பழனி அரங்கசாமி
நமக்கு முன்னர் வாழ்ந்த பல்துறைப் பெருமக்களைப் பற்றிக் கேள்விப்படுகிறோம். அவர்களை ஓவியமாகவும், படமாகவும் பார்க்கிறோம். அவர்கள் வாழ்வு நமக்குப் பாடமாகவும் அமையும் என்பதை அவர்களது வாழ்க்கை வரலாற்றில் தான் அறிந்து கொள்ள முடிகிறது. சுமகாலத்தில் வாழ்கின்ற பெரிய மனிதர்களைக் கூட நேரில் கண்டு அவர்களது அனுபவங்களைக் கேட்கும் வாய்ப்புக் கிடைப்பதில்லை. அவர்களது அறிவும் ஆற்றலும் உழைப்பும் உறுதியும் அறிய வேண்டுமாயின், அவர்களது வாழ்க்கைக் சரிதமே நமக்குத் துணை.
தன் வரலாற்றுக் குறிப்புகள் இன்றைய இளைஞர் சமுதாயம் தனது எதிர்காலத்தைக் கணிப்பதற்குக் கை கொடுப்பவை. தோல்வி கண்டு துவளாமல், எதிர்ப்புக்கு அஞ்சாமல், எதிர்நீச்சல் போட்டுக் கரை சேர்வதற்கு அந்த வரலாறுகள் அனைத்தும் கலங்கரை விளக்கெனத் திகழ்பவை. அவர்கள் கடந்து சென்ற மேடு பள்ளங்கள் நம்மை நன்னெறிப்படுத்தும் வழிகாட்டிகள். உலகளாவிய கண்ணோட்டத்திற்கும், பரந்துபட்ட பொது அறிவிற்கும் நம்மை வழிப்படுத்தும் அரிய வரலாற்றுச் சுவடுகள்.
பழங்காலத்திய தமிழ்ச் சான்றோர்கள் பலரும் தத்தம் வாழ்க்கை வரலாறுகளை எழுதவில்லை. அது தற்பெருமையாகி விடும் என்று கருதினார்கள். அடக்கமும் எளிமையும் அவர்களது இயல்புகள். இதன் எதிர்விளைவுதான் பெரும் புலவர்களைப் பற்றியோ, அடியார்களைப் பற்றியோ பிறரால் கூறப்படும் செய்திகள் அனைத்தும் வெறும் கற்பனையாகவும், புனைந்துரையாகவும் போய்விட்டது. தான் எழுதிய நூலில் கூட அவையடக்கம் என்னும் மரபினைக் கருதி தன்னைப் பற்றிய எந்தச் செய்தியினையும் அவர்கள் கூறவில்லை.
வாழ்க்கை வரலாறு எழுதும் மரபு முற்காலத்தில் தொடங்கியிருந்தால் நம்பமுடியாக் கற்பனைக்கும், புனைந்துரைக்கும், முந்தையோர் வரலாறுகளில் இடமில்லாமல் உண்மை செய்திகள் மட்டும் வெளியாகி இருக்கும். அப்படியின்றி இடைக்காலத்தில் தமிழ் இலக்கியங்களில் கற்பனை கரை கடந்து போவதால் தான். வரலாற்று அறிஞர்கள் ஒட்டு மொத்தமாகவே இலக்கியங்களை ஆய்வுக்கு எடுத்துக் கொள்வது இல்லை.
பத்தொன்பதாம் நூற்றாண்டிற்குப் பின்னர் நிலைமை மாறிவிட்டது. 1876-ஆம் ஆண்டு சுந்தரிதேவி என்பார் வங்கமொழியில் எழுதிய அவரது வாழ்க்கை சரிதமே இந்திய நாட்டின் முதல் தன் வரலாறு என்று தெரிகிறது. இப்போதெல்லாம் ஏராளமான தன் வரலாற்று நூல்கள் வெளிவருகின்றன. இந்திய ஆட்சிப் பணிகளில் இருந்து ஓய்வு பெற்றவர்களும், நீதிபதிகளும், வழக்கறிஞர்களும், அரசியல்வாதிகளும், அதிகாரிகளும், கல்வியாளர்களும், மருத்துவ அறிஞர்களும், அறிவியல் நிபுணர்களும், தனியார் துறைகளின் நிர்வாக தலைவர்களும், தொழிலதிபர்களும் வாழ்க்கை வரலாறுகளை எழுதியுள்ளனர். துறவு வாழ்க்கை மேற்கொண்டு திபெத் எனும் மலைநாட்டின் மதகுருவாகவும், தலைவராகவும் இருந்து சீனாவின் ஆக்கிரமிப்பால் இப்போது இந்தியாவில் இமயமலை பிரதேச மாநிலத்தில் உடல் நலமின்றி வாழ்ந்து கொண்டிருக்கும் தலாய்லாமா தனது வாழ்க்கை வரலாற்றை எழுதியுள்ளார். இவர்களில் பலர் பதவியில் இருந்தபோது கூறமுடியாத பற்பல செய்திகளை கடைசிக் காலத்தில் தத்தமது வாழ்க்கைச் சரிதத்தில் தான் கூறுகின்றனர்.
இந்திராகாந்தி 1971-பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றார். அந்தத் தேர்தலை எதிர்த்து ராஜ்நாராயண் வழக்குத் தொடர்ந்தார். அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த இந்திராகாந்தி அப்போதைய நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யருக்கு தனக்கு சாதகமான தீர்ப்பு வழங்க வேண்டுமென்று மறைமுகமாக அழுத்தம் கொடுத்தார். அதனைச் செவியுறாமல் அவர் பாராளுமன்றத்தில் ஓட்டுப்போடவோ விவாதத்தில் கலந்து கொள்ளவோ கூடாது. பிரதமராக வேண்டுமானால் இந்திராகாந்தி நீடிக்கலாம் என்னும் துணிச்சலான ஒரு தீர்ப்பு வழங்கினார். இதனைத் தனது வாழ்க்கைச் சரிதத்தில் நீதிபதி கிருஷ்ணய்யர் கூறுகிறார்.
வேலூர் சிறையிலிருந்து எந்த மெயின்ரோட்டுக்கும் வராமல் வயல்வெளிகளில் காடு மேடுகளைக் கடந்து தப்பிவந்த செய்தியை மாபெரும் கம்யூனிஸ்டு தலைவர் மறைந்த ஏ.கே.கோபாலன் தனது வரலாற்றில் கூறும் உருக்கமான செய்தி இன்றும் என் மனதில் உள்ளது. தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் அரசு வழக்கறிஞர் ஆச்சார்யாவுக்கு கடுமையான பரிந்துரைகள் ரகசியமாக வந்த போதும் பணத்தாசை காட்டிய போதும் அவர் அதற்கு இணங்கவில்லை. குற்றம் செய்த ஜெயலலிதா தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன் என்று சென்ற ஆண்டு வெளியிட்ட (2023) தனது வாழ்க்கை வரலாற்றில் கூறுகிறார்.
ஐதராபாத்தைச் சார்ந்த ஹபீப் ரக்மான் ராணுவ அதிகாரியாகத் தேர்வு செய்யப் பெறுகிறார். ஒரு கட்டத்தில் போர் வீரர்களுக்கு கொடுக்கும் கடுமையான இரண்டு வாரப்பயிற்சியினை தனது சிறிய குழுவினரோடு மேற்கொள்கிறார். மிகவும் குறைந்த உணவு ஹெலிகாப்டரில் எப்போதாவது வனாந்தரங்களுக்கு வரும். வரவில்லை என்றாலும் காடுமலைகளில் உள்ள காயும், கனியும், பூவும் பிஞ்சும் தான் அவர்கள் சாப்பிட்டாக வேண்டும். இதற்கும் வழியில்லாத போது ஒரு நாள் கடும் பசி தாளாமல் மூன்றரை அடி நீளமான தடிமனான விஷப்பாம்பு ஒன்றை அடித்துக்கொன்று அதனை துண்டு துண்டாக வெட்டி சுட்டுச் சாப்பிட்ட அனுபவத்தை தன் வரலாற்றில் குறிப்பிடுகிறார்.
இலக்கியவாதிகளுள் கேரளாவைச் சார்ந்த கமலாதாஸ் என்னும் பெண் கவிஞர் தன் வரலாற்றை என்டோகதா என்று மலையாளத்திலும் (My story) எனது கதை என்று ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார். மூன்றுமொழி பேசும் தான் தனது இரண்டு மொழிகளில் இலக்கியம் படைக்கிறேன் என்று கூறியவர். கமலாதாசுக்குப் பெற்றோர் இட்ட மலையாளப் பெயர் மாதவிக்குட்டி, திருமணத்துக்கு பிறகு கமலாதாஸ் என்பது அவர் பெயர். கணவரின் மறைவுக்குப்பின் இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறி கமலா சுரய்யா என்று பெயரிட்டு கொண்டார். தனது கவிதைகளில் காதலுக்கு ஏங்கும் ஏக்க உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார். தனது 15 ஆம் வயதில் 35 வயது நிரம்பிய தாஸ் என்பாரைத் திருமணம் செய்து கொண்டதாலும், அவரது மறைவினாலும் ஏற்பட்ட உள்மனப் போராட்டத்தின், ஏமாற்றத்தின் விளைவே அவரது கவிதைகள் என்பது ஆய்வாளர் கருத்தாகும்.
மலாலா யூசப் என்னும் பாகிஸ்தானியப் பெண், மதவெறியும் பழமை நோக்கும் கொண்ட தலிபான்களுக்கு அஞ்சாது, ஸ்வாட் பள்ளத்தாக்கில் பள்ளிக்குச் சென்று வந்தார். பெண் கல்வியை முற்றுமாக வெறுத்த தலிபான்கள் பெண் பள்ளிகளை ஆங்காங்கு இடித்துத் தள்ளினர். எந்த மிரட்டலுக்கும் அஞ்சாமல் பள்ளிக்குச் சென்று வந்த மலாலா பள்ளி பேருந்தில் ஏறும் போது அவளைச் சுட்டுவிட்டனர். தலைக்காயத்தோடு இங்கிலாந்துக்கு தப்பியோடி அரசின் உதவியோடு அங்கும் தனது படிப்பினைத் தொடர்ந்தார். அவளது துணிச்சலை மெச்சி அமைதிக்கான நோபல் பரிசு 2014-ஆம் ஆண்டு அவளுக்கு கொடுக்கப் பெற்றது. அப்போது அவளுக்கு வயது பதினேழு. ஐ.நா மன்றத்தில் அவளை அழைத்துச் சொற்பொழிவாற்றச் செய்தார்கள். லண்டனில் இப்போது தனது கணவனோடு வசித்து வரும் அவள் தனது வருமானத்தைப் பெண் கல்விக்காவும், பெண்ணுரிமைக்காவும் செலவிட்டு வரும் செய்தினை தன் வரலாற்றில் காண்கிறோம். அவளது வாழ்க்கையினை அமெரிக்காவில் திரைப்படமாக எடுத்துள்ளார்கள்.
குலாம் நபி ஆசாத் பன்னெடுங்காலம் இளைஞர் காங்கிரசின் தலைவராக இருந்தவர். அண்மையில் வெளியிடப் பெற்ற அவரது தன் வரலாற்றில் ஒரு ரகசியச் செய்தியை வெளிப்படுத்துகிறார். பிரதமர் நேரு நேரடியான எதிரியாக அவர் கருதிய ஒரு காங்கிரஸ் தலைவரைப் பதவியை விட்டு விலக்குதற்குத்தான் காமராஜ் திட்டம் என்ற ஒரு நியதியைக் கொண்டு வந்தார். அவர் விரும்பாத அந்தத் தலைவர் யாரென்னும், அந்த திட்டத்தை நேருவுக்கு போட்டு கொடுத்த தலைவர் யார் என்பதும் இன்று வரை ரகசியமாக உள்ளது. அந்த ரகசியத்தை நான் சொல்லி இன்றைய காங்கிரசில் பிரச்சனையை உண்டு பண்ண நான் விரும்பவில்லை. அந்த ரகசியம் என்னோடு மடியட்டும் என்கிறார்.
பாலக்காட்டில் பிறந்த சேஷன், அய்.ஏ.எஸ் பல்வேறு பதவிகளுக்குப் பின்னர் இந்தியத் தேர்தல் ஆணையராக பணியாற்றி ஓய்வு பெற்றவர், சட்ட திட்டத்தைக் கடுமையாகப் பின்பற்றியவர். மந்த கதியில் தூங்கி கிடந்த தேர்தல் ஆணையத்துக்கு உயிரோட்டத்தையும், உணர்ச்சியையும் கொடுத்தவர். தேர்தலிள் ஆள் மாறாட்டத்துகு முடிவு கட்ட 550 மில்லியன் வாக்காளர்களுக்கும் அடையாள அட்டை கொடுக்க வேண்டும் என்று அவர் கூறிய போது இந்திய அரசே ஆடி போய்விட்டது. 1200 கோடி ரூபாய் செலவாகலாம். வாக்களாருக்கு அட்டை கொடுக்கவில்லை என்றால் தேர்தல் நடத்தமாட்டேன் அல்லது பதவி விலகி விடுவேன் என்று கூறிவிட்டார். வேறு வழியின்றி அவரது வேண்டுகோளை இந்திய அரசும் ஏற்றுக் கொண்டது. இவரது கொட்டத்தை அடக்க இந்திய அரசு வேறு இரண்டு தேர்தல் ஆணையர்களையும் நியமித்தது. அந்த இருவரையும் சேஷன் ஆட்டிப் படைத்து விட்டார். டில்லியில் இவர் ஒரு அல்ஷேன் என்று பெயர் வாங்கியவர். இதனை அவரே தனது வாழ்க்கை வரலாற்றில் கூறுகிறார்.
தன் வரலாறுகளேயன்றி பற்பல பெருமக்களின் நினைவுக் குறிப்புகளும் (Memoirs) வாழ்க்கை வரலாறுகளும் தன் வரலாற்றோடு ஒத்த மதிப்புடையவை. தன் வரலாறு எழுதிய பல்வேறு பெருமக்களின் சாதனைகளையும், வேதனைகளையும் அனுபவங்களையும், அறிவுரைகளையும் படித்து பார்ப்பது வாசகர்களாகிய நமக்கு சுவை தருவது மட்டுமல்ல, நமது வாழ்க்கைப் பாதையில், பல்வேறு சூழல்களில் எப்படிப் பழக வேண்டும், பணியாற்ற வேண்டும் என்பதற்கும் தன் வரலாறுகள் பேரொளி காட்டும் ஒளி விளக்குகளாக அமையும். இப்படி சுய சரிதம் எனப்படும் தன் வரலாறுகள் இன்றைய உலகில் பரவலாக எழுதப்பட்டிருந்தாலும், மூதறிஞர் இராஜாஜி அவர்களும் தந்தை பெரியார் அவர்களும் தன் வரலாறு ஒரு தற்பெருமையாக போய்விடும் என்று எண்ணியோ என்னவோ, தங்களது வாழ்க்கை வரலாறுகளை எழுதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களை ஒத்த பெருந்தலைவராக இருந்த மகாத்மா காந்தி குஜராத்தியிலும் ஆங்கிலத்திலும் எழுதிய அவரது வாழ்க்கைச் சரிதத்தில் ஏராளமான இளமைப்பருவ நிகழ்ச்சிகளோடு தென்னாப்பிரிக்க அனுபவங்களையும் எழுதியுள்ளார். ஆங்கிலத்தில் உள்ள காந்தியின் தன் வரலாறு நாடெங்கணும் பல்லாயிரக்கணக்கில் விற்பனையாகி உள்ளது. அகமதாபாத் சிறையில் தான், பண்டிதநேரு அவரது தன் வரலாற்றை எழுதினார். தனது நினைவில் நிலைத்துள்ள இந்திய வரலாறு பற்றிய குறிப்புகளையும் அதனுள் சேர்த்துள்ளார்.
ஏறத்தாழ இருபது ஆண்டுகளுக்கு முன் இந்திய காவல்துறைப் பணியிலிருந்து (Indian police service) ஓய்வு பெற்றவர் அஜய் ராஜ் சர்மா. அண்மையில் (2021) வெளியாகிய அவரது வாழ்க்கை வரலாறு இன்றைய காவல்துறை அதிகாரிகள் படிக்க வேண்டிய நூல். பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 2001 டிசம்பர் 11-ஆம் நாள் டில்லியில் பாராளுமன்றத்தினைத் தாக்கிய போது துணிச்சலாக நமது பாதுகாப்புப் படையினருக்கு வழிகாட்டியவர் இவரே. உத்திரபிரதேச மாநிலத்தில் கிராமங்களில் குதிரையில் ஏறி வந்து கொள்ளையடிக்கும் கும்பல்களைத் துணிச்சலாக எதிர்கொண்டு அவர்களை ஒழித்துக் கட்டியவர். போலீஸ்காரர்களுக்குச் சிம்ம சொப்பனமாக விளங்கிய பயங்கரமான சம்பல் பள்ளத்தாக்கு கொள்ளையர்களை சரணடைய செய்தும், சுட்டு பொசுக்கியும் பொது மக்களுக்கு பாதுகாவலனாக இருந்தவரும் இவரே. இப்படிப் பல்வேறு பெருமக்களின் வரலாறுகளைப் படிப்பது ஒரு சுவையான அனுபவம். பணியில் இருப்பவருக்கு இத்தகைய நூல்கள் சிறந்த வழிகாட்டியாகவும் அமையும் என்பதில் அய்யமில்லை
Leave a Reply