கீழாநெல்லியின் மருத்துவகுணங்கள்

கீழாநெல்லியின் மருத்துவகுணங்கள்

  • By Magazine
  • |

கஸ்தூரிபா   ஜாண்ஸன்

தாவர இயலில் பைலானதஸ் அமரஸ் (Phyllanthus amarus) என்று அழைக்கப்படும் இம்மூலிகை யூபோர் பயேசியே (Euphorbiaceae) என்ற குடும்பத்தை சேர்ந்தது. தமிழ்நாட்டில் பரவலாக மக்களால் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு குறுஞ்செடி. சுமார் 15 சென்டிமீட்டர் உயரம் வரை வளரும். இம்மூலிகையின் அனைத்து பாகங்களும் மருத்துவ பயன் தருகிறது.

பயன்கள்

மஞ்சள் காமால நோய் தீர்க்க

வேருடன் கூடிய முழுச் செடியையும் நீரில் கழுவி அரைத்து 5 முதல் 7 நாட்கள் மோரில் கலந்து காலை வேளை அருந்தி வர இந்த காமாலை நோய் குணமாகும். இது நமது நாட்டில் பலரும் அறிந்த ஒரு மருத்துவமாகும். ஈரல் சம்பந்தமான மஞ்சள் காமாலை, ஹப்படைட்டிஸ் B , எய்ட்ஸ் போன்ற நோய்களையும்கீழாநெல்லி குணமாக்குவதை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஹப்படைட்டிஸ் B-ஐ உருவாக்கும் வைரஸ் கிருமிகளையும் உயிர்க்கொல்லி நோயான எய்ட்ஸ் நோயை உருவாக்கும் எச்.ஐ.வி கிருமியையும் அழிக்கும் ஆற்றல் கீழாநெல்லிக்கு உண்டு.

இதயம், சிறுநீரகம் போன்ற அனைத்து உறுப்புகளையும் கல்லீரல் தான் முதன் முதலில் மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்படுகிறது. இச்செடியை அரைத்து உள்ளுக்கு சாப்பிட்டு பின் மோர் அருந்தி வர எய்ட்ஸ் படிபப்படியாக குறையும். ஈரல் சம்பந்தமான நோய்கள் அனைத்தும் குணமாகும். கீழாநெல்லி மாத்திரை வடிவிலும் தற்காலத்தில் கிடைக்கிறது. ஈரல் சம்பந்தமான நோய்கள் நம்மை தாக்கும் போது எண்ணெய் பலகாரங்கள்  கொழுப்பு சத்துள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும்.

இம்மூலிகை குணப்படுத்தும் பிற நோய்கள்

பெண்களுக்கான மாதவிடாய்ப் பிரச்சினைகள், வயிற்றுவலி தீர்க்க தயிர் அல்லது பாலுடன் சேர்த்து பயன்படுத்தப்படுகிறது. செடியை அரைத்து பூண்டு, மிளகு சேர்த்து சிறு சிறு மாத்திரைகளாக செய்து காயவைத்து தினம் இருவேளை சாப்பிட்டு வரும் போது காய்ச்சல் பறந்தோடும்.

மேலும் பார்வைக்கோளாறு, மாலைக்கண் போன்ற நோய்களும் இம்மூலிகையை பயன்படுத்துவதால் சுகமாகும். கீழாநெல்லியில் தயாரிக்கப்படும் இலேகியம் சொறி, சிரங்கு, படை, கட்டி, தேமல் போன்ற தோல் நோய்களையும் சுகப்படுத்துகிறது.

வேரின் பயன்கள்

இச்செடியை வேருடன் பிடுங்கி சுத்தப்படுத்தி காயவைத்து பொடித்து சர்க்கரை பாகில் சிறிது நேரம் சேர்த்து இலேகியம் செய்து பயன்படுத்தலாம்.

இத்தாவரத்தை சிறு துண்டுகளாக்கி தேங்காய் எண்ணெயில் போட்டுக் காய்த்து தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும். இதன் வேரை வாயிலிட்டு சிறிது நேரம் சுவைக்க விக்கல் தீரும்.

இதன் வேறுபயன்கள்

உலர வைத்த இச்செடியை பொடி செய்து சுமார் 3 கிராம் வரை வெந்நீரில் குடிக்கும் போது சர்க்கரை நோய் கட்டுப்படும். இதன் இலைகளை நல்லெண்ணெய் சேர்த்து காய்த்து குளித்து வர தலைச்சுற்று குணமாகும். சரும நோய்களுக்கு இத்தைலத்தை உள்ளுக்கும் அருந்தலாம். உடலிலும் தேய்க்கலாம்.

கீழாநெல்லி காய்ச்சலை குணப்படுத்தி கிருமிகளை வெளியேற்றும் தன்மை கொண்டது. மேலும் குடல்வலி, வயிற்றுபோக்கு, கொனேரியா, மாதவிடாய் நேரம் அதிக குருதி வெளியேறுதல், இனப்பெருக்க உறுப்பு நோய்கள் மற்றும் பல நோய்களையும் குணப்படுத்தும் தன்மை கொண்டது.

இம்மூலிகையை காயவைத்த பொடியுடன் சிறிது தேன் கலந்து சாப்பிடும் போது பசி, மந்தம், மயக்கம் போன்றவை குணமாகும். இந்த பொடியுடன் சிறிது உப்பு கலந்து அரைத்து உடம்பில் தேய்த்து ஒருமணி நேரம் கழித்து குளிக்க சொறி, சிரங்குகள், அரிப்பு நீங்கும். இந்த இலைகளுடன் கொத்தமல்லி சேர்த்தரைத்து முகத்தில் தேய்த்தால் முகபருக்கள், கரும்புள்ளிகள், சுருக்கங்கள் மாறும்.

கீழாநெல்லியின் சாறு பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வர சிறுநீர் சம்பந்தமான நோய்களும் மாறும்.

இதன் இலேகியம் தோல் சம்பந்தமான நோய்களை போக்கும். இதன் இலைகளின் அடியில் காணப்படும் காய்கள் நீளவாக்கில் அடுக்கி வைத்தாற்போல் இருக்கிறது.

கீழாநெல்லியை தினமும் சாப்பிடலமா?

கல்லீரல் மற்றும் சிறுநீரக ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது என்றாலும் தினமும் அதிக அளவில் சாப்பிட கூடாது. மஞ்சள் காமாலை நோய்களுக்கும் மருத்துவர் ஆலோசனையுடன் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் பயன்படுத்துவது நல்லது.

முக்கிய குறிப்புகள்

தினம் ஒரு ஸ்பூன் பொடியை வெதுவெதுப்பான  நீர் அல்லது மோரில் கலந்து வெறும் வயிற்றில் குடிக்கலாம். நீண்ட நாட்கள் தொடர்ந்து குடிப்பது பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை வெகுவாக குறைக்க வாய்ப்புள்ளது.

எச்சரிக்கை

கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், வேறு மருந்து உட்கொள்பவர்கள் மருத்துவர் ஆலோசனை பெறுவது நல்லது. கடுகு சிறுத்தாலும காரம் குறையாது என்பது போல் சிறிய செடியாக இருந்தாலும் நிறைய நோய்களை தீர்க்கும் தன்மை கொண்டது.    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *