செ.பராந்தகன்
நோயில்லாத வாழ்வே குறைவில்லாத செல்வம் என்பதை அனைவரும் அறிவோம். உலகப் பொதுமறை’ திருக்குறள்’ என்னும் வாழ்வியல் நூல் வைத்தியத்திற்கு ‘மருந்து’ என்னும் அதிகாரத்தில் 10 குறள்களில் வியாதி உண்டாகும் வழிகள் மற்றும் அவற்றை தடுக்கும் முறைகளை எடுத்துரைக்கிறது. ‘மிகினும் குறையினும் ‘என்று தொடங்கும் குறளில் காற்று, நீர் ,உணவு ஆகிய மூன்றில் ஏதாவது ஒன்று குறைந்தாலும் மிகுந்தாலும் நோய் உண்டாகும் என்கிறார் வள்ளுவர். ‘மருந்தென வேண்டாவாம்’ என்ற என்ற குறளில் அறுசுவைகளுடன் உண்ணப்படுகின்ற உணவு சீரணமாகிவிட்டது என்பதை கவனித்து அடுத்த வேளை உண்டால் நோய் உண்டாகாது. ஆகவே மருந்தே தேவையில்லை என்று வைக்கிறது. ‘அற்றான் அளவறிந்து உண்க’ என்பதில் இரு உணவுகளுக்கு இடையில் இருக்க வேண்டிய சரியான இடைவெளி அறிந்து உண்பதால் மனிதன் நெடுங்காலம் வாழலாம் என்று வழி சொல்கிறது. அதுபோலவே உடலுக்கு ஒத்துக்கொள்ளாத உணவுகளை நீக்கிவிட்டு ஒத்துக் கொள்ளக்கூடிய உணவுகளை உண்ண வேண்டும் .அதுவும் நன்கு பசி எடுத்த பிறகு உண்ண வேண்டும் என்று’ அற்றது அறிந்து கடைபிடித்து ‘என்ற குறளில் கூறுகிறார் . ‘மாறுபாடு இல்லாத உணவு’ என்ற குறளில் ஒத்துக்கொள்கிற உணவையும் அளவோடு உண்டால் உடலுக்கு நோய் வராது. உயிருக்கும் துன்பமில்லை என்று வலியுறுத்துகிறார் வள்ளுவர். மலசலக் கழிவுகளை கவனித்து அதற்கு தக்க படி உணகிறவனிடத்தில் ஆரோக்கியம் இருக்கும் என்றும் சீரண சக்தியின் அளவுக்கு தக்கப்படி உண்ணாது மிதமிஞ்சி உண்டால் அளவுக்கு அதிகமான நோய்கள் உண்டாகும் எனவும் உலகுக்கு சொல்கிறார்.. ‘நோய் நாடி நோய்முதல் நாடி’ என்ற குறளில் இன்ன நோய் என்று கண்டறிந்து நோய் வந்த காரணத்தையும் அறிந்து அந்த நோய் தீர்க்க மருத்துவனிடத்தில் பரிகாரம் செய்து கொள்ள வேண்டும் என்று உரைக்கிறார் .
ஒரு மருத்துவனின் கடமை என்பது தன்னிடம் வரும் நோயாளியின் வயது , உடல் பலம், நோயின் வலிமை, அப்போதைய காலநிலை அனைத்தையும் தீர எண்ணிப் பார்த்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று ‘உற்றான் அளவும் பிணி ‘என்ற குறளில் அறிவுறுத்துகிறார். அதுபோல ஒரு நோயாளியை மருத்துவனிடத்தில் ஒப்படைத்த பிறகு அவர் மீது முழு நம்பிக்கை வைத்து நோயாளி மருந்து மருத்துவன் நோயாளின் உடன் இருப்பவர் என்ற நான்கு பகுதிகளை தவிர்த்து மற்றவர்கள் தலையிடுவதை தவிர்க்க வேண்டும் என்பது இந்த காலகட்டத்திற்கும் மிக பொருத்தமாக உள்ளது. ஆறு குறளில் இரைப்பை ஜீரண சக்தி மற்றும் உணவு பற்றி முக்கியத்துவம் கொடுத்திருப்பது வள்ளுவர் மிகச் சிறந்த குடல் இரைப்பை நிபுணரை ஒத்தவர் என்று புரிய வைக்கிறது. நரம்பியல், இதயவியல் போன்ற துறைகளுக்கு ஏற்ற குறள்கள் இல்லாதது உணவும் சீரணமும் நோயில்லா வாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியம் என்பதை வலியுறுத்துகிறது .உணவே மருந்து என்று உலகிற்கு நன்கு உணர்த்தி உள்ளார். சரியான உணவு சரியான அளவில் உண்டால் மற்ற உறுப்புகள் பாதிப்படையாமல் நோயற்ற வாழ்வு வாழலாம் என்பது திண்ணம். இதனை வள்ளுவர் மருந்து என்ற அதிகாரத்தில் ஆணித்தரமாக கூறியுள்ளார்.
Leave a Reply