மூலநோய்

மூலநோய்

  • By Magazine
  • |

டாக்டர் என்.கே. சுரேஷ் MD(S)

ஜீரணமண்டலப் பாதையின் கடைசி பகுதியான மலக்குடலின் (Rectum) உள்ளே உள்ள இரத்தநாளங்களில் வீக்கம் மற்றும் தாபிதம் ஏற்பட்டு இரத்தம் கசிதல், வலி, எரிச்சல் மற்றும் வெளியில் முளை பிதுங்கி காணுதல் போன்ற குறிகுணங்களை காட்டி துன்பப்படுத்தும் நோயை மூலநோய் என்கிறோம்.

மூலநோயால் இந்தியாவில் சுமார் 11 சதவீதம் பேர் பாதிக்கப்படுகிறார்கள்.

மூலநோய் பொதுவாக உணவுபழக்கவழக்கங்கள் மற்றும் நடைமுறை மாற்றங்களால் உருவாகிறது.

மூலநோயால் பாதிக்கப்படுபவர்கள் புத்துணர்ச்சி இன்றி, எரிச்சலுடன், கடுகடுப்பாக இருக்கும் மனநிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

மூலநோய்க்கு சித்தமருத்துவத்தில் முளைநோய், மூலமுளைநோய் என்ற பெயரும் உண்டு. மூலநோய்க்கு ஆங்கில வழக்கச்சொல்  றிவீறீமீs ஆகும். பிமீனீஷீக்ஷீக்ஷீலீஷீவீபீs என்பது மூலநோய்க்கான மருத்துவச்சொல் ஆகும்.

மூலநோயை பொதுவாக இரண்டாக பிரிக்கலாம். அவை உள்முலம்     (internal piles) வெளிமூலம் (External piles)

மலக்குடலின் (Rectum)   உட்புறத்திலிருந்து ஆரம்பிக்கும் மூலநோயை உள்மூலம் என்றும் ஆசனவாயை சுற்றி வெளிப்புறமாக இருக்கும் மூலநோயை வெளிமூலம் என்றும் அழைப்பதுண்டு.

மூலநோய் வருவதற்கான காரணங்கள்

  • நாட்பட்ட மலச்சிக்கல்
  • அதிக அழுத்தம் கொடுத்து முக்கி மலம் கழிப்பது.
  • நார்சத்துமிக்க காய்கறிகளை தவிர்த்துவிட்டு, அசைவ உணவுகளை அதிகம் உண்பது.
  • போதிய அளவு தண்ணீர் குடிக்காமலிருப்பது
  • நீண்டநேரம் ஆசனவாய் உறுத்தும்படி ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது.
  • அதிக உடல்பருமன், தைராய்டு நோய், நீரிழிவு நோய் உள்ளவர்கள், நாட்பட்ட கழிச்சல் நோய் உள்ளவர்கள்.
  • பொதுவாக கர்ப்பிணி தாய்மார்களுக்கு 6 வது மற்றும் 7 வது மாதங்கள் மலம் கழிய சிரமமாக இருப்பது.
  • மலத்தை நீண்டநேரம் அடக்கி வைத்தல்
  • புகைப்பிடிக்கும் பழக்கம், மதுப்பழக்கம் உள்ளவர்கள்.
  • அதிகமாக சிந்தனை செய்பவர்கள் மற்றும் நல்ல தூக்கம் இல்லாதவர்களுக்கு உடல் உஷ்ணம் அதிகப்படுவதால்.
  • காரமான உணவுப்பொருள்கள், எண்ணெயில் பொரித்த உணவுப்பொருள்கள் அதிகமாக உண்பது.
  • மலம்கழிக்க அதிகநேரம் எடுத்துக் கொள்வது.
  • அதிக எடையுள்ள பொருள்களை தூக்குவது போன்ற பல காரணங்களால் மூலநோய் உண்டாகலாம்.

மூலநோய்க்கான குறிகுணங்கள்

இரத்தகசிவு

     மலம்கழிக்கும் முன் அல்லது மலம் கழித்தபின் அல்லது மலத்துடன் செந்நிற (Fresh blood)) இரத்தம் கசியும்.

வலி

     வலி அல்லது எரிச்சல் மலம் கழிக்கும் போதும் மலம் கழித்த பிறகும் உண்டாகலாம்.

அரிப்பு தன்மை

     சிலருக்கு ஆசனவாயை சொறிய வேண்டும் என்ற உணர்வு ஏற்படும்.

சதை வெளிவருதல்

     சிலருக்கு சதைபோன்ற முளை மலம் கழிக்கும் போது வெளிவந்து, மலம் கழித்த பின் அதுவே உட்சென்று விடும்.

     சிலருக்கு கையை வைத்து அழுத்தி விட்டால்தான் உட்செல்லும்.

     சிலருக்கு உள்ளே செல்லாமல் வெளியே தங்கிவிடும்.

சளிபோன்ற திரவம் கசிதல்

     மூலநோய் உள்ளவர்களுக்கு சளி போன்ற திரவம் சிலநேரங்களில் கசியலாம்.

உள்மூலம் நோய்க்கும் வெளிமூல நோய்க்கும் உள்ள வேறுபாடுகள்

உள்மூலநோய்

     பொதுவாக வலி இருப்பதில்லை. செந்நிற இரத்தம் வடியும், ஊரல் அதிகமாக இருப்பதில்லை. முளை வெளியில் தெரிவதில்லை. ஆனால் நாட்பட்ட நிலையில் முளை உள்ளிருந்து வெளியே தள்ளும்.

வெளிமூலநோய்

அதிகமாக வலியோடு இருக்கும். பொதுவாக இரத்தம் வடிவதில்லை. ஊரல் இருக்கும். முளை வெளியில் பார்வைக்கு தெரியும்.

மூலநோய் வராமல் தடுக்கும் முறைகள்

  • மலச்சிக்கல் இருப்பின், உணவுப் பழக்கவழக்கங்களால் மாற்றிக் கொள்ள வேண்டும். அல்லது மலச்சிக்கலுக்கான மருத்துவம் செய்ய வேண்டும்.
  • காலையில் சூரிய உதயத்திற்கு முன் எழுந்திருக்க வேண்டும். வெதுவெதுப்பான தண்ணீர் குறைந்தது 500 மில்லி அளவாவது ஒரே நேரத்தில் குடித்து விட்டு சற்று நடக்க வேண்டும். மலம்கழிக்கும் உணர்வு வந்ததும் கழிவறை சென்று மலம் கழிக்க வேண்டும். சுமார் 5 நிமிடத்திற்கு மேல் கழிவறையில் உட்காரக் கூடாது.
  • வெயிலில் அதிகநேரம் அலைவது, நீண்ட தூர பயணம், ஒரே இடத்தில் அதிக நேரம் உட்காருவது போன்றவற்றை குறைக்க வேண்டும்.
  • நடைபயிற்சி, உடற்பயிற்சி, யோகசன பயிற்சி தினம் செய்யலாம்.
  • உடல் உஷ்ணம் அதிகப்படாமல் பார்த்து கொள்ள வேண்டும். போதிய அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
  • உடல் உஷ்ணம் அதிகமாக இருப்பின் வாரம் இருமுறை தலை மற்றும் உடல் முழுதும் எண்ணெய் தேய்த்து, எண்ணெய் குளியல் செய்யலாம்.
  • நீரிழிவு, தைராய்டு நோய் உள்ளவர்கள் அதற்கான மருத்துவம் மேற்கொண்டு மலச்சிக்கல் இன்றி கவனித்துக் கொள்ள வேண்டும்.

மூலநோயாளர்களுக்கு பயன்படும் காய்கறிகள்

  • நார்ச்சத்துள்ள கீரை காய்கறிகள்
  • கருணைகிழங்கு, வெண்டைக்காய், பீன்ஸ், அவரைக்காய், புடலங்காய், கோவைக்காய், சேனைகிழங்கு, முட்டைகோஸ், பீர்க்கங்காய்.

மூலநோயாளர்களுக்கு பயன்படும் பழவகைகள்

  • கொய்யாபழம்
  • ஆப்பிள்
  • பப்பாளிப்பழம்
  • நன்கு பழுத்த வாழைப்பழம்
  • அத்திப்பழம்

மூலநோயாளர்களுக்கு ஆகும் உணவு பொருள்கள்

  • நார்ச்சத்து மிக்க சிறுதானியங்கள்
  • விலாங்கு மீன், பன்றிகறி
  • ஆமைகறி, நத்தைகறி
  • மோர், இளநீர்

மூலநோய்க்கு வீட்டு வைத்தியம்

  • ஒரு கைப்பிடி துத்தி இலை, 3 சிறிய உள்ளி, சிறிது ஜீரகம் சேர்த்து அரைத்து மோரில் கலந்து தினம் காலையில் ஆகாரத்திற்கு முன் தொடர்ந்து 20 நாள் குடிக்கலாம். இது மூலநோய்க்கு சிறந்தது.
  • வெந்தயபொடி 2 கரண்டி அளவு எடுத்து நன்கு பழுத்த பேயன் பழத்தில் பிசைந்து சாப்பிடலாம். இது உள்மூலநோய், இரத்தவடிதல் மற்றும் காந்தலுக்கு சிறந்தது.
  • காட்டாமணக்கு இலையை ஆமணக்கெண்ணெயில் வதக்கி இலேசான சூட்டில் ஆசனவாயில் வைத்து கட்டலாம். இப்படி கட்டி வருவது வெளியில பிதுங்கி இருக்கும் முளைக்கு சிறந்தது. இவ்வாறு துத்தி இலையையும் வதக்கி கட்டலாம்.
  • ஆமணக்கு எண்ணெயில் சிறிது எடுத்து மலம் கழிக்கும் முன்னும் பின்னும் ஆசனவாய்க்கு உட்புறம் விரலால் போட்டுவிட வேண்டும். மேலும் தொப்பிளிலும் தடவ வேண்டும்.

மூலநோய்க்கு நாட்டுவைத்தியம்

கருணைகிழங்கு லேகியம்

10 கிராம் அளவு தினம் இருவேளை சாப்பிடலாம்.

சதாவரிநெய்

     தினம் ஒரு கறண்டி இருவேளை பாலில் கலந்து சாப்பிடலாம். இரத்த முலம், உடல் உஷ்ணம் இவற்றிற்கு சிறந்தது.

நாயுருவி நெய்

     தினம் ஒரு கறண்டி இருவேளை வீதம் வெந்நீரில் கலந்து சாப்பிடலாம்.

மலக்குடார தைலம்

     இரவு மட்டும் ஒரு கரண்டி தைலத்தை வெந்நீரில் கலந்து குடிக்கலாம். மூலநோயுடன் கூடிய மலச்சிக்கல், மூலகாந்தல் அகலும்.

நிலவாகை சூரணம்

     மலச்சிக்கல் இருப்பின் 5 கிராம் அளவு சூரணத்தை வெந்நீரில் கலந்து இரவு ஆகாரத்திற்கு பிறகு சாப்பிடலாம்.

இடுப்பு குளியல்

     ஒரு பரந்த பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரை விட்டு அதில் இரு கரண்டி திரிபலா சூரணத்தை கரைத்து வைக்க வேண்டும். இதில் மூலம் படும்படி 5 முதல் 10 நிமிடங்கள் உட்கார வேண்டும். இப்படி தினம் 2 அல்லது 3 வேளை செய்துவர மூலநோயில் உண்டான வலி, ஊரல், வீக்கம் குறையும்.

திரிபலா சூரணம்

     2 கிராம் அளவு எடுத்து தண்ணீர் கலந்து தினம் இருவேளை சாப்பிடலாம்.

மேலும், சித்த வைத்தியத்தில் மூலநோய்க்கு

நாகபற்பம், வெள்லங்க பற்பம், தேற்றான்கொட்டை லேகியம், பிரண்டை சூரணம் போன்ற பல மருந்துகள் உள்ளன இவைகள் மருத்துவர் ஆலோசனைப்படி பயன்படுத்த வேண்டும்.

கவனிக்க வேண்டியவைகள்

  • வீட்டு வைத்தியத்தில் தீர்வு கிடைக்கவில்லையெனில் மருத்துவரை அணுகி மருத்துவம் பார்க்க வேண்டும்.
  • திடீரென உடல் எடை குறைதல், ஆசனவாயில் பூ போன்று திடீரென கட்டி உருவானால் உடனடியாக மருத்துவரை அணுகி மருத்துவம் பார்க்க வேண்டும்.

அதிகமான இரத்தபோக்கு, தளர்ச்சை, தலைச்சுற்று போன்றவை இருப்பின் உடனடியாக மருத்துவரை அணுகி மருத்துவம் பார்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *