மூல “பவுத்திரம்”

மூல “பவுத்திரம்”

  • By Magazine
  • |

டாக்டர் என்.கே. சுரேஷ் MD(S)

மூலபவுத்திரம் என்பது மலக்குடல் உட்புறத்திலிருந்து, ஆசனவாயை சுற்றியுள்ள வெளிப்புற தோல்பகுதிக்கு ஒரு குகை மாதிரி தொடர்பு உண்டாகி, அதன்வழி சீழ், நீர்வடிதல் மற்றும் சில நேரங்களில் மலக்கசிவுகளும் வடிந்து நல்ல வலியை கொடுக்கக் கூடிய ஒரு வியாதி ஆகும்.

மூலநோய் என்பது வேறு. மூலபவுத்திர நோய் என்பது வேறு.

பவுத்திரம், பகரந்தனம், ஆசனரூடி, ஆசனபவுத்திரம் என்ற வேறுபெயர்களும் இதற்கு உண்டு. ஆங்கிலத்தில் இதற்கு பெயர் Fistula –in- ano, Anal Fistula..

மூலபுவுத்திர நோயால் ஆண்கள் அதிகமாக பாதிக்கப்டுகிறார்கள். முக்கியமாக 30 வயது முதல் 40 வயதுடைய ஆண்கள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்.

மூலபவுத்திர நோய் வருவதற்கான காரணங்கள்

ஆசனவாயை சுற்றி உள்புறத்தில் சளியை சுரக்கும் சுரப்பிகள் உள்ளன. இவைகள், வறண்ட மலம் ஆசனவாய் வழி இறங்கும் போது காயம் ஏற்படாமல் தடுப்பதற்கு பிசுபிசுப்பான சுரப்பை சுரக்கிறது.

மூலபவுத்திர நோய் வருவதற்கு முக்கிய காரணம் இந்த ஆசனவாய் சுரப்பிகள் (Peri anal glandss) கிருமி தொற்று ஏற்பட்டு, வீங்கி, பழுத்து உடைவது ஆகும்.

மேலும்,

  • எப்பொழுதும் கடின இருக்கையில் உட்காருவது
  • மூலநோயை குணமாக்காமல் நாட்பட வைத்திருத்தல்
  • உணவில் அதிகமாக காரம் உட்கொள்வது
  • நார்சத்துமிக்க உணவுகள் அதிகம் உண்ணாமல் அசைவ உணவுகள் அதிகம் உண்பது.
  • உடல் உஷ்ணம், மலக்கட்டு
  • நாட்பட்ட மேகப்பிணி (STD)
  • குடல் தாபித நோய்கள் (Crohn’s disease)
  • மலவாயை பாதிக்கும் சய (T.B) நோய்
  • மலவாயை பாதிக்கும் புற்றுநோய்
  • மலவாய் பகுதிகளில் காயம் ஏற்படுதல்

மூலபௌத்திர நோயின் குறிகுணங்கள்

  • உட்காரும் போதும், மலம் கழிக்கும் போதும், நடக்கும் போதும் ஆசனவாயை சுற்றி வலி ஏற்படுதல்.
  • ஆசனவாய் அருகில் அதிக வலியுடன் கூடிய சிறிய கொப்பளம் காணப்படுதல்
  • ஆசனவாயில் ஏற்படும் கட்டியை தொடர்ந்து வலி, காய்ச்சல் உண்டாதல்,கட்டி உடைந்து பழுப்பு, சீழ் வெளியேறுதல்
  • ஆசனவாய் அருகில் சிறிய துவாரம் காணப்படுதல் அதிலிருந்து சீழ், நாற்றமுள்ள நீர்கசிவுகள் வெளியேறுதல்.

மூலபவுத்திரம் வராமல் தடுக்கும் முறைகள்

  • நார்ச்சத்துள்ள உணவுபொருள் – காய்கறி, கீரைவகைகள், பழங்கள், சிறுதானியங்கள், முழுதானியம் (Whole glain) அதிகமாக பயன்படுத்த வேண்டும். அசைவ உணவுகளை குறைத்து கொண்டு மலச்சிக்கலை தவிர்க்க வேண்டும்.
  • காரமுள்ள உணவு பொருள்களை குறைக்க வேண்டும். தண்ணீர் அதிகம் பருக வேண்டும்.
  • ஆசனவாய் அழுத்தம் அதிகம் ஏற்படாமல் பார்த்து கொள்ள வேண்டும். குறிப்பாக கடினமான இருக்கையில் தொடர்ந்து உட்காருதல் கூடாது.
  • எண்ணெய் குளியல், நல்ல இரவு தூக்கம், அதிகமான சிந்தனை, கவலைகளை குறைத்து கொண்டு உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
  • ஆசனவாய் பகுதியை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
  • மதுமேகநோய் (Diabetes), பால்வினைநோய், ஆசனவாய் சார்ந்த சயநோய் (T.B), நாட்பட்ட குடல் தாபிதநோய் (Crohn’s disease), ஆசனவாயை சார்ந்த புற்றுநோய்க்கு உரிய மருத்துவம் மேற்கொள்ள வேண்டும்.
  • ஆசனவாய் அருகில் வலியுடன் கூடிய சிறு கொப்பளமோ, கட்டியோ ஏற்பட்டால் சிறிதும் தாமதிக்காமல் உடனே மருத்துவம் மேற்கொள்ள வேண்டும்.

முலபவுத்திர நோய்க்கு சிகிட்சை

  1. குப்பைமேனி இலை மற்றும் வேருடன் கூடிய பொடி, அத்துடன் சமஅளவு திப்பிலி பொடி சேர்த்து, தினம் இருவேளை ஒரு கரண்டி வீதம் நெய்யில் கலந்து ஆகாரத்திற்கு முன் சாப்பிடலாம்.
  2. 100 கிராம் குப்பைமேனி இலை அத்துடன் 400 மில்லி ஆமணக்கெண்ணெயில் இட்டு காய்த்து இலை பொரிந்து வந்ததும் அதனை வடித்து, பொரிந்த இலையை நன்கு அரைத்து மேற்படி காய்த்து வடித்த ஆமணக்கெண்ணெயில் கலந்து வைத்துக் கொண்டு, தினம் இரவு ஆகாரத்திற்கு பிறகு ஒரு கரண்டி சாப்பிட்டு வெந்நீரில் குடிக்கவும்.
  3. சோற்றுக்கற்றாழையின் வெளிபுற பச்சை தோலை நீக்கி சதைபகுதியை நன்கு கழுவி ஒரு துண்டு வீதம் ஆகாரத்திற்கு முன் கடித்து சாப்பிடவும் அல்லது அரைத்து பானமாக குடிக்க ஆசனவாய் எரிச்சல் மாறும். பவுத்திரம் வராமலிருக்க தடுப்பு முறையாகவும் பயன்படுத்தலாம்.
  4. இடுப்பு அமர்வு குளியல் (Sitzbath)

வாய்விரிந்த பாத்திரத்தில் சுமார் 3 முதல் 4 அங்குல உயரத்திற்கு வெதுவெதுப்பான நீர்விட்டு அதில் திரிபலா சூரணம் இரு கரண்டு கலந்து அதில் ஆசனவாய் மற்றும் பவுத்திர புண் அல்லது கொப்புளம் படும்படி 15 நிமிடம் உட்கார வேண்டும். இதனால், பவுத்திரத்தில் உள்ள கசடுகள் வெளியேறும். மேலும் ஆசனவாய் கட்டிவலி, எரிச்சலுக்கும் சிறந்தது. இப்படி தினம் இருவேளை செய்யலாம்.

  • பவுத்திரத்திற்கு புகை

கவுசிகர் குழம்பை ஒரு வெள்ளை துணியில் தடவி, திரியாக்கி வேப்பெண்ணெய் தோய்த்து புண்ணில்படும்படி புகை பிடிக்க புண் விரைவில் ஆறும்.

சித்தமருத்துவத்தில் பவுத்திர நோய்க்கு பயன்படுத்தக் கூடிய மருந்துகள்

  • ரசகெந்தி மெழுகு
  • நந்திமெழுகு
  • வான்மெழுகு
  • நவகிரக வெள்ளை
  • வெள்வங்க பற்பம்
  • இரசசெந்தூரம்
  • பறங்கிபட்டை பதங்கம்

                மேற்படி மருந்துகள் சித்தமருத்துவ அறிவுரைபடி மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

காரநூல் சிகிச்சை

                மருந்துகளால் மூலபவுத்திரம் நோய் குணமாகமல் இருந்தால் காரநூல் சிகிட்சை மேற்கொள்ள வேண்டும். காரமான மருந்துகளால் செறிவூட்டப்பட்ட நூலை, பவுத்திர பாதைகளில் செலுத்தி இரு நுனிகளையும் முடிந்து விடுவதால், பவுத்திர பாதைகளில் உள்ள சீழ், கெட்ட இரத்தம் சுத்தமாக வடிந்து புண் ஆறுவதற்கு வழி ஏற்படுகிறது. இச்சிகிச்சையை சித்தமருத்துவம் மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் உள்ள சிறப்பு சிகிட்சை நிபுணர்கள் மேற் கொள்வார்கள்.

கவனிக்க வேண்டியவைகள்

  • ஆசனவாய் கட்டிகள் ஏற்படாமல் பார்த்து கொள்வது சாலசிறந்தது.
  • ஆசனவாய் கட்டிகள் ஏற்பட்டால், தாமதிக்காமல் மருத்துவம் மேற்கொள்ள வேண்டும். கட்டிகள் பழுத்த நிலை ஏற்பட்டால் பவுத்திரம் உண்டாகி விடும்.

உண்ணும்  வாயை எவ்வாறு சுத்தமாக பாதுகாத்துக் கொள்கிறோமோ அதுபோல் ஆசனவாயையை சுத்தமாக பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *