எலி உணர்த்தும் மனிதம்

எலி உணர்த்தும் மனிதம்

  • By Magazine
  • |

முனைவர். பேரா. எஸ். தினகரன்

மேனாள் மாநிலத் தலைவர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம்

எலிகளை பலரும் விரும்புவதில்லை. அருவருப்பு, கூச்சம், வெறுப்பு, அவை ஏற்படுத்தும் பொருளாதார இழப்புகள், எலிகளை பெரும்பாலும் விரும்பாமல் செய்துவிடுகிறது. சில விதிவிலக்குகள் இருக்கலாம். சிலர் செல்லப்பிரணிகளாக வளர்க்கிறார்கள் எனினும், அவை நாம் பார்க்கும், அன்றாடம் புழங்கும் இடங்களில் வாழும் எலிகளாக இருக்காது. ஏன் கிளி சோதிடம் போல் எலி சோதிடம் கூட உண்டு. எலிக்கோயில் கூட உண்டு.

எலிகளின் செயல்பாடுகள் கிட்டத்தட்ட மனிதர்களின் உடல் செயல்பாடுகளை பிரதிபலிப்பவை. மனிதர்களைப்பற்றி அறிந்துகொள்ள எலிகளின் மீதான ஆய்வுகள் மிகவும் முக்கியமானவை. காலம் காலமாக நாம் இதைத்தான் நம்பி வருகிறோம். மனித மனங்களை, அறிவாற்றலை, நம் மூளைச்செயல்பாடுகளை, ஞாபக சக்தியை பரிசோதிக்க பெரும்பாலும் எலிகளைத்தான் நம்பியிருக்கிறது ஆய்வுலகம். நினைவாற்றல் குறைபாடுகளான அல்சைமர், டெமன்சியா போன்ற ஆய்வுகள் கூட எலிகளில் தான் நிகழ்த்தப்பட்டிருக்கிறது.

சக்கரை வியாதி, இதய சம்பந்தமான ஆய்வுகள், பதட்டம், ஆர்வம் போன்ற மனித செயல்பாடுகளை ஆய்வு செய்ய எலிகள் காலம்காலமாக பயன்படுத்ப்பட்டிருக்கின்றன. இயல்பில் நாம் குரங்களின் பரிணாமத்தின் உச்சம் மனிதர்கள் என்கிறார்கள். ஆனால் இயற்கையாய் வாழும் குரங்குகளின் மீது ஆய்வுகள் மேற்கொள்ளக்கூடாது என்று சட்டங்கள் இருக்கிறது. அப்படியே கட்டாயம் ஏற்படின் படியாக்கம் செய்யப்பட்ட குரங்குகளில் ஆய்வுகள் மேற்கொள்ளமுடியும். அதற்காகவே இரண்டு படியாக்கம் செய்யப்பட்ட குரங்குகள் ஆய்வகங்களில் உருவாக்கப்பட்டது. அதன் பெயர் ஸோங் ஸோங், ஹுவா ஹுவா. அதன் பின் படியாக்கம் செய்யப்பட்ட ரீசஸ் குரங்குகளான டெட்ரா, ரெட்ரோ குரங்குகள். உண்மையில் இது பெரிய நிதிச்சுமையை ஏற்படுத்தும். நேர விரயமும் கூட! அதுமட்டுமல்ல, ஏராளமான விலங்குகளை வைத்து மனிதர்களுக்கான அல்லது மனித  நலன்களுக்கான ஆய்வுகளும் மேற்கொள்ள தடைகள் உண்டு. ஆனாலும் எலிகளின் மீதான ஆய்வுகள் விதிவிலக்குகள். சிக்கனமானவை. நேரமும் மிச்சம். அதனாலயே மனிதர்களின் ஆயுள் நீட்டிப்பில், அது சார்ந்த ஆய்வுகளில் எலிகளின் பங்கு மகத்தானவை.

காலாட்படைப்போரில் தான்சானிய எலிகள் மிகவும் முக்கியமானவை. அதற்கு ஹீரோ எலிகள் என்ற பெயரும் உண்டு. கன்னிவெடிகளை கண்டறிவதில் இவை தங்கம் பதக்கம் வென்றிருக்கிறது. ஏனெனில் இவை எடை குறைவாய் இருப்பதால் கன்னி வெடிகளின் மீது நடந்து சென்றாலும், போதிய அழுத்தம் இல்லாததால் அக்கன்னி வெடிகள் வெடிப்பதில்லை! மோப்பத்திறன் கொண்ட நாயை பயன்படுத்தும் போது கூட கன்னி வெடிகள் வெடித்து அவை மரித்துப்போயிருக்கின்றன. எனவே எலிகள் தான் சிறந்த தேர்வு. அதுமட்டுமல்ல,  எண்ணிக்கையிலடங்கா போர் வீரர்களின் உயிரைக் காத்திருக்கிறது. அதனாலேயே என்னவோ இவை அரசாங்க ஊழியர்களாக கருதப்படுகிறது.

எலிகள் மனிதச்சளியை நுகர்ந்து காச நோய் இருக்கிறதா எனக்கண்டறியும் திறன் மிக்கவை  போலவே வெளிநாடுகளுக்கு மறைத்துக்கடத்தப்படும் விலங்குகளை துல்லியமாகக் கண்டறியும். எனவே விமான நிலையங்களில், கப்பல் போக்குவரத்தில் எலிகள் முக்கியமான பங்கு வகிக்கிறது. இந்தியாவில் மட்டும் உணவுதானியங்கள் எலிகளால் சேதப்படுத்தப்படுகின்றன. அதன் மதிப்பு 500 கோடி டாலர்கள் என்கிறது தரவுகள். அதை ரூ  98 ஆல் பெருக்கினால் எவ்வளவுவரும் என யூகித்துக்கொள்ளுங்கள். பஞ்சகாலங்களில் எலிக்கறி உண்டு உயிர்வாழ்ந்த விவசாயிகளையும் மறக்கக்கூடாது தானே?

மனிதர்களுக்கு மட்டும்தான் சிரிக்க தெரியும் என்று நினைக்காதீர்கள்,  எலிகளுக்கும் சிரிக்கத் தெரியுமாம், கிச்சு கிச்சு மூட்டினால்! என்ன அதை நம்மால் கேட்க முடியாது! இதற்கென வடிவமைத்த சில மைக்ரோபோன்களை வைத்து கண்டறிய முடியுமாம்! ஜெர்மனியின் கம்போல்ட்டில் உள்ள பெர்லின் பல்கலையில் இந்த ஆய்வை செய்திருக்கிறார்கள். குறிப்பாக எலியின் நடுமூளை தூண்டப்பட்டு அவற்றை சிரிக்க வைத்திருக்கிறார்களாம். மூளையின் பழுப்பு பகுதியை (periaqueductal gray matter) மருந்தை கொண்டு கட்டுப்படுத்தினால் இந்தப் பகுதியை கட்டுப்படுத்தினால் அவை சிரிப்பது இல்லையாம். மன அழுத்தத்திற்கும் இதே பகுதி தான் காரணமாம். இந்த ஆராய்ச்சி 2016 இல் மேற்கொள்ளப்பட்டது. மனிதர்களைப் போலவே எலியையும் பழக்கப்படுத்துவதின் மூலம் ஐஸ் பை (I Spy ஐஸ் பாய் அல்ல!) விளையாட வைக்க முடியுமாம். நாம திருடன் போலீஸ் விளையாட்டுன்னு சொல்றோம்ல அது மாதிரி! இது மாதிரியான ஆய்வுகளும் நடந்து கொண்டிருக்கிறது.

ஒரு விதத்தில் அனைத்து பாலூட்டிகளும் சிரிக்கும் வல்லமை பெற்றவை தான்! இருந்தாலும், அவற்றின் மேல் சோதனை நடத்த சட்டங்கள் அனுமதிப்பதில்லை. அதனால் தான் எலிகள் மனிதப்பண்புகளை, அவனின் கோபதாபங்களை கண்டறிய  பயன்படுத்தப்படுகின்றன. மனித நோவுகளைத் தீர்க்கும் மருந்துகளை சோதிக்க, தடுப்பூசிகளை செலுத்தி விளவுகளைக் காண, என என்ன ஆய்வுகள் இல்லை? இப்போது சொல்லுங்கள் எலிகள் எவ்வளவு முக்கியமானவை என்று. எலி விரட்டிகளை பயன்படுத்துங்கள்! எலிகளைக் கொல்லாதீர்கள். சிறிதளவாவது கரிசனம் கொள்ளுங்கள்! மனிதம் காக்கும் எலிகளுக்கு நாம் தரும் சிறு பரிசு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *