முறைப்படி சென்று பெற்றோரோடு பெண் கேட்டேன். முதலில் மறுத்தனர். ஜாதி குறுக்கே நின்றது. காத்திருந்தோம் காலம் கடந்தும் மனம் மாறாத பெற்றோருக்காக காதலை இழக்க தயாராக இல்லை. பதிவு திருமணம் செய்தோம். நண்பர்கள் துணை நின்றனர். குழந்தைகள் ஆணொன்று பெண்ணொன்று… இன்று நான் அவளை சந்தித்து 10 ஆண்டுகள் நிறைவு. ஆண்டுதோறும் இந்த நாளை கொண்டாடுகிறோம். இன்று எங்களோடு இருப்பது இருவருடைய பெற்றோரும். எங்கள் குழந்தைகளும்… காலம் பெற்றோரின் மனங்களை மாற்றி விட்டது. எங்கள் நம்பிக்கையும் மெய்ப்பட்டது. என் வாழ்வின் வசந்தம் அவள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *