– இரா. அரிகரசுதன்
2018 ஆண்டில் சென்னையில் பழங்குடியினர் கலைவிழாவான ” பழங்குடிநாதம்” நிகழ்விற்கு அன்பு நண்பர் பேராசிரியர் ஊட்டி பழங்குடி ஆய்வு மையத்தின் தலைவராக இருந்த முனைவர் சுப்ரமணியன் (அன்பு நண்பரும் வழிகாட்டியுமான அவரை கொரொனா காலக்கட்டத்தில் இழந்தது எனது பெருந்துயரங்களுள் ஒன்று) அவர்களின் அழைப்பின் பேரில் எனது காட்சித் தொடர்பியல் துறை மாணவர்களோடு சென்றிருந்தேன்.
அன்றைய விழாவின் நிறைவில் அப்போது மெரினா கடற்கரையின் பிரபலமாக இருந்த தள்ளுவண்டி உணவுக்கடையான சுந்தரி அக்கா உணவுக்கடையில் மீன்சோறும் பொரித்த கானாங்கெளுத்தி (அயிலை) மீனும் தின்று பசியாறி வந்தோம்.
சுந்தரி அக்கா கடற்கரை மணலில் வலுவாக தன் பாதங்களை ஊன்றி துணைவரின் துணையோடு ஒற்றையாளாக நின்று எல்லா வேலைகளும் செய்து கொண்டிருந்தார்.
தொடர்ந்து புகைப்படம் எடுத்து களைத்திருந்த மாணவர்களுக்கோ பசி. நாங்கள் உணவு வட்டையை திறப்பதற்காக காத்து நின்றோம். இதோ ஐந்தே நிமிடம் என்று சொல்லி சுந்தரி அக்கா தன் கையால் வட்டையைத் திறந்து பரிமாறினார். குறைந்த விலையில் சுவையான உணவு. மீண்டும் மீன்வாங்கி சாப்பிட்டு வயிறு நிரம்ப அனைவரும் உண்டோம்.
சுந்தரி அக்கா, சோறு பரிமாறும்போது அன்ன கரண்டியில் முதல் அகப்பை அள்ளும் போது சோற்றில் சிலுவை குறிபோட்டு எடுத்ததைக் கண்டேன்.
மாணவர்களுக்கு நான் திரைப்படத்தில் குறியீடுகளின் பயன்பாடு, அதன் அழகியல், அரசியல் என பலமுறை சொல்லிக் கொடுத்திருக்கின்றேன். அது பற்றி அவர்களுக்கு நினைவு படுத்தி சுந்தரி அக்கா சோற்றில் போட்ட குறியீடுபற்றியும் விரிவாக விளக்கினேன். ஆனால் மாணவர்கள் ஒத்துக் கொள்ளவில்லை, அவர்கள் பார்க்கவில்லை என்று சொன்னார்கள். அவர்கள் பார்த்துக்கொண்டுதானிருந்தார்கள்.
அவர்களின் கண் முன்னேதான் அந்த குறியீடு சடங்காக நிகழ்ந்திருந்தது. ஆயினும் அவர்களால் கண்டுணர இயலவில்லை. இது குறித்தும் அவர்களுக்கு விளக்கிவிட்டு, ஒரு மாணவரை அனுப்பி சந்தேகத்தை நேரடியாக சுந்தரி அக்காவிடம் கேட்டுவிட்டு வரசொன்னேன். அவர்கள் ஆமாம் என்று ஒத்துக் கொண்டார்கள். அதன்பிறகுதான் மாணவர்கள் தெளிவடைந்தனர். நான் அக்குறியீட்டின் வழியாக அவர் குறித்து சொன்ன செய்திகளும் ஒத்துப் போவதுபற்றி ஆச்சரியப் பட்டார்கள்.
—-
அன்றைய தினத்திற்கு பின்பு சுமார் ஏழு வருடங்கள் தாண்டி சமீபத்தில் நான் சென்றிருந்த சென்னைப் பயணத்தில்தான் அன்று அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. மீண்டும் அவர் கடையை தேடி ஓர் பயணம் செய்தேன். என்னோடு நண்பர் ராமலிங்கம் மற்றும் காமராஜ் ஆகியோர் உடனிருந்தனர். மாலை வேளையில் சென்னையில் கடற்கரையில் அவர்களைத் தேடிக் கண்டுபிடித்தேன்.
தற்போது உணவுக்கடைகளுக்காக தனியாக ஒதுக்கப்பட்டிருக்கின்ற இடத்தில் ஒரு சுந்தரி அக்கா கடைக்கு பதிலாக கூடவே முன்னும் பின்னும் அடைமொழிகளோடு பல அக்கா கடைகள் முளைத்திருந்தன. ஒரு தங்கச்சிக் கடையும் முளைத்திருந்தது.
வியாபாரத்தில் ஒரு நிறுவனம் தன்னை நிரூபித்து முத்திரைபதித்த (பிராண்டாக) பின் அதன் போட்டியாளர்கள் நிறுவனத்தின் சாயலில் பெயரையோ, வடிவமைப்பு மாதிரிகளையோ நகல் செய்வது என்பது வியாபார உலகில் இயல்பு. நாம் சிறியது முதல் பெரிய நிறுவனங்கள் வரை ஏற்கனவே கண்டிருக்கின்றோம். எடுத்துக் காட்டுக்கு திருநெல்வேலி அல்வாவைச் சொன்னால் அனைவருக்கும் புரியும். அதுபோலதான் இங்கே மெரினா சுந்தரி அக்கா கடைக்கும் நடைபெற்றிருக்கின்றது.
அக்காவை நான் ஏற்கனவே பார்த்திருப்பதனால் அவர் வாடிக்கையாளர்களை அழைக்கும்போதே நான் கண்டுகொண்டு அவர்கடையிலேயே இரவுநேரம் மீன்சாப்பாடு கொடுவா மீன்பொரியலோடு (கானாங்கெளுத்தி இல்லை) சாப்பிட்டேன். மனம் நிறைவாகவே இருந்தது.
சற்றே உடல்வலு குன்றிபோய் தோற்றம் அளித்த அக்காவிடம் பழைய நினைவுகளைக் கூறி பேசிக் கொண்டிருந்தேன். மிகவும் மகிழ்ந்த அக்கா தனது துணைவருக்கு உடல் நலம் சரியில்லாமல் போனது பற்றிய தளர்ச்சி குறித்தும், தன்னிடம் உணவு வாங்கி சாப்பிட்டவர்கள் எனது கடையின் அதே பெயரைப் போட்டு கடை நடத்துகிறார்கள். கடை நடத்துவது பரவாயில்லை ஆனால் அதே பெயரையா போட வேண்டும் ஒரு நியாயம் வேண்டாமா என்றும் தனது வருத்தங்களை பகிர்ந்து கொண்டார். ஆனாலும் நம்ம கைப் பக்குவம் அவர்களுக்கு வராது அல்லவா என்று மிகவும் நம்பிக்கையோடும்பேசினார்.
இதில் நகைச்சுவை என்னவென்றால் “தங்கச்சிக் கடை” என்று ஒரு கடை உருவாகியிருக்கின்றது. அங்கு சாப்பிட்டவர்கள் உன் தங்கச்சி கடையில் சாப்பிட்டோம் என்று இவரிடம் அக்கடை உணவுகுறித்து மதிப்பீட்டு பேசுகையில் அவர் உண்மையில் எனக்கு தங்கச்சி இல்லை. ஆனால் பாருங்கள் எனக்கு எவ்வளவுச் சங்கடங்களைத் தருகிறார்கள் என்றார். மேலும் தொழில் போட்டியில் சிலர் மந்திரம் ஓதுதல் போன்றெல்லாம் கூட செய்ததாக அரசல் புரசலாகக் கேள்விப் பட்டேன் என்றார். ஆனால் தம்பி இப்பவும் நம்மக் கடையைத் தேடி எப்பவும்போல வந்துகொண்டேதானிருக்கிறார்கள். எப்படியோ தம்பி ஆண்டவர் இருக்கிறார் அவர் பார்த்துக் கொள்வார் தம்பி என்று முடித்தார்.
அவரின் அனுமதியோடு புகைப்படம் எடுத்தோம். புகைப்படத்தில் அவரை அம்மா என்று வாஞ்சையோடு அழைத்துக் கொண்டு உடன் பாரிமாறிக்கொண்டிருந்த சகோதரரும், நண்பர் இராமலிங்கம் அவர்களும் உடன் இருக்கின்றனர்.
மெரினாவின் உப்புச் சுவையேறியக் கடற்கரை மணலில் கருங்காந்தமென கால்புதைய நின்றும் நடந்தும் பணிசெய்துகொண்டிருந்த சுந்தரி அக்காவே எனது நினைவில் காட்சியாகத் தெரிகிறார்.
அவரின் கடற்கரை பின்னணி மறைந்து தற்போது எதிர்திசையில் சாலைக்கு இந்தபுறம் வாகனங்களின் இடைவிடா பயணத்தின் இடையில் வாடிக்கையாளர்களை தங்கள் கடைகளைநோக்கி உண்ண வாருங்கள் என்று அழைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நடுவில் சற்றேத் தளர்ந்துபோய் ஆனால் குரலில் அதே வலிமையும் எதிர்நிற்கும் நம்பிக்கையும் கொண்டு வண்டிகளின் முகப்பு ஒளியில் அவர் தெரிகிறார். உழைப்பின் ஒளி கூடுதலாகவே பிரகாசிக்கின்றது. சுந்தரி அக்காவிற்கு, வியாபார நுணுக்கங்கள் அறிந்த பெருநிறுவனங்களின் “Franchise” கிளையாண்மை திட்டம் தெரியாதபோதும், மறவாதீர், மெரினாவின் சுந்தரி அக்கா. ஒரு நிறுவன முத்திரையாக மாறிய சாதனையாளர்.
Leave a Reply