மறுமலர்ச்சி என்பது…

மறுமலர்ச்சி என்பது…

  • By Magazine
  • |

ஆசிரியர் 

மருத்துவர். த. இராஜேந்திரன்

இந்தியாவின் அரசியல் சூழல் வெளியுலகத்திற்கு ஒரு வெப்ப ஆற்றலை விதைத்து வருகிறது. உலகின் பலநாடுகள் இந்தியாவின் அனைத்து வளங்களின் மீதும் ஒரு கழுகு பார்வையைக் கொண்டிருந்தாலும் எளிதில் ஏறி விளையாடி விடலாம் எனும் நினைப்பில் மண் விழுந்தவர்களாகவே உள்ளனர். எனினும் பகுத்தலுக்கேற்ற ஓர் ஒப்பற்ற நாடாகக் கருதி இயங்க அவர்கள் தயங்குவதில்லை. எத்தனையோ வளங்களிலிருந்தும் கோடிக்கணக்கான மக்கள் வாழ்வில் முன்னேற முடியாத முன்னேற்றப்படாத சூளல். வறுமையில் வாடும் பொருள் வளமற்ற வீழல். இவையெல்லாம் உருவாக்கப்படும் உன்னதமான அரசியல் பணியாக அறிவுள்ள பொதுமக்களால் கருதப்படுகிறது. கல்வி வளர்ச்சியில் சமனபடுத்தப்படாத மேகங்கள்… சிந்தனை மறந்த சிறப்புக்கல்வி நொந்தவர்களை சொந்தங்களாக்கி தந்தங்களை இழந்த யானையைப் போல் அறிவுத்திருட்டும். ஆகாய வலியையை ஆறாய் பெருகி ஓடும் அவலநிலை. காலக்கணிதத்தில் ஒரு கருப்புக் கோடு போல் கொரோனாவின் பின் கோடிட்டு வாழும் வாழ்க்கைச் சூழல்.

கல்வி வணிகத்தால் கையில் காகிதங்களாகிய கட்டமைக்கப்பட்டு திட்டமிடப்பட்ட பட்டங்கள்… கனிவான வழிகாட்டுதலால் வாழ்த்தப்படும் அறிவாளிகள் கசிந்து நீர் வடியும் கண்கள்… கனவுக்கும் உதவாத பட்டங்களுக்கேற்ப பணியில்லாமல் பயணிக்கும் கோடிக்கோடி இளைஞர்கள்… தேடி தேடி தெருவில் கிடைத்த வேலையில் முடங்கி விடுகின்றனர். இதற்கிடையில் சாதி மதம் எனும் வறட்டு கவுரவம் வாழ வழிவகுக்காத பிரிவினைக்குள் பின்னிப் பிணையும் பெருமைகளை எண்ணிக் கொள்ளும் பேரானந்தம். கற்றும் அறிவில்லாத ஒரு கயமைக்குள் நின்று கானல் நீரை கையில் எடுத்துப் பருகத் துடிக்கும் வெறித்தனம்.

சமூகம் சீரழிகிறதா இல்லை சீரற்று வீழ்கிறதா புரியவில்லை. தெருக்களில் வீசப்படும் வார்த்தைகளின் வரிசையான சாரங்கள் இவை. காரங்குறையாமல் பேசும் முதியோர்களின் முனைப்பான குரல்களிலும் பொருள் உள்ளதாகவே எண்ணத் தோன்றுகின்றது.

தமிழகத்தில் ஒரு தனித்துவமான மாற்றம், இஃது அறிவுடையோர்களை அதிரவைத்த ஓர் அன்புப் பரிமாற்றம். எண்ணிப்பார்க்க முடியாத ஓர் எழுச்சி மாற்றம். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். எந்தப் பதவிக்கும் ஆசைப்படலாம். இதை யாரும் குற்றம் சொல்லவோ குறை கூறவோ அதிகாரம் இல்லை. இம்மண்ணின் மாபெரும் சுதந்திரங்களில் இது முக்கியமான ஒன்று. நடிப்புத் தொழில் செய்பவர்கள், படிப்பு தொழில் செய்பவர்கள், வணிகர்கள், ஏழைகள், பணக்காரர்கள் எவருக்கு இங்கு விதிவிலக்கு இல்லை. இது நம்மண்ணின் சிறப்பு… ஆனால் அரசியல் செய்பவர்கள் மக்கள் நலம் சார்ந்த உணர்வுடையவர்களாகவும், நாட்டு நலம் காக்கும் நல்லெண்ணமும் அறிவும் உடையவர்களாக இருந்தால் மட்டுமே போதும்.

தமிழகத்து மக்களிடையே ஏற்பட்டுள்ள இந்த புரட்சி ஓர் அன்புப் புரட்சியேத் தவிர அறிவுப் புரட்சி அல்ல என்பது எல்லோருக்கும் தெரியும். கட்சியின் தொண்டர்களில் பெரும்பாலோர் அறிவுத்தளத்துக்குள் வளமாக மனம் பதிக்காத பக்தர்களாகவே காட்சி அளிக்கின்றனர். இவர்கள் அறிவுத் தளத்திற்கு வந்து மக்கள் நலம் காக்க முன் வர வேண்டும். ரசிக்கும் உணர்வைத் தளர்த்தி நாட்டை உயர்த்தும் உணர்வும் வர வேண்டும். அதற்கு கட்சி தலைமை தங்கள் கருத்துரையை ஆழமாக பதிவு செய்ய வேண்டும் என்பது பொதுமக்களின் அன்பானக் கருத்து.

தெருக்கூட்டங்களின் மக்களின் கருத்தோட்டங்களில் இக்கட்சியின் தோற்றம் இங்குள்ள பாரம்பரிய கட்சிகளை சின்னாபின்னமாக்கி சிதைப்பதற்க்கான சூட்சி என்றும் காதில் விழுகிறது. இன்னும் இதுபோல் பல தோன்றும் என்றும் மக்கள் கருதுகின்றனர். உலகின் மூத்த மொழிகளில் முதல்மொழி தமிழ்மொழி. மூத்த இனம் தமிழினம் என்னும் அடையாளத்தை தமிழ் மக்களிடமிருந்து அழித்து விட நினைக்கும் நினைப்பிற்கு முன் நம் அரசியல்வாதிகள் விழுந்து போகாமலிருந்தால் அதுவே போதும்.

கட்சி சார்ந்தவர்கள் சாதி, மதப் பிரிவினை இல்லாமல் நாட்டு நலம் பேணும் அனைத்து அரசியல் அறிவுகளையும் பெற்று வளம் பெற ஒவ்வொரு கட்சிகளும் தங்கள் கட்சிகளுக்குள் ஒரு கல்வித்திட்டம் அமைத்தால் சிறப்புடையதாய் இருக்கும். மக்கள் மறுமலர்ச்சி அடைந்து முழுமையாக தங்களை தாங்களே தெளிவாக புரிந்து கொள்ளும் அளவிற்கான அடிப்படை, அரசியல் மற்றும் சட்டங்கள் சார்ந்த அறிவினை சிறுவயதிலிருந்தே புரிந்து கொள்ளும் திட்டங்கள் வேண்டும். ஏனெனில் இங்கு ஏமாறும் ஏழைகள் கோழைகளாகவே வாழ்ந்து மடிகின்றனர். ஏமாற்றுபவர்கள் மேதாக்களாகவும், மேதைகளாகவும் தங்களைக் காட்டிக் கொள்கின்றனர். இந்த அரசு இதுபோன்ற விஷயங்களில் கண்ணும் கருத்துமாக செயல்பட்டு மக்களை காக்க தவறி விடக்கூடாது என்பது மக்களின் எண்ணக் குமுறல்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *