பழனி அரங்கசாமி
தமிழகத்தில் தைத்திங்கள் முதல் நாளில் பொங்கல் விழா கொண்டாடப் பெறுகிறது. அறுவடைக்கு பின்னர் வந்த பச்சரியோடு மஞ்சளும், இஞ்சியும், வாழையும், கரும்பும் முக்கிய பங்கு பெறுகின்றன. மக்களுக்கான பொங்கல் முதல் நாளென்றால், மாட்டுப் பொங்கலுக்கான இரண்டாம் நாளில் மாடுகளுக்கு பொட்டிட்டும், பூமாலை போட்டும், பொங்கல் சோறு ஊட்டியும் மகிழ்கிறோம். இந்தியப் பெருநிலத்தின் வேறெந்த மாநிலத்திலும் இது நிகழ்வதாகத் தெரியவில்லை. எனவே இந்த வீர விளையாட்டு தமிழகத்துக்கே உரியது ஆகும்.
தொழுவத்தில் அடைக்கப் பெற்றுள்ள மாடுகளை மறுநாள் காலையில் அவிழ்த்து விரட்டுவர். சீவி விடப்பெற்று, எண்ணெயும் தேய்க்கப்பட்டு பளபளக்கும் கொம்புகளை அசைத்துக் கொண்டு மாடுகள் மிரண்டு ஓடும். தோள்வலியும், நெஞ்சுரமும் கொண்ட வாலிபர்கள் காளையோடு ஓடிப் பாய்ந்து திமிலைப் பிடித்து அமுக்கி காளையினை கட்டுப்படுத்தி, ஓட விடாமல் நிறுத்த முயல்வர். தமிழ் இலக்கியங்கள் இதனை ஏறு தழுவல் என்று கூறிடும்.
மாடுகள் மீதூர்ந்த வெஞ்சினத்தோடு தான் கூரிய கொம்புகளை மேலும் கீழும் பக்கவாட்டிலும் ஆட்டியும், குதித்தும், உதைத்தும் பிடியிலிருந்து தப்பி ஓடும் போது வாலிபர்கள் கீழே வீழ்ந்து விடுவர். காயம் அடைதலும் உண்டு. திமிலை அழுத்தி மாட்டின் வேகத்தை மட்டுப்படுத்திய வீராவேசம் நிறைந்த காளையர்களை இளம் நங்கையர் வலிந்து விரும்பி மணம் செய்து கொள்வர்.
பல்வேறு ஊர்களில் இந்நிகழ்ச்சியை பெரும் விழாவாக நடத்தும் போது, பிற்காலத்தே மாட்டின் சொந்தக்காரர்கள் காளைக்கு வேகமும் முரட்டுத்தனதும் விளைந்திட வேண்டி, கள், சாராயம் போன்ற போதை பொருள்களைப் புகட்டுவர். கண்களில் லேசாக மிளகுப் பொடியினை தூவிடச் செய்வர். எரிச்சலும், சினமும் மிகுந்த காளை உடம்பிளைக் குறுக்கித் தனது கூரிய கொம்பினால் பாய்ந்து குத்தும் போது இளைஞர்கள் பலியாவதும் உண்டு. இதனால் மாட்டுக்கு சித்திரவதை , வாலிபனுக்கு மரணம். கட்டிளங் காளையர் கவனக் குறைவாகவோ, கண்மூடித் தனமாகவோ முரட்டுக் காளையோடு மோதும் போது குடல் கிழிந்தும், படுகாயமுற்றும் பலியாவது உண்டு.
இவற்றையெல்லாம் கூர்ந்து கவனித்த மிருகவதை தடுப்பு சங்கத்தினத் தமிழகத்தில் இதனைத் தடை செய்ய வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். காளை மாடுகளை வதையினின்று காப்பதற்கும், பார்வையாளர்கள் மற்றும் இளைஞர்களின் பாதுகாப்பினைக் கருதியும் உச்சநீதிமன்றம் 2014-ஆம் ஆண்டு மாடுபிடி விழாக்களை தடை செய்து விட்டது. தமிழகத்தில் இதனை எதிர்த்து கண்டனங்களும், எதிர்ப்புக் கூட்டங்களும் நிகழ்ந்தன. மரபு சார்ந்த இவ்விழாவினைக் கைவிட இயலாது என தமிழக அரசு தடையினை எதிர்த்து 2017- ஆம் ஆண்டு மேல் முறையீடு செய்தது. இதனை ஏற்றுக் கொண்ட உச்சநீதின்றம் சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு ஏறுதழுவல் என்னும் இந்த வீர விளையாட்டுக்கும் மாட்டு வண்டிப் பந்தயத்திற்கும் 2023- ஆம் ஆண்டு முதல் அனுமதி அளித்தது.
அத்தகைய சட்டவிதிகளின்படி இப்போது திருச்சி துறையூர், அன்பில், மதுரை அலங்காநல்லூர், சிவகங்கை, காளையார் கோவில் போன்ற இடங்களில் ஜல்லிக்கட்டு என்னும் பெயரால் நடக்கும், இவ்விழாக்களை காண வெளிநாட்டுப் பயணிகளும் வந்து செல்கின்றனர்.தமிழக அரசே இதனை நடத்த ஏற்பாடு செய்கிறது. மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாது ஓடும் மாடுகளுக்கும் பரிசு கொடுத்துப் பாராட்டுகின்றனர்.
மனிதன் காளையை அடக்கும் இந்த நிகழ்ச்சி ஏறு தழுவல் இல்லாமல், எருதுச்சண்டையாக (Bull fight) ஸ்பெயின்ஸ், போர்ச்சுகல், மெக்ஸிகோ ஆகிய நாடுகளில் வணிக ரீதியாக நடத்தப் பெறுகிறது. இந்த விழாவும், மக்களின் சமூக வாழ்க்கையோடு ஒன்றி மரபு ரீதியான விளையாட்டாகத் தான் தொடக்க காலத்தில் இருந்திருக்க வேண்டும்.
ஏழு, எட்டாம் நூற்றாண்டுகளுஙல போர்ச்சுகல், ஸ்பெயின் போன்ற நாடுகளில் மயிர்க்கூச்செறியும் வண்ணம் இந்த விளையாட்டு இரவில் நடத்தப் பெற்றிருக்கிறது. ஸ்பெயின் நாட்டு அரசரரோ அரசியோ இவ்விழாவின் முன்னின்று நடத்துவர். எருதுச்சண்டைக்கென்றே காளைகளை வளர்த்து அவற்றை பட்டியலிருந்து திறந்து வட்டவடிவமான சிறிய மைதானத்துக்குள் விடுவர். அங்கு கையில் ஈட்டியுடனோ, கூரிய வாளிளையோ வைத்துக் கொண்டு முன்னரே பயிற்சி பெற்ற இளைஞன் ஒரு முரட்டுக் காளையைச் சீண்டியும் சினமூட்டியும் தனியே நின்று அதனோடு போராடுவான். மாட்டுக்கும் மனிதனுக்கும் நடக்குன்ம இந்த ஜீவமரணப் போராட்டத்தை மைதானத்தை சுற்றியும் பத்தடி உயரத்தில் அமர்ந்து கொண்டு பார்வையாளர்கள் காண்பர்.
வட அமெரிக்காவின் மெக்சிகோ நாட்டில், பயிற்சி பெற்ற போராளி ஒருவன் குதிரை மீதேறி மைதானத்துக்குள் வருவான். தனது ஈட்டியால் எருதினைத் தட்டிக் கோபமூட்டுவான். கோபமுற்ற எருது அவனை நோக்கிப் பாய்ந்தாலும் கோபமுற்ற எருது அவனை நோக்கி பாய்ந்தாலும் எருதின் வேகம் உயரமான குதிரையின் இடுப்பு வரை தான் மோத முடியும். ஆனால் குதிரையின் கால் தொடங்கி கழுத்து வரை தக்கையால் ஆன கவசம் ஒன்று காளையின் தாக்குதலில் இருந்து குதிரையை காப்பாற்றி விடும். எருதின் தாக்குதல் அதிகபட்சமாக போராளியின் கால் மட்டும் தொடைப் பகுதியை தான் பாதிக்கும். காளை போராளி பாதுகாப்பாக போரிடும் இந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டு விட்டது. குதிரையில் வராமல் காளையை நேரில் எதிர்த்து அதனை ஏமாற்றி ஈட்டியால் கொல்லுவது இன்றைய நிலைமை.
காலோடும், உடலோடும் ஒட்டிய உடையினைப் போராளி அணிந்திருப்பான். ஒரு கையில் ஈட்டியும், மறுகையில் நீண்ட சதுர சிவப்புப்படுதாவும் இருக்கும். முன்னமேயே சீண்டப்பட்ட எருது அவனை நோக்கி பாய்ந்து வரும். கொம்புகளை முன் வைத்துப் பாயும் போது சிக்கினால், போராளி கோர மரணம் அடைந்து விடுவான். ஆனால் கண் சிமிட்டும் நேரத்தில் எங்கும் ஓடாமல் ஒரு காலை அழுத்தமாக ஊன்றி துணியால் மறைத்துக் கொண்டு அரைவட்டம் போடுவது போல சுழன்று நின்று அவன் மாட்டின் நேரடித்தாக்குதலை ஒதுக்கி விடுவான். தப்பித்துக் கொண்ட மறுகணத்திலேயே தனது ஈட்டியால் எருதினைக் குத்துவான்.
தாக்குதலில் தோல்வி கண்டு, ரத்தம் சொட்டுகின்ற காயமும் பட்டு, மாடு சுழன்று வந்து கண்மூடித்தனமாக தாக்கும். இயல்பாகவே எருதுகளுக்கு கறுப்பு சிவப்பு வண்ணங்கள் தெரியாது. ஏதோ ஒரு தடை இருக்கிறது என்று எண்ணித்தான் எருது இனம் புரியாமல் தாக்கும். எனவே கறுப்பு ஒரு புறமும் சிவப்பு மறுபுறமுமான படுதாத்துணியை மாற்றி மாற்றி காட்டி எருதினைப் போராளி குழப்பி விடுவான். பகுத்தறிவு இல்லாத எருதின் முரட்டுத்தாக்குதல், சுழன்று நின்று ஈட்டியால் குத்தும் மானுட சூழ்ச்சியை வெல்ல முடிவதில்லை. மின்னல் வேகத்தில் செயல்படும் விரைவும், சுறுசுறுப்பும், துணிவும் கொண்ட போராளி தான் பிழைத்துக் கொள்வதோடன்றி, எருதினையும் சிறுக சிறுகக் கொன்று வீழ்த்தி விடுவான். படபடக்கும் நெஞ்சத்தோடும், அச்சதோடும் கண்ணிமைக்காமல், மக்கள் இந்த சண்டையினைப் பார்த்து கொண்டிருப்பர். ரத்தம் ஆறாக பெருகி எருது வீழ்ந்துபட்டதும், போராளிக்குப் பரிசும் பாராட்டும் குவியும். எருதினை வெட்டிக் கூறு போட்டு உணவகங்களுக்கும், அரண்மனைக்கும், தனியாருக்கும் கொடுத்து விடுவர்.
எர்னஸ்ட் ஹெமிங்வே என்னும் அமெரிக்க நாவல் ஆசிரியர் நோபல் பரிசு பெற்றவர். அவர் எழுதிய பிற்பகலில் மரணம் (Death in the after noon) என்னும் கட்டுரை நூலில் எருது சண்டை பற்றி விரிவாகப் பேசுகிறார். காலின்ஸ், லாப்பியர் என்னும் இருவரும் சிறந்த எழுத்தாளர்கள். முன்னவர் ஆங்கிலேயர்; பின்னவர் பிரெஞ்சுக்காரர். இவர்கள் இருவரும் எழுதிய ஆங்கிலப் புதினத்தில் (I will dress you in morning) வருகின்ற கதாநாயகன் கூறுகிறான். பயங்கரமான இந்த எருதுப் போரில் நான் நிச்சயமாக வெற்றி பெற்று மீளுவேன் அல்லது சோகமான உடை அணிந்து, துயரம் தோய்ந்த கோலத்தில் எனது சவ ஊர்வலத்தில் நீ வருகின்ற வண்ணம் நான் பிணமாக வருவேன் என்று சுளுரைத்து செல்கின்றான். மாடுவென்றால் மனிதன் சாகிறான். மனிதன் வென்றால் மாடு மடிகிறது என்னும் நிதர்சன உண்மையினை இந்த நாவல் வெளிப்படுத்துகிறது.
ஸ்பெயின், மெக்சிகோ போன்ற நாடுகளில் நடப்பது போலன்றி, போர்ச்சுகல் நாட்டில் வேறு விதமான ஏறுதழுவல் வழக்கத்தில் உள்ளது. இந்த நாட்டிலும் மாடும் மனிதரும் தான் சண்டை இடுகின்றனர். ஆயினும் மிகுந்த கவனத்தோடு மாட்டின் இரண்டு கூரிய கொம்புகளையும் பஞ்சாலும் துணியாலும் சுற்றிக் கட்டி விடுவர். மாடு சினம் கொண்டு முட்டினாலும் கூடக் காயம் ஏற்பட வழியில்லை. போராளியின் கையில் ஈட்டியும் இருக்காது. வாளும் இராது. அய்ந்தடி நீளக்கம்பு இருக்கும். அவன் கம்பினால் அடித்துச் சினம் ஊட்டுவான். மாடு முட்ட வரும் போது, ஒதுங்கி நின்று தப்பித்துக் கொள்வான். தாக்கப்பட்டாலும் உயிர் போகது. இந்த வீர விளையாட்டில் வீரம் இருக்கிறதோ இல்லையோ என்றாலும் நிச்சயமாக ஆபத்து இல்லை. மிருகங்களை வதைக்கக் கூடாது என்னும் ஈர நெஞ்சுடையோர் இந்த கத்தியின்றி ரத்தமின்றி நடத்தப்பெறும் யுத்தத்தை விரும்பி வரவேற்கின்றனர். அமைதியான இந்த ஏறுதழுவல் முறை போர்ச்சுகல் நாட்டில் நடைமுறையில் உள்ளது.
நமது நாட்டிலேயே போர்த்துகீசியர் ஆண்டு வந்த கோவா மாநிலத்தில் அறுவடைக்காலம் முடிந்ததும், மாடுகளின் சண்டை தான் நடத்தப்பெறுகிறது. மனிதர்களின் பங்கு இங்கு மாட்டுச் சண்டையினை வேடிக்கை பார்ப்பது தான். ஏழை பணக்காரர் எனும் வேறுபாடின்றி குறிப்பிட்ட மைதானத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கூடுவர். இந்நிகழ்ச்சிக்கென்று வளர்க்கப்பட்ட இரண்டு காளைகளை மைதானத்துக்கு கொண்டு வந்து ஒன்றோடொன்று மோத விடுவர்.
சிற்சில சமயங்களில், போரை விரும்பாமல் அமைதியை நாடுகின்ற காளை, வெருண்டு, கூட்டத்திற்குள் புகுந்து தப்பி ஓடி விடுவதும் உண்டு. இரண்டு மாடுகளுக்குள் சண்டை நடந்தால், மாடுகளின் வலிய கொம்புகளும், மண்டையின் நெற்றிப் பகுதிகளும் ஒன்றோடொன்று மோதி கொண்டு படீர், படீர் என்று சப்தம் எழும்பும். பொதி சுமக்கும் மாடுகளைப் போரிடச் செய்து அதனை மானுடர்கள் பொழுதுபோக்காகக் கருதும் இரு ஒரு வேதனையான நிகழ்ச்சி. இதனைக் கண்டு மக்கள் கூட்டம் ஆரவாரம் செய்யும். ஏதாவது ஒரு காளை சோர்வடைந்து புறமுதுகு இடுகின்ற வரை இந்த விரும்பத்தகாத மாட்டுச் சண்டை நீடிக்கும்.
உயிர்வதையும், கொலையும் தவிர்க்கப்பட வேண்டும் என்று எண்ணுகின்ற அன்பு உள்ளங்கள் இந்த விளையாட்டுகளை விரும்புவதில்லை. ரோம் நகரில் தொடர்ந்து தெய்வீக ஆளுமை புரிந்து வரும் தலைமைப் பீடாதிபதிகள் (Popes) இத்தகைய விளையாட்டுகளைத் தடை செய்து வந்திருக்கின்றனர். கோழிச் சண்டை சட்டரீதியாகத் தடை செய்யப்பட்டது போன்று மாடும் மனிதனும் போட்டியிட்டு சண்டையிடும் மாடுபிடித் திருவிழாக்களுக்கும் முற்றுப்புள்ளி வைப்பதில் தவறில்லை என்றே தோன்றுகிறது. இதனை விரும்புகின்ற மாட்டுப்பிடி ஆர்வலர்களும் உழைக்க பிறந்த கால்நடைகளின் வாழ்க்கைக்கு உதவி புரியாவிடினும் வதை புரியாமல் இருக்கலாமே என்று எண்ணி பார்க்க வேண்டும்.
Leave a Reply