ஞானியும் சிறுவனும்

  • By Magazine
  • |

ஓர் ஊரில் ஞானி ஒருவர் வாழ்ந்து வந்தார். பூஜை புனஸ்காரங்கள், ஆட்டம் பாட்டம் என அவர் அரங்கம் அவ்வளவு அழகாக பிரகாசிக்கும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் அடை அடையாய் அணிவகுத்து காலில் விழுந்து எழுவர். கடைசியில் காலில் விழவும் காணிக்கை விதிக்கப்பட்டது என்றாலும் யாரும் விடுவதாக இல்லை. ஞானியைப் பார்த்தாலே போதும்… அவர் தரிசனம் கிடைத்தாலே போதும்… அதையும் தாண்டி அவர் ஒரு பார்வை பார்த்துவிட்டால் அவ்வளவு தான் உலகே கைவசமானது போல் ஒரு பரபரப்பு… நாட்கள் ஓடி மாதங்களுக்குள் கரைய மாதங்கள் ஆண்டுகளுக்குள் அடைக்கலமாக… தொடர்வண்டி பயணம் போல் தொடர்ந்தது ஞானியின் வாழ்க்கை.

மக்கள் வரவும் குறையவில்லை… மடி நிறைய பணவரவும் குறையவில்லை…

மாலை நேரம் கருக்கலில் கணக்குப் பார்த்து காசுகளை சேமித்து வைக்கும் மகானின் அந்தரங்க பக்தர்கள். நாள் வருமானத்தின் ஏற்றத்தாழ்வுகளையும் எடுத்துரைக்க தவறுவதில்லை. சில நாட்கள் ஏணி போல் ஏற சில நாட்கள் ஏற்றம் குறைந்திருந்தது.

ஞானியின் மனதில் ஓர் எண்ணம்… வேறுவிதமான ஓர் உத்தியை கையாண்டார்.

உலகளந்த ஏலாசி என்னும் ஒரு தகடு விற்பனையைத் தொடங்கினார். வீட்டில் வைத்தாலே பேய்ப்பிசாசுகள் அண்டாது. எல்லா வளங்களும் கிடைக்கும் என ஆயிரம் ஆயிரம் வாக்குறுதிகள்.

                படிப்படியாய் உயர்ந்தது… பக்தர்கள் கைப்பணத்தால் ஞானியின் வாழ்க்கை ஆயிரம் லட்சத்தை தாண்டி… லட்சங்கள் கோடியை தாண்டி தெருக்கோடி நிலங்கள் எல்லாம் சாமியின் காலடியில்… சாமியாருக்கு மாமியார்களின் பணிவிடைகள் அதிகரிக்க வாழ்க்கை பூத்துக்குலுங்கியது.  வண்ண விளக்குகள் மின்ன… வகையான வார்த்தை சாலங்கள்… உபதேசங்கள்… கேட்டோர்களைக் கட்டிப்போடும் அளவுக்கு கானல் வார்த்தைகள் காதுக்குள் தேனை வார்க்க… பக்தர் கூட்டம் அதற்குள் மூழ்கிக் கிடந்தனர்.

ஒருநாள் மேடை அலங்காரத்தோடு ஒரு மாநாடு மாணவர்களுக்கு சாமியாரின் மங்கல உரைகள்… கேட்டு ரசித்த பெற்றோர்கள்… ஒரே ஒரு சிறுவன் … வயது எட்டு… வந்தான் மேடைக்கு… லட்சகணக்கான பக்தர்கள் மத்தியில் தலைவணங்கி மன்னிப்பு கேட்டான். நான் சாமியிடம் சில சந்தேகங்களை கேட்கப் போகிறேன் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்.

கூட்டமே ஆடிப்போனது… அரும்புவிடாத மலர்… எப்படி கேள்வி கேட்கலாம்? அடியாட்களின் குரல்களும் கரங்களும் மேடைச் சிறுவன் “வினோபனை” தொட்டுவிட நெருங்க சாமியார் விட்டு விடு என ஒரு கை சைகை செய்ய எல்லோரும் விலகி விட்டனர். சிறுவன் சாமி எனக்கு வாழ்க்கையில் எது சரி எது தவறு என தோன்றவில்லை அதை விளக்குங்கள் என்றான். சாமிக்கு ஒன்றும் தோன்றவில்லை. அவனை தட்டிக்கொடுத்து வேறு ஏதாவது கேள்வி இருக்கிறதா என்றார்…

வெற்றியும் தோல்வியும் என்? எதனால் வருகிறது? என்று அடுத்தக் கேள்வியை கேட்டான். இறுதியாக இன்னும் ஒன்று மட்டும் ஐயா தாங்கள் எனக்கு மெய் ஞானத்தை விளக்க வேண்டும் அவ்வளவு தான் என்றதும் சாமியார் முகம் வியர்த்துப் போயிற்று… எல்லாவற்றையும் விளக்கலாம். மெய்ஞானத்தை எப்படி விளக்குவது என ஆடி அடங்கிப்போனார். சிறுவன் காலில் சரணாகதி அடைந்து விட்டார்… ஏன் சிந்தியுங்கள். வந்தது யாரென்று புரியவில்லை சாமியாருக்கு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *