– கை. செல்லத்தங்கம்
சாயங்காலம் ஆறு மணியிருக்கும் தெருவில் பேச்சரவம் கேட்டது. எட்டிப்பார்த்தேன். என் பெரிய மாமனார் பையன்தான். என்னத்தான் கால்வலி என்று அக்கா சொன்னாங்களே என்றேன். ஆமாமே ஆயுர்வேத ஆஸ்பத்திரியிலே மருந்து வாங்கினேன் என்றார். எத்தனை மருந்து பார்த்தும் கால்வலி குறையல்ல. இப்போ கசாயம் போட்டுக் குடிச்சி எண்ணெய் போட்டு ஒத்தடம் கொடுக்கின்றேன் என்றார். கொஞ்சம் காலுக்கு ரெஸ்ட் கொடுங்க அத்தான். ரொம்ப நடக்காதீங்க என்றேன். டாக்டரும் அதை தான் சொன்னார். பதினொன்றாம் வகுப்பு படித்தவுடன் வேலைக்கு போனது இப்ப இரண்டு மூன்று வருஷமாகத் தான் ஒரு இடமும் போகல. விவசாயத்தையே விட்டாச்சு. உழைச்சி உழைச்சி கால் மூட்டு தேய்ந்து போச்சு என்றார். வயசானா வரக்கூடிய வலிதானே சரியாகிவிடும் என்றேன். ஆமாம்மா காலில எண்ணெய் போட்டு புளி இலைபோட்டு வெந்நீர் காய்ச்சி ஒத்தடம் போடச் சொன்னார் டாக்டர்.
இப்போ புளிய இலைக்கு நான் எங்க போக. நம்ம வீட்டுக்குத் தெக்கேயும் கிழக்கேயும் புளியமர விளையாக தானே இருந்தது. இரண்டு பெரிய புளியமரம் இருந்திச்சே ஞாபகம் இருக்கா என்றார். ஆமா ஞாபகம் இல்லாமல் இருக்குமா. அந்த புளிய மரத்தையும் அந்த விளையையும் மறக்கவே முடியாது என்றேன். நம்ம பிள்ளைங்க கிட்ட சொல்லி ஊருக்கு வெளியே உள்ள இடத்திலே இருந்து பறிச்சிக்கிட்டு வரச் சொல்லலாம் என்றேன். பக்கத்து வீட்டு பாலன் கொத்தனார் வேலைக்கு போறவன் பறிச்சி தர்றேன் என்றான்… அப்பசரி என்றேன். வறேன் என்றபடி நடந்தார்.
என் நினைவுகள் புளியமரத்தை சுற்றியது. ஆம் அந்த பெரிய விளையில் இரண்டு புளியமரங்கள். ஒன்று கிழக்கு அத்தம்… மற்றொன்று மேற்கு அத்தம்… கிழக்கில் இரண்டு மூன்று தென்னைமரங்கள் ஒரு ஐம்பது அறுபது இருக்கும். இடையில் வாராச்சி, பூவரசு, சின்னச்சின்ன மரங்கள். காலிமனையாக இருந்த இடம். சிறுவர்களின் விளையாட்டுத்திடல். மாலை வேளையிலும் லீவு நாட்களிலும் பிள்ளைகளுக்க சத்தமாக தான் இருக்கும். கபடி, பந்தடிக்கிறது, களச்சி அடிக்கிறது, பம்பரம் சுத்துவது, பட்டம் விடுவது என்ற விளையாட்டுகள் எல்லாம். அது மட்டுமா அந்த மேற்கு பக்கம் நின்ற பெரிய மரநிழல் பலரின் வயிற்றுக்கும் கஞ்சி ஊற்றியது. சைக்கிள் சுத்து வருஷத்துக்கு இரண்டு தடவை நடக்கும்.
ஒரு சின்ன டென்ட் மாதிரி டார்ப்பாக்கள் கட்டி மனைவி, பிள்ளைகள். அவர் இரவும் பகலும் சைக்கிளில் சுத்திக் கொண்டே இருப்பார். திரைப்பட பாடல்கள் டேப் ரிக்கார்டரில் ஓடிக் கொண்டிருக்கும். இரவு வந்ததும் அந்தப் பெண் திரைப்பட பாட்டுக்கு நடனமாடும், குழந்தைகளும் ஆடும். சில பேர் காசு கொடுப்பவர்கள். காலை பக்கத்து வீடுகளில் உள்ளவர்களிடம் உப்பு, மிளகாய், அரிசி வாங்கி அந்த மர நிழலிலே சமைக்கும். சைக்கிள் ஓட்டுபவருக்கு பின்னால் சின்னப் பசங்க ஓடுவாங்க. மாலையானால் பெரியவர்களும் உட்கார்ந்து டான்ஸ் பார்ப்போம். பள்ளி லீவு நாட்களில் பாவை கூத்து. 5 பைசா, 10 பைசா கொடுத்து எல்லோரும் பார்க்க போவோம். இராமாயணம், மகாபாரதம், அரிசந்திரன் கதை எல்லாம் பிள்ளைங்களுக்கு பாவை கூத்து பார்த்து தான் தெரியும். பாடலோடு கதாபாத்திரங்கள் வந்து வசனம் பேசி நடிப்பது ஒரு நபரே பாடி, வசனம் பேசி பொம்மையை அசைத்து அசத்துவார். அவருக்கு சகல வித்தையும் கையில் இருக்கும் போல என்று நினைத்துக் கொள்வேன். நகைச்சுவைக்கு உச்சிக்குடும்பன், ஊழ மூக்கள் என்று இரண்டுபேர். சிரிச்சி சிரிச்சி வயிறு புண்ணாகி விடும். பாவைகூத்துக்காரர்களும் 10 நாள் அல்லது 15 நாள் அங்கேயே தங்கி சமைச்சி சாப்பிடுவாங்க. அந்தப் பகுதி அனைத்து பசங்களுக்கும், பிள்ளைங்களுக்கும் சைக்கிள் ஓட்டி படிக்க கூடிய இடமும் அதுதான். வாடகைக்கு ஒரு மணிக்கூறுக்கு இவ்வளவு காசு என்று வாங்கி வந்து மாறி மாறி ஓட்டுவாங்க. எங்க பசங்களும் அங்கே தான் படிச்சாங்க. சிவராத்திரி, வருசப்பிறப்பு,பொங்கல், சரஸ்வதி பூஜை என்ன பண்டிகையானாலும் திரைப்படம் தான். திரையைக் கட்டி புரொஜக்டர் வைத்து சிவாஜி, எம்.ஜி.ஆர் நடித்த பிரபல படம் எல்லாம் அங்கே தான். பார்த்தோம். அதற்குப் பிறகு இளைய தலைமுறை வந்து பிரபு, ரஜினிகாந்த் கமலஹாசன் போன்றோர் நடிச்ச படங்களை போட்டாச்சு. படம் போடுகிற நாள் எல்லோரும் ஒரு ஜமுக்காளத்தைக் கொண்டு போய் விரிச்சி முதலிலேயே இடம் பிடிச்சிடுவோம். இன்னும் பெட்டி வரலியா என்ற கேள்வியாக தான் இருக்கும். ரீல் பெட்டி வந்ததும் பெட்டி வந்திருச்சி என்று ஊளையிடும் பசங்க. திரைப்படம் ஓடும் போதே விசில் சத்தமும் ஊளையும் சுவாரசியமாகத் தான் இருக்கும். அப்படிப்பட்ட புளியவிளை இப்போது பிளாட்டாக மாறி பல வீடுகள்… புளியமரத்தையே காணோம். பழைய நினைவிலிருந்த எனக்கு மைனி மைனி என்ற என் சம்மந்தியின் குரல் கேட்டது. என்ன மைனி பகல் கனவா என்றாள். வாம்மா வா ஒத்தைக்கா வந்தாய் என்றேன். இல்ல வீட்டுக்காரர் வந்தார். ஒரு ஆளை பார்க்க போயிருக்கார் வந்து கூட்டிக்கிட்டு போவார் என்றாள். பரஸ்பர குழந்தைகள் பற்றிய நலம் விசாரிப்பு பிறகு பின் கேட்டாள் என்ன மைனி ரொம்ப யோசனையில் இருந்தீங்க என்றாள். ஒண்ணும் பழைய நினைப்புத்தான். உங்கள் பாலன் அண்ணன் புளியஇலை பற்றிக் கேட்டு பழைய புளியமரத்தை ஞாபகப்படுத்திட்டார். அதைத் தான் நினைச்சேன் என்றேன்.
அந்த நாட்கள் மறக்க முடியுமா. நான் வீட்டிலே இருந்த சமயம் எப்படி எல்லாம் பொழுதுபோக்குவோம் என்றும் ரேடியோவிலே பாட்டு கேட்டு பல்லாங்குழி ஆடுவது என்று எல்லாம் சொல்வேன். என் பிள்ளைகளிடமும், பேரப் பிள்ளைங்ககிட்டேயும் எப்பவும் சொல்லுவேன். அண்ணன் எங்கே என்றாள் செல்வம் அவதான் என் சம்மந்தி. கோவிலுக்கு போனாங்க என்றேன். பிள்ளைகளுடன் வெளியே சென்ற என் மகனும் மருமகளும் வந்தனர். வாங்க அத்தை மாமா வரலியா என்றான் என் மகன். என்ன இரண்டு பேரும் என்ன கதை பேசுறீங்க என்றபடி வந்தார் என் சம்மந்தியின் கணவர். அவர் புளியமரம் பற்றி சொல்ல. ஆரம்பிச்சிட்டாப்பா உங்க அத்தை நிறுத்தவே மாட்டாள் என்றார் என் மகனிடம். அம்மாவும் அப்படித்தான் மாமா. பழைய விஷயங்கள் பேசினால் அவ்வளவு தான். பிள்ளைங்க போரடிக்குது பாட்டின்னு ஓடிடுவாங்க என்றான். அந்தப் புளியமர நிழல் எத்தனை நபருக்கு சோறு போட்டிருக்கு. எத்தனை பசங்களை விளையாட்டு வீரனாக்கியிருக்கு, எத்தனை நபர்களுக்கு பொழுதுபோக்கு அம்சங்களை பெற உதவியிருக்கு என்றேன். அந்த மரம் மட்டுமா அனைத்து மரங்களும் நமது வாழ்வோடு இணைந்துள்ளது என்றேன். காப்பிக்குடிக்க மருமகள் அழைக்க என் 10 வயது பேரன் வந்தான். எந்த மரம் பாட்டி புளியமரக் கதையா என்றான் சிரித்தபடி.
Leave a Reply