வழக்கறிஞர் பி. விஜயகுமார்
திருநங்கையை மணமுடிக்க மறுத்தவர் மீது வழக்கு
கிமாச்சல் பிரதேஷ் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு இது. ஃபேஸ்புக் மூலமாக ஒரு திருநங்கையும் கிமாச்சலைச் சேர்ந்த ஒரு இளைஞனும் பழகிக் கொண்டனர். திருநங்கை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பாள். பழக்கம் பிறகு தீவிர காதலாக மாறியது. இருவரும் திருமணம் செய்வதற்குத் தயாராகினார்கள். இச்சம்பவம் இளைஞனின் பெற்றோருக்குத் தெரியவந்து இத் திருமணத்திற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இருப்பினும் மகன் அவளைத் தான் கட்டுவேன் என ஒற்றைக்காலில் நின்றான்.
இறுதியில் பெற்றோரும் வேறு வழியில்லாமல் திருமணத்திற்கு ஒத்துக் கொண்டனர். ஆனால் ஒரு நிபந்தனை வைத்தனர். அதாவது திருமணத்திற்கு முன்பாக திருநங்கை ஒரு முழு பெண்ணாக மாற வேண்டும் என்ற நிபந்தனையை வைத்தனர். திருநங்கையும் அதற்கு ஒப்புக் கொண்டு டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அதற்குரிய அறுவை சிகிட்சையும் செய்து கொண்டாள்.
அறுவை சிகிட்சைக்கு பிறகும் திருமணத்தை பையன் வீட்டார் தள்ளிக் கொண்டே போனார்கள். சந்தேகமடைந்த திருநங்கை விசாரித்த போது பையனுக்கு வேறு பெண்ணை மணமுடிப்பதற்கு பேசி வந்தது தெரிய வந்தது. பையன் மனசும் மாறி விட்டது. வேறு பெண்ணை திருமணம் செய்ய தயாராக இருந்தான்.
உடன்தானே திருநங்கை கிமாச்சலிலுள்ள பாடி என்ற ஊரில் அமைந்திருக்கும் மகளிர் காவல் நிலையத்தில் இளைஞன் குறித்து புகார் செய்தார். புகார் பிரகாரம் தற்போதுள்ள பாரத நியாயச் சட்டம் பிரிவு 69-ன் கீழும் திருநங்கைகள் பாதுகாப்பு உரிமைச் சட்டம் பிரிவு 18 (2)-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பாரத நியாயச் சட்டம் பிரிவு 69 ஒரு பெண்ணை திருமணம் செய்வேன் என்று வாக்குறுதி கொடுத்து அவளுடன் உடல் ரீதியான உறவு வைத்து கொண்டு பிறகு அவளைத் திருமணம் செய்ய மறுத்தால் 10 வருடம் ஜெயில் தண்டனையும், அபராதமும் விதிக்கலாம் என்று கூறுகிறது.
திருநங்கை பாதுகாப்புச்சட்டம் பிரிவு 18 (9) ஒரு திருநங்கையை கீழ்த்தரமாக நடத்தினால் அவ்வாறு நடத்தியவருக்கு ஆறு மாதம் முதல் இரண்டு வருடம் வரை தண்டனையும் அபராதமும் விதிக்கலாம் என்று கூறுகிறது.
வழக்குப் பதிந்ததும் இளைஞன் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதற்காக இடைக்கால முன் ஜாமீனுக்காக கிமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றத்தை நாடினான். ஜாமீன் மனுவில் இளைஞர் வக்கீலும் அரசு வக்கீலும் கடுமையாக வாதாடினார்கள். பையன் சார்பாக வாதாடிய வழக்கறிஞர் பையன் உடல் ரீதியான உறவு திருநங்கையுடன் வைத்துக் கொள்ளவில்லை என்று வாதிட்டார். அப்படியே இவ்வழக்கு வந்தாலும் திருநங்கை பாதுகாப்புச் சட்டத்தின் கீழ்தான் வருமேத் தவிர பாரத நியாயச் சட்டம் 69-ன் கீழ் வராது என வாதிட்டார். இதற்கு அரசு வக்கீலிடமிருந்து கடுமையான ஆட்சசேபணை எழுப்பப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்டுக் கொண்டே உயர்நீதிமன்றம் இறுதியில் இளைஞனுக்கு முன் ஜாமீன் வழங்கியது. அத்துடன் வழக்கு விசாரணையை கீழமை நீதிமன்றம் விரைவில் நடத்தி திருநங்கை பாதிக்கப்பட்டிருந்தது நிரூபணம் ஆகியிருந்தால் உரிய தண்டனை வழங்கலாம் என்ற உத்தரவும் பிறப்பித்தது.
இவ்வழக்கு கிமாச்சல் பிரதேசம் முழுவதும் பேச்சுக்குள்ளானது. திருநங்கைகளுக்கு இவ்வளவு பாதுகாப்பு சட்டத்தில் உள்ளதா என ஆச்சரியப்பட்டார். இதெல்லாம் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களால் வரக்கூடிய பிரச்சனைகள். இளைஞர்கள் சமூக வலைத்தளங்களை கையாள்வதில் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிடில் ஏதோ ஒரு நங்கையிடம் மாட்டி அவஸ்த்தைப் பட வேண்டியிருக்கும்.
Leave a Reply