தமிழரின் வாழ்வியலும் அறிவியலும்

  • By Magazine
  • |

– சா. ஸ்ரீதர், காரமடை (இளங்கலைத் தமிழ், பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி)

இயற்கையோடு இயைந்த வாழ்வை வாழ்ந்தவர்கள் நம் தமிழ் முன்னோர். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, மனித வாழ்வின் ஒவ்வொரு படிநிலையையும் செம்மைப்படுத்தி, நெறிமுற வகுத்த பெருமை தமிழர்க்கு உண்டு. இலக்கியம், அறிவியல், மருத்துவம், ஆன்மிகம், வேளாண்மை எனப் பன்னெடுங்காலமாகத் தமிழர் வளர்த்தெடுத்த வாழ்வியல் நெறிகளை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

இலக்கியம் காட்டும் வாழ்வியல்

தமிழர் தம் வாழ்க்கை முறையை அகம், புறம் என இரு பெரும் பிரிவுகளாகப் பகுத்துக் கண்டனர். மனிதனின் அக உணர்வான காதலை, தலைவன்-தலைவியின் தொடக்ககால அன்பு முதல், பிரிவு, ஊடல், கூடல் என அதன் அத்தனை பரிமாணங்களையும் சங்க இலக்கியங்கள் விரிவாகப் பேசுகின்றன.

குழந்தைப் பருவம் முதல் முதுமை வரை மனிதன் எவ்வாறு வாழ வேண்டும் என்பதையும் தமிழ் இலக்கியங்கள் அழகாக எடுத்தியம்புகின்றன. குறிப்பாக, ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியே பருவங்களைப் பகுத்து, அவர்தம் சிறப்புகளை விளக்கும் ‘பிள்ளைத்தமிழ்’ இலக்கியங்கள் தமிழரின் உளவியல் சிந்தனைக்குச் சான்றாகும். குடும்ப அமைப்பின் முக்கியத்துவத்தையும், இல்லற நெறிகளையும் சங்க நூல்கள் நன்முறையில் போதிக்கின்றன.

பண்பாடும் கலைகளும்

“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற உலகளாவிய ஒருமைப்பாட்டுச் சிந்தனையை உலகிற்குத் தந்த மொழி தமிழ். தனக்கெனத் தனித்துவமான மொழி, கலை, திருவிழாக்கள், அறநெறிகளைக் கொண்டு ஆற்றங்கரை நாகரிகங்களாகத் தமிழர் நாகரிகம் தழைத்தோங்கியது.

பரதநாட்டியம் போன்ற செவ்வியல் நடனங்களும்; கரகாட்டம், காவடியாட்டம் போன்ற நாட்டுப்புறக் கலைகளும்; கர்நாடக இசை மற்றும் பண்ணிசை வடிவங்களும் தமிழரின் கலை அடையாளங்கள் ஆகும். தமிழரின் கட்டடக்கலைத் திறனுக்குத் தஞ்சைப் பெரிய கோயிலும், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலும், மாமல்லபுரச் சிற்பங்களும் இன்றளவும் சான்றுகளாய் நின்று தமிழர் பெருமையைப் பறைசாற்றுகின்றன. இயற்கையை வணங்கும் பொங்கல் திருவிழாவும், தமிழரின் வீரத்தைப் பறைசாற்றும் ஏறுதழுவுதலும் (ஜல்லிக்கட்டு) மனிதனுக்கும் இயற்கைக்குமான பிணைப்பை வெளிப்படுத்துகின்றன.

தமிழரின் அறிவியல் தொழில்நுட்பம்

பண்டைய காலந்தொட்டே அறிவியல் தொழில்நுட்பம் தமிழரின் வாழ்வில் தவிர்க்க முடியாத அங்கமாக இருந்துள்ளது. கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் கரிகால் சோழனால் கட்டப்பட்ட கல்லணை, நவீனப் பொறியியல் வல்லுநர்களுக்கே வியப்பளிக்கும் உன்னதமான நீர் மேலாண்மைக் குறியீடாகும்.

இரசாயனக் கலவைகளோ, நவீன இயந்திரங்களோ இல்லாத காலத்தில், தஞ்சைப் பெரிய கோயில் கோபுரத்தின் உச்சியில் 81 டன் எடையுள்ள ஒற்றைக்கல்லை நிறுவிய தமிழரின் கட்டடக்கலை அறிவியல் அசாத்தியமானது.

கடல் வாணிபமும் வானிலையும்: தமிழர்கள் கப்பல் கட்டுவதிலும் திசை அறிவதிலும் வல்லவர்களாக இருந்தனர். ‘கப்பல் சாத்திரம்’ என்னும் நூல் தமிழரின் கப்பல் கட்டும் தொழில்நுட்பத்தை விளக்குகிறது. கடல் கடந்த வணிகத்தைப் ‘பட்டினப்பாலை’ விரிவாகப் பேசுகிறது. சூரியனின் இயக்கத்தைக் கொண்டும் மணல் கடிகாரங்களைக் கொண்டும் நேரத்தைக் கணக்கிட்டனர். காற்றின் வேகம், ஈரப்பதம் ஆகியவற்றை வைத்து வானிலையைக் கணிக்கும் நுட்பத்தையும் அவர்கள் அறிந்திருந்தனர்.

உணவே மருந்து : தமிழர் மருத்துவம்

தமிழர் மருத்துவம் என்பது வெறும் நோய் நீக்கும் முறையல்ல; அது ஒரு ஆரோக்கியமான வாழ்வியல் முறை. ‘உணவே மருந்து’ என்ற கோட்பாட்டின் அடிப்படையில் 18 சித்தர்களால் தோற்றுவிக்கப்பட்ட ‘சித்த மருத்துவம்’ தமிழரின் தனித்துவக் கொடையாகும்.

மனித உடல் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்களால் ஆனது என்ற தத்துவத்தின் அடிப்படையில் இம்மருத்துவம் இயங்குகிறது. திருவள்ளுவர் ‘மருந்து’ என்னும் அதிகாரத்தில், “முன் உண்டது செரித்தது அறிந்துண்ணின்” என ஆரோக்கியத்தின் அடிப்படையை உணர்த்துகிறார். தாவரங்கள், மூலிகைகள் மட்டுமன்றி தங்கம், வெள்ளி போன்ற உலோகங்களையும் பற்பமாக மாற்றிப் பயன்படுத்திய வேதியியல் அறிவு சித்தர்களுக்கு இருந்தது. வர்மக் கலையும், அட்டாங்க யோகமும் இதன் கிளைகளாகும். மேலும், காயங்களுக்குத் தையல் போடுவது போன்ற அறுவை சிகிச்சை முறைகளையும் (எ.கா: பொற்கைப் பாண்டியன் வரலாறு) தமிழர் அறிந்திருந்தனர்.

வேளாண்மையும் விளையாட்டும்

உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்காக வாழ்வோடு இணைந்த தற்காப்புக் கலைகளையும் விளையாட்டுகளையும் தமிழர்கள் உருவாக்கினர். சிலம்பாட்டம், வாள்வீச்சு, களரி போன்ற தற்காப்புக் கலைகளும்; கபடி, ஜல்லிக்கட்டு போன்ற வீர விளையாட்டுகளும்; பல்லாங்குழி, ஆடுபுலி ஆட்டம் போன்ற அறிவுசார் விளையாட்டுகளும் தமிழரின் சிந்தனைக்குக் கண்ணாடிகளாகும்.

வேளாண்மையில் தமிழர்கள் சிறந்து விளங்கினர். நிலத்தைக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்தாகப் பகுத்து, காலச் சூழ்நிலைக்கு ஏற்ப நெல், கரும்பு, வாழை, மிளகு, மஞ்சள் போன்ற பயிர்களைப் பயிரிட்டனர்.

“சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்உழந்தும் உழவே தலை.”

என்ற குறளின் வழி வள்ளுவர் உழவின் மகத்துவத்தைப் போற்றுகிறார். ஏரிகள், குளங்கள், மதகுகள் போன்ற நீர்நிலைகளை உருவாக்கிப் பாசன வசதியைப் பெருக்கினர்.

தமிழரின் ஆன்மிகம்

தமிழர் ஆன்மிகம் என்பது இயற்கையோடு கலந்த ஓர் ஒழுக்க நெறியாகும். ஐம்பூதங்களையும் தெய்வங்களாக வணங்கிய தமிழர், பின்னர் பக்தி இயக்கக் காலத்தில் (7-ஆம் நூற்றாண்டு முதல்) நாயன்மார்கள், ஆழ்வார்கள் வழியே தமிழையும் ஆன்மிகத்தையும் வளர்த்தெடுத்தனர். தேவாரம், திருவாசகம், நாலாயிர திவ்வியப் பிரபந்தம் ஆகியவை ஆன்மிகப் பொக்கிஷங்களாகத் திகழ்கின்றன.

“உடம்பார் அழியில் உயிரார் அழிவர்” என்ற திருமூலரின் வாக்குப்படி, உடலையும் உயிரையும் பேணுவதே ஆன்மிகம் எனச் சித்தர்கள் போதித்தனர். தமிழர் ஆன்மிகம் அன்பையும் பண்பையும் அடிப்படையாகக் கொண்ட ஒரு வாழ்வியல் நெறியாகும். இன்று நாம் பேசும் நவீன அறிவியலையும் சமூகக் கோட்பாடுகளையும் அன்றே நம் முன்னோர் அறிந்து வாழ்ந்தனர் என்பதை எண்ணும்போது தமிழ்மொழியின் பெருமை புலனாகிறது. சில அறிவியல் தொழில்நுட்பங்களுக்கும் இலக்கியங்களுக்கும் இன்று தேசிய அளவில் அங்கீகாரங்கள் கிடைத்து வருவது நமக்குப் பெருமிதம் அளிக்கிறது. நம் முன்னோர் காட்டிய அவ்வழி நின்று, தமிழ்மொழியின் பெருமையையும் அதன் அறிவியல் நெறிகளையும் உலகெங்கும் கொண்டு சேர்ப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *