– வழக்கறிஞர் பி. விஜயகுமார்
கணவர் இறந்து போனாலும் மனைவிக்கு தொடரும் ஜீவனாம்சம்
பொதுவாக எல்லோரும் நினைத்துக் கொண்டிருப்பது என்னவென்றால் ஒரு கணவருக்கும் அவர் மனைவிக்கும் விவாகரத்து ஆகிவிட்டால் கணவருக்கும் மனைவிக்கும் உள்ள அத்தனை தொடர்பும் ரத்தாகி விட்டது. அதனால் கணவர் மனைவிக்கு ஜீவனாம்சமோ சொத்துரிமையோ கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று. ஆனால் கணவர் மனைவியை விவாகரத்து செய்திருந்தாலும் மனைவி இரண்டாவது திருமணம் முடிக்கும் வரை கணவரின் வாரிசாகத்தான் மனைவி இருப்பாள். கணவன் வேறு ஒரு பெண்ணை கட்டியிருந்தாலும் முதல் மனைவியை கணவர் பராமரிக்கத்தான் வேண்டும்.
ஜீவனாம்ச கோரிக்கை மட்டுமின்றி விவாகரத்துக்கு பிறகும் மனைவி கணவர் மற்றும் அவர் குடும்பத்தார் மீது குடும்ப வன்முறைச் சட்டம், வரதட்சணை என இதர வழக்குகளையும் பதிவு செய்யலாம்.
கணவர் 2-வது திருமணம் செய்து திடீரென இறந்து விட்டால் முதல் மனைவியும் இரண்டாவது மனைவியும் அவரது வாரிசுதாரர்களாக இருப்பார்கள். கணவருக்கு இரு ஏக்கர் நிலம் இருந்தால் கணவர் இறப்பிற்குப் பிறகு இந்த இரு ஏக்கர் நிலத்தில் ஒரு ஏக்கர் முதல் மனைவிக்கும் இன்னொரு ஏக்கர் இரண்டாம் மனைவிக்கும் சமமாகச் செல்லும்.
இதே போன்று குழந்தைகள் மனைவியின் பக்கம் இருந்தால் ஆண் குழந்தைக்கு 18 வயது வரைக்கும் பெண் குழந்தைக்கு அவள் திருமணம் ஆவது வரை விவாகரத்துப் பெற்ற கணவர் ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும்.
தற்போது பாம்பே உயர்நீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்கியது. அதில் கணவன் இறந்த பிறகு மனைவி ஏற்கனவே பெற்று வந்த ஜீவனாம்சத்தை பெற்றுக் கொள்ளலாம். ஆனால் காலம் மாற்றத்திற்கேற்ப கூடுதல் ஜீவனாம்சம் உயிருள்ள கணவர்களிடமிருந்து மனைவி உயர்த்தி கேட்பது போன்று இறந்த கணவனிடமிருந்து மனைவி ஜீவனாம்சத்தை உயர்த்தி (Enhancement) கேட்க முடியாது என தீர்ப்பு வழங்கியது. ஏற்கனவே பெற்று வந்த தொகையை மட்டுமே பெற முடியும்.
மேலும் கணவர் இறந்த பிறகு அவரது இதர குடும்ப உறுப்பினர்களிடமிருந்து மனைவி ஏற்கனவே பெற்றுவந்த ஜீவனாம்சத்தை பெற முடியாது என பாம்பே உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இறந்த கணவருக்குப் பாத்தியப்பட்ட சொத்தின் வருமானத்திலிருந்து மட்டுமே ஜீவனாம்ச தொகை பெற முடியும். அதுவும் வாரிசுரிமைப்படி அச்சொத்து மனைவிக்கு வந்து விட்டால் மனைவி ஜீவனாம்சம் பெறுவது நின்று விடும்.
விவாகரத்து ஆணை பிறப்பித்த ஒரு மாதத்திற்குள் மனைவி மேல்முறையீட்டிற்குச் செல்லவில்லையென்றால் அந்த கணவன் ஒரு மாதம் கழித்து இரண்டாவது திருமணம் செய்து கொள்ளலாம். மேல்முறையீட்டு வழக்கில் கணவனுக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய விவாகரத்து ஆணையை மேலமை நீதிமன்றம் ரத்து செய்தாலும் கணவன் செய்த இரண்டாவது திருமணத்தைத் தடை செய்ய சட்டத்தில் இடமில்லை. மேல் முறையீட்டு ரத்து ஆணையை வைத்துக் கொண்டு முதல் மனைவி இரண்டாவது மணந்துள்ள மனைவியை விரட்டி விட்டு தாம் போய் கணவரிடம் ஒட்டிக் கொள்ளலாம் என்று நினைப்பது நடக்கக் கூடிய காரியம் அல்ல. அதே போல் சில கணவர் மனைவியிடமிருந்து விவாகரத்து ஆணை பெற்ற பிறகு இரண்டாவது திருமணம் செய்யாமல் மனம் மாறி அதே மனைவியுடன் போய் சேர்ந்து வாழ முயற்சிப்பர். இதற்கும் சட்டத்தில் இடமில்லை. ஆனால் இப்பேர்பட்ட வழக்குகளில் கணவனும் மனைவியும் சேர்ந்து உயர் நீதிமன்றத்தில் மனு செய்து நாங்கள் இருவரும் சேர்ந்து வாழத் தயாராக இருக்கிறோம், ஆதலால் கீழமை நீதிமன்றம் வழங்கிய விவாகரத்து ஆணையை ரத்து செய்து எங்களை சேர்த்து வைக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென்று முறையிடலாம். அதை பரிசீலித்து உயர்நீதிமன்றம் இருவரையும் திரும்பவும் சேர்ந்து வாழ வைக்க நடவடிக்கை எடுக்கும்.
Leave a Reply