தென்பாண்டி நாடு எனும் குமரிமண்

தென்பாண்டி நாடு எனும் குமரிமண்

  • By Magazine
  • |

– மங்காவிளை  D. இராஜேந்திரன்

பாண்டிய மன்னனை திவாகரம் என்னும் நூல் குமரிசேர்ப்பன் என்கிறது. இங்கே பாண்டியரின் செல்வாக்கு இருந்ததை சங்க இலக்கியமான மதுரைக்காஞ்சி குறிப்பிடுகிறது. கன்னியாகுமரியை சுற்றியுள்ள பகுதி புறத்தாய நாடு எனப்பட்டது. இது பாண்டிய நாட்டின் தென்கோடி. எனவே தென்பாண்டியநாடு என்றழைக்கப்பட்டது. பாண்டியரின் குலதெய்வமாக குமரி பகவதி குறிக்கப்படுகிறாள்.

புறநானூறு பாண்டியனை பஃறுளியின் தலைவன் என்கிறது. குமரிமாவட்ட கல்வெட்டுகளும், சின்னமனூர் செப்பேடுகளும் குமரிக்கும் பாண்டிக்கும் உள்ள தொடர்பைத் தருகின்றன. கி.பி. 140-ல் குமரிக்கு வருகைதந்த டாலமியும் இப்பகுதி பாண்டிய நாட்டுக்குட்பட்டது என்கிறார். நாஞ்சில் நாட்டை ஒல்லையூர் பூதப்பாண்டியன் பிடித்ததை இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. பூதப்பாண்டி என்ற ஊர் இன்றும் உள்ளது.

குமரி மண்ணை ஆண்ட மன்னர்களை அறிஞர் K.N. சாஸ்திரி அவர்கள் வரிசைப்படுத்தியுள்ளார். கி.பி 560 லிருந்து 590 வரை கருங்கோன் என்ற மன்னனும்; கி.பி.590 லிருந்து கி.பி 620 வரை மாறவர்மனும்; கி.பி 620 லிருந்து 650 வரை சேந்தன் என்ற மன்னனும் ;  கி.பி.650 லிருந்து 700 வரை அரிகேசர் பராங்குச மாறவர்மனும்; கி.பி 700 லிருந்து கி.பி.730 வரை கோச்சடையன் என்பவனும்; கி.பி.730 லிருந்து 765 வரை மாறவர்ம ராஜ சிம்மனும்; கி.பி 765 லிருந்து 815 வரை ஜடில பாரந்தக நெடுஞ்சடையனும்; கி.பி 815 லிருந்து 862 ஸ்ரீமாற ஸ்ரீவல்லப மன்னனும்; கி.பி 862 லிருந்து 885 வரை வரகுணனும்; கி.பி 885 லிருந்து 905 வரை பராந்தக வீர நாராயணனும், கி.பி 905 லிருந்து 920 வரை இரண்டாவது மாறவர்ம இராஜசிம்மனும் ஆட்சி புரிந்ததாக குறிப்பிடுகிறார்.

கி.பி 620 லிருந்து 650 வரை இப்பகுதியை ஆண்ட மன்னன் சேந்தன், மன்னன் கடுங்கோனின் பேரன் ஆவார். இந்த சேந்தன் பெயரால் தாழக்குடியில் இன்றும் செந்தீஸ்வரமுடையார் கோயில் உள்ளது. மயிலாடிக்கு அருகே சேந்தன்புதூர் உள்ளது,

மன்னன் சேந்தனுக்குப்பிறகு அரிகேசரி மாறர்மன் எனும் கூன் பாண்டியன் ஆட்சிக்கு வருகிறான். இவன் வெற்றி கொண்ட இடங்களை பாழி, நெல்வேலி, சென்னிலம், புலியூர் ஆகிய ஊர்கள் இன்றும் உள்ளன. அடுத்து ஆட்சிக்கு வந்த மன்னன் ரணதீரன் கோச்சடையன். வேள்விக்குடி செப்பேடுகள் வழி மருதத்தூர், செங்கோடி, புதான்கோடு பின்னாளில் இதுவே திருவிதாங்கோடு.

கி.பி. 726-ம் ஆண்டு மன்னன் கோச்சடையன் கன்னியாகுமரியில், பகவதி அம்மன் திருக்கோயிலை கட்டியுள்ளான் என கல்வெட்டு தெரிவிக்கின்றது. கி.பி 730-ல் ஆட்சியிலிருந்த ராஜசிம்மன் மகன் ஜடில பராந்தகனை மாறன் சடையன் என ஆனைமங்கல செப்பேடு தெரிவிக்கின்றது. இப்பாண்டியன் தனது 23-ம் ஆட்சியாண்டில் அருவிக்கோட்டை எனும் அருவிக்கரையை பிடித்து, ஊரை அழித்தச் செய்தியும், 27-ம் ஆட்சியாண்டில் ஆரல்வாய்மொழி கரைகோட்டையை பிடித்தான் எனும் செய்தியும் கல்வெட்டில் உள்ளன. இந்த மாறன் சடையன் ஆட்சியில் கி.பி. 765 லிருந்து 815-க்குள் சுசீந்திரம் கோயில் கோபுரம் கட்டப்பட்டுள்ளது என்பதை கோயில் கல்வட்டு மூலம் அறிய முடிகிறது.

கி.பி. 880-ம் ஆண்டு சுசீந்திரம் கல்வெட்டு, வீரநாராயன் சடையன் எனும் பாண்டிய மன்னன் பற்றி குறிப்பிடுகின்றது. இன்றைய வீரநாராயணமங்கலம், வீர நாராயணன் கேரி, வீராணி ஆகியன இம்மன்னன் பெயரை நினைவுபடுத்துகின்றன. மன்னன் வீரநாராயணனுக்குப் பின் வாகுண வர்ம ஆட்சி. இம்மன்னன் பெயரால் வாகுணமங்கலம் என்னும் ஊர் இன்றும் உள்ளது.

கி.பி. 905-ல் ஆட்சிக்கு வந்த மன்னன் இரண்டாவது மாறவர்ம ராஜசிம்மன் ஆட்சி காலத்தில் தான் பரளியாற்றில் முதல் அணை- தலையணை, அதாவது பாண்டியன் அணை கட்டப்பட்டது. இதன் மூலம் பரளியாறும் பழையாறும் பாண்டியன் காலால் இணைக்கப்பட்டது. இதுவே நம் நாட்டின் முதல் நதிநீர் இணைப்பு ஆகும். இப்பாண்டியன் அணை தற்போது பரளியாற்றில் உள்ள பெருஞ்சாணி அணைக்கும் இடையே மண்ணுக்குள் புதைந்துள்ளது. பின்னாளில் ராஜசிம்மன்  மன்னனை, கி.பி 925-ல் பராந்தகச் சோழன் என்னும் சோழமன்னன் வெற்றி கொண்டு இங்கே சோழர் ஆட்சிக்கு வித்திட்டான். கி.பி. 986-ம் ஆண்டு சுசீந்திரம் கோயில் கல்வெட்டு சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் பற்றி குறிப்பிடுகிறது. மேலும் சுசீந்திரம், புரவசேரி ஊர்களில் கிடைத்தக் கல்வெட்டுகள் கி.பி.1132 லிருந்து 1169 வரை ஆண்ட பாண்டிய மன்னன் பற்றி குறிப்பிடுகின்றது. கி.பி. 1124-ம் ஆண்டு அகஸ்தீஸ்வரம் ஊர்க்கல்வெட்டு சடையவர்மன் ஸ்ரீவல்லபதேவன் எனும் பாண்டிய மன்னன் பற்றி குறிப்பிடுகின்றது. இவைகளே குமரிமண்ணின் பாண்டியர் ஆட்சி தடையங்கள் கேரளத்தினர் இன்றும், குமரிமண் மக்களை பாண்டிக்காரன் என்றே குறிப்பிடுவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *