சூரியன் சாலை 2025

சூரியன் சாலை 2025

  • By Magazine
  • |

– கிருஷ்ணகோபால்

மலைத் தொடர்களை  நோக்கி நீளும் மக்கள் நடமாடமற்ற  இந்தக் கிளைச்  சாலையில் பசுமையை புதைத்துக் கொண்டிருக்கும் சூரியனை சாட்சியாக வைத்து  டாரஸ் லாரிகள் மட்டுமே அதிவேகத்தோடு இரவும் பகலும்   அங்குமிங்கும் சென்று வருகின்றன.இந்த சாலையில்  டாரஸ் லாரிகள் செல்லும்  போது உண்டாகும் அதிர்வு சுற்று வட்டார வீடுகளில் எதிரொலித்தன.வயதானவர்கள் திடீர் விழிப்பு வந்த பிறகு தூக்கம் வராமல் தவித்தனர்.. . இதய நோயாளிகள் தூக்கம்  தடைப்பட்டு   பராணப்பட்டனர்.

வேகமாகச் செல்லும் போது  காற்று மோதி சாலை ஓர நாணல் புற்கள்   ஓரே சீராக அசைந்து  சற்று நேரத்தில் தலையாட்டலை நிறுத்த  அவகாசமில்லாமல் தொடர்ந்து லாரிகள் செல்வதால்  காலை  இரவு என ஓயாமல் அசைந்துக் கொண்டே நிற்கின்றன.அதி வேகமாக செல்லும் லாரிகள் மோதி எண்ணிலடங்கா மனித உயிர்கள்  மற்றும் கால்நடைகள் என பலிகொடுத்தப்பிறகு மக்கள் மாற்றுப்பாதையை கண்டுப்பிடித்து போய்வந்தனர் மாற்றுப்பாதையானது மலைக்குச் செல்லும் இந்த பிரதானப் பாதையை ஊடறுத்து செல்கிறது.

இந்தச் சாலையை  கடக்கும் போது மட்டும் டாரஸ்லாரிகள் வருகின்றனவா என கவனமாகப் அங்குமிங்கும் பார்த்து விட்டு வேகமாக  கடந்துச் செல்கின்றனர் மக்கள்.ஆனாலும் மக்களில் சிலர் பழகிவந்த இந்த மலைக்குப் போகும் சாலையை மறக்க முடியாமல் அவசரத்திற்கு இதை பயன்படுத்தியும்  வந்தனர்.கடந்த வாரம் டாரஸ்லாரி மோதி முறிந்துத் தொங்கிக் கொண்டிருக்கும் மின்கம்பத்தை கடந்து பின்னால் டாரஸ்லாரி  வருகிறதா என அடிக்கடி வண்டியின் பக்க கண்ணாடியில் பார்த்துக் கொண்டே  மனைவியைப் பின்னால் உட்கார வைத்து வண்டி ஓட்டி நகரம் நோக்கிச் சென்றான் ஈஸ்வரன்.

சாலையின் இருபக்கங்களிலும்  நிற்கும் இரப்பர் மரங்கள் வெக்கையை உமிழக் கூட மூச்சுத் திணறியபடி  சாம்பல் நிற பாறைப்பொடிகள் அழுத்த நெடுங்காலமாக   தலைகவிழ்ந்தே நிற்கின்றன.கடந்த ஐந்து வருடகாலமாக தலைகவிழ்ந்து நிற்கும் மரங்கள் சிறிது கூட  தலைநிமிரவேயில்லை…நல்ல ஒரு மழைப் பெய்தால் மட்டுமே மரத்திலுள்ள பாறைப்பொடிகள் ஊறிய அழுக்கு கழுவப்படும் ஆனால்  இந்த சுற்று வட்டாரத்தில் மழை அடித்துப்  பெய்து கிட்டத்தட்ட ஆறுவருடங்களுக்குமேல் இருக்கும் … மலைகள் வெட்டி கடத்தப்படுவதால் மலையில் ஊற்றெடுக்கும் அருவிகள் காணாமல் போனது; ஆறுகள் காய்ந்து கிடக்கின்றன.காற்று சற்று வேகமாக அடிக்கும் ஆனி ஆடி மாதங்களில்  மரங்களில் படிந்திருக்கும் சாம்பல் நிற தூசி  வெளியில் ஓடித் திரிந்து எப்போதும் அந்த சுற்றுவட்டாரம் முழுதும் புகைமூட்டமாய் விரவி நிற்கும்.   தப்பித் தவறி அந்த வழியேச்  செல்பவர்கள்  கண்களை திறந்து வைத்துச் செல்வதாக இருந்தால் கண்கள் சாம்பலால் நிறைந்துவிடும். கண்ணைக் கட்டி காட்டில் விட்டதுப் போல் ஒரு திணறலை உணர்வார்கள்.

இந்த வட்டாரத்தில் தலைநிமிர்ந்து நிற்கும் ஐந்தாறு மலை அடுக்குகளை வெட்டி காசாக்கியப் பிறகு அரசியல்வாதிகள் நிலத்தடி குழிதோண்டி பாறைகள் வெட்டி வேலையை செவ்வனே செய்து வருகின்றனர்.ஆற்றுமணலை அள்ளி பக்கத்து மாநிலங்களுக்கு கடத்தி பணம் சம்பாதிக்கும்  அரசியல்வாதிகள் ஆற்று மணல் தீர்ந்தப் பிறகு பாறைப்பொடிகளை கடத்த ஆரம்பித்திருக்கின்றனர்.

அவனுக்கு ஏனோ கோடை வெப்பம் கொன்றெடுக்கும் போது  கண்முன்னே மலைகளவுப் போவதும் நினைவுக்கு வந்து விடுகிறது.மலை வளம்  களவுப்  போக போக வெக்கையின் கொடுமையும்  அதிகரித்துக் கொண்டிருப்பதாக உணர்ந்தான்.

எக்காலத்திலும் இல்லாத சூரியன் இம்முறை கடுமையாக  சுட்டெரித்தது. இச்  சிறுநகரத்தை  பக்கத்து மாநிலத்தின் துறைமுகநகரோடு இணைப்பதற்கு நான்குவழிச் சாலை அமைப்பதற்காக ஆயிரக்கணக்கில்    வெட்டி வீழ்த்தப்பட்ட    பல்வேறுபட்ட முதிர்ந்த மரங்களும்  ஞாபகத்திற்கு வந்து விடுகின்றன.இம்மரங்களை நட்டு வளர்த்து

நிழல்தர சூழலை பாதுகாக்க எத்தனை வருடமாகும்….!

குண்டும் குழியுமான சாலையில் தடதடத்தப்படி ஓசையெழுப்பிக் கொண்டே காலை முதல்  இரவு வரை இடைவிடாமல் செல்லும் டாரஸ் லாரிகளை எண்ணிக் கொண்டே  சிறு நகரத்து சாலை ஓரத்தில் நிற்கும் வேப்பமரத்தடி பேருந்து நிறுத்தத்தில் முக்கால் அடியே உயரமுள்ள    நான்கு சக்கர  மரப்பலகை வண்டியில் தன்  ஊனமான கால்கள் சூம்பித் தெரிய  பிச்சை எடுத்துக் கொண்டிருந்தான் ஈஸ்வரன்.

இரவு நெருங்க நெருங்க டாரஸ் வண்டிகளின் எண்ணிக்கையும் வேகமும் கூடியது.அதனால் சில நாட்களில் எண்ணிக்கையில் சிறு தவறு ஏற்பட்டதாக சந்தேகம் ஏற்பட்டது. எப்படியிருந்தாலும் ஒரு நாளைக்கு சராசரியாக எழுநூறு லாரிகளுக்கு மேல் மலைகளை உடைத்து  பக்கத்து மாநிலத்துக்கு சென்றுக் கொண்டிருப்பதாக கணக்கிட்டுக் கொண்டான்.

இந்த நெடுஞ்சாலையில் பேருந்துகளாலும் இருசக்கர வாகனங்களாலும் மோதல் விபத்துகளில் உயிரிழந்தவர்களை விட டாரஸ்லாரிகளால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கைதான்  அதிகம்.

 எல்லாவற்றையும் குழப்பி தடுமாற்றமடையச்  செய்யும்   ஒரு கடும் வெக்கை காலத்தில்தான் சாலையில் இருசக்கர வாகனத்தில் போய்க் கொண்டிருந்த போது   பின்னால் இருந்த  மனைவி உயிரிழந்ததும்  அவனது கால்கள் துண்டானது எல்லாம் கட்டுப்பாட்டை இழந்து மோதிய  ஒரு டாரஸ்  லாரியால்தான்…பழைய துயரத்தை ஒரு முறை நினைவுக்கு கொண்டுவரும் சலிப்பூட்டும் வெக்கையையும்  டாரஸ் லாரியையும்    இங்கிருந்து விரட்டுவதைப் போல் வேப்பமரம் காற்றில் பேயாட்டம் ஆடியது.

சாலையின் மறுபக்கத்திலிருந்த  தேவாலயத்தின்   அலங்கார மின் விளக்குகள் வெளிச்சம் தர ஆரம்பித்தன.அருகே இருந்த பிச்சைகாரர்கள் எல்லோரும் கிளம்பிவிட்டார்கள். இதற்குமேல் எவரிடமிருந்தும் பிச்சையை எதிர் பார்க்க முடியாது என அவர்களுக்குத் தெரியும்.இன்று கிறிஸ்தவ விசேச நாள்.வழக்கமாக கிடைக்கும் ஐந்தாறு உணவுப் பொதிகளை விட இன்று பத்துக்கு மேல் உணவுப் பொதிகள் கிடைத்தன. மொத்தத்தையும் எப்படி சாப்பிட முடியும் ..மதியம் சாப்பிட்டாகி விட்டது .இரவுக்கு மகனுக்கும் தனக்கும் என இரண்டு பார்சல்களை எடுத்து வைத்து மீதமுள்ள பார்சல்களை பக்கத்து ஸ்டேன்ட்  ஆட்டோகாரர்களுக்கு குறைந்த விலைக்கு விற்பனைச் செய்து அதை காசாக்கி வைத்துக் கொண்டான் பிறகு மகனுக்காக  காத்திருக்கத் தொடங்கினான்  .

டாரஸ்லாரிகளின்  எரிச்சலூட்டும்  ஓய்வற்ற ஓட்டம் அவனுக்கு பகல் பொழுது முழுவதும்  பழைய வேதனையான எண்ணங்களையே கிளர்ந்தெழச் செய்வதால்  இங்கிருந்து வேறு இடம்மாறிச் சென்று பிச்சை எடுக்கும் ஆலோசனையில்  இருந்தான்….வேறு இடத்தில் காசுப் பணம் கிடைக்கும்  ருசியான சோறு பொதி கிடைக்குமா….?

இப்படி பிச்சை எடுக்கும் நிலைக்கு கொண்டு விட்ட அரசாங்கத்தின் கொள்கையை  சபித்தான்.  வேறு தொழில் செய்து பிழைக்க எப்படி முடியும் வேறு ஏதேனும் மார்க்கங்கள் உண்டா என அவனுடைய இரவு  பொழுதுகளை இந்தச் சிந்தனையிலேயே  செலவிட்டான்.கண்ணுக்கெட்டும் தூரம் வரையிலும் வேறு வழியே இல்லை என்பது தெளிவாகத் தெரிந்தது.

 ஈஸ்வரனை  அழைத்துப் போக மகன் இன்னும் வரவில்லை.வழக்கமாக வருவதுபோல் ஆள் நடமாட்டம்  குறைந்தப் பிறகுதான் வருவதாக அவன்  சொல்லியிருந்தாலும் நேரம் ரொம்ப பிந்தி விட்டிருந்தது. வழியில் அவனுக்கு  ஏதேனும் சங்கடங்கள் பற்றி விட்டதோ என ஒரு நிமிடம் குழம்பிப் போனான். அப்படியேதுமிருக்காது என மனதைத் தேத்திக் கொண்டு , வருகிற நேரம்தான் என சமாதானப்பட்டுக் கொண்டான்.

அவனை அழைத்துக் கேட்கலாமென்றால் பட்டன் அலைபேசிக்கு பணம் போட்டு ரெண்டு நாளாகிறது.முன்புப் போல் வருமானம் இல்லை. இந்த கோடை பள்ளி விடுமுறை காலத்தில்  பேருந்தில் பயணிப்பவர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் இடத்தை மாற்றிவிடத் தீர்மானித்தான் .. வயிறுக்கு உணவுக் கிடைக்கிறதேத் தவிர கையில் பணம் வந்துச்  சேரவில்லை என இவ்வாறு யோசித்துக் கவலைப் பட்டுக்  கொண்டிருக்கும் போதே மகன் வந்துச் சேர்ந்தான்.

மகன் கல்லூரிப் படித்துக் கொண்டிருப்பவன்.வீட்டிற்கு வந்து குளித்து சாப்பிட்டு விட்டு வர  இவ்வளவு நேரமாகி விட்டிருக்கிறது…

தேவாலய திருவிழாக்கள்,பள்ளிவாசல்  விழாக்கள், கோவில் விழாக்கள் பேருந்து நிலையம்,பொருட்காட்சி திடல் என  எல்லாமிடத்தையும் பார்த்தாகி விட்டது.மக்களிடம் தெய்வபக்தி குறைந்துக் கொண்டு வருவதைப் போல் வருமானம் குறைந்துக் கொண்டேதான்  வருகிறது என நினைத்துக் கொண்டான்.

 அடுத்த செமஸ்டருக்காக கல்லூரிக்கு அடுத்த வாரம் இருபதாயிரம் ரூபாய் கொடுக்கணும் என மகன் தொடர்ந்து  நச்சரித்துக் கொண்டிருப்பது ஞாபகத்தில் வந்து உறைத்தது.கையில் இருப்பு பத்தாயிரம் மட்டுமே..

“மக்ளே சுசீந்திரம் கோயில்ல நாளைக்கு தேரேட்டம் ,நைட்டுக் கொண்டு விட்டுறு அப்புறம் , நாள கழிச்சி விடியக்காலம் அஞ்சு மணிக்கு வந்தாப் போதும்…”

“உம்மள கொண்டு போய் விட்டுட்டு  கூட்டிட்டு வந்தா காலேஜிக்கு இருபதாயிரத்த தந்திரூவிறா….

 “ நிச்சயம் மக்ளே ஒரு வாரத்துக்குள்ள  தந்திருவேங்  அப்பாவ நம்பு…”

“ செமஸ்டர் பீஸ் எல்லாரும் கொடுத்தாச்சி நாங் மட்டுந்தாங் பாக்கி பாத்துகிரும்… எப்பம் கொண்டு வுடணும் “

‘ராத்திரி பதினொரு மணிப்போல கொண்டு வுட்டுறு’

“ சாப்பிட்டிட்டு ரெடியாயிரும்”

“ம்……”

ஈஸ்வரனை  கொண்டு விட்டு விட்டு வீடுத் திரும்பி விட்டான் மகன்…

 கைகளால் தரையை ஆவிப் பிடித்து  உந்திச் செல்லும் சிறிய  அரை அடியே உயரமான நான்கு சக்கர வண்டியில் தோதான  இடம்  ஒன்றைத் தேடி போய்க் கொண்டிருந்தான் ஈஸ்வரன். ஆட்கள் கூட்டம் கூட்டமாக  வந்துக் கொண்டும் போய்க் கொண்டிருக்கும் ஊடுபாவு வழியே  ஊர்ந்துச் சென்றுக் கொண்டிருந்தான். கால்களுக்கிடையே நழுவிச் செல்லும் நாய்க்குட்டியைப் போல்..

தோதான ஓரிடத்தைக் கண்டுப்பிடித்து தாணுமாலயன் இருக்கும் திசைநோக்கி கும்பிட்டு விட்டு, தன் முன்னால் தான் வழக்கமாக விரிக்கும் ராசியான தலைதுண்டை விரித்தான். விடிந்தால் தேரோட்டம், மக்கள் நெரு நெருவென வரத் தொடங்கி விட்டார்கள்.தலைத் துண்டில் நாணயமும் ரூபாய் தாள்களும் விழத் தொடங்கி விட்டன. .செமஸ்டர் கட்டணம் கட்ட இந்த ரூபாய் போதாது எனத் தோணியது.ஏதேனும் மேஜிக் நிகழ்த்தி வசூலைப் பெருக்க வேண்டும் என நினைத்தான்.எப்போது தூங்கினான் என தெரியவில்லை தூங்கும் போது அதிகாலை  நான்குமணியிருக்கும் என நினைத்துக் கொண்டான் .

அடுத்தநாள் காலை சுள்ளென சூரியன் முகத்திரையும் போது அவன் எழுந்து காலைக்கடன்களை முடித்து வசூலுக்கு தயாராக துண்டை விரித்து உட்கார்ந்துக் கொண்டான் தலைத் துண்டில்  ஏற்கனவே  நான் கொண்டு வந்த ஐம்பது ரூபாய் தாள்களையும் ஒரு நூறுரூபாய் தாளையும் பத்துரூபாய் நாணயங்களுக்கிடையே மிதக்க விட்டான்… கூட்டம் ஏற ஏற அவன் உள்ளுக்குள் அருள் வந்தவன் போல் இருந்த இடத்திலேயே  முழுவட்டமாக தலை கிறங்கியது.திடீரென  தன் இருகைகளையும் நிலத்தில் ஊன்றி உடைந்துப் போன இரு கால்களையும் ஆகாயத்தில் நிற்க தன்னைத்தானே முழுவட்டமாக இடமிருந்து வலது வசமாக சுழன்றான் .இவனது திடீர்செய்கையை எதிர்பார்க்காத பக்தர்கள் வியந்து அவன் செய்கையை பார்த்தபடி செப்படி வித்தைக்காரனோ என நினைத்து அவனைச் சூழ்ந்து நின்று அவனுக்கு பணத்தை வாரி இறைத்தனர்.பிறகு வேகம் தணிந்தவன் சிறிது இடைவெளிவிட்டு புதிய பக்தர்களை கவரும் நோக்கில் மறுபடியும் ஆகாயம் நோக்கி கால்கள் நீள ஆனந்தக் களி நடனம் புரிந்தான்.

வந்திருக்கிற பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றிக் கொண்டிருப்பதற்கிடையில் தாணுமாலையன் தனக்குப் போட்டியாக ஒருவன் ஆனந்தநடனம் புரிவதை பக்கத்தில் நின்று பார்க்கும் ஆர்வத்தில் அவனருகில்

வந்தவர் வானம் நோக்கி நிற்கும் அவனது  பாதங்களில்  தோகை விரித்தாடும் ஒரு  ஆண்மயிலை ஆடவிட்டு ரசித்துக் கொண்டிருந்தார். அது தோகை விரித்து ஆடுவதைப் பார்க்கும் போது மக்கள் ரசித்து ஆரவாரித்து கைத்தட்டினர்.தேரோட்டம் பார்க்க வந்தக் கூட்டத்தை விடவும் ஈஸ்வரனின் ஒடிந்துப் போன காலில் நின்றாடும்  மயில் நடனத்தை பார்க்க வந்த கூட்டமே நிரம்பி வழிந்தது…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *