மகேஷ் பாலகிருஷ்ணன்
எல்லோராலும் பாதுகாக்கப்பட்டு பெரிதும் மதிக்கப்பட்ட நல்ல ருத்ர வீணை அது. இசை வித்வான்கள் வாழ்ந்த அந்த குடும்பத்தின் அடையாளம் அது. கால மாற்றத்தினாலும், வாழ்க்கை மாற்றத்தினாலும், மெல்ல மெல்ல காட்சிப்பொருளாய் மாறியது. ஒரு வயதானவர் மட்டுமே வீட்டில் வாழ்ந்து வந்தார். அற்புதமாய் வடிவமைக்கப்பட்ட அந்த வீணை, காட்சி பொருளாக இருப்பதை விட. அந்த கடைசி வித்வான்க்கு உபயோகப்படுவதையே விரும்பியது!!!
யாரும் மீட்ட தயாராக இல்லாத அந்த இடத்தில், தன்னை விற்கத் துணிந்தது. முயற்சிகள் தோல்வியுற்றது.. இசைக் கருவிகளின் வளர்ச்சி, அந்த ருத்ர வீணையை பின்னுக்கு தள்ளியது தான் மிச்சம். கடைசியாக தன்னை ஒரு மரக்கடைக்காரரிடம் ஒப்படைத்து வெற்றி பெற்றது போல் எண்ணிக் கொண்டது, கடைக்காரன் மரத்தின் தரம் பார்த்து, எடை பார்த்து, வளைவு சுளிவுகளையும் பார்த்து,தொகையையும் கொடுத்தான். தன் கடைசி முதலாளியை மகிழ்ச்சிப்படுத்தி, மரக்கடையில் தஞ்சம் புகுந்தது வீணை.
ஓரமாய் ஒதுக்கப்பட்ட வீணை, மற்ற மரங்களுக்கும் தனக்கும் என்ன வித்தியாசம் என்று காட்ட துடித்துக் கொண்டிருந்தது. தன் குதிரைகளால் (வீணையின் பகுதி) சுருதியை தயார்படுத்தி முதல் முத்திரை பதிக்கும் விதத்தில் இசை எழுப்பியது..! இதை கவனித்த கடைக்காரன், இசை எழுப்பிய குதிரைகளை கண்டான், இவை கண்டிப்பாக கதவின் நிலை சட்டத்துக்கு இடையூறாக இருக்கும் என்று, கையில் இருந்த சுத்தியலை வைத்து ஒரு தட்டு தட்டினான், நொந்து போன ருத்ர வீணை தன்னை தானே கடிந்து கொண்டது.
முயற்சியை கைவிடாத வீணை இம்முறை தன்னை இன்னும் பலப்படுத்திக் கொண்டு, தன் வாசிப்பு தந்திகளையும், சுருதி தந்திகளையும் தயார்படுத்திக்கொண்டு காலையில் முதல் வேலையாக இசைக்க துவங்கியது. என்ன சத்தம் இது? சத்தம் போடும் நிலை சட்டங்களை யாரும் விரும்ப மாட்டார்கள்!!! முதலில் அதை கழற்றிஎடு என்றான் கடைக்காரன்.
இறுதியாக.. அலங்கரிக்கப்பட்ட தன் யாழ் முகத்தை காட்ட துடித்தது. இல்லை, இல்லை, நிலை சட்டத்துக்கு இடையூறாக இருக்கும் என்றான் கடைக்காரன்.
குடமும் மேல் பலகையும் மட்டுமே!! மிச்சம் . எடைபோட்டு விற்கப் பட்டது வீணை!! தன் தன்மை தொலைந்தே போனது!!
எவ்வளவு சிரமப்பட்டாலும், உங்கள் திறமைக்கு ஏற்ற இடத்தைத் தேர்ந்தெடுத்து, உங்களை தஞ்சப்படுத்திக் கொள்ளுங்கள், மாற்றம் தேவைதான் மாற்றம் என்ற பெயரில் இசைக்க தெரியாத மரக்கடைக்காரன் போல், உங்கள் திறமைகளை மெருகேற்ற தெரியாத, தொலைத்து விட சிபாரிசு செய்யும், மனிதர்களிடம் தஞ்சம் புக வேண்டாம். இல்லையேல். நீங்கள் மரக் கடைக்காரனின் வீணை ஆவது நிச்சயம்.
யாரோ சொல்கிறார்கள் என்று, உங்கள் தனித்துவத்தை, மெருகேற்றிராமல் விட்டுவிடாதீர்கள். வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் தனித்துவமானது. வீணையாய் மாறுவோம், வீணைகள்செய்வோம், மரப்பலகைகளில் இருந்து.
Leave a Reply