– முனைவர் முல்லைத்தமிழ்
சென்ற மாத இதழில் கையில் உள்ள வர்மங்களில் ஒன்றான தெக்ஷணைக்காலம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் கவளிக்காலம் பற்றி அறிவோம்.
புறங்கையின் பெருவிரல் கவளியில் கவளிக்காலம் அமைந்துள்ளது. இவ்வர்மம் கவளி வர்மம், கைக்கவளி வர்மம், கைக்கவளிக்காலம் எனவும் அழைக்கப்படுகிறது.
“மரணமென்று கவர் நேர் ஒன்றரையிறைக்கும்
மைந்தனே கவளிவர்மம்”.
– வர்ம குருநூல்
“கைப்பெருவிரல் கவளியில் கவளிவர்மம்”.
– வர்ம கலைக்களஞ்சியம்
என குறிப்பிடுகிறது.
போடும் முன்னே சவ்வது உறைந்துப்போனால்
பொட்டணம்போல் முட்டடிதான் கனத்து வீங்கும்
திறமான கவளியிலே மூன்று மர்மம்
சொல்லுகிறேன் மூன்று மர்மம் குணமொன்றாகும்
சிலிர்க்கும் உடல் தளர்ச்சையோடு மயக்கம் வியர்வை
சாருமே கை திமிர்த்து பெருச்சலாகி
நேருமே வருஷமொன்று திகையும்போது
நீங்காது விப்புருதி நோயுண்டாமே.
– வர்ம தாண்டவம்-500
மெய்யாம் கவளிவற்மம் மூன்றாம் விரலிடையில்
மூன்றும் குணமொன்றாம் சொல்லுகிறேன்
எய்திடும் ஒரு வருஷம் கடந்தாலப்பா
இடித்த கைக்கு விப்புருதிநோய் உண்டாம்
கைதடவும் கை வெடித்து கீறிப்போகும்
குணமான சிகில்சைகள் செய்திடவே
வைத்திவை சிவனார்வேம்பும் கருஞ்சீரகம்
அன்பான எண்ணையில் காய்த்துப்போடு தீருந்தானே.
– வர்ம கருவிநூல்-500
“செய்திடவும் கவளிதனில் வர்மம் மூன்று
திடமான அதன் குணமேயொன்றேயாச்சு
எய்திடவும் ஒருவருடம் கடந்தாலப்பா
இடந்த கைக்குள் விப்புருதி நோயுண்டாகி
கொய்திடவும் கை வெடித்து கீறிப்போகும்
குணபேதம் பலபலவாய் கையில் காணும்
மெய்யது தான் சொன்னபடி தவறிடாது
மேலான சிகிட்சையை கூர்ந்து கேளே”.
– வர்ம கண்ணாடி-500
“மரணமென்ற கவர் நேர் ஒன்றரை இறைக்கும்
மைந்தனே கவளிவர்மம் கொண்டுதானால்
சரணமென்று சொல்லும் மிகுகோச்சல் நோவு
தரிப்பேறும் முழுமாத்திரை விசம் போலேறி
கரணமிடும் பின்னாண்டில் கரவாதம் தான்
காலதாமதமாய் விப்புருதி தோன்றும்
பரணமதின் சார் மூன்று மாத்திரையாக
பதித்தனுக்கி சுழித்திருத்த உணர்வாமென்றார்”.
– வர்ம குருநூல்
“உணர்வாகும் மித்தலத்துக்கின்னும் சென்னி செவிக்குற்றி
மெள்ள விரல்பதித்து நல்லிருப்பிலூன்றிவிட
அணர்வாகும் அறிவுமன சீவாத்ம நிலைகறக்கிப்
பதிவான பத்தும் பதத்தோடே அறிந்தனுக்கிவிட
பணர்வாகும் பண்புநெறி முன்னோர் பகர்ந்தனர்
என்னுரையாயினும் பக்குவம்செய் கையிதமாய்
தணர்வாகும் தளர்ச்சையேகும் தறுகாதொருநாளும்
தளர்வாதம் கரவாதம் என்றறியே”.
– வர்ம குருநூல்
மேலும்,
கவளி காலாமஃது மேல் கீழ் என்றுளதுமாம்
கவளிவிரல் பெரிதடுத்துறும் தலமிடை என்பு
கவளிக்காலம் ஏற்றுமஃது கனிந்துறக்கொளில்
கவளிவுறுத்தும் கடும்பனியுடன் வலியென்னே.
– வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்
கவளி எனும் தலம் மேல் கீழ் என நான்காக உள்ளது ஆகும். பெருவிரல் அதனை அடுத்த ஆட்காட்டிவிரல் இணையும் எலும்பிடையாகும். இந்த கவளிக்காலம் சரநிலை இயக்கத்தின்போது வலிமையாய் கொண்டால் இரண்டு விரலுக்கும் இடைப்பட்ட இடத்தில் தாங்கொணா வலியும் சுரமும் உறுத்தலும் உண்டாகும் என்பதாம்.
என்னலுறக்கொளில் விடநிலையிலஃது விடம்
என்னவாமின்னலுறுத்தும் தரிப்புழைச்சலொடும்
அன்னமும் வெறுத்துறுமடுத்தும் தரிப்பேறுமிது
கன்னமும் கடுத்துறுகரவாத விப்புருதிபின்னே.
– வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்
கவளிவர்மம் விடநிலையில் கொண்டால் என்னென்னவோ துன்பங்களை எல்லாம் உண்டாக்கும். தரிப்பு, உழைச்சலோடு உண்டி வெறுக்கும். மேலும் தரிப்பு ஏறிக்கொண்டே போகும். கன்னமும் கடுத்துழையும், பின்னாட்களில் கையில் வாத உழைச்சலும், உடலில் வெப்புநோயால் விப்புருதி எனும் கட்டிகளும் உண்டாகும் என்பதாம்.
பின்னலுறக் காலம் விடத்தேறில் பிசகாது
என்னலுறும் சன்னிமயக்கம்சட்டெனவாம்
இன்னலுறும் படபடப்பசதி வியர்வையும்
முன்னுறும் முனைந்துரை என்னே.
– வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்
கவளிவன்மம் சர இயக்கத்தின்போது விரைவுற்று கவளிக்காலமாக செயல்படும்போது அமுதவிட இயக்க சுழற்சியின் விட இயக்கத்தோடு, தொடர்புகொள்ளும் காலகட்டத்தில் தாக்கம் கொண்டால் சன்னி, மயக்கம் உடனடியாகத் தோன்றி படபடப்பும், வியர்வையுமாய் இன்னல் அடையச்செய்யும் என முன்னோர்கள் ஆய்ந்துரைத்துள்ளனர் என்பதாம்.
முனைந்துரை முன்னோர் என்னிலுமிஃதிதமுற
நினைந்துறும்கண்டத்துறை கரமுறத்தூண்டியுற
வனைந்துறும்வழியடங்கல்சென்னிசெவிக்குற்றி
பனைந்துற வாணி வெள்ளை பதித்துறமருந்தே.
– வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்
முன்னோர் அனுபவத்தால் ஆய்ந்துரைத்த முறைப்படி இவ்வர்மத்தின் தாக்கம் தீர வேண்டுமெனில் கழுத்துப்பகுதியிலிருந்து கை வரை முறைப்படி வர்மதானங்களை தூண்டித் தடவி அவ்வர்மத்தியக்கம் சார்ந்த வழியடங்கல்களான சென்னி, செவிக்குற்றி, வாணி, வெள்ளை அடங்கல்களையும் பதித்துத் தூண்டி மருந்து செய்ய வேண்டும்.
மருந்துறவாம் கவளிக்காலமது கொள்ளில்
திருந்துறும் காமவர்த்தினி முடக்கொற்றான்
அருந்துறும் அமிர்து அடபொதியன்முல்லை
வருந்துறும் கொடுவேலிக்கருவிலாஞ்சியே.
– வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்
கவளிக்காலம் கொண்டால் தொட்டால்வாடி, முடக்கறுத்தான், அமிர்துவள்ளி, அடபொதியன் கிழங்கு, முல்லைவேர், கொடுவேலி, கருவிலாஞ்சிக்கூடம் இவைகளை கூட்டு என்பதாம்.
கூட்டுற மருந்தின்னுங் கேளன்னமே! ஆனை
தேட்டுறும் நெருஞ்சில்சிறுமாவிலங்குதோடை
மாட்டுறும் முள்ளிக்காஞ்சனம் போந்தை வேர்
அட்டுறும் அவுரிவேரதும் அறுகின் புல்லுமே.
– வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்
மேற்கண்ட மருந்து வகைகளோடு கூட்டும் மருந்தின்னும் கேள் அன்னமே! ஆனை நெருஞ்சில், சிறுநெருஞ்சில், மாவிலங்கு, ஆடாதோடை வேர், நீர்முள்ளி, புங்கின் வேர்பட்டை, போந்தை எனும் பனையின் வேர், அவுரிவேர், அறுகின்புல்லுமே.
புல்லொடும் சிவன்வேம்பு சிவந்த சந்தணமும்
மல்லொடும் கருஞ்சூரைப்பட்டையாயில்யமும்
கல்லொடும் கடலிறாஞ்சி கருஞ்சீரகம்காயமும்
வில்லொடும் விடம்போக்கும் நல்ஜீரமதுரமே.
– வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்
புல்லோடும், சிவனார் வேம்பு, செஞ்சந்தணம், கருஞ்சூரைப்பட்டை, ஆயில்யப்பட்டை, கடலழிஞ்சில், கருஞ்சீரகம், பெருங்காயம், நல்ஜீரகம், அதிமதுரமே.
ஆமுறும் மருந்திஃது பல நோய்க்குமாமிஃதுடன்
தேமுறும் மருந்தின்னும் கேள் மூத்தவர் மூவரும்
காமுறும் மூவரும் முப்பலையுடன்வெப்பாலையும்
ஓமுறும் ஓமம் மரமஞ்சளரத்தை சிறுதேக்குமே.
– வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்
பலநோய்கட்கும் மருந்தாகுமிம்மருந்துடன் சேரு மருந்தின்னும் கேள் மூத்தவன் எனும் சுக்கின் குடும்பமாகிய திறிகடுகும் எளிதில் உடலோடு இணையும் ஆற்றல் கொண்ட திறிசாதியும் முப்பலையுடன் வெப்பாலையும், ஓமம், மரமஞ்சள், அரத்தை, சிறுதேக்கும் கூட்டே..
கூட்டு பூவத்துடன்குக்கிலரியாறு அமுக்கூரம்
காட்டுத்தெற்றியும் கணக்கெடை சமமாகவே
மாட்டுரலில் இட்டு பொடித்து சதைத்துமே
வாட்டும் புனலதில் வற்றிக்குடித்திடே.
– வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்
கூட்டு பூவத்து, குக்கில், அரிசிவகை ஆறு, அமுக்கூரம், காட்டுத்தெற்றி இவைகள் சம அளவாக எடுத்து உரலில் இடித்து சதைத்து தண்ணீரிலிட்டு கொதிக்க வைத்து காய்த்துக் குடித்திடக் கேளே.
கேளஃது கேடறுக்குங்காண் வன்மப்பிணிகள்
வேளமஃது வேடுறும் களனியன்னவாமிஃது
கோளத்தன்ன கொடும்பலக் கட்டுடன் கட்டி
நாளத்துறும் கொடுவடும் மாற்றும் மற்றுமே.
– வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்
கேள்பாயாக, இம்மருந்து வன்ம பிணிகளால் உண்டாகும் பல கேடுகளையும் மாற்றிவிடும். யானையானது விளைநிலத்தில் புகுந்து அவைகளை அழித்து விடுவதுபோல் உடலில் உண்டாகும் சுரப்புக்கட்டிகள், வீக்கம் மற்றும் பல கட்டிகளையும், குருதிநாளங்களில் உண்டாகும் அடைப்புகளையும் மாற்றிவிடும் என்பதாம்.
மற்றுறும் பிணிகள் வாதமொடும் புண்புரை
அற்றுறும் கடந்தனில் நொந்துறும் தோல்
உள்ளுறும் பல்வகையானதும் அழிந்துறும்
தெற்றுறும்நடையதும்நலமெனுமியல்பே.
– வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்
மேலும் வாதம், புண்புரைகளும், தோலின் மேல் உண்டாகும் பலவகை நோய்களும், நடைத்தெற்றலும் மாறி உடல் நலமடையும் என்பதாம்.
காலம்கவளி கணித்துறும் முறையறிந்தனுக்குறில்
ஞாலம்மீதினில் சன்னிவலிகளும்மயக்கமற்றிடும்
சாலம் போலறும் நவிர வலிகளும் நலிந்துறும்
ஆலமன்னத்தரிப்பறும் விப்புருதியுமென்னே.
– வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்
கவளிக்காலத்தினை சரியான நேரம் கண்டு முறைப்படி தூண்டி வந்தால் இவ்வுலகில் மனிதருக்குண்டாகும் சன்னி, வலிகள், மயக்கமும் மாறிவிடும். மேலும் சில வகையான தலைவலிகள் தொட்டவுடனேயே மாறிவிடுவதோடு விசம் போல் ஏறும் தரிப்பு வலிகளும், விப்புருதிக்கட்டிகளும் மாறிவிடும் என்பதாம் என வர்ம யோகச்சூத்திரமும் குறிப்பிடுகிறது.
இவ்வர்மம் கொண்டால், கையில் அதிக கோச்சலும், வலியும் உண்டாகும். வீக்கமுடன் தரிப்பு மிஞ்சி, விறுவிறுப்பு தோன்றும். பனி, குளிர், ஜன்னி உண்டாகும். முழு மாத்திரையில் விசம்போல் ஏறி அசாத்தியமாகும். இங்ஙனம் உண்டானால் நாட்கள் செல்லச்செல்ல கையில் வாதம் தோன்றும். இதற்கு நாழிகை 3 ஆகும் என வர்ம நூல்கள் குறிப்பிடுகின்றது.
இவ்வர்மத்தை இளக்குவதற்கு கழுத்துறை வழியே கை வரை தடவி, சென்னி அடங்கல், செவிக்குற்றி அடங்கல், நல்லிருப்பு அடங்கல், சீவாத்ம அடங்கல், அமத்தடங்கல், உள்ளங்கால் அடங்கல், உள்ளங்கை அடங்கல்களை தூண்டி தடவி, வர்மாணி அடங்கல் பத்தும் செய்து, தொடர்ந்து கழுத்துறை வழி முன்னும் பின்னும் கத்தரிக்கோல் மாறலாக மார்பு, முதுகு தடவி, மேல்நோக்கி ஏற்றி தடவி, இதமாக செய்து, சிறந்த அகமருந்துகளையும், புறமருந்தாக பற்று, ஒற்றல் போன்றவைகளையும் செய்துவர சுகம் உண்டாகும் என அனுபவமிக்க வர்ம வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.
இவ்வர்ம பாதிப்படைந்தவர்களுக்கு பிற்காலத்தில் வெடிப்புடன் கூடிய விப்புருதியும், கரவாதமும் தோன்றும் என வர்ம நூல்கள் குறிப்பிடுகின்றன. இவ்வர்மத்தை ஆட்காட்டிவிரல், பெருவிரல், மூவிரல் போன்றவைகளாலான தூண்டல், நழுக்கல், அழுத்தல், அனுக்கல், தட்டல், அதிர்த்தல், அமத்தல் போன்ற தூண்டுமுறை நுட்பங்களைக் கொண்டு தூண்டிவர இரத்த அழுத்தம், மூளை நரம்புநோய்கள், தலைவலி, மயக்கம், ஜன்னி, பல்வலி, தளர்ச்சி, கண்நோய்கள் போன்றவை குணமாகும் என வர்ம சுவடிகள் குறிப்பிடுகின்றது.
Leave a Reply