கன்னியாகுமரி மாவட்டத்தின் விளையாட்டு வரைபடத்தில் ‘மூலச்சல்’ என்ற ஊரைத் தனித்துவமாக அடையாளப்படுத்தியவர் திரு. ஜூட்ஸ் பெர்லின். GFC (Glaring friends club)) மூலச்சல் அமைப்பின் பொருளாளராகவும், தலைசிறந்த பயிற்சியாளராகவும் விளங்கும் இவர், கபடி விளையாட்டின் மூலம் நூற்றுக்கணக்கான இளைஞர்களின் வாழ்வில் ஒளியேற்றி வருகிறார்.
கேள்வி: GFC மூலச்சல் அமைப்பின் தொடக்கம் மற்றும் அதன் கட்டமைப்பு குறித்துக் கூறுங்கள்?
பதில்: மூலச்சலில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பே கபடி விளையாடப்பட்டு வந்தது. ஆனால், அது சரியான வழிகாட்டுதல் இன்றி தேக்க நிலையில் இருந்தது. அதனை முறைப்படுத்தி, மேம்படுத்த உருவானதுதான் GFC (Glaring friends club). தற்போது இந்த அமைப்பின் தலைவராக ஜான்சன், செயலாளராக ராஜேஷ், கணக்கராக அணித் ஆகியோருடன் இணைந்து பொருளாளராக நான் பணியாற்றி வருகிறேன்.
கேள்வி: உங்கள் கபடிப் பயணம் எப்படித் தொடங்கியது? நீங்கள் சந்தித்த சவால்கள் என்ன?
பதில்: நான் 16 வயதில் விளையாடத் தொடங்கினேன். ஆனால் அன்று எங்களுக்குப் பயிற்சியாளர்களோ, வழிகாட்டிகளோ இல்லை. போட்டிகளுக்குச் செல்லும்போது என்ன செய்ய வேண்டும் என்று சொல்லக்கூட ஆள் இல்லை. பனியன், டவுசர் போன்ற அடிப்படை உபகரணங்களை வாங்கக் கூட வசதி கிடையாது; அதைத் தரவும் யாரும் முன்வரவில்லை. அந்த வசதி இல்லாமையால்தான் எங்களைப் போன்ற பல வீரர்களால் அடுத்த கட்டத்திற்கு நகர முடியாமல் போனது. அந்த வலிதான், “இனி வரும் தலைமுறைக்கு இந்த நிலை வரக்கூடாது” என்ற வைராக்கியத்தை எனக்குள் விதைத்தது.
கேள்வி: உங்கள் பயிற்சியின் மூலம் மாணவர்கள் அடைந்துள்ள வெற்றிகள் பற்றி?
பதில்: இன்று எங்களது மாணவர்கள் பதக்கங்களைக் குவித்து வருகின்றனர். இதுவரை எங்களது கிளப்பில் பயிற்சி பெற்றவர்களில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் காவல்துறை, ரயில்வே, ஐ.சி.எஃப் (ICF), ராணுவம் மற்றும் கடற்படை ஆகிய அரசுப் பணிகளில் சேர்ந்துள்ளனர். குறிப்பாக, PRO கபடி லீக்கில் கன்னியாகுமரி சார்பில் எங்களது வீரர்களான அபினேஷ் மற்றும் ஸ்டுவர்ட் சிங் ஆகியோர் தேர்வாகிப் பெருமை சேர்த்துள்ளனர்.
மேலும், மூலச்சல் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவன் திபேஷ் மற்றும் அமலா மெட்ரிக் பள்ளி மாணவன் ஜோகன் ஆகியோர் சப்-ஜூனியர் பிரிவில் தமிழ்நாடு அணிக்காக தேர்வாகியுள்ளனர். எனது மாணவர் திரு பார்த்திபன் என்பவர் என். ஐ. எஸ் முடித்துள்ளார் மேலும் அவர் இந்திய ராணுவ அணிக்காகவும் மற்றும் நியூ மும்பை ப்ரோ கபடி அணிக்காகவும் பயிற்சியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
எனது மாணவர் ஒருவரே இப்போது பயிற்சியாளராக உருவெடுத்திருப்பது எனக்குப் பெருமை அளிக்கிறது.
கேள்வி: விளையாட்டு வீரர்களை உருவாக்குவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் என்ன?
பதில்: திறமையான மாணவர்கள் நிறைய பேர் உள்ளனர். ஆனால், அரசிடமிருந்து எந்த அடிப்படை உதவியும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. கபடி விளையாட்டை அடுத்த தளத்திற்குக் கொண்டு செல்ல நாங்கள் சொந்தமாக 20 சென்ட் நிலம் வாங்கியுள்ளோம். அதில் ஒரு ‘இன்டோர் ஸ்டேடியம்’ (Indoor Stadium) அமைக்க வேண்டும் என்பது எங்களது கனவு. அரசு அல்லது தனியார் நிறுவனங்கள் இதற்கு நிதியுதவி அளித்தால், அது வருங்கால மாணவ-மாணவியருக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும்.
கேள்வி: உங்களது அமைப்பின் நோக்கம் விளையாட்டுடன் முடிந்து விடுகிறதா?
பதில்: இல்லை. எங்கள் நோக்கம் விரிவானது. இளைஞர்கள் ஒழுக்கமுள்ளவர்களாக வளர வேண்டும், கல்வி அறிவு பெற வேண்டும், வாழ்வில் வெற்றி பெற்று மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்பதே எங்கள் இலக்கு.
கபடி மட்டுமல்லாது, ஆண்டுதோறும் ஏழைகளுக்குத் தையல் இயந்திரம், இலவச வேட்டி-சேலை வழங்குதல், நோயாளிகளுக்கு உதவி, கல்வி உதவித்தொகை, புத்தகங்கள் வழங்குதல் எனப் பல்வேறு சமூகப் பணிகளையும் GFC செய்து வருகிறது.
கேள்வி: உங்களது பன்முகப் பணிகள் மற்றும் உங்களுக்குத் துணையாக இருப்பவர்கள் குறித்து?
பதில்: நான் கன்னியாகுமரி மாவட்ட கபடி கழக நிர்வாக உறுப்பினராகவும், கோ கோ, விளையாட்டு கழகத்தின் மாவட்ட தலைவராகவும் தக்கலை வணிகர் சங்க நிர்வாக குழு உறுப்பினராகவும், பேரூராட்சி கவுன்சிலர், கூட்டுறவு சங்க கவுன்சிலராகவும் எனப் பல தளங்களில் இயங்கி வருகிறேன். ராணுவ வீரர்களுக்கும், பல்வேறு கல்லூரிகளுக்கும் (நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி ,மார்த்தாண்டம் நேசமணி கல்லூரி , லட்சுமிபுரம் கலை இலக்கிய கல்லூரி) பயிற்சியாளராகப் பணியாற்றியுள்ளேன்.
உங்களது செயல்பாடுகளுக்கு துணையாக யாராவது உதவுகிறார்களா?
எங்களது இந்த 20 ஆண்டுகாலப் பயணத்தில் மூலச்சல் இராஜேந்திரா மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் இராஜேந்திரன் அவர்கள் பண உதவியும், மருத்துவ உதவியும் செய்து பெரும் பக்கபலமாக இருக்கிறார். மேலும் ஜூட்ஸ் பிராங்கோ, செல்வின், பார்த்திபன் போன்றோரும் எங்களுக்குத் தொடர்ந்து உதவி வருகின்றனர்.
கேள்வி: வருங்கால வீரர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?
பதில்: கபடி வெறும் விளையாட்டு அல்ல; அது ஒரு ஒழுக்கம். ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு இலவசமாகப் பயிற்சி அளிக்க நான் காத்திருக்கிறேன். வசதி இல்லை என்ற காரணத்திற்காக ஒரு வீரனின் திறமை முடங்கிவிடக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.
பேட்டி கண்டவர்:
ஜி. ஜெயகர்ணன்,
இணை ஆசிரியர், ‘புதிய தென்றல்
Leave a Reply