வர்மம் எனும்  மர்மக்கலை!

வர்மம் எனும்  மர்மக்கலை!

  • By Magazine
  • |

– முனைவர் முல்லைத்தமிழ்

தெக்ஷணைக்காலம்

சென்ற மாத இதழில் கையில் உள்ள வர்மங்களில் ஒன்றான புயவர்மம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் தெக்ஷணைக்காலம் பற்றி அறிவோம்.

இவ்வர்மம் உள்ளங்கை வெள்ளை வர்மத்தின் நேர் பின்புறம் புறங்கையில், நடுவிரலுக்கும், மோதிர விரலுக்குமிடையில் அமைந்துள்ளது. இவ்வர்மத்திற்கு தெக்ஷண வர்மம், தெக்ஷணைக்காலம், மொழிப்பிறங்கண் வர்மம் என்னும் வேறுபெயர்களும் உண்டு.

“அறுதியென்ற உள்ளங்கை வர்மத்தின் பின்

தெக்ஷணையின் காலமென்பார்”.

                                                                                                                வர்ம குருநூல்

என குறிப்பிடுகிறது.

சாந்தமாம் தெக்ஷணையின் காலம் கொண்டால்

                                சதியாம் திசை மயக்கம் கழைத்து நோவாம்

                பந்தமாம் கண் புகைந்து சன்னியுண்டாகும்

                                பயமாகும் சீதம் மதிகரிக்குமானால்

                சொந்தமாம் முறிவானால் மரணம் நாலில்

                                சொகுசான சிகில்சைகள் செய்துகொள

                விந்தையாய் குருசீஷனிணங்கும் காலம்

                விதிமுறையே தெக்ஷணை வாங்கும் காலமே.

                                                                                                                வர்ம கருவிநூல்-500

விளம்பினேன் தெக்ஷணையின்காலம் கொண்டால்

                                விளிகேளாது உடல் வியர்க்கும் மூடும் கண்கள்

                சீர்கேடாய் சீதமோடு சன்னி தோன்றும்

                                சேரவே முறிந்தாலோ விளிகேளாது

                இசம்பெறவே முறிந்து சோரை மிஞ்சிக்கண்டால்

                                ஈராறு நாளைக்குள்ளே மரணமாகும்

                திறமாக முறிவெண்ணை தாரைசெய்து

                                சீராக முறிவதிலே போடச்சொல்லு.

                                                                                                வர்ம தாண்டவம் – 500

“அறுதியென்ற உள்ளங்கை வர்மத்தின் பின்

ஆசான்மார் தெக்ஷணையின் காலமென்பார்

சுருதியதன் சார்பில் நெல்லில் தும்பி என்றும்

சொல் மாத்திரை அனுக்கில் ரெண்டும் ஒன்றதாகும்

கருதி உள்வாசிதனை இழுத்து மெல்ல

காலரை மாத்திரை கொடுக்க கண்கள்தூங்கும்

வருதி வரும் முக்கால் மாத்திரை எனில் சன்னி சீதம்

வெட்டாம் முழு மாத்திரை மரணமாமே”.

                                                                                                                                – வர்ம குருநூல்

                “மரணமெனும் விதிமாற விளம்புமுறை யடங்கலுண்டு

                                வினையகல மெல்ல கைமடக்கினுள் கைக்குழியை

                விரணமுறாதிருத்தித் தூண்டிக் கொட்டடங்கலெனும்

                                மூர்த்தி வர்மம் முறையாய் தட்டி மெள்ள விட்டிடு

                கரணமிடும் சுழியடங்கல், கலையடங்கல் காயநிலை

                                கணக்கறிந்து அகம்புறம் தடவியேமெள்ள

                சரணமிடுமிந்த வன்மம் சடுதியுறவாகுமெனச்

                                சாற்றினார் முன்னோர் மரணமது போகத்தானே”.

                                                                                                                                வர்ம குருநூல்

எனவும் குறிப்பிடுகிறது.

                அங்கையின் புறமே பற்றி அகங்கிடுங்கும் தெட்சணையாம்

                தங்கையின் விடமே பற்றி தணிந்துறுங் கால் தாக்கமாகில்

                ஓங்கையின் விளிகள் மங்கித்துயிலுறுக்கண்கள் பற்றி

                தூங்கையாம் கடமும் தானே தொடர்ந்துறும் பலதுமாமே.

                                                                                                                வர்ம யோகச்சூத்திரம்

விளக்கம்

                அகங்கையின் புறபக்கம் பற்றி தெட்சணையின் காலமாகும். இக்காலம் கொண்டால் அகம் கிடுக்கமடையும் (தன்னிலை இழந்து நடுக்கமுண்டாகும்) விட நிலை தணிவடையும் காலத்தில் இவ்வர்மத்தில் தாக்கம் கொண்டால் கண்களில் பார்வை மங்கி தூக்கமுண்டாகும். உடலும் தளர்ந்து பல பல குறிகுணங்களைக் காட்டும் என்பதாம்.

                பலதுறும் சரமும் கூடில் சடைந்துறும் வலிகள் மிஞ்சி

                வலமதும் வருமாம் போலே வன்னெடும் கலக்கமாச்சி

                தலமதில்மிஞ்சிக்கொள்ளில் தளர்வுடன் வியர்வைகூடி

                கலமதின் நீரும் வற்றி கலந்துறும் குளிருமாமே.

– வர்ம யோகச்சூத்திரம்

விளக்கம்

                தெட்சணைக்காலம் சரநிலை அப்பக்கத்தில் இயங்கும்போது தாக்கம் கொள்ளுமானால் உடலானது மிக மிகத் தளர்ந்து வலியும் கூடி விடும். மூலத்தில் மலம் வெளியேறுவது போன்ற உணர்வு இருந்துகொண்டே இருக்கும். மாத்திரை மிஞ்சி இவ்வர்மம் கொள்ளுமானால் உடல் தளர்ந்து வியர்வை உண்டாகும். தொடர்ந்து நீர் வறட்சை உண்டாகி குளிரும், நடுக்கமும் உண்டாகும் என்பதாம்.

                ஆமெனும் காலந்தன்னில்அடர்ந்துறும் விடமேமிஞ்சில்

                போமெனும் விளிகேளாது பொருமியே வயிறுமாடும்

                தாமெனும் தன்மைகுன்றி தணிந்துறும்நினைவுமாகும்

                வேமெனும் விதியறிந்து வினையற மருந்து செய்யே.

                                                                                                                வர்ம யோகச்சூத்திரம்

விளக்கம்

                தெட்சணைக்காலத்தில் விசகலை மிஞ்சும் போது தாக்கம் கொள்ளுமானால் காது கேளாமலாகி விடுவதோடு வயிறு பொருமலும் வயிற்றினுள் ஒருவித நடுக்கமும் உண்டாகும். தொடர்ந்து தான் எனும் உணர்வு குறைந்து மயக்கமுண்டாகும். இதனை தீர்ப்பதற்கு முறைப்படி மருந்துசெய்ய வேண்டும் என்பதாம்.

                தெட்சணைக்குற்ற குற்றம் செயல்பட தீராதாகில்

                வக்கணையாக பின்னே வருங் குறிப்பலதுமாகும்

                தக்கதோர் தளர்வும்மிஞ்சி தடமிலாதுறக்கம் கூடும்

                மிக்கதோர் நினைவும்குன்றி நிலையதுமாறும்தானே.

                                                                                                                வர்ம யோகச்சூத்திரம்

விளக்கம்

                தெட்சணைக்காலத்தில் கொண்ட குற்றம் சரிவர குணப்படவில்லை எனில் பிற்காலங்களில் பல பல குறிகுணங்களைக் காட்டும். உடல் தளர்ந்து காரணமில்லாமலேயே தானே உறக்கம் உண்டாகும். நினைவாற்றலும் குன்றி நிலையும் தடுமாறும் என்பதாம்.

                வன்மமாம் தெட்சணை வலுவுறும்துயிலையாக்கும்

                கன்மமாம் கனவு காட்சி கண்டுறல் குறைவதாகும்

                தன்மமாம் நினைவுகுன்றல் நிலைப்படலில்லாதாகும்

                குன்மமாம் குடல்நோய்கள் குறைபடலாகும் என்னே.

                                                                                                                வர்ம யோகச்சூத்திரம்

விளக்கம்

                தெட்சணைக்காலத்தினை தூண்டும்போது நல்ல தூக்கமுண்டாகும். அடிக்கடி தோன்றும் கனவுகள் குறைந்து போகும். ஞாபகமறதி இல்லாமல் போய்விடும். குடல்நோய்களும் குறைந்து நல்ல பலன் உண்டாகும் என்பதாம் என வர்ம யோகச்சூத்திரமும் குறிப்பிடுகிறது.

இவ்வர்மம் கால், அரை மாத்திரையில் தாக்கம் கொண்டால், கண்கள் அசதியாகி தூக்கம் உண்டாகும். தாங்கமுடியாத வேதனை தோன்றி உயிர் பிரியும் வண்ணம் அசதியாகும். மூன்றுநாள் கழித்து நல்ல சுகம் உண்டாகும். முக்கால் மாத்திரையாயின் ஜன்னி, வெட்டு, சீதம் உண்டாகும். முழு மாத்திரையில் கபம் தோன்றி மரணம் வரும் என வர்ம நூல்கள் குறிப்பிடுகின்றது.

இவ்வர்மத்தை இளக்குவதற்கு கழுத்துறை வழியே கை வரை தடவி, கைக்குழி அடங்கல், கொட்டடங்கல், சுழி அடங்கல், கலை அடங்கல், காயநிலை அடங்கல், கவளி அடங்கல்கள், வெள்ளை அடங்கல்களை தூண்டி, தொடர்ந்து கழுத்துறை வழி முன்னும் பின்னும் கத்தரிக்கோல் மாறலாக மார்பு, முதுகு தடவி, மேல்நோக்கி ஏற்றி தடவி, இதமாக செய்து, சிறந்த அகமருந்துகளையும், புறமருந்தாக பற்று, ஒற்றல் போன்றவைகளையும் செய்துவர சுகம் உண்டாகும் என அனுபவமிக்க வர்ம வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.

இவ்வர்ம பாதிப்படைந்தவர்களுக்கு பிற்காலத்தில் உடல் தளர்ச்சி, அடிக்கடி உறக்கம், கண்மசவல், ஞாபகமறதி போன்ற பின்விளைவுகள் உண்டாகும் என வர்ம நூல்கள் குறிப்பிடுகின்றன. இவ்வர்மத்தை பெருவிரல், மூவிரல், உள்ளங்கை போன்றவைகளாலான தூண்டல், அழுத்தல், அனுக்கல், தட்டல், அதிர்த்தல், அமத்தல் போன்ற தூண்டுமுறை நுட்பங்களை கொண்டு தூண்டிவர கண்நோய்கள், தலைவலி, தொண்டைநோய்கள், நினைவிழப்பு, ஜன்னி போன்ற நோய்கள் குணமாகும் என வர்ம சுவடிகள் குறிப்பிடுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *