– பழனி அரங்கசாமி
தேசியக்கவிஞர் பாரதியின் காலம் தொடங்கி, கவிதை என்பது பண்டிதர் பாஷையினின்றும் விடுதலை பெற்று மக்களின் சொத்தாக மாறிவிட்டது. யமகமும், திரிபும் அந்தாதியும், ஆசிரியப்பாவும், வஞ்சியும், கலிப்பாவும் மருட்பாவோடு சேர்ந்து மருட்டிய காலம் மறைந்து விட்டது. நாட்டு விடுதலைக்கு மட்டுமின்றி பாடல்களின் பகிரங்க விடுதலைக்கும் பச்சைக்கொடி காட்டியவன் பாரதி. சொல்லும் பொருளும் சுவைபடப்பாடி பண்டிதரையும் பாமரையும் தன்குடைக்கீழ் கொண்டு வந்தவன் பாரதி. அந்த பாட்டுக்கொரு புலவன் பாரதியோடு பத்து ஆண்டுகள் (1908-1918) பாண்டிச்சேரியில் நெருங்கிப் பழகியவர் கனக சுப்புரத்தினம். சுப்ரமண்ய பாரதியின் நெருக்கத்தாலே, பாசமும் பண்பும் கலந்த நேசத்தாலே சுப்புரத்தினமும் பாரதிதாசனாகி விட்டார்.
எனக்குப் புதுநெறி காட்டிய புலவன் பாரதி என்று புரட்சிக் கவிஞரே தனது நன்றியுணர்வை வெளிப்படுத்தியுள்ளார். புதுநெறி என்பது கவிதையின் எளிமையினையும் கருத்து சுவையினையும் உள்ளடக்கிய சொற்றொடர் என்று கொள்ள வேண்டும். புரட்சிக்கவிஞரின் சொந்தக் கருத்தினை அது சூறையாடி விடவில்லை.
பாரதியார் அமெரிக்கக் கவிஞன் வால்ட் விட்மனின் (1819-92) வசன கவிதையினைக் கையாண்டுள்ளார். தமிழலக்கண இலக்கிய மரபினை நன்குணர்ந்த பாரதிதாசன் தனது கவிதைகளில் அதனைப் பின்பற்றவில்லை. வசனம் கவிதை ஆகாது. கவிதையை வசனம் என்று கூற இயலாது. எனவே வசன கவிதை என்பதே பொருத்தமில்லாத சொற்றொடர் விதவையரின் வேதனைனையும், குழந்தை மணத்தின் கொடுமையினையும் பாரதி கண்டுகொள்ளவில்லை. ஆனால் விதவைகளின் சார்பாக ஒரு வழக்கறிஞரைப் போல் வாதாடுகிறார் பாரதிதாசன். மறுமணம் புரிவதை சிறுமை என்பதை எதிர்த்து
பேடகன்ற அன்றிலைப் போல், மனைவி செத்தால்
பெருங்கிழவன் காதல் செயப்பெண் கேட்கின்றான்
வாடாத பூப்போன்ற மங்கை நல்லாள்
மணவான் இறந்தால் பின் மணத்தல் தீதோ? என்று கேட்கிறார்.
அதே போன்று வயோதிகப் பெரியோர்க்கு வாலிபப் பெண்ணை வற்புறுத்திக் கட்டிக் கொடுக்கும் பொருந்தா மணத்தை கண்டிக்கிறார்.
மண்ணாய் போக! மண்ணாய் போக!
மனம் பொருந்தா மணம் மண்ணாய்ப் போக!
தனது கற்பனைக் கவிதையிலும் சிறு காப்பியங்களிலும் பெண்களை உயர்த்திப் பெருமைப்படுத்துகிறார் பாரதிதாசன். சஞ்சீவி பர்வதத்தின் சாரலில் குப்பனைப் பார்த்து வஞ்சி கேட்கும் கேள்வி இது.
பெண்ணுக்குப் பேச்சுரிமை வேண்டாம் என்கின்றீரோ?
மண்ணுக்கும் கேடாய் மதித்தீரோ பெண்ணினத்தை?
பெண்ணடிமை தீருமட்டும் பேசுந்திருநாட்டு
மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற்கொம்பே
பெண்கல்வியின் முக்கியத்துவத்தை வற்புறுத்தும் போது பேரறிஞர் (1856-1950) பெர்னாட்ஷாவின் கருத்தைக் கோடிட்டுக் காட்டுகிறார்.
கல்வியில்லை உரிமையில்லை பெண்களுக்குக்
கடைத்தேற வழியின்றி விழிக்கின்றார்கள்.
என்று கூறிய புரட்சிக்கவிஞர் தானியற்றிய குடும்பவிளக்கு எனும் சிறு காப்பியத்துள்
கல்வி இல்லாத பெண்கள் களர்நிலம் அந்நிலத்தில்
புல் விளைந்திடலாம் நல்ல புதல்வர்கள் விளைவதில்லை
என்று கூறுகிறார். கல்வி கற்ற பெண்டிர் தான், வளரும் தனது குழந்தைகட்கு ஆசிரியராகவும் பணிபுரிய இயலும் என்கிறார்.
அவள் வாத்திச்சி அறை வீடு கழகம்
தவழ்ந்தது சங்கத் தமிழ்ச்சுவை
விழுங்கினார் பிள்ளைகள் வேளையாயிற்றே
வீரத்தாய் எனும் நாடகத்தில் சேனாதிபதியால் வஞ்சிக்கப்பட்ட தன்மகனாகிய இளவரசனுக்கு பட்டத்து ராணியே மாறுவேடத்தில் வாள்வீச்சினையும் வில் வித்தையினையும் கற்றுக் கொடுக்கிறாள்.
புரட்சிக் கவிஞரின் வாழ்க்கையில் ஏறத்தாழ 13- ஆம் வயது தொடங்கிப் பத்தாண்டுகள் மயிலத்தில் குடி கொண்டிருக்கும் முருகப் பெருமான் மீதும் பாண்டிச்சேரியில் இருக்கும் மணக்குள விநாயகர் பேரிலும் கீர்த்தனைகள் பாடிய பக்திமானாக இருந்துள்ளார். சென்ற நூற்றாண்டின் முப்பதுகளில் கதர் இராட்டினப் பாட்டுப் பாடும் காங்கிரஸ்காரராக இருந்துள்ளார். சென்னையிலிருந்தும், வங்கத்திலும் பிரிட்டிஷ் அரசின் கெடுபிடிக்குப் பயந்து பாண்டிசேரிக்கு வந்தோர்க்கு இயன்ற உதவிகள் செய்துள்ளார். தூத்துக்குடி சப் கலெக்டர் ஆஷ் எனும் வெள்ளையனின் கொலையில் தொடர்புடைய மாடசாமியை பாண்டிச்சேரியிலிருந்து சைகோனுக்கு தப்பிச் செல்ல உதவி புரிந்துள்ளார். இவ்வாறு நாட்டுப்பற்றிலும் பக்திப் பரவசத்திலும் மூழ்கிக் கிடந்த கனக சுப்புவைப் பகுத்தறிவாளனாக மாற்றியவர் தந்தை பெரியார்.
1933-ஆம் ஆண்டு அன்றைய தொழிற்சங்கத் தலைவர் சிங்காரவேலர் நடத்திய மாநாட்டில் தன்னை ஒரு சுயமரியாதைக் காரனாகக் கையொப்பம் இட்டு பாரதிதாசன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். அவரது கவிதைகள் பெரும்பாலானவை எந்தெந்த காலத்தில் எழுதப்பட்டன என்கிற குறிப்பேதும் இல்லை. கடவுள் மறுப்புப் பாடல்களும் பொதுவுடைமையைப் பாராட்டி எழுதப்பட்ட கவிதைகளும் பெரியார் ரஷ்யாவுக்குப் போய் வந்த பின்னர் வெளியானவையாகக் கருதலாம். பெரியாரின் பகுத்தறிவுத் தாக்கம் புரட்சிக் கவிஞரின் கவிதைகளாக மலர்ந்துள்ளன.
1.கடவுள் என்ற நாததேயம் கழறிடாத நாளினும்
உடைமை யாவும் பொதுமையாக உலக நன்று வாழ்ந்ததாம்.
2. நடவு செய்த தோழர் கூலி நாலணாவை ஏற்பதும் உடலுழைப்பில்லாத செல்வர் உலகையாண்டு உலாவலும் கடவுளாணை என்றுரைத்த கயவர் கூட்டம் மீதிலே கடவுள் என்று கட்டறுத்துத் தொழிலாளரை ஏவுவோம்.
ஏசு பொழிந்த தெள்ளமுது என்னும் பாடலில் மக்கள் அனைவரும் சமம். அன்பே கடவுள் என்று கூறியவரும் அவரே என்று ஏசுவைப் பாராட்டுகிறார். ஆனால் ஏசுவின் தொண்டர்களோ ஏழைகள் தாழ்வுறச் செல்வரை வாழ்த்துகின்றனரே என்று வருந்துகிறார்.
பாடலில் மனு அநீதி பற்றிக் கூறும் போது பஞ்சமர் என்றும் பார்ப்பனர் என்றும் மேற்குலம் என்றும் கீழ்க்குலம் என்றும் கூறி நால்வருணப் பாகுப்பாட்டை நிலை நிறுத்தியதே அந்த நூல் என்று சுட்டிக்காட்டுகிறார்.
தொழிலாளர் நலன்பற்றிப் பேசும் போது அவர்களின் உழைப்புத்திறனை வெளிப்படுத்தி அவர்கள் முன்னேற்றத்துக்கு நாடு நல்லன செய்தல் வேண்டும் என்பதை வற்புறுத்துகிறார்.
கல்பிளந்து மலை பிளந்து கனிகள் வெட்டிக்
கருவியெல்லாம் செய்து தந்த கைதான் யார் கை?
பொற்றுகளைக் கடல் முத்தை மணிக்குலத்தை
போய் எடுக்க அடக்கிய மூச்சு எவரின் மூச்சு?
குழந்தைகளுக்கான தாலாட்டு பாடல்களிலும் சமுதாய விழிப்புணர்வு வேண்டும் என்பதோடு மூடநம்பிக்கை ஒழிக்கப்பட வேண்டும் என்று வற்புறுத்துகின்றார்.
சாணிக்குப் பொட்டிட்டுச் சாமி என்பார் செய்கைக்கு
நாணி உறங்கு! நகைத்து நீ கண்ணுறங்கு
மூடப்பழக்கம் முடை நாற்றம் வீசுகின்ற
காடு மணக்க வரும் கற்பூரப் பெட்டகமே!
1937 ஆம் ஆண்டில் தான் புரட்சிக் கவிஞருக்கு திரைப்படத் தொடர்பு ஏற்பட்டது. டி.கே.எஸ்.சகோதரர்களின் வேண்டுகோளின் படி பாலாமணி என்னும் பாடலுக்கான 17 பாடல்களையும் புரட்சிக் கவிஞரே எழுதினார். பொன்முடி ராமானுஜன், வளையாபதி, சுலோசனா, காயமேகன் போன்ற பற்பல திரைப்படங்களுக்கு பாடல்கள் கதை வசனம் ஆகியவற்றை எழுதியுள்ளார். திரைப்படங்களில் பிராணநாதா, சகியே, தவசிரேஷ்டரே என்று வரும் சொற்றொடர்களை நீக்கி, அத்தான், தோழியே, குருவே என்ற தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தி உள்ளார். தமிழ் திரைப்பங்களில் லாபநோக்கம் மட்டுமே என்கிற நிலைமை மாறி சமுதாய விழிப்புணர்வு, மொழித்தூய்மை, பெண்ணுரிமை போன்றவையும் வெளிப்படுத்திட வேண்டும் என்று விரும்பினார்.
பதின்மூன்றாம் வயதிலேயே பாடல் எழுதிப் பழகிய பாரதிதாசன் 1930 ஆம் ஆண்டிலேயே புதுவை முரசு என்னும் வாரப்பத்திரிக்கையைத் தொடங்கியுள்ளார். அது கையெழுத்துப் பிரதிதான். பெரியாரின் குடியரசு இதழைப் போன்று குறிப்பிட்ட எல்லைக்குள் பகுத்தறிவு ஏடாக மலர்ந்தது. அக்காலத்திய புகழ்பெற்ற இதழ்களான தேசோபகாரி, ஜனவிநோதினி, ஆனந்த போதினி, சுதேமித்திரன், குமரி மலர் ஆகியவற்றிலும் புரட்சிக் கவிஞரின் கட்டுரைகளும் பாடல்களும் வெளிவந்துள்ளன.
உலகம் சுற்றும் தமிழன் என்று பலராலும் பாராட்டப் பெற்ற குமரி பலர் ஆசிரியர் ஏ.கே. செட்டியார் மாதம் ஒன்றுக்கு பதினைந்து ரூபாய் அனுப்பி புரட்சிக் கவிஞருக்கும் அவரது எழுத்துப் பணிகளுக்கும் ஆதரவு கொடுத்துள்ளார். சக்தி என்னும் இதழை நடத்திய வை.கோவிந்தன் அவர்கள் கவிஞரின் ஒரு பாடலில் இந்திய வேளாண்மையோடு ரஷ்ய நாட்டின் முன்னேறியுள்ள விவசாயத்தை ஒப்பிட்டிருந்த பகுதியினை நீக்கச் சொன்னார். கவிஞர் அதனை ஒத்துக் கொள்ளவில்லை.
முற்றிலும் கவிதையாகவே வெளிவந்த புரட்சிக் கவிஞரின் குயில் மாத இதழ் துணிச்சலாக திராவிட நாடு என்கிற பிரிவினைக் கொள்கையை கட்டுரையாக வெளியிட்டது. 1958- ஆம் ஆண்டில் கவிஞர் சென்னைக்கு சென்று தங்கிய போது கவிஞர் பெருமன்றம் என்கிற அமைப்பு குயில் இதழை வெளியி முன் வந்தது. அந்த உறுதிமொழி செயலாக்கப்படவில்லை. கவிஞர் உருக்கமாக ஒரு வேண்டுகோள் விடுத்தும் பயனில்லை. தனது ஓய்வு ஊதியமாக வந்த ரூபாய் எழுபத்தி ஐந்தையும் போட்டு சிரமத்துக்கு இடையில் குயிலைக் கூவிட முயற்சி செய்தார். ஏªழுட்டு இதழ் வெளியாகி அது நின்று போனது. அது வெளியாகிய காலந்தொட்டு புரட்சிக்கவிஞர் குறளுக்கான பரிமேலழகர் உரையினை விமர்சித்துக் கட்டுரைகள் எழுதி வந்தார்.
மதுரையிலிருந்து தமிழன் என்னும் மாத இதழை சி.பா ஆதித்தனார் நடத்தி வந்தார். பாரதிதாசன் கவிதை கட்டுரைகள் அதில் வெளிவந்து கொண்டிருந்தன. ஒரு இதழின் அட்டையில் ஒரு நடிகையின் கவர்ச்சிகரமான படம் வெளிவந்தது. அதனை இனி வரும் இதழ்களில் தவிர்த்திட வேண்டும் என்று ஆதித்தனார்க்கு கடிதம் எழுதினார் கவிஞர். அதன் பின்னர் கவிஞரின் தொடர்பை அந்த இதழ் துண்டித்துக் கொண்டது.
வாய்மொழியாக வெறும் முகமன் கூறுவதும், உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதும் கவிஞரிடம் காண இயலாத வெளிப்படைத் தன்மையாகும். அத்தகு உரையாடல் அவரைக் கடுமையானவராகக் காட்டும். தொடர்ந்து நெருங்கிப் பழகியோர் அவரது வெள்ளை உள்ளத்தைப் பாராட்டியுள்ளனர்.
வயது முதிர்ந்த காலத்தில் பாண்டியன் பரிசு எனும் காவியத்தை திரைப்படமாக்க கவிஞர் பெருமுயற்சி எடுத்தார். பாண்டிச்சேரியில் இருந்த தனது வீட்டை அடமானம் வைத்தோ, விற்பனை செய்தோ சென்னையில் சென்று தங்கினார். கொண்டு சென்ற நிதியும் கரைந்து போனது. அப்படத்தில் நடிக்கிறேன் என்று கூறியவர்களும், முதலீடு செய்கிறேன் என்று வாக்குறுதி கொடுத்தவர்களும் மெதுவாக விலகிக் கொண்டனர். வேறு வழியின்றி விருப்பம் இல்லாமலேயே அவர்களை எல்லாம் மீண்டும் மீண்டும் சந்தித்தும் பயனில்லை. உள்ளமும் உடலும் சோர்ந்த நிலையில் மருத்துவமனையில் சேர நேரிட்டது. நூற்றுக்கணக்கான கவிதைகளை எழுதிய கை சோர்ந்து விட்டது. கற்பனையின் விளைநிலமாக இருந்த சிந்தனையும் செயல்படவில்லை. புரட்சிக்கவிஞரின் இறுதி மூச்சு 1964 ஏப்ரல் மாதம் 21 ஆம் நாள் விண்ணுலகம் நோக்கி விடைபெற்றுக் கொண்டது. புரட்சிக்கவிஞர் நம் கண்ணுக்கு புலனாகவில்லை. கவிதையாக நம்முடன் வாழ்கிறார். அவரது கவிதைகளை பாமரன் பாடுகிறான். பள்ளிக் குழந்தைகள் பாடி நடிக்கின்றனர். பேச்சாளர்கள் அவரது கவிதைகளை மேமைகளில் முழங்குகிறார்கள். வாழ்த்தோ, வணக்கமோ, தேர்தலோ, விழாக்களோ, சினிமாவோ, நாடகமோ அங்கெல்லாம் புரட்சிக்கவிஞர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
Leave a Reply