– முனைவர் முல்லைத்தமிழ்
சூண்டோதரி வர்மம்
சென்ற மாத இதழில் கையில் உள்ள வர்மங்களில் ஒன்றான கவளிக்காலம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் சூண்டோதரி வர்மம் பற்றி அறிவோம்.
இவ்வர்மம் சூண்டுவிரலின் மொழியின் மேல்குழியில் அமைந்துள்ளது. இதற்கு சூண்டோதரி வர்மம், சுட்டு வர்மம் என்னும் வேறுபெயர்களும் உண்டு.
“வகுத்தபடி சூண்டுவிரல் மொழியிறைக்குள்
சூண்டோதரி வர்மம்”.
– வர்ம குருநூல்
“சூண்டும் விரல் கவிட்டில் சூழ்ந்த
சூண்டோதரியாம்”.
– இலாடச்சூத்திரம்
என குறிப்பிடுகிறது.
போடவே சூண்டுவிரல் இடையில் மர்மம்
பொங்கமுடன் கொண்டுதென்றால் குணத்தைக்கேளு
தரிப்பேறும் விரல் கனத்து மரம் போலாகும்
திறமான ஒளி மறையும் வியர்க்கும் மேனி
நாளான மூன்றில் வரும் குளிரும் சீதம்
நால்பதுக்குள் கை தடவி தீர்ந்துபோகும்
மறிப்பாக கை பிளந்தால் பிழயப்பா
மாறிப்பார் தொண்ணூறில் மரணமாமே.
– வர்ம தாண்டவம்-500
சூக்ஷமாம் சுண்டோதரி குணமேதென்றால்
துடிக்கும் பாரே சரீரமெங்கும் வீக்கம் உண்டாம்
வறட்சையாய் சொல்லுகிறேன் விரும்பிப்பார்க்க
விசங்கொண்டு கோணும்பாரு பதினொன்றாம் நாள்
பாச்சிய சுண்டோதரி குளிர் வெதுப்பு பனி
குறிகள் தாண்டினக்கண்டால் கைமுறையாய் தைலம்
விட்டுத் தடவிக்கொள்ளே.
– பீரங்கி சாஸ்திரம்
இசைந்திட்டேன் சூண்டோதரிவற்மந்தானே
ஏற்றிடுகில் யிதன் குணத்தை இசம்பக்கேளு
வசைந்திட்ட மூன்றுக்கு அசதி கூட்டம்
வரும் கழைப்புடன் காட்டி மறைவதாகும்
துசைந்திட்ட முறிவாகில் சன்னி தோன்றும்
துரிசமாய் யெழும்பிடுகில் மரித்துப்போகும்
தசைந்திட்ட சிகில்சைகள் சரியாய் செய்
தெளிவாகுமென்று முனி தரித்தவாறே.
– வர்ம கருவிநூல்-500
“கருத்துடனே சூண்டோதரிவர்மம் கொண்டால்
கணக்குடனே செய்குணத்தை கருத்தாய் கேளு
திருத்தமுடன் தேகமது துடிப்புண்டாகும்
செப்புகிறேன் நீர் பெருகும் செப்பக்கேளு
விருப்பமுடன் சொல்லுகிறேன் விரும்பிப்பார்த்தால்
விம்மல்கொண்டு கொல்லும் நாள் பதினாறாகும்
வருத்தமாய் செய்யாதே விலகி நில்லு
வரும் வாதம் கழியுமென்றால் மகிழ்ந்து செய்யே”.
– வர்ம அகஸ்திய சாரி
“சூட்சமுறும் இந்த வர்மம் சுழிவாக சுகம்வரவே
யார்க்குமிதை யுரையார்கள் கைக்குழிக்குள்ளன்றுவிரல்
பட்சமுற பதித்தனுக்குமேல்கீழ் என்றுறவாய் மேல்
தவளையடி நரம்படங்கல் நழுக்கறிந்திழுத்துவிடு
ஊக்கமுடன் உள்புறச்சூத்திரத்தில் உருவேற்றி
உறப்புசெய் ஏந்தி செவிக்குற்றி உகந்து
தாட்சமுடன் பத்தும் பதிக்கும் பதமறிந்து பக்குவம்
செய் பதறுவினை மயக்கம் போமே”.
– வர்ம குருநூல்
“கேட்டபடி சூண்டோதரியாம் வர்மமப்பா
கெட்டியாம் குளிர் வெதுப்பு பனியிளகி
வாட்டமோடு கைகாலும் தடித்து வீங்கும்
வரும் இக்குறிகள் கண்டால் மானே
தொட்டபடி தைலமது தொட்டுத்தானே
துதியாக தடவிவிடு தொட்டுத்தொட்டு
விட்டபடி சூண்டோதரி இளக்கியேதான்
விட்டுவிடும் என்று முனி முனிந்தவாறே”.
– வர்ம சூட்சம்
என குறிப்பிடுகிறது. மேலும்,
சூண்டும் விரல் கடைக்குழியில் சூண்டோதரி வன்மம்
வேண்டுமென்றுக்கொண்டிடிலோ தரிப்பிளகும்கோச்சும்
மீண்டுவிரல் கனத்திறுகி மனம் போலாகும் வன்மமிது
தாண்டுமந்த மாத்திரைக்கு படபடக்கும் என்னே!
– வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்
சூண்டுவிரலின் கடைசிக்குழியில் சூண்டோதரி வன்மம் அமைந்துள்ளது. இவ்வர்மத்தில் தாக்கம் கொண்டால் தரிப்பிளகி விரல் கோச்சும், தொடர்ந்து விரல் தடித்து மரம் போல் மரத்துப்போகும். மாத்திரை மிஞ்சி தாக்கம் கொண்டால் நெஞ்சில் படபடப்பும் உண்டாகும் என்பதாம்.
என்னலுற இவ்வன்மம்கொண்டிடிலோ விடநிலையில்
திண்ணமுற உடல் கனத்து வீங்கும் வியர்க்கும்மேனி
எண்ணமதும் தடுமாறி வெதுப்புடனே பனிகுளிராம்
வண்ணமுற கைபாகம் மருந்ததுவும் செய்யத்தீரும்.
– வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்
இவ்வன்மம் விடநிலையில் கொண்டால் உடல் கனத்து வீங்கி வியர்வை உண்டாகும். எண்ணமும் தடுமாறி அனல் தோன்றி குளிர் உண்டாகும். சரியான மருந்துவகைகளுடன் பரிகாரம் செய்துவிடு என்பதாம்.
செய்யக்கேளின்னும் கரும்பவளவிரையுடன்
எய்யும் பழச்சாறு வெண்புடையும் பாதியதன்
கையுள் அடங்கும் பழச்சாறு அதன் பாதிஎடு
உய்யும் குமரியின் சாறு அதன் பாதி சேரே.
– வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்
மேலும் கைபாகம் செய்யக் கேட்பாயாக, பப்பாளிப்பழச்சாறுடன் அதற்குப் பாதியளவு வெள்ளைப்பூண்டு சாறும் அதன் பாதியளவு எலுமிச்சம் பழச்சாறும், அதற்குப் பாதியளவு கற்றாழைச்சாறும் சேர்க்கவும்.
சேர்க்கவே மருந்துவகை யின்னுங்கேளஃது
பார்க்கவே அரியாறுஅமுக்கூரம் குக்கிலதும்
ஓர்க்கவே ஓர் நிறையாய்கட்டிச்சன்னாரும்
வார்க்கவே வயம்பு தேவதாரம் சுக்கே.
– வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்
மேல்கூறியவற்றுடன் இன்னும் சேர்க்கும் மருந்து வகையைக் கேள். அரிசிவகை ஆறு, அமுக்கூரம், குக்கில், கட்டிச்சன்னார், வயம்பு, தேவதாரம், சுக்கு சம அளவு சேர்க்கவும்.
சுக்கொடும் வெண்மரத்து வெள்ளையது மதுரம்
அக்கொடுவேலி யளவுடன் மாயக்காயதும் சேர
ஒக்கெடு சமமதாய் எண்ணையறிந்து மூன்றும்
பக்கொடும் பதம் முதிர்பருவமென்னலுமே.
– வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்
சுக்குடன் வெள்ளைக்குந்திரிக்கம், அதிமதுரம், கொடுவேலி, மாயக்காய் சம அளவு எடுத்து அதனுடன் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், ஆமணக்கெண்ணெய் மூன்றும் சம அளவாய் கலந்து காய்ச்சி முதிர்மெழுகு பருவத்தில் இறக்கவும்.
என்னும் தைலம் எழில்கொஞ்சவே கையிதமாயிடு தூசிதனில்
இன்னுமகமருந்ததுவுமாம் சிவன்வேம்பு சேர்கொதிநீரதும்கூட
தொன்னூல் பல்வழி பகர்ந்த நன் மருந்தருந்தி விடவே
கண்ணும் வன்ம பிணி பலவும் வடிந்துறும் என்னே.
– வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்
இத்தைலத்தை பாதிக்கப்பட்ட இடத்தில் இதமாகப் போட்டு தடவிவரவும். அதனுடன் அகமருந்தாக சிவனார்வேம்பு சேரும் மருந்துக்கூட்டுகளுடன் பழமையான நூல்கள் பகரும் பல மருந்துகளையும் சேர்த்து தண்ணீரிலிட்டு கொதிக்கவைத்து அருந்திவர வர்மபிணிகள் பலவும் தீரும் என்பதாம்.
சூண்டோதரிவன்மம் வருத்தும் பிணி பல கேள்
ஆண்டோ கழிந்தலைக் கழிக்கும் துயில்வலியும்
மாண்டோர் போலே கனத்து உடல் கடும்பிடிப்பு
வேண்டார் வன்மமது கொண்டிடவே.
– வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்
சூண்டோதரி வர்மம் கொண்டால் பிற்காலங்களில் பல பிணிகள் உண்டாகும். ஆண்டுகள் பல கழிந்தாலும் தூக்கம் கெடுக்கும். உடலில் வலியும் உண்டாகும். பிணத்தைப் போன்று உடல் கனத்து ஆங்காங்கே பிடித்து இறுக்கிக்கொள்ளும். அதனால் இவ்வர்மம் கொள்ள யாரும் விரும்பமாட்டார்கள் என்பதாம்.
சூண்டும்விரல் கடைக்குழியாமிது பதமறிந்துடன்
தாண்டும் மணித்திருக்கியடியும் சேர்த்துறவேப்பிடி
வேண்டும் அறிவரூட்டுதலம்பற்றி ஏற்கும்வன்மம்
தூண்டும் துயிலஃதுடன் தொடர்வழியும் காணே.
– வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்
சூண்டுவிரலின் கடைக்குழியாகிய இவ்வர்மத்தைப் பதமறிந்து பிடித்தவுடன் மணித்திருக்கியின் அடிப்பகுதியும் சேர்த்து, குருவானவர் கையூட்டாகப் பெறும் பொருளினை ஏற்பதற்கு பற்றிப் பிடிக்கும் தலமாகிய தெட்சணைக்காலத்தையும் தொட்டுத் தூண்டி தொடராக பயன்படுத்தி வந்தால் துயில் எளிதில் உண்டாகும் என்பதாம் என வர்ம யோகச்சூத்திரமும் குறிப்பிடுகிறது.
இவ்வர்மத்தில் தாக்கம் கொண்டால் சுளுக்குடன் அசதியாகி, ஊசி குத்துவது போன்று நரம்புகளில் வலி தோன்றும். குளிருடன் வெதுவெதுப்பும், பனியும் உண்டாகி உடல் துடிக்கும். கை, கால்கள் தடித்து வீங்கும். இதற்கு முறிவெண்ணெய் தடவ சுகமுண்டாகும். மேலும், உடல் விம்மி மயக்கமுடன் ஜன்னியும் தோன்றும். இவ்வர்மத்திற்கு அவதி 16 நாழிகை என வர்ம அகஸ்தியசாரி என்னும் நூல் என குறிப்பிடுகிறது.
மேலும் இவ்வர்மத்தை இளக்குவதற்கு கழுத்துறை வழியே கை வரை தடவி, செவிக்குற்றி அடங்கல், கைக்குழி அடங்கல், தவளை நரம்படங்கல், உள்சூத்திர அடங்கல், புறச்சூத்திர அடங்கல், ஏந்தி அடங்கல், உள்ளங்கால் அடங்கல், உள்ளங்கை அடங்கல்களைத் தூண்டி தடவி, அகமருந்துகளையும் கொடுத்து, புறமருந்தாக ஒற்றல், பூச்சு போன்றவைகளையும் செய்து துணியினால் சுற்றிக்கட்டி அவ்விடம் அசையாமல் வைத்து முக்கூட்டு தாரை செய்ய சுகம் உண்டாகும் என அனுபவமிக்க வர்ம வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.
இவ்வர்ம பாதிப்படைந்தவர்களுக்கு பிற்காலத்தில் கை தரிப்பு, கை தளர்ச்சி, தலைவலி போன்ற பின்விளைவுகள் உண்டாகும் என வர்ம நூல்கள் குறிப்பிடுகின்றன. இவ்வர்மத்தை பெருவிரல், மூவிரல் போன்றவைகளாலான தூண்டல், அழுத்தல், அனுக்கல், தட்டல், அதிர்த்தல், அமத்தல் போன்ற தூண்டுமுறை நுட்பங்களைக் கொண்டு தூண்டிவர, உறக்கமின்மை, கண்நோய்கள், வாதநோய்கள் குணமாகும் என வர்ம சுவடிகள் குறிப்பிடுகின்றது.
Leave a Reply